(92) அம்மா! 

ம்மாவின் பெயர் ரஞ்சிதம். அந்தப் பெயரை அய்யா நல்லகண்ணு தனது மெல்லிய குரலில் உச்சரித்து அழைக்கும் விதம் அலாதியானது. அதில் பெருகி வெளிப்படும் அன்பின் ஆழத்தை என் மனம் கண்டுணர்ந்து பரவசம் கொண்ட தருணங்கள் உண்டு. கட்சியில் முழுநேர ஊழியர்களின் வாழ்க்கை யில், அவர்களின் குடும்பங்கள் பல்வேறு நெருக் கடிகளை சந்தித்துவிடுகிறது. படிப்பை முடித்து,  அரசாங்கப் பணிக்கு செல்லமாட்டேன் என உறுதி கொண்டு, பலர் முழுநேர ஊழியர்கள் என்னும் கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள் கிறார்கள். இதில் நெருக்கடி ஏற்படும்போது அதன் துயரம் எத்தகையது என்பதை நானறிவேன். கூடுதல் நெருக்கடி ஏற்படும்போது, தாங்கள் யாருமற்ற அனாதை என்று தங்களை உணரத் தொடங்கி விடுகிறார்கள். கட்சி வாழ்க்கையில் அனாதை என்ற எண்ணம் வருவதைப் போல கொடுமை வேறு எதுவுமே இல்லை. சிலர் இதனால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குக்கூட சென்றிருக்கிறார்கள். 

Advertisment

தோழர் நல்லகண்ணு அவர்கள் வாழ்நாள் முழுநேர ஊழியர். ஆரம்ப காலம் முதலே இவரது முழுநேர கட்சி வாழ்க்கையும், பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தே வந்துள்ளது. எல்லா நேர்மையாளர்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சனைதான் இது. இவ்வாறான குடும்ப வாழ்க்கையும், கட்சி வாழ்க் கையில் இணைந்த பயணத் தில், காற்றில் சிக்கிய படகைப் போல, பல்வேறு சிரமங்களைச் சந்திக்கத் தான் செய்தார்கள். குடும்பங்களில் அந்தக் குடும்பத் தலைவி படும் துயரம் யாராலும் அறிந்துகொள்ள முடியாது. இந்த பயணத்தில் அம்மா ரஞ்சிதம் அவர்களை, படகு என்று ஒப்பிடுவதா? துடுப்பு என்று சொல்வதா? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் புன்னகை மாறாமல் வாழ்நாள் முழுவதும் அந்தச் சுமையை சுமந்து வந்திருக்கிறார்கள். அம்மா ரஞ்சிதம் பற்றி அறிந்துகொள்ளாதவர்களால், அய்யா நல்லகண்ணு வாழ்க்கையை முழுமை யாக அறிந்துகொள்ள முடியாது. 

Advertisment

அம்மா ரஞ்சிதம் அவர்களின் வாழ்க்கை, அவரது தந்தை அய்யா அன்னசாமி அவர்களின் பாரம்பரியத் தொடர்ச்சியாகவே அமைந்தது. தந்தையார் கொலை செய்யப்பட்டபோது, பத்திரிகைகாரர்கள் கேள்விக்கு, அம்மா ரஞ்சிதம் அளித்த பதில், அதனை உறுதி செய்கி றது. பேட்டி அவரது அரசியல் அறிதலின் மேன்மையையும், பக்குவத்தையும் வெளிப் படுத்துகிறது. பெருந்துயரம் சூழ்ந்த அந்த தருணத்தில், பேட்டியில் அவர் கூறிய வார்த்தை இவைதான். "நான் பிறந்த மருதன்வாழ்வில் ‘இப்படி ஒரு கொலை நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும் இது காந்தியைக் கொன்ற தேசம்தானே'’ என்று ஒற்றை வரியில் அந்த பதில் இருந்தது. அவர் தந்தையின் மீது எத்தகைய பெரும் மதிப்பை கொண்டிருந்தார் என்பதை மற்றொரு பேட்டி, தெளிவாக விளக்கிக் கூறுகிறது. தோழர் கவிஞர் ஜீவபாரதி எடுத்த பேட்டி அது. அதன் தலைப்பு ‘"நான் பேச நினைப்பதெல்லாம்...'. இதிலிருந்து அம்மாவின் குடும்ப வரலாறையும், தந்தையின் மீது அவர் கொண்டிருந்த பெருமதிப்பையும் அறிந்துகொள்ள முடியும். 

kaithi1

இவரது குடும்பப் பின்னணி, கிருத்துவ மதத்தின் நேர்மை சார்ந்த நெறிகள், காந்தியடி களின் மீதான பற்று, கம்யூனிச செயல்பாடு என்று மூன்று நிலைகளின் சங்கமம். இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணக்கம் கொள் வதற்கு தோழர் அன்னசாமி அவர்கள்தான் காரணமாகத் தெரிகிறார். அவர் 14 வயதில் காந்தியடிகளின் தொண்டனாக தனது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கியுள்ளார். கதர், தேச விடுதலை, தீண்டாமை ஒழிப்பு ஆகிய மூன்றிற்காகவும் அந்தப் பகுதி மக்களிடம் தனது செயல்பாட்டை ஆரம்பித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி, அவரது தீவிர செயல்பாட்டிற்கு போது மானதாக இல்லை. பின்னர் கம்யூனிஸ்டு இயக் கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அந்தக் காலத்தில் எட்டையபுரம் ஜமீனை எதிர்த்து பெரும் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. இவை அனைத்திலும் இவர் பங்கேற்றுள்ளார். 

Advertisment

தந்தையைப் பற்றிய அம்மா தன் நினைவு களில் அவரது வாசிப்புப் பழக்கம் மறக்க இய லாது என்று கூறுகிறார். தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு சென்றால் புத்தகம் வாங்காமல் வீடு திரும்ப மாட்டார். அவர் அவ்வாறு வாங்கி சேகரித்த புத்தகங்கள் ஏராளம். தோழர்களை எப்பொழுதுமே புத்தகங்களை படிக்கத் தூண்டுவார். மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலையும், கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை போன்ற கடினமான தத்துவ நூல்களையும் நானும், எனது தம்பி தங்கைகளும் சிறிய வயதிலேயே வாசித்துவிட்டோம். அதற்கு காரணம் என் தந்தைதான்'' என்கிறார். 

ஒவ்வொரு வாழ்க்கைக்குள்ளும் ஒரு தொடர்பு இருக்கிறது. ஒத்த சிந்தனை கொண் டவர்கள் ஒரு கட்டத்தில் ஒருங்கிணைந்து சமூக சக்தியாகவே மாறிவிடுகிறார்கள். இதற்கு மேலும் வலிமை கிடைக்க குடும்ப உறவுகள் வந்துவிடுகின்றன. தோழர் நல்லகண்ணு அவர்களும், அம்மாவின் தந்தையும் திருமணத்திற்கு முன்னரே ஒன்றாக பல போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். சிறைச்சாலையிலும் ஒன்றாக இருந்திருக்கிறார்கள். பின்னர், இது குடும்ப உறவாக மாறியிருக்கிறது. அம்மா அவர்களின் பேட்டியின் விவரிப்பு, அன்றைய காலத்தின் குடும்ப அமைப்பு முறைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. எனக்கு இரண்டு தாய். என்னை பெற்றெடுத்த தாய் மிக்கலேம்மா. ஆறாவது குழந்தை பிறந்த பின்னர் இறந்துபோனார். குழந்தை பிறந்து 22 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது என்கிறார். பாட்டி அதை வைத்துக்கொண்டு, பெரும்பாடு பட்டுவிட்டார். அப்பொழுது நாரைக்கிணறு என்னும் கிராமத்தில், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சந்தோஷியம் மாள். அவருக்கு பூர்வீகம் நாரைக்கிணறு.

ஒருநாள் குழந்தைகளைப் பார்ப்பதற்காக எங்கள் வீட்டிற்கு வந்தார். குழந்தைகளின் மீது ஏற்பட்ட அனுதாபம் குடும்ப உறவாக மாறியது. என் தந்தை அவரை திருமணம் செய்துகொண்டார் என்கிறார். "சந்தோஷியம்மா வந்த பின்னர் எங்கள் குடும்பத்தில் மீண்டும் சந்தோஷம் வந்துவிட்டது,  எனக்கு கடைசிவரை அம்மா இல்லை என்ற குறையே இல்லாமல் போய்விட்டது' என்கிறார். சந்தோஷி அம்மையாரும் கம்யூனிஸ்டு இயக்கங்களில் ஆர்வமுடன் பங்கேற்று, ஆசிரியர் போராட்டம் ஒன்றில் சிறைசென்று திரும்பியவர். 

வாழ்க்கையில் அமைந்த மென்மையான பக்கங்களை யார் அறிவார்? அய்யா நல்லகண்ணு அவர்களின் இளமை வாழ்க்கை முழுவதும் உயிருடன் இருப்போமா? அல்லது கொல்லப்படுவோமா? என்ற கேள்விகளுடனேயே நகர்ந்து சென்றுகொண்டிருந்தது. அதில் காதல் என்று யோசிப் பதற்கே வாய்ப்பு இல்லை. நீண்ட சிறை வாழ்க்கைக்குப் பின்னர், விடுதலை பெறுகிறார். கட்சிப் பணிகளில் மீண்டும் தீவிரமாக பங்குகொள்கிறார். கட்சிப் பணிகளுக்காக அம்மா ரஞ்சிதம் வீட்டிற்கு வந்துபோகிறார். தோழர் நல்லகண்ணு அவர்களின் தந்தை வைணவத்தின் மீது தீராத பற்றுக் கொண்டவர். அந்த மாவட்டம் முழுவதும் அறிந்த பெரிய குடும்பம். அம்மாவின் குடும்பம் கிருத்துவ மதத்தின் மீது பற்றுகொண்ட குடும்பம். இந்தப் பின்னணியில் இவர்களின் திருமணம் காதல் திருமணமா? அல்லது வீட்டிலுள்ள வர்கள் முடிவெடுத்து நடத்திய திருமணமா என்ற கேள்வி பல காலம் என்னிடம் இருந்தது. இதற்கான பதிலை அம்மா பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தினார்.

(தொடரும்)