(99) ஆற்று மணல் போராட்டம்!
ஆற்று மணலை நாம் அறிந்தோம் இல்லை. பெரும்பாறையின் கடைசித் துகள்தான் ஆற்றுமணல். பாறைகள், ஒன்றோடு ஒன்று மோதி, பல ஆண்டுகள் முயன்று முயன்று தங்களை துண்டு துண்டாக உடைத்து, பிரித்துக் கொள்கிறது. கடைசியில் அவை ஆற்றின் பாதுகாப்புக் கவசமாய் தங்களைத் தாங்களே மாற்றிக்கொள்கின்றன. மணல் என்னும் பெயரையும் பெற்றுக் கொள்கிறது. இயற்கையில் நுட்பமாக நிகழ்ந்துவரும், இந்த பரிமாண அற்புதத்தை நாம் அறிந்தோம் இல்லை. இது கொட்டிக் கிடக்கிறது... கேட்பதற்கு நாதியில்லை. அள்ளி எடுத்துக் கொண்டால் என்ன? என்ற மனநிலை வந்துவிடுகிறது, சுயநலம் கொண்ட மனிதருக்கு.
சிமெண்ட் இல்லாமல் கட்டடங்களை கட்ட முடியாது என்பதை வியாபாரத் தந்திரம் என்கிறார்கள் சிலர். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. சிமெண்ட் இல்லாமல் கட்டிய, நம் தொன்மையான கட்டிடங்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைபெற்று இருக்கின்றன. இதன் தர்க்கத்தை யோசித்துப் பார்த்ததில், சிமெண்ட், மணலை பலிகொண்ட வியாபாரமா என்ற கேள்வி எழுந்துவிடுகிறது. சிமெண்ட் தொழிற்சாலைகள் பெருகப் பெருக, ஆற்றுமணல் அழியத் தொடங்கியது. இதுகுறித்து தோழர் நல்லகண்ணு பலகாலம் என்னிடம் பேசியிருக்கிறார். கான்கிரீட் இல்லாமல் இரும்பை பயன்படுத்தித்தானே வளர்ச்சியடைந்த நாடுகளில் கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள். ஒரு கைப்பிடி ஆற்று மணல் உருவாக எத்தனை காலம் தேவை என்பதை இவர்கள் அறிந்து கொள்வதில்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை ஆற்றுமணல் எல்லா உயிர்களுக்கும், பிரபஞ்சம் அளித்துள்ள பெருங்கொடை.
தாமிரபரணி அவர் நேசித்த ஆறு. விவரமறி யாப் பருவத்தில், நீரற்ற ஆற்று மணலில் ஓடித் திரிந்தவர். நீர் நிறைந்த காலங்களில் அதில் நீந்தி விளையாடியவர். அவருக்கு தாய், தந்தையரைப் போலவே இந்த தாமிரபரணி ஆறும். இதைப் போலவே, இவர் தமிழகம் முழுவதும் சுற்றிவந்த காலங்களில் நீர்நிலைகள் பற்றிய அத்தனையும் நேரில் பார்த்து அறிந்திருக்கிறார். தமிழக ஆற்றுப்படுகைகள் மொத்தம் 32 என்பதை இவர்மூலம் நான் அறிந்துகொண்டேன். அங்கு கொட்டிக் கிடக்கும் மணல் பற்றி இவர் கூறியவை, என் கற்பனைக் கதவுகளை திறக்கவைத்து, எங்கெங்கோ என்னை அழைத்துச் சென்றிருக்கிறது.
தாமிரபரணி தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதை அடிக்கடி சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்வார். தாமிரபரணி தோன்றும் இடத்திலிருந்து அது எங்கெல்லாம் ஓடிச் செல்கிறது என்பதையும், இதன் கிளை நதிகள் எங்கு தோன்றி எங்கு வந்து சேருகிறது என்பதையும், அவரால் மிகவும் எளிதாகச் சொல்ல முடியும். ஏட்டில் அறியாத, பல தகவல்களை அவரிடம் நேரில் கேட்டறிந்திருக்கிறேன். இதைப் போலவே ஆற்று மணல் போராட்டத்தை மக்கள் எங்கு நடத்தினாலும் நேரில் சென்றுவிடுவார். ஒரு கட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை இடமான பாலன் இல்லம் இது பற்றிய அக்கறை கொண்டவர்கள் அனைவரும் வந்துசெல்லும் இடமாக மாறிப்போனது.
