(98)  டாலர் தேசம்


மிழ் மண்ணின் நீள அகலங் களை அளந்து பார்த்துவிட்ட தோழர் நல்லகண்ணுவின் கால்கள், உலகத்தின் பல நாடுகளிலும் தன் கால்களை பதித்துப் பார்த்திருக்கிறது. இன்றைய காலத்தில் உலகெங்கிலும் மிகச் சுலபமாக சென்று திரும்ப முடிகிறது. உலகமயத்திற்கு முந்தைய காலம் அப்படி இருக்கவில்லை. அப்பொழுதிருந்த கம்யூனிஸ்டு நாடுகளின் நடைமுறைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

Advertisment

இன்றைய ரஷியா அன்று சோவியத்து நாடு என்று அழைக்கப் பட்டது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் தேர்ந்த கம்யூனிஸ்டு ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மார்க்சீய லெனினிய கட்சி கல்வி அளிக்கும் நடைமுறையை அவர்கள் உரு வாக்கியிருந்தார்கள். தமிழ்நாட்டி லிருந்து மார்க்சீயம் கற்க மாஸ்கோ சென்ற முதல் தலைமுறையை சார்ந்தவர், தோழர் நல்லகண்ணு. தான் பட்ட துயரத்தை தத்துவ அடிப்படையில் திரும்ப பார்த்துகொள்ளும் கல்வியாக இவருக்கு இது அமைந்திருக்க வேண்டும். இந்த கல்வியும் பயணமும் சோசலிச சமூகத்தைப் பற்றி நேரில் புரிந்துகொள்ள உதவியதாக அவர், அடிக்கடி சொல்லிக் கொள்வார். 

Advertisment

இதன்பின்னர்தான் கிழக்கு ஜெர்மனிக்கு சென்றார். அதுவும் சோசலிச நாடாக உருப்பெற்றது. அந்தப் பயணம் விவசாயம் சார்ந்த தூதுக்குழுவின் பயணம். இதற்கு அடுத்த அவரது வெளிநாட்டு பயணம் சீனப் பயணம். 1964ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரண்டாகப் பிரிந்தது. அதன் பின்னர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் நல்லுறவு இல்லை. இந்த பின்னணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் தலைமையில் எட்டு பேர் கொண்ட தூதுகுழு ஒன்று சீனா சென்றது. அதில் தோழர் நல்ல கண்ணுவும் பங்கேற்றார். ரஷியா, ஐரோப்பிய பண்பாட்டை கொண்ட நாடு. சீனா, ஆசிய கண்டத்தை சேர்ந்த நாடு. ஆசியாவை சார்ந்த பண் பாட்டு அடிப் படையில் பல கூறுகளை அவரால் கண்டறிந்து சொல்ல முடிந்தது.

அமெரிக்கா என்னும் நாடு பற்றி பலருக்கும் பல எண்ணங்கள் உண்டு. கம்யூனிஸ்டுகள் அமெரிக்காவைப் பற்றி கொண்டிருக்கும் மதிப்பீடுகள், வேறுபட்டி ருக்கும். இந்த மதிப்பீடுகள் கெடுபிடி யுத்த காலம் அல்லது பனிப்போர் காலம் என்னும் ஸ்ரீர்ப்க் ஜ்ஹழ் காலத்தில் உருவானவை. ஆனாலும் எதையும் முன் மதிப்பீட்டை மட்டும் வைத்துக் கொள்ளாமல் ஆராய்ந்து பார்த்து அதில் நல்லதை ஏற்றுக்கொள்ளும் இயல்பு தோழர் நல்லகண்ணுவிடம் இருந்தது. இந்த சூழலில் அமெரிக்கா செல்வதற்கான அழைப்பு அவருக்கு வந்திருந்தது. அவர் செல்ல விருப்பம் இல்லை என்று வயதைக் காரணம் காட்டி சொல்லிவிட்டார். ஆனால் ஒருவர் அவரை விடுவதாக இல்லை. அவர் எல்லோரையும் விட பிடிவாதக்காரர், எதை எடுத்தாலும் பிடிவாதமாக நிறைவேற்றிவிடுவார். அவர்தான் அய்யா புகழூர் விசுவநாதன். 

Advertisment

அவருக்கு புதுப்பிக்காமல் இருந்த பாஸ்போர்ட்டை புதுப்பித்துத் தருவதில் தொடங்கி விசா வரை அனைத்து ஏற்பாடு களையும் முடித்துவிட் டார். வேறுவழியில்லாமல் அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்தத்தை தந்துவிட்டார். இருபது  நாட்கள் அமெ ரிக்க நிலப் பரப்பில், பல இடங்களுக்கு பறந்து சென் றார். சென்று திரும்பிய பின்னர் இவர் எழு திய நூலின் பெயர் டாலர் தேசத்தின் அனுபவங்கள். எத்தனை வீடுகளில் அவர் தங்கியிருந்தாரோ அத்தனை வீடுகளைப் பற்றிய விபரங்களையும், அந்த குடும்பங்களின், அன்பு பிணைப்பையும் அவர் அதில் எழுதினார். சில மணி நேரங்கள், சில நாட்கள் என்று அவரோடு பழகிய தருணங்களை நினைத்து, அவர்கள் பெருமிதம் கொள்வதை பின்னர் நேரில் சந்தித்த நேரங்களில் எனக்கு கேட்க நேர்ந்திருக்கிறது. 

kaithi1

இவர் எழுதிய நூலில் சிகாகோ நகரின் மே தின தியாகிகள் பற்றி உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.         மே தினப் போராட்டம், எட்டு மணி நேரம் வேலை வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து, 1886ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி தொடங்கியது. அதில் தொழிற்சங்கத் தலைவர்கள் நால்வர் தூக்கிலிடப்பட்டனர். எஞ்சியவர்கள், முதலாளிகளின் கைக்கூலி களாலும் போலீஸ்காரர்களாலும் மூர்க்கமாகத் தாக்கப்பட்டார்கள். அவர்கள் குடியிருப்புகள் தரைமட்டமாக்கப்பட்டன. தப்பிய குடும்பங்களில ஒரு சில, கனடாவில் குடி யேறினார்கள். அங்கு கடுமையாக உழைத்தனர். தங்களது வாரிசுகளுக்கு உயில் ஒன்றையும் எழுதி வைத்தனர். தாங்கள் இறந்த பின்னர், தங்களின் உடலை மற்ற மேதினத் தியாகிகளின் உடலுக்கு அருகில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று உயிலில் எழுதி வைத் திருந்தார்கள். இதற்கென்று தங்கள் உழைப்பின் ஒரு பகுதியை சேமிப்பாக சேர்த்து வைத்திருந்தார்கள். சில ஆண்டுகள் கழிந்தன. அதற்குள் சிகாகோ நகரசபையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. வாரிசுகள், அவர்கள் உயில்படி உயிர் பிரிந்த உடலை விமானம் மூலம் சிகாகோ கொண்டு வந்து சேர்த்தனர். மரணத்திற்கு பின்னரும் தோழர்களோடு தோழர்கள் இணைந்து விட்டனர். மரணத்திற்கு பின்னரும் தோழமைக்கான புதிய உலகம் ஒன்று அங்கு அமைந்து விட்டது. மேதினத் தியாகிகளின் கல்லறைப் பூங்கா புரட்சிகர கம்பீரத்துடன் அந்த நகரின் மையத்தில் வீற்றிருக்கிறது. இது குறித்த தோழர் நல்லகண்ணுவின் பதிவு உணர்வுப்பூர்வமானது. 

இதைப் போன்றே அமெரிக்காவில் இவருக்கு நேர்ந்த நிகழ்வு ஒன்று அனைவரையும் பதட்டத்திற்கு உள்ளாக்கி விட்டது. இவர் அதிகாரப்பூர்வமாக வட அமெரிக்க தமிழ் சங்க மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இது 47 அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு. பால்டிமோர் நகரில் இதன் வெள்ளி விழா மாநாடு அறிவிக்கப்பட்டி ருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தோழர் அழைக்கப்பட்டிருந்தார். விமான நிலையத்தில் இவரை அழைத்துச் செல்வதற்கு ஒரு பிரமுகர் கூட்டமே வந்திருந்தது. எல்லாப் பயணிகளும் வந்துவிட்டார்கள் இவர் மட்டும் வரவில்லை. அமெரிக்க அரசாங்கத்தின் கெடுபிடிகளை அங்குள்ளவர்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்பதை யாராலுமே அனுமானிக்க முடியாது. 

தோழர் நல்லகண்ணு அனைவராலும் நன்கு அறியப்பட்ட கம்யூனிஸ்டு தலைவர். அமெரிக்க அரசுக்கு ஆரம்ப காலம் முதலே சில கொள்கைகள் உண்டு. சில நேரங்களில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அந்த நாட்டிற்குள் நுழைவதை அது தடுத்து விடும். இவ்வாறான பிரச்சனைகள் ஏதாவது நடந்து விட்டதா? என்ற சந்தேகம் சிலருக்கு வந்து விட்டது. நிலைமையை அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அந்த நேரம் பார்த்து தோழர் நுழைவாயிலுக்கு வந்து சேர்வதை பார்த்து விட்டார்கள். 

வந்தவர் சொன்ன தகவல் இதுதான்... "என் பாஸ்போர்டை எடுத்து பார்த்தார்கள், என்னை மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார்கள். ஏன் இப்படி பார்க் கிறார்கள் என்று யோசித்தேன். வயது என்ன என்றார்கள். 90 என்றேன். அருகில் அழைத்து நாற்காலியில் அமரச் செய்தார்கள். என்னை சுற்றி அதிகாரிகளின் குழு ஒன்று கூடிவிட்டது. கடைசியில்தான் தெரிந்தது. இந்த வயதிலும் இத்தனை ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு என்ன உணவு உண்கிறேன், என்ன உடற்பயிற்சி செய்கிறேன் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பது'' என்று தோழர் நிலைமையை விளக்கிக் கூறியுள்ளார்.

(தொடரும்)