(109) இயக்கத்தின் இயக்கம்!

சொற்களின் வழியாக நடந்து செல்வதில் ஒரு இன்பம் கிடைக்கிறது. அதுவும் தொன்மை யான தமிழ்ச் சொற்கள், சொற்றொடர்களாக மாற்றம் பெற, அதன் வழியாக நடந்து செல்லுதல், புதுப் புது அர்த்தங்களை நமக்கு கற்றுத் தந்து, புதிய தேடலுக்கான கதவுகளைத் திறந்து வைத்து விடுகிறது. பலரும் நினைப்பதைப்போல, சமூகம் எந்த இடத்திலும் நின்றுவிடுவதில்லை. அது எப்பொழுதுமே உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை விடவும், இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது மேலும் பொருத்த முடையதாக இருக்கும். இந்த இயக்கம்தான் காரல் மார்க்ஸ் கண்டறிந்த சொற்களிலேயே மகத்துவம் நிறைந்த சொல். இதை இவர் உண்ஹப்ங்ற்ண்ஸ்ரீள் என்கிறார்.

Advertisment

தோழர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண் டின் பிறப்பு தினத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரின் முழு வாழ்க்கையையும் ஒரு சொற்றொடர் மூலம் விளக்கிக் காட்டுகிறார். அந்த சொற் றொடர், மேலும் மேலும் என் சிந்தனையை கிளர்ச்சியடைய வைக்கிறது. அவரை ஒரு ‘இயக்கத்தின் இயக்கம்’ என்கிறார். இந்த சொல்லின் ஆழம் தான் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் இடையில் அமைந்த அரசியல் உறவாக நான் உணருகிறேன். இதை மேலும் விளக்கிச் செல்லும்போது, அதன் பொருள்கூறும் பாதை மேலும் மேலும் விரிந்துகொண்டே செல்கிறது. 

Advertisment

‘இயக்கத்துடன் தொடர்ந்து இயங்குவது என்பது எல்லோருக்கும் எளிதாக வாய்ப்பதில்லை. இயற்கையும் இடமளித்திட வேண்டும். திராவிட இயக்கம் நூற்றாண்டு கண்டபோது, அதில் தந்தை பெரியாரின் வழி நின்று, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களும், ஏறத்தாழ 90 வயதைத் தொட்டிருக்கிறார்கள். அவர்களின் முக்கால் நூற்றாண்டு கால பொது வாழ்வும் அதில் அடங்கியிருந்தது. இளம் பருவத்திலேயே கொள்கையால் ஈர்க்கப்பட்டு இயக்கத்திற்கு வருகிறவர்கள், தங்களது இலட்சியத்தில் கொண்டுள்ள உறுதியினால், இயக்கமாகவே மாறிவிடு கிறார்கள் என்கிறார். இந்த புரிதல் பொது வாழ்க்கையில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய லட்சியப் பார்வையாக நான் பார்க்கிறேன். 

தலைமை என்பது தனிநபர் சார்ந்ததல்ல. அது சமூகம் சார்ந்தது என்பதில், நம்பிக்கை கொண்டவர் தோழர் நல்லகண்ணு, சமூகத்தின் அத்தனை துன்ப துயரங்களையும் தன்னுடைய துன்பமாக தலைமையேற்பவர்கள் ஏற்க வேண்டும் என்பது இவரது ஆழ்ந்த கருத்து நிலை. இந்த பொது நல உணர்வில் சித்தாந்தத் தெளிவும் இல்லையென்றால் அது பயனற்றது. இன்றைய அரசியலில் சிலருக்கு சித்தாந்தம் என்றால் என்னவென்று தெரிவதில்லை. அப்படி கொஞ்சம் தெரிந்தாலும் எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக்கொள்வார்கள். சிலருக்கு பொதுவெளியில் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை. தோழர் நல்ல   கண்ணு கொள்கையிலும் சித்தாந்தத்திலும் உறுதிகொண்டவர் என்பதால் இன்றைய தமிழக முதல்வரோடு ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டி ருந்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட குணம் உண்டென்றால், இன்றைய தமிழக முதல்வருக்கு யாரிடமும் பகைமைப் பாராட் டாத பெருந்தன்மை ஒன்று இருக்கிறது; இதே பெருந்தன்மை தோழர் நல்லகண்ணு அவர்களிடமும் ஆழமாக இருக்கிறது. இவர்கள் இருவரின் உறவுக்கும் இந்த ஒற்றுமை முக்கிய காரணம் என்று என்னால் கூறமுடிகிறது. 

Advertisment

தோழர் நல்லகண்ணு அவர்களுக்கும் கலைஞர் அவர்களுக்கும் இடையில் அமைந்த அரசியல் முற்றிலும் வித்தியாசமானது. சில நாட்களில் அதிகாலையிலேயே அவர்களது அறிவார்ந்த உரையாடல் தொடங்கிவிடும். தோழர் ஊடகங்களில் எழுப்பிய கேள்விக்கு, அதற்குரிய விளக்கத்தைப் பெற்று, அதை நிறைவேற்றும் கலைஞரின் பொறுப்புணர்ச்சி, தோழர் நல்லகண்ணு மீது அவர் கொண்ட நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றிருந்த காலம் மிகவும் நெருக்கடி மிகுந்த காலம். தமிழ்நாட்டின் அடையாளத்தை முற்றாக அழிக்க சதித் திட்டங்கள் பல தீட்டப்பட்டு வரும் காலம். தமிழகத்தின் அறிவுலகம் அவருக்கு அருகில் நின்று துணை நிற்கவேண்டும் என்று நான் பல நேரங்களில் எண்ணியதுண்டு. தோழர் நல்லகண்ணுவின் இந்த காலம் முதுமைக் காலம். முந்தைய காலத்தைப்போல இவரது நடமாட்டம் இல்லை. அந்த வாய்ப்பு இருந்திருக்குமானால் அவரது அனுபவம் இன்றைய முதல்வருக்கு பெரும் உதவியாக அமைந்திருக்கும். அந்தச்சூழல் அமையாமல் போனது, எனக்கு கொஞ்சம் வருத்தம்தான். அது தமிழக முதல்வரின் இடதுசாரி பார்வையில் கூடுதல் செயல்பாட்டைத் தந்திருக்கும். 

சிலவற்றை நான் அனுபவத் தில் உணர்ந்து பார்க்கிறேன். பொது வாழ்க்கை நெருக்கடி மிக்கது. அதிலும் கம்யூனிஸ்டுகள் தங்களுக்கென்று தனிப்பாதையை அமைத்துக் கொண்டவர்கள். அவர்களுக்கு ஏற்படும் எந்த நெருக்கடியையும், பொது வெளியில் பகிர்ந்து கொள்வ தில்லை. பொருளாதார பிரச் சினைகள் அருகில் இருப்பவர் களுக்குக்கூட தெரியாமல் போய்விடுகிறது. இதைத் தவிர பொது வாழ்க்கையை தூய்மை யோடு வாழ்ந்தவர்களில் பலரது வாழ்க்கையை தமிழகம் நன்கறியும். தலைவர் கக்கன் அவர்களின் வாழ்க்கை இன்றும் பொதுவாழ்வின் தூய்மைக்கு வழிகாட்டக்கூடியது. காங்கிரஸ் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், போலீஸ் அமைச்சராகவும் பணியாற்றியவர். இவரது கடைசி காலத்தில் மதுரை பொது அரசு மருத்துவமனையில் நோயால் பாதிக்கப்பட்டு, பொதுவார்டில்’ அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்றைய தமிழக முதல்வர், பொதுநலனில் அக்கறை கொண்டவர். இவர் கொள்ளும் அக்கறை போற்றுதற் குரியது. அதிலும் தோழர் நல்லக்ணணு  மீது அவர் கொண்டிருக்கும் பேரன்பு தியாகத்தின் மீதும், நேர்மையின் மீதும் இவர் கொண்ட ஈடுபாட்டிற்கு சாட்சியாக அமைந்து வருகிறது. தோழர் நல்லகண்ணுவின் உடல்நல பாதிப்பு தமிழ்நாட்டின் பேசுபொருளாக மாறிப்போனது. அந்த தருணத்தில் தமிழ்நாட்டின் முதல்தர சிகிச்சை அவருக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். ஒரு மகன், தந்தைக்குச் செய்யும் கடமையைப்போல நான் உணர்ந்து கொண்டேன். 

பாப்பாபட்டி, கீரிப்பட்டி நிகழ்வு நமது ஜனநாயகத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இந்திய சமூகம் சிக்கல் நிறைந்தது என்பதற்கு ஆதாரமாக அமைந்தது. இந்த பிரச்சினையை மக்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கும் பிரச்சினையாக மாற்றவேண்டும் என்பதில் தோழர் நல்லகண்ணு பெரும் முயற்சியில் இருந்தார். அப்பொழுது இன்றைய முதல்வர், அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சர். மதுரையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு உண்ணாவிரதத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். கலைஞர் வழிகாட்டுதலில் இன்றைய முதல்வர் நுட்பமாக மிகவும் நெருக்கடி மிகுந்த இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டதை  உள்ளும் புறமும் நான் அறிவேன். 

தகைமைசால் தமிழர் விருது என்பது மூத்த தமிழ்க்குடியின் புகழ்மிக்க விருது என்று தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது. முதல் ஆண்டில் தோழர் சங்கரய்யா அவர்களுக்கும், இரண்டாம் ஆண்டு தோழர் நல்லகண்ணு அவர்களுக்கும் விருது வழங்கினார். ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் பயங்கரவாதிகள் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டவர்கள். அரசு பயங்கரவாதம் இவர்களை பல ஆண்டுகள் சிறையிலடைத்து பெரும் சித்ரவதை  செய்துள்ளது. இன்றைய முதல்வர் தமிழ்கூறும் நல்லுலகின் இந்த விருதை இவர்களுக்கு வழங்கியிருக்கிறார். வரலாறு கம்யூனிஸ்டுகளை மேன்மைப்படுத்தும் என்பது பிடல் காஸ்ட்ரோவின் வரிகள். இன்றைய முதல்வரும் கம்யூனிஸ்டு களின் தியாக வாழ்க்கையை மேலும் மேன்மைப்படுத்தியுள்ளார்.

(தொடரும்)