(84) பாரதி கொண்டாட்டம்!
அந்த தொடர் விழாவை, ஒரு பாரம்பரிய தொடர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு கருத்தைச் சிந்திப்பது வேறு, அதை விதையாக விதைத்து நீர் ஊற்றி, நாள்தோறும் கவனித்து, அதனை மரமாக வளர்த்தெடுப்பது வேறு. பாரதி விழாவை அறிவுசார் மக்கள் விழாவாக, அந்த எட்டையபுர மண் மாற்றியது. இதில் தோழர் நல்லகண்ணு அவர்களின் தொடர் பயணத்தை, இப்பொழுது யோசித்துப் பார்க்கத் தோன்றுகிறது. அவரும், மற்ற தோழர்களும் வளர்த்தெடுத்த பாரதி விழா தமிழகத்தின் நவீன கால பண்பாட்டு விழாக்களுக்கு ஒரு முன்னுதாரணம் என்று கூறலாம்
மேடை என்றாலே, இன்று எல்லாவற்றிற்கும் ‘காண்ட்ராக்ட்’ முறை வந்துவிட்டது. மேடை அமைப்பது, கொடி கட்டுவது, விளம்பரம் செய்வது என்ற எல்லா நிலைகளிலும், தொண்டர்களைக் காண முடியவில்லை. அனைத்துக்கும் ஒப்பந்தக்காரர்கள்தான். ஒரே வியாபார நிறுவனம், எல்லா கட்சிகளுக்கும் கொடி கொடுக்கிறது. மேடை அமைத்துக் கொடுகிறது. அன்று எல்லாவற்றிற்கும் கட்சியின் தொண்டர்கள், அதிலும் தலைவர்கள், தொண்டர்கள் என்ற வேறுபாடு இல்லாமல், எல்லோரும் எல்லாவற்றிலும் பங்கேற்றுக்கொண்டார்கள்.
பாரதி விழாவின் நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. இன்றைய காலத்தில், அதை நினைத்துப் பார்க்கும்போது, இப்படி ஒரு நிகழ்வு நடக்குமா? என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. ஆனால் இது உண்மை. அந்தக் காலங்களில் விழா என்றால் தட்டி போர்டு மட்டும்தான் பிரச்சாரக் கருவி. மரச் சட்டங்களை அடித்து, அதில் கோணிப்பைகளை பின்புலமாக்கி, காகிதங்கள் ஒட்டி, அதில் ஓவியர்கள் விளம்பரத்தை எழுதுவார்கள். அந்தக் காட்சிகளை மனக்கண் முன்னால் கொண்டுவந்து பார்க்கிறேன். இதைப் பற்றி தோழர் நல்லகண்ணு சொன்ன தகவல் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.
‘தட்டி போர்டு தயாரிக்கும் இடத்தில் ஒருபுறம், மரச்சட்டங்களை இணைத்து தட்டியை தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில், சிலர் கோணிப்பை கிழித்து, சட்டத்தில் அதைப் பொருத்திக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் மைதாவை கரைத்து அடுப்பில் சிலர் காய்ச்சிக்கொண்டிருக்கிறார்கள். எட்டையபுரம் கட்சி அலுவலகத்தில் இந்தப் பணி நடந்துகொண்டிருக்கிறது. ஒருவர் கையில் சிறு பையோடு வந்துசேருகிறார். வேலை நெருக்கடியில் அவரை யாரும் கவனிக்கவில்லை. அவரை யார் என்று யாருக்கும் தெரிந்திருக்கவுமில்லை.
"நான் தட்டி போர்டு நன்றாக ஒட்டுவேன்'’ என்று வந்தவர் கூறுகிறார். இவர் வெளியூர்க்காரர்போல் தோன்றுவதால் மற்றவர்களுக்கு இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. அவர் எதையுமே பொருட்படுத்தவில்லை. வேட்டியை மடித்துக்கொண்டு ஒரு பேப்பரை எடுத்து தரையில் விரித்து, அதில் அமர்ந்துகொண்டார். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று அவர் யோசிக்கவே இல்லை. ஒரு தட்டியை எடுத்தார். அதில் பசை தடவி பேப்பர்களை ஒட்டத் தொடங்கி விட்டார். மிகவும் விரைவாகவும் பசையை அளவோடும் எடுத்து அதை லாவகமாக ஒட்டுகிறார். அப்பொழுது அங்கு, அந்த பகுதியை சார்ந்த கட்சித் தோழர் ஒருவர் வந்துவிட்டார்.
வந்தவர், அந்தக் காட்சியைப் பார்த்து, அதிர்ச்சியடைந்தார். அவருடைய அதிர்ச்சியைப் பார்த்த அந்த இளைஞர்களுக்கு பயம் வந்துவிட்டது. அவர்களில் சிலர் அந்த இடத்தைவிட்டு நழுவத் தொடங்கி விட்டார்கள். அவருடைய பதட்டம் இன்னமும் குறைந்தபாடில்லை. "அட கோட்டிகளா? இவர் யார் என்று உங்களுக்குத் தெரியவில்லையா?'' என்றார். அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர்கள், மேலும் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்தான் இன்றைய சிறப்பு பேச்சாளர் என்றார். அவர்தான் அந்த சிறப்பு பேச்சாளர் என்று சொன்னவுடன் அந்த இளைஞர்களுக்கு எல்லாமும் புரியத் தொடங்கிவிட்டது.
"இவரையா பசை தடவி ஒட்ட அனுமதித்தோம்' என்று அவர்கள் வெட்கப்படத் தொடங்கினர். விழா தயாரிப்பு ஆரம்பமான உடனேயே சிறப்பு அழைப்பாளர் யார் என்பதை பற்றிய பேச்சு அந்தப் பகுதியில் அதிகமாகவே நடமாடியது.
லண்டன் சென்று பாரட்லா படித்துத் திருப்பிய கம்யூனிஸ்டு தலைவர் கே.டி.கே. தங்கமணி என்று அவரை பார்க்காவிட்டாலும், அவரைப் பற்றிய செய்திகளை இவர்கள் அறிந்திருந்தார்கள். நெல்லை -மதுரை பேருந்து மார்க்கத்தில் அமைந்த திருமங்கலத்தில் ஒரு வசதி பொருந்திய குடும்பத்தில் பிறந்தவர் இவர் என்பதும் இவர்களுக்குத் தெரிந்திருந்தது. இது ஒரு செய்தி என்றாலும், அன் றைய நடைமுறையில் நமக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. கம்யூனிஸ்ட் அடித்தள தொண்டர்களோடு தொண் டர்களாக எப்படி தலைவர்கள் வாழ்ந்தார்கள் என்ற ஆதாரத்தைத் தருகிறது.
இது ஒருபுறம் இருக்க, பாரதியின் எட்டையபுர மக்கள் விழா தோன்றுவதற்கும் ஒரு காரணம் இருந்தது. பாரதி மணிமண்டபத்தில் தொடர்ந்து விழா நடைபெற்று வந்தது. ஜீவா தொடர்ந்து அழைக்கப்பட்டார். குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் இதில் ஜீவாவுக்கு சில பிரச்சனைகள் வந்துவிட்டன. நீண்டநேரம் உற்சாகம் கரைபுரண்டோட பேசக்கூடிய இவருக்கு, நேரக் கட்டுப்பாடு ஏற்புடையதாக இல்லை. பாரதி பற்றிய தனது கருத்துக்களை முழுமையாக பகிர்ந்துகொள்ளும் முழு வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று கருதினார்.
தோழர் ஜீவா இதை வெளிப்படுத்தியபோது, தோழர் நல்லகண்ணு முதலான தோழர்கள் சிந்தனையில், ஒரு சங்கத்தைத் தோற்றுவிக்கும் எண்ணம் பிறந்தது. அதற்கு தோழர் அழகர்சாமி உள்ளிட்டவர்கள் உறுதுணையாக இருக்க... "எட்டையபுரம் வாலிபர் சங்கம்' என்ற பெயரில் சங்கம் தோன்றியது. இதன் செயல்பாடு ஒரு கலைத் திருவிழா புதிய வருகை என்று தோழர் நல்லகண்ணு குறிப்பிடுவார்.
அவர் அந்த விழா பற்றி கூறும் வார்த்தைகள் இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. இதில் பங்கேற்காத இலக்கியச் சொற்பொழிவாளர்கள் யாருமே தமிழ்நாட்டில் இல்லை. வேறுபாடுகள் எதுவுமில்லாமல் பாரதி அன்பர்கள் அனைவருமே அழைக்கப்பட்டார்கள். எட்டையபுர பாரதி விழாவின் மூலம்தான், பட்டிமன்றம் தமிழ்நாட்டில் பிரபலமடையத் தொடங்கியது. குன்றக்குடி அடிகளார் ஆண்டுதோறும் பாரதியைப் பற்றி பட்டிமன்றத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார். ரஷ்ய அறிஞர்கள், எட்டையபுரம் பாரதி விழாவில் பங்கெடுத்துவந்தனர். இதன்பின்னர் பாரதி ஆய்வு சோவியத் நாட்டிலும் வேரூன்றியது போன்ற விபரங்களை அவர் கூறிவந்தார்.
பிச்சைக்குட்டி வில்லுப்பாட்டை பற்றி தோழர் நல்லகண்ணு கூறுவது மிகவும் சுவைமிக்கது. பாரதி விழா வில்லுப்பாட்டு நிகழ்வோடு நிறைவுபெறும் என்பார். நெல்லைச் சீமையில் கோயில் கொடையில், வில்லுப்பாட்டு பண்பாட்டு களம் அமைத்து, மக்கள் மனங்களில் பாரம்பரிய மாக குடியிருந்துவந்தது. இதை மக்கள் கலையாகவும் பாரதியின் புகழ் சேர்க்கும் கலையாகவும் மாற்றியதில் பெரும் பங்களிப்பை எட்டையபுர பாரதி விழா செய்துவந்தது என்பதை தோழர் நல்லகண்ணு மூலம் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது.
தோழர் நல்லகண்ணு பற்றிய ஆய்வு தமிழகத்தின் எதிர்கால ஆய்வுகளில் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. அப்படி ஆய்வு செய்து பார்ப்பவர்களுக்கு எட்டையபுரம் பாரதி விழாவை தவிர்த்துவிட்டு ஒரு ஆய்வை செய்ய முடியாது என்பதை என்னால் உறுதிபட சொல்லமுடியும்.
(தொடரும்)