(86) வெண்மணி
பனி போர்த்திய அந்த மார்கழியை "கறுப்பு மார்கழி' என்று கவிஞர்கள் எழுதினார்கள். அந்த மார்கழி கறுப்பு நிறத்தில் இருந்தது. அதன் புகைமூட்டம் பனிமூட்டமாக இல்லை. அது மயானத்தின் பிணவாடையாக இருந்தது. எரிக்கப்பட்ட மனிதர்களின் பிணவாடை எங்கும் பரவி, இதுவரை இருந்த நறுமணத்தை, இல்லாமல் செய்துவிட்டது. இங்கு வாழுகின்ற யாருமே மனிதர்கள் அல்ல. நீதியையும், மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கும் சட்டங்களையும் இங்கு எழுந்த பிணவாடை சிறை வைத்துவிட்டது. வெண்மணி தீயில் 44 மனித உயிர்கள் சாம்பலாகின.
இதில் பெண்கள் 20 பேர், குழந்கைள் 19 பேர், கிழப் பருவத்தில் இருந்தவர்கள் 5 பேர் அடங்குவர். இது தரும் தகவல்களை தொகுத்துப் பார்த்தால் நமது மனதுக்குள் நெருப்பாறு ஒன்று ஓடத் தொடங்கிவிடுகிறது. பதட்டம் மிகுந்த அந்த தருணத்தில், நள்ளிரவில் வாகனம் ஒன்று வருகிறது. அதில் போலீஸ் வந்து காப்பாற்றப் போகிறார்கள் என்று அந்த அப்பாவி மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். வந்தவர்கள் ரௌடிகள். துப்பாக்கியால் சுடத் தொடங்கி விடுகின்றனர். தோட்டாக்கள் எல்லா திசைகளிலும் சிதறிப் பாயத் தொடங்கிவிடுகின்றன. கடைசியில் அவர்களுக்கு ராமையா குடிசையில் அடைக்கலம் கிடைத்தது. அதிலும் தப்பியவர்களை தூக்கி, நெருப்பில் போடுகிறார்கள். ஒரு தாய் தன் குழந்தையை உயிர் பிழைத்துக் கொள்ளட்டும் என்று வெளியில் தூக்கி எறிந்தாள். ரௌடிகள் மீண்டும் அந்த குழந்தையை நெருப்பில் தூக்கிப் போட்டனர். இந்த தகவல்கள் அனைத்தையும் ஊடகங்கள் திரை போட்டு மறைத்திருந்தன.
இந்தக் கொடுமைகள் அனைத்திலும் ஒரு வர்க்கப் போராட்டம் உறக்கத்திலிருந்தது. இதை மேலெழுந்தவாரியாக அரசியல் பேசிவிட்டுச் செல்லும் உலகத்தால் புரிந்துகொள்ள முடியாது. தஞ்சை பெருநில சமூக வரலாறு புரிந்துகொண் டால் மட்டுமே இதைப் புரிந்துகொள்ள முடியும். இது பண்ணையாருக்கும், விவசாயத் தொழிலாளர் களுக்கும் இடையில் அமைந்த ஒன்று. வர்க்க போர். எதை இழந்தாலும், ஒடுக்கப்பட்ட வர்க்கம், சமூக மாற்றம் செய்யாது, ஓய்வு கொள்ளாது என்பது வரலாற்று உண்மை. கீழத் தஞ்சையிலும் இதுதான் நடந்தது. இந்த வர்க்கப் போர், நில உரிமையை முன்வைத்து, 1944ஆம் ஆண்டில் தென்பறையில் தொடங்கிவிட்டது. தென்பறை என்ற கிராமம் மன்னார்குடிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. அது அன்று கரைபுரண்டு ஓடிய புது வெள்ளம்.
இதில், கேட்பாரற்றுக் கிடந்த விவசாயக் கூலி அடிமைகள் தலை நிமிர்ந்தார்கள். அடிமைத்தனங் கள் அனைத்தையும், கழற்றி எறிந்தார்கள். இதில் தலைமறைவு வாழ்க்கையை இங்கு நடத்திய கேரளத்தின் கம்யூனிஸ்டு ராமசந்திர நெடுங்காடிக் குப் பெரும் பங்கு உண்டு. இவர் சென்னை லயோ லா கல்லூரியில் படித்த காலத்தில் கம்யூனிஸ்டாகச் செயல்பட்டவர். கேரளாவுக்குச் சென்று தலை மறைவு வாழ்க்கைக்காக மீண்டும் தமிழ்நாடு வந்தவர்.
தோழர் நல்லகண்ணு வாழ்க்கையை அறிந்துகொள்ள விருப்பம் கொண்டவர்கள், கீழத் தஞ்சையில் நடந்த வர்க்கப் போராட்டத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். தீண்டத்தகாதவர் கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட வர்க்கம் சிலிர்த்து எழுந்த காலம் 1948 முதல் 1953 வரை. இந்த காலங்களில் அரசாங்கத்தின் அடியாட்கள் போல செயல்பட்ட காவல்துறை, தனது உறக்கத்தை இழந்திருந்தது. தொடர் போராட் டங்கள். விளைவு யாருக்குமே அடங்காத பண்ணை கூட்டத்தை, கூலித் தொழிலாளி களோடு நேருக்கு நேர் அமர வைத்து, பேச்சு வார்த்தையை நடத்தவைக்கும் நிர்பந்தம், அரசாங்கத்திற்கு இதன் மூலம் வந்துவிட்டது. முதல்முறையாக பண்ணை ஆதிக்கத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டது.
