(83) புது வெள்ளமென பாய்ந்தோடியது!
பