(93) திருமணம்!
கம்யூனிஸ்டுகள் வாழ்க்கை, ஏனைய, சராசரி மனித வாழ்க்கை யிலிருந்து வேறுபட்டிருக்கிறது. இதை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு வந்து விட்டது. திருமண வயதிலிருந்த, அன்றைய கம்யூனிஸ்டு இளைஞர்கள் பலர், இந்த நெருக்கடியை சந்தித்தார்கள். இந்த நெருக்கடி என்ன என்பதை இன்று கூட பலரால் புரிந்துகொள்ள இயலாது. என்னதான் விடுதலை என்றாலும் போராட்டம், துப்பாக்கி, போலீஸ், நீதிமன்றம், சிறைச்சாலை என்ற நிழல் ஒன்று அவர்களை பின்தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. இந்த நிழல், இவர்கள் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவர்கள் இல்லை என்ற கருத்தை பொது வெளியில் உருவாக்கிக் கொண்டிருந்தது. எந்த நேரமும் சிறைக்கு செல்லலாம், தூக்கிலிடப்படலாம், என்ற பயம் எல்லோரிடமும் உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் சிலர் திருமணம் செய்து கொள்ளா மல் இருப்பதை நான் அறிவேன்.
நான் அறிந்த சில கம்யூனிஸ்டு தலைவர் களுக்கு குழந்தை கூட இல்லை. அதில் ஒருவர் என் மீது மிகுந்த அன்பை கொண்டிருந்தார். அவரது பாசம், தந்தையற்ற எனக்கு, அவரை தந்தையாக உணர வைத்து விட்டது. அந்தப் பாசம் இன்றுவரை என்னை உணர்ச்சிகொள்ள வைத்து வருகிறது. ஒரு நாள் உண்மையை தெரிந்து கொண்டபோது, நான் மிகவும் அதிர்ந்து போனேன். அவரது திருமணம் தலைமறைவு காலத்தை ஒட்டி நிகழ்ந்துள்ளது. அந்த சூழலில் அவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்வது இல்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள். இது அவ ருக்கு கட்சியின் நெருக்கடி காலம், தந்த நெருக்கடி.
பொதுவெளியில் உருவான இந்த நெருக்கடியை, கட்சித் தோழர்கள் உடைத்துக் காட்டினார்கள். தங்கள் குடும்பத்திற்குள் பொருத்தமானவர்களை, பிடித்தமானவர்களை திருமணம் செய்து வைக்கும் சூழலை உருவாக்கிக் கொண்டார்கள். திருமணத்திற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை, அம்மா ரஞ்சிதம் ஒரு பேட்டியில் கூறியது, இதை உறுதி செய்கிறது. அம்மாவைப் பற்றிய ஊடகச் செய்திகள் அவரது குடும்ப வாழ்க்கை பற்றிய பல்வேறு தகவல்களை நமக்குத் தெரிவிக்கிறது.
திருமண பேச்சுவார்த்தை நடந்த தருணத்தில் என் அம்மா, மாப்பிள்ளையின் சம்பளம் எவ்வளவு என்று கேட்டார். அதெல் லாம் கேட்கக்கூடாது என்று அப்பா தடுத்து விட்டார். அவர், ஒரு கட்சிக்காரர் என்பது மட்டுமே அப்பாவுக்குப் போதுமானதாக இருந்தது என்கிறார் ஒரு ஊடகத்தில். திருமணம் என்று முடிவானதற்கு பிறகு அமிர்தசரஸ் கட்சி மாநாட்டுக்கு சென்றுவிட்டு எங்கள் வீட்டிற்கு தோழர் வந்தார். இதுதான் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், நான் முதல் முறையாக அவரைப் பார்த்த சந்தர்ப்பம் என்பதை மற்றொரு ஒரு ஊடகத்திற்கு கூறியுள்ளார். திருமணத்திற்கு முன் தன் கணவரைப் பற்றி அம்மா பதிவு செய்துள்ளது ஒரு முக்கிய பதிவாகும். அப்பாவைப்போல தோழரும் ஒரு நேர்மையான கம்யூனிஸ்டு என்பதும், மக்களுக்காக போராடி பல சித்ரவதைகளை அனுபவித்தவர் என்பதும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் தந்தையின் தேர்வு சரியாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு கடைசியில் வந்தேன் என்கிறார். தோழருக்கு அப்பொழுது ரூபாய் முப்பது முழுநேர ஊழியருக்கான சம்பளமாக தரப்பட்டது. இதை மற்றவர்கள் கூறியபோது, எனக்கு வேறு எந்த உணர்வும் வரவேயில்லை. நான் ஆசிரியர் பணியில் இருப்பதால், அதை வைத்து குடும்பத்தை நடத்திக்கொள்ளலாம் என்ற தைரியம் மட்டும் இருந்தது என்கிறார்.