முத்தரப்பு ஒப்பந்தம் என்பதில் பண்ணை யார், கூலி விவசாயத் தொழிலாளர்கள், அரசு தரப்பு என்று மூன்று தரப்பினரும் செய்து கொண்ட ஒப்பந்தம். முதல் ஒப்பந்தம் களப்பாள் ஒப்பந்தம் 1944ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போடப்பட்டது. இதே ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தில் மன்னார்குடி ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்பின்னர் பண்ணையாள் பாதுகாப்பு சட்டம் பிறந்தது. இவை அனைத்தும் அரசாங்கம் விரும்பிப் போட்டவை அல்ல. மக்கள் போராடிப் பெற்றவை. ஆட்சியாளர்கள் வசதி கருதி மறந்துவிடுகின்றனர்.
அன்றைய பண்ணைகளில் கடுமையான தண்டனைகள். கூலித் தொழிலாளர்களுக்கு சாட்டையடி, சாணிப்பால் கொடுப்பதை, தங்கள் உரிமை என்று பண்ணைகள் நினைத்துக் கொண்டன. மக்கள் போராட்டங்கள் மூலம் உருவான களப்பாள் ஒப்பந்தமும், மன்னார்குடி ஒப்பந்தமும், நூற்றாண்டு கால கொத்தடிமைத் தனத்திற்கு முடிவு கட்டியது. பண்ணையாள் சட்டம், விவசாயக் கூலிகள், பண்ணையின் கொத்தடிமைகள் என்பதிலிருந்து விடுதலை பெற்று தந்திருந்தது. இவர் கள் உழைப்பு அடிப்படையில் ஊதியம் பெறும் தொழி லாளர்கள் என்றது. நிர்ண யிக்கப்பட்ட கூலி கொடுக்க வில்லை என்றால், அது சட்டப்படி குற்றம் என்றது. இதன் பின்னர் நில வெளியேற்றத்தை தடுக்கும் குத்தகைப் பாதுகாப்பு சட்டம் வந்தது. இதிலிருந்து, உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற முழக்கம் பிறந்தது. இந்த வர்க்கப் போரின் பின்னணிதான் வெண்மணி நெருப்புக்கு முந்தைய வரலாறு.
அப்பொழுது தஞ்சை மாவட்டம் ஒன்றாக இருந்தது. இன்றைய நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் அதில் இருந்தன. அன்று வலிமை பொருந்தியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி என்று இரண்டாகப் பிரிந்திருந்தது. இந்தப் பிரிவின் நான்காண்டுகளுக்குப் பின்னர் கீழவெண்மணி கொடுமை நடந்தது. இதில் மற்றொன்றையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கீழவெண்மணி கிராமத்தை ஒட்டிய அனைத்துப் பகுதிகளின் விவசாயத் தொழிலாளர்களும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தனர். இறந்தவர்கள் அனைவரும் மார்க்சிஸ்டு கட்சி உறுப்பினர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர்.
ஏ.வி.ராமசாமி அப்பொழுது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாவட்டச் செயலாளர். பிற்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காத்துமுத்து முக்கியமான தலைவர். தோழர் நல்லகண்ணு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பிலிருந்தார். அன்றைய வெண்மணி நீதிக்கான இவரது உணர்வுப் பூர்வமான செயல்பாடுகளை நானறிவேன். புதிய வர்க்கப் போராட்ட வீரர்களை உருவாக்கும் பணியில் இருந்தார் அவர். இந்த காலத்தில் தஞ்சையின் கிராமப்புறத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். கிராப்புற மக்களோடு மக்களாக வாழ்ந்த அந்த வாழ்க்கையை இப்பெழுது நான் கூர்ந்து கவனித்துப் பார்க்கிறேன்.
ஒவ்வொரு காலத்திலும் அடுத்த தலைமுறைக்கு முக்கியமாக வழிகாட்டும் தலைவர்கள் தேவைப்படு கிறார்கள். அந்த காலத்தில் தோழர் நல்லகண்ணு போன்றவர்கள் எங்களுக்கு வழிகாட்டும் தலைவர்களாக அமைந்திருந்தார்கள். இவர்கள்தான் வெண்மணி சம்பவம் வர்க்கப் போராட்டத்தோடு தொடர்பு கொண்டது என்பதை எங்களுக்கு புரிய வைத்தார்கள். ஊடக உலகத்தின் சித்திரிப்புக்கும், உண்மைக்கும் மிகப் பெரிய இடைவெளி இருப்பதை இவர்கள் மூலம் தெரிந்துகொண்டோம்.
"அந்த சாம்பல் உயிர் பெற்று, அடுத்த தலைமுறைக்கு வர்க்கப் போராட்டத்திற்கான வாசலைத் திறந்து வைக்கும்' என்றார்கள். அதற்கான பயிற்சியளித்தார்கள். அது வெற்றி பெற்று வருகிறது. தோழர் நல்லகண்ணுன் தொலைநோக்குப் பார்வை, ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்கிறேன் உடல் சிலிர்த்துக் கொள்கிறது.
(தொடரும்)