(69) தூக்குமேடை பாலு!
எல்லா காலங்களிலும், கம்யூனிஸ்டு இயக்கத்தில் அதன் முதுகெலும்பாக வாழ்ந்தவர் கள் அதன் ஊழியர்கள். அன்றைய காலத்தில் கம்யூனிஸ்டு கட்சிக்கு, எதையும் இழக்கும் மன நிலையையும், எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் கொண்ட ஊழியர்கள் கிடைத்தார்கள். அந்த ஊழியர்கள் வாழ்ந்த வாழ்க்கை, இன்று நமக்கு வழிபாட்டுக்குரியதாகத் தோன்றுகிறது. இந்த புரிதலை எனக்குள் தோழர் நல்லகண்ணு உருவாக்கியிருந்தார். அந்த ஊழியர்களில், பெரும் வசதி படைத்த குடும்பம் முதல், சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள் வரை பலரும் முழுநேரப் புரட்சிக்காரர்களாக மாறியிருந்தார்கள். இதில் தூக்குமேடை பாலு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
பாலுவின் மதுரை வருகைக்கு அன்றைய சூழல் காரணம் என்கிறார் நல்லகண்ணு. மதுரையின் இடதுசாரி ஈடுபாடு பலமுனைகளில் நிகழ்ந்துகொண்டிருந்தது. தொடக்க கால தொழிற்சாலைகள் தோன்றியிருந்தன. நகர விரிவாக்கத்தில் கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி மக்கள் வந்தனர். நகரைச் சுற்றியிருந்த கிராமப்புற பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்து பலம் பொருந்திய போராட்டம் நடைபெற, அது மதுரையில் பிரதிபலித்தது. இந்த பின்னணி, கம்யூனிஸ்டு கட்சிகள் தோன்றி, வளர்வதற்கான சாத்தியங்களை உருவாக்கித் தந்திருந்தது என்கிறார்.
மதுரை, மண்சார்ந்த வீரம் சார்ந்திருந்தது. நியாயத்திற்காக எதையும் செய்யும் மக்கள் மனநிலை, அந்த வாழ்க்கையின் தட்பவெட்ப நிலையாக மாறியிருந்தது. அந்த வாழ்க்கையில் விளைச்சல் பெற்ற கட்சி ஊழியர்கள் எல்லாவற்றையும் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டிருந்தார்கள். இதனால்தான் மதுரையில் பெரும் எண்ணிக்கையில் தியாகிகள் தோன்றி னார்கள். எத்தனை தோழர்கள் ‘ரத்தம் சொரிந்தனர். புதிய அரசியலுக்கான விழுதுகளை உருவாக்கித் தந்துகொண்டேயிருந்தார்கள். மாரி, மணவாளன், தில்லைவனம், பொதும்பு பொன்னையா, பூந்தோட்டம் சுப்பையா, ஐ.வி.சுப்பையா இவர்களின் தியாகங்கள் மதுரை மக்களுக்கு ஒரு போர்க்குணத்தை உருவாக்கியிருந்தது.
தோழர் நல்லகண்ணு, ஒருநாள் பாலுவின் மனைவியைப் பற்றி கூறியவை, இவர் இத்தனை அப்பாவியா? என்று நினைக்கத் தோன்றியது. பாலுவின் மனைவி வீராயி தோழர்களிடம் கூறியதை தனது நூலில் எழுதியுள்ளார். ‘"பத்து கிடாக்குட்டியை வித்துட்டு பணம் தரேன் எப்படியாவது அவரை காப்பாற்றுங்கள்'’என்று சொன்னாராம். அந்த அளவிற்கு அவர் அப்பாவியானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே வீராயி, தூக்கிலிடுவதற்கு முதல் நாள் தன் கணவரைப் பார்ப்பதற்கு வருகிறார். இடுப்பில் இரண்டரை வயது குழந்தை இருக்கிறது. குழந்தையின் பெயர் சரோஜினி. வீராயிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு முள்கம்பி வேலி தெரிகிறது. முள்வேலிக்கு உள், கனத்த இரும்பு கம்பிக்குள் கணவர் இருக்கிறார். கண்கொண்டு கணவனைப் பார்க்கவும், சக்தியற்று முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தலையில் அடித்துக்கொண்டு அழுகிறாள். அருகில் ஜெயிலர், வார்டர்கள் புடைசூழ நிற்கிறார். அவர்கள் இதைப் பார்க்க சகிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். அவர்கள் கண்களிலும் கண்ணீர். இதையும் தோழர் நல்லகண்ணு தன் நூலில் பதிவு செய்துள்ளார்.
தோழர் பாலுவுக்கு அவர் கற்ற மார்க்சீயம், இவை எல்லாம் ஏன் நடக்கிறது. என்ற காரணத்தை தெரிவித்திருக்கிறது. இந்த சுரண்டல் அமைப்பு முறைதான் காரணம் என்பதை உணர்ந்திருக்கிறார். மனைவியையும் குழந்தையையும் உற்றுப் பார்த்துவிட்டுப் பேசுகிறார். அவரிடம் எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை. தனது மரணம் பற்றிய தெளிவு வார்த்தைகளில் இருக்கிறது. "ஏன் அழுகிறாய்? ‘ உன் அழுகையை நிறுத்து. ஒரு பெரிய லட்சியத்திற்காக உன் புருஷன் உயிரைத் தருகிறான் என்று பெருமைப்பட்டுக்கொள்'’ என்கிறார்.
பாலுவின் குடும்பம் மதுரைக்கு குடிபெயர்ந்து வந்திருந்தது. அப்பொழுது பாலுவுக்கு 10 வயதிருக்கும். எளிய குடும்பத்தின் எல்லா பணிகளையும் அவர் செய்திருக்கிறார். மதுரை வெற்றிலைப்பேட்டையில் 4 அணாவிற்கு தினசரி கூலி வேலை செய்திருக்கிறார். இதன் பின்னர் அன்றைய மதுரை ஹார்வி மில்லில் அரையாள் கூலியாக வேலைக்குச் சேர்ந்திருக் கிறார். மில்லில் நடைபெற்ற கூலி உயர்வுப் போராட் டத்தில், வேலை அளவு கூடுதலை எதிர்த்து தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். மில் நிர்வாகத் தின் உழைப்புச் சுரண்டல், தொழிலாளர்களை அடிமையாக நினைக்கும் கொடுமை ஆகியவற்றிற்காக அவர்களை எதிர்த்து நிற்கிறார். அக்கிரமங்களை எதிர்க்கத் தொடங்கியவர் மெல்ல, மெல்ல பொது வுடமைத் தத்துவத்தால் ஈர்க்கப்படுகிறார்.
இதைச் சகிக்காத ஹார்வி மில் நிர்வாகம் ஏராளமான தொழிலாளர் களை டிஸ்மிஸ் செய்கிறது. பாலுவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தானாகவே முன்வந்து வேலையிலிருந்து நின்று கொள்கிறார். பின்னர்தான் பிரிட்டிஷ் ஆட்சியில் காவல்துறை பணியில் சேருகிறார். அப்போது காவல்துறையில் சேர ஒரே தகுதி ஆஜானுபாகுவான தோற்றம்தான். அந்தத் தோற்றத்தில் கம்பீரமான கட்டுடலைக் கொண்ட பாலு காவல்துறைக்கு தேர்வு செய்யப்படுகிறார். காவல்துறை வாகன ஓட்டுனராகி ஏட்டு எனும் தகுதியைப் பெறுகிறார். அன்றைய காவல் துறை பணி, சமுதாயத்தில் பெரும் மரியாதைக்குரிய பணி.
தென்மாவட்டங்களிலிருந்து தெலுங்கானா போராட் டத்தை அடக்கச் சென்ற காவல்துறை குழுவில் இவரும் இடம்பெறுகிறார். போராடும் விவசாயிகளிடமும், இணக்கமாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். அதுமட்டுமல்லாது கம்யூனிஸ்ட் கட்சியோடும் தொடர்பு வைத்திருந்தார். கட்சி தடை செய்யப்பட்ட காலம். ஒரு காவல்துறை ஊழியர் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்பில் இருந்தார் என்பது தெரிந்தால் என்னவாகும் என்பதைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை.
இச்சூழலால் காவல்துறையின் உளவுப் பிரிவைச் சேர்ந்த செண்பகம் சேர்வை என்பவரின் கொலை வழக்கு வந்து சேருகிறது. தோழர்கள் பாலு, மருதை, மொட்டையன், டேவிட் ராஜாமணி, ஜோஸப், வீரய்யா என்ற 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைக்கிறது. மதுரை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் 6 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கிறது. இதனை எதிர்த்து 6 பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் தோழர் பாலுவுக்கு மட்டும் தூக்குத் தண்டனை உறுதியானது. இதர தோழர்களுக்கு ஆயுள் தண்டனை.
பாலு தூக்கிலிடப்பட்டார் என்ற கொடுமையையை விட மற்றொரு கொடுமையும் நடந்தேறியது. அந்தக் கொடுமையை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. ஒரு அரசாங்கத்திற்கு கம்யூனிஸ்டுகளின் மீது இத்தனை கோபமா என்று பத்திரிகைகள் எழுதின. இறந்துபோன பாலுவின் உடல் எங்கே கொண்டுசெல்லப்படுகிறது என்பது கட்சித் தோழர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ தெரியவில்லை.
சென்னை மாகாண அரசாங்கத்தின் உத்தரவில் பாலுவின் உடல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எங்கோ கொண்டுசெல்லப்படுகிறது. பின்னர்தான் தெரியவந்தது. இன்று மதுரையில் விமானநிலையம் அமைந்துள்ள இடத்தின் அருகில் உடல் கொண்டு சென்று எரிக்கப்பட்டது. இதை எதிர்த்து எல்லோரும் கண்டனம் தெரிவித்தனர். இறப்புக்குப் பின் மனிதருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தவேண்டும் என்ற நாகரிகம் கூட அரசாங்கத்திற்கு இல்லை. ஆனால் புரட்சிக்காரர்களுக்கு எந்த ஆதிக்க ஆணவ சக்திகளாலும் எந்த அவமரியாதையையும் செய்துவிட முடியாது என்பது பாவம் அவர்களுக்கு எங்கே தெரிந்திருக்கப்போகிறது. இது ஆட்சி அதிகாரத் திமிரில் அவர்களே தேடிக்கொள்ளும் அவமானம் என்பதுதான் உண்மையாகும்.
(தொடரும்)