தோழர் நல்லகண்ணு அவர்களின் இரண்டு விருப்பங்கள் திருமணத்தில் நிறை வேறவில்லை. சிறைக்கு சென்று திரும்பிய பின்னர், அவரிடம் சில மாறுதல் ஏற்பட்டி ருந்ததை தெரிந்துகொள்ள முடிகிறது. நீண்டகால சிறை வாழ்க்கை. சிறுவயது முதல் வீட்டில் உள்ளவர்கள் பேச்சைக் கேட்க வில்லை. திருமணத்தில் அம்மா அப்பாவின் பேச்சுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற உணர்வு அவருக்கு வந்திருக்கவேண்டும் அந்த இரண்டையும் ரஞ்சிதம் அம்மா பேட்டியில் குறிப்பிட்டு சொல்லியுள்ளார்கள். ஒன்று திருமணத்தை, பதிவுத் திருமணமாக நடத்த வேண்டும் என்பது, மற்றொன்று தாலி, அரிவாள் சுத்தியல் பொறித்த தாலியாக இருக்க வேண்டும் என்பது. இதற்கு, தாலி குடும்ப முறைப்படி இருக்க வேண்டும். திரு மணம், ஊரில் உள்ளவர்கள் முன்னிலையில் எல்லோருக்கும் தெரிந்து நடக்கவேண்டும் என்று தோழரின் அம்மா கூறிவிட்டார் என்கிறார்
திருமணம் 1958ஆம் ஆண்டு, ஜூலை மாதத் தில் செட்டி சத்திரம் என் னும் இடத்தில் நடந்துள் ளது. புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் நா.வானமாமலை அவர்களும், தோழர் நல்லகண்ணு அவர்களும் ஒரு கிளையின் ஆரம்பகால கட்சி உறுப்பினர். இவர் தலைமையில்தான் திருமணம் நடந்துள்ளது. மற்றொரு ஊடக செய்தியில் திருமணத்திற்கு பின்னர் சினிமாவுக்கு சென்ற கதை ஒன்றை சுவைபட அம்மா கூறுகிறார். ராமபக்தர் என்பது படத்தின் பெயர். அந்த ஊர் தியேட்டர் சொந்தக்காரர் எங்க மாமா வுக்கு நெருங்கிய நண்பர். அவர் சில டிக்கெட்டுகளை அனுப்பி வைத்திருந்தார். படம் பார்க்க கணவர் நாத்தனாருடன் சென்றிருந்தேன். நானும் தோழரும் சேர்ந்து அமர்ந்து, படம் பார்க்கவில்லை. அவர் ஆண்கள் பகுதியில், நாங்கள் பெண்கள் பகுதியில். இதன் பின்னர் தோழரோடு நான் சென்று பார்த்த படம் எஹப்ப் ர்ச் க்ஷங்ழ்ப்ண்ய் என்னும் ஆங்கிலப் படம். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாசிசம் வீழ்ந்த கதையை படம் விவரிக்கிறது. கம்யூனிஸ்டு கட்சியினரால் ஆர்வம்கொண்டு பார்க்கப் பட்ட படம் அது. இந்த படத்திற்கு நாங்கள் இருவரும் சேர்ந்து சென்றதை மக்கள் வேடிக்கை பார்த்தார்கள். அப்பொழுது, கணவன் மனைவி சேர்ந்து எங்குமே நடந்து செல்வதை பார்க்க முடியாது என்கிறார்.
சமையலில் தோழர் உங்களுக்கு உதவி செய்வாரா? என்பது ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வி. அம்மா ரஞ்சிதம் அளித்த பதில் சுவையான சம்பவம் ஒன்றை விவ ரிக்கிறது. ‘அவர் வீட்டில் இருப்பதே அரிது. அப்படியே இருந்தாலும், கட்சித் தோழர்கள் அவரை சந்திக்க வந்து விடுவார்கள். இப்படிப்பட்ட சூழலில் எவ்வாறு எனக்கு உதவி செய்ய முடியும் என்ற கேள்வியை எழுப்பியவர், அந்த சம்பவத்தையும் கூறுகிறார்.
நான் ஆசிரியர் பணியில் இருந்தபோது, ஒருநாள் பிள்ளைகளை பள்ளிக்கு தயார்படுத்திவிட்டு, வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தோழர் வெளியூரிலிருந்து வந்து விட்டார். அவருக்கு காலை உணவு தயாரித்து கொடுக்க முடியவில்லை. அந்த சூழலில், தோசை மாவு இருக்கிறது, சுட்டு சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டு அவசரமாக சென்றுவிட்டேன். அவரும் ஆர்வத்தோடு தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெயை தடவும்போது கையை சுட்டுக் கொண்டுவிட்டார். காயம் குணமடைவற்கு சிலகாலம் பிடித்தது. அதோடு அவரது சமையலும் நின்றுவிட்டது என்கிறார். இதன்பின்னர் அடிக்கடி சமையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பார். ஆனால் அதைமட்டும் அவரால் கற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று கூறியதை நம்மால் ரசிக்க முடிகிறது.
இவையெல்லாம் குடும்ப வாழ்க்கையின் ஆரம்ப காலத்தைப் பற்றி அம்மா ரஞ்சிதம் அவர்கள் ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட தகவல்கள்.
(தொடரும்)