ஒவ்வொரு காலத்திலும் கொள்ளையர்கள் கவனம் ஏதாவது ஒரு இயற்கையின் பெட்டகத் தைத் திருடுவதில் இருக்கும். இயற்கையை ஏமாற்றி கொள்ளையடிக்காமல் வளர்ந்த தொழில் நிறுவனங்கள் ஏதாவது உண்டா? என்று யோசித்துப் பார்க்கிறேன். இதில் கொஞ்சம் நியாயம் பார்ப்பவர்கள் உண்டு என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் கூடுதல் லாபத்தை, இயற்கை கொள்ளையின் மூலம் திரட்டிக் கொள்ளவே சதிகாரர்கள் திட்டமிட்டுக் கொள்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மணற்கொள்ளை ஒரு பெரும் வியாபாரமாக உருவெடுத்திருந்தது. இதை அம்பலப்படுத்தி பல அறிக்கைகளையும் கட்டுரைகளையும் தோழர் நல்லகண்ணு இந்த காலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/kaiti1-2025-11-10-17-35-05.jpg)
அவரது செய்தித்தாள், சேகரிப்பு ஆவணங்களைப் புரட்டிப் பார்க்கும்போது பல தகவல்கள் எனக்குக் கிடைத்தன. தமிழ்நாட்டின் கட்டட வேலைக்கு மணல் தேவை என்பது உண்மைதான். ஆனால் இந்த தேவைக்கும், சுரண்டி எடுத்துச் செல்லும் மணல் அளவிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதே அது ஏன் என்ற கேள்வியை எழுப்பிய செய்திகளையும் இவரது ஆவணத் தொகுப்பில் பார்த்திருக்கிறேன். இதற்கான விடையை இன்னொரு ஊடகம் வெளியிட்டிருந்தது. அண்டை மாநிலமான கேரளத்தில் மொத்தம் 47 ஆறுகள் ஓடுகின்றன. இவை அனைத்திலும் ஆற்று மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தாமிரபரணி மணல், காவிரி மணல், பாலாற்று மணல் என்று போர்டு போட்டு விற்பதைப் பற்றி வெளிவந்த பத்திரிகை செய்தியும் இவரிடமிருந்தது. மாலத்தீவுக்கு கப்பல் மூலம் மணல் ஏற்றிச் செல்லும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தந்தன.
இந்த நிலையில் மக்கள் பல போராட்டங்களை நடத்திப் பார்த்தார்கள் என்றாலும், பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். மக்கள் போராட்டம், வேறுவகையில் புத்துணர்ச்சி பெறவேண்டும். இதற்கு புதிய அணுகுமுறையை உருவாக்கிக் கொண்டார். மக்கள் போராட்டம் நீதிமன்றப் போராட்டமாக மாறியது. தாமிரபரணிக்காக நீதிமன்றத்தில் யாரெல்லாம் வழக்குத் தொடுத்திருந்தார்களோ, அவர்களையெல்லாம் இவரால் இதில் இணைக்க முடிந்தது. அய்யா நயினார் குலசேகரன் அவர்களை அனைவரும் அறிவார்கள். தாமிரபரணி என்றாலே எல்லோருக்கும் அவர் பெயர் நினைவுக்கு வந்துவிடும். அவரையும் தோழர் இணைத்துக்கொண்டார். இன்றைய நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், அன்றைய வழக்கறிஞர். அவரும் இந்த வழக்கில் பங்கேற்றிருந்தார். அவர் தோழர் நல்லகண்ணு பற்றி நீதிமன்றத்தில் குறிப்பிட்டவற்றை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நல்லகண்ணு அவர்கள், தன் வாதத்தை நீதிமன்றத்தில் நிகழ்த்தியபோது, வழக்கறிஞர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கூடியிருந்தனர். அவர் மீதும், அவர் கையிலெடுத்துள்ள பிரச்சினை மீதும் மக்களுக்கு இருந்த அக்கறையை இது காட்டுகிறது'' என்றார். இதைப்போலவே புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் பலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
வழக்கு 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் நாள் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இறுதித் தீர்ப்பு இதே ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி வழங்கப்பட்டது. வழக்கு நடைபெற மொத்தம் 95 நாட்கள் தேவைப்பட்டிருந்தது. மதுரை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை மாறி, மாறி நடந்துகொண்டிருந்தது. பல அமர்வுகளை விசாரணை எடுத்துக்கொண்டது. இந்த அமர்வுகளில் நீதிபதிகள் என்.நாகமுத்து, ஆர்.பானுமதி, ஜோதிமணி, சுப்பையா ஆகியோர் நீதிபதிகளாக பங்கேற்றிருந்தனர்.
இதைத்தவிர, உயர் நீதிமன்றத்தால் உண்மையறியும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இதன் தலைவராக மதுரை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் என்.சேசாயி தலைமையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இரண்டு பேராசிரியர்கள், எம்.அருணாசலம், சந்திரசேகர் ஆகியோரைக் கொண்ட மூவர் குழுவும் அமைக்கப்பட்டிருந்தது.
இரவு பகல் என்று பாராமல், ஓய்வு, உறக்கம் என்று பாராமல் அத்தனை நிகழ்ச்சிகளிலும் தொய்வின்றி தோழர் நல்லகண்ணு கலந்துகொண்டார். அப்பொழுது அவருக்கு வயது 86.
(தொடரும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/10/kaithi-2025-11-10-17-34-54.jpg)