(91) மரணத்தின் கவிதை!
தமிழக ஊர்களில் ஒன்றான மருதன்வாழ்வு, சாதி வன்முறை எதிர்ப்பு போராட் டத்தில் ஒரு தனித்த வர லாற்றை எழுதிவிட்டது. இன்றைய தூத்துக்குடி மாவட் டம் ஒட்டப்பிடாரம் அருகில் இது அமைந்துள்ளது. சென்ற நூற்றாண்டின் தொண்ணூறு களில் நடந்த சாதிக் கலவரத் தின் கொடிய நிகழ்வு, மனித ஆன்மாவை இன்றுவரை துடி துடிக்க வைத்துக் கொண்டி ருக்கிறது.
மரணம், மனிதக் கூட்டத் திற்கு பெரும் துயரத்தைத் தரத் தக்கது. அதிலும், கொலையின் மூலம் நடந்த மரணம் ஒரு புயற்காற்று தாக்குதல் நடத்து வதைப் போல மனிதரை சின்னாபின்னப் படுத்திவிடு கிறது. அந்த மரணத்திற்குப் பின்னர் அந்தக் குடும்பத்தின ரிடம் ஏற்பட்ட துயரத்தை என்னால் இப்பொழுது அளவிட்டு பார்த்துக்கொள்ள முடிகிறது. அந்த மரணத்தை ஒரு வரலாறு என்று கூறுவேன். அதற்கு உரிய காரணமும் இருக்கிறது. அந்த மரணத்தை சந்தித்தவர் ஒரு மாவீரன். அப்பொழுது அவருக்கு வயது 84.
தோழர் அன்னசாமியின் வரலாறு தியாக மும் மிகுந்த அர்ப்பணிப்பும் கொண்டது. அய்யா என்று இன்றைய தலைமுறை வணங்கத்தக்கவர். அன்றைய காலத்தில் கம்யூனிஸ்டுகள் தங்களுக்கு வளர்த்துவைத்திருந்த அத்துணை நற்பண்புகளை யும், தனக்குள் வளர்த்துவைத்திருந்தவர். "ஜனசக்தி' நாளிதழ் வரலாற்றுப் புகழ்பெற்றது. இது 1937ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விட்டது. இலக்கியப் பேராசான் ஜீவா, பி.சீனி வாசராவ் போன்றவர்களின் கடின உழைப்பில் அது வெளிவந்துகொண்டிருந்தது. அன்றைய "ஜனசக்தி' தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உருவாக்கிய இதழ்.
பெரும் பணமுதலைகளால் நடத்தப்பட்ட நாளிதழ்கள், திரைபோட்டு மூடி மறைத்து வைத்ததை அம்பலப்படுத்தி, எதையும் போராடி மாற்றமுடியும் என்ற நம்பிக்கையை "ஜனசக்தி' உருவாக்கித் தந்திருந்தது. நெருக்கடி மிகுந்த அந்தக்காலத்தில் பத்திரிகை உயிர்ப்புடன் வெளிவருவதற்கு, கட்சி ஊழியர்கள் அடிப்படை காரணம். பணத்தை அடிப்படையாகக் கொண்ட அன்றைய பத்திரிகையுலகில், கட்சி ஊழியர்களின் கடின உழைப்பை அடிப்படை யாகக் கொண்டு "ஜனசக்தி' வெளிவந்து கொண்டிருந்தது. அந்த கட்சி ஊழியர்களில் ஒரு பகுதியினர் "ஜனசக்தி'யின் முகவர்களாக இருந்தனர். இவர்கள் கட்சித் தலைவர்களைவிட முக்கியமானவர்களாக அறியப்பட்டிருந்தார்கள். "ஜனசக்தி'யை படிக்கவைக்கும் செயலை தங்கள் வாழ்நாள் கடமையாக செய்துவந்தார்கள். சைக்கிளில் ஊர் ஊராக சென்று இந்தப் பணியை செய்துவந்த முகவர்கள் பலரை, நான் பார்த்திருக்கிறேன். பெரியவர் அன்னசாமி அவர்கள் வாழ்நாள் "ஜனசக்தி' முகவர். மரணத்தின் இறுதி மூச்சுவரை இந்தப் பணியை செய்து கொண்டிருந்தவர்.
மருதன்வாழ்வில் இவருக்கு ஒரு மளிகைக் கடையும், டீக்கடையும் இருந்தது. அந்த காலத்தில் அந்த பகுதியில் தலித் மக்களுக்கு டீக்கடைகளில் தனிக்குவளை வைக்கும் முறை இருந்தது. தோழர் அன்னசாமி அவர்கள் முதன்முறையாக அந்தப் பகுதியில் தனது டீக்கடையில் தனிக்குவளையை வைக்கவில்லை; அனைவரும் சமமாக அமர்ந்து டீ குடிக்கும் முறையைக் கொண்டு வந்திருக் கிறார். இதைப்போல இவரது துணைவியார் சந்தோஷி அம்மாள் அவர்கள் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். கிராமப்புற மக்களுக்கு எந்த மருத்துவ வசதியும் இல்லாத காலம், எளிய குடும்பத்தின் பெண்களுக்கு பிர சவம் என்பது பெரும் துயரம் நிறைந்த ஒன்று.
சந்தோஷி அம்மாள் மகப்பேறு மருத் துவம் பார்ப்பதில் அனுபவத் தேர்ச்சிபெற்றிருந் தார். அந்த பகுதியில் உள்ள தலித் குழந்தைகள் பலர், இவர் மருத்துவ உதவியால் பிறந்த குழந் தைகள். இந்த சமூகப் பின்னணியைக் கொண்ட அய்யா அன்னசாமி கொலைசெய்யப்பட்டார் அதுதான் சாதி வெறியின் இயல்பு. சாதிவெறி யில் ஒருவர் மனிதர், மற்றொரு சாதிக்காரரை கொல்வதற்கு முன்னர் தன்னிடமுள்ள மனிதத் தன்மையைக் கொலை செய்துகொள்கிறார் என் பதுதான் உண்மை. அன்று நடந்ததை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.
சமூகம் முழுவதுமே நெருக்கடியிலிருந்தது. சாதி மோதலின் அபாயம் பற்றி அறிவிப்புகள் வந்துகொண்டேயிருந்தன. எல்லோருக்கும் உயிர்ப்பயம் வந்துவிட்டது. சிறிய எண்ணிக்கை கொண்ட சாதிக்காரர்கள், தங்கள் உறவுக்காரர் களின் ஊர்களுக்கு குடிபெயர்ந்து செல்லத் தொடங்கினர். தோழர் அன்னசாமிக்கு மட்டும் அந்த பயம் வரவில்லை. அவரும், அவரது துணைவியாரும் அங்கேயே தங்கிவிடுகிறார்கள். இத்தனை காலமாகத் தான் உருவாக்கி பாதுகாத்து வந்த சமூக ஒற்றுமையின் மீது அவருக்கு அப்படி ஒரு நம்பிக்கை.
காலம் எத்தகைய கொடுமையானது. அந்த நம்பிக்கை பொய்யானது. பட்டப் பகலில் சாதி வெறியர்களால் அன்னசாமி படுகொலை’ செய்யப்பட்டார். இந்த கொலையைச் செய்த இருபது வயது ஒட்டிய அந்த கூட்டம், ஏன் இதைச் செய்கிறோம் என் பதை அறிந்திருப்பார் களா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் குடிகாரர் களை குடிக்கவைத்து, போதையை ஏற்றி விடுவதைப்போல, அவர்களுக்கு சாதிவெறியை ஏற்றியவர்களுக்கு இதன் நோக்கம் தெரிந்திருக்கும். ஆனாலும் மனிதம் எளிதில் இறந்து விடுவதில்லை என்பதற்கு, அவரது இறுதி அஞ்சலிக்கு வந்தவர்கள் சாட்சி. நீண்ட ஊர்வலம். அதில் கொந்தளிப்பும் இல்லை. உண்மையான அமைதி ஊர்வலம். அந்த அமைதிக்கான அர்த்தத்தை, அந்த கூட்டம் நன்கு புரிந்து வைத்திருந்தது. அவர் மீது அன்பு கொண்ட தலித் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.
மரணமுற்ற தோழர், அய்யா அன்னசாமி அவர்கள் நமது தலைவர் நல்லகண்ணு அவர்களின் மாமனார். அய்யா அன்னசாமியின் மூத்த மகளை திருமணம் செய்துகொண்ட வர் தோழர் நல்லகண்ணு. அப்பொழுது அவர் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர். இந்தக் கொலை, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உருவாக்கி யிருந்தது. அரசியல் தலைவர்கள் அனைவரும் பெரும் கண்டனத்தை தெரிவித்துவந்தனர். அரசு தீவிர நடவடிக்கை யில் இருந்தது. தோழர் நல்லகண்ணு அவர்களிடம் மட்டும் அந்த பதட்டம் இல்லை. இதனால் மீண்டும் ஒரு கலவரம் வந்துவிடக் கூடாது, இது மேலும் கொலைகளுக்கு காரணமாக அமைந்துவிடும் என்ற எச்சரிக்கை இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன். ஆனாலும் அவரது ஆழ்மனம் அழுது கொண்டிருப்பதை நான் அறிவேன்.
துயரத்தின் வடிகால், கவிதையின் பிறப்பு என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். தோழர் நல்லகண்ணு, கொடிய துயரத்தை சந்திக்கும்போதெல்லாம் அந்த நிமிடத் தில் எழும் மன உணர்வுகளை எழுதிவைப்பதையும், கவிதை யாக்குவதையும் பழக்கமாகக் கொண்டிருந்தார். ஜீவா இறந்த போது இவர் எழுதிய கவிதையை வாசித்திருக்கிறேன். குற்றால அருவியே தீப்பிடித்து எரிவதைப் போன்றது அது.
இதைப் போலவே, அய்யா அன்னசாமி இறந்தபோது எழுதிய கவிதையின் ஆழம் துயரப் பெருக்கின் பெருவெள்ளம்.
கொடிகளும் பிஞ்சுகளும் புடை சூழ
அமைதியாக உன் மூச்சு அடங்கும்
என்றல்லவோ நான் நினைத்திருந்தேன்.
அத்தையின் கண் முன்னே,
சுவரும் கதறி அழ,
வாழ்வு முடிந்ததென்று முடிவோடு
அசையாது நீ நின்ற போது,
கொலை செய்ய வந்த அரிவாளும்
கொலையுண்டு வீழ்ந்த கதை
உன் கதை”
(தொடரும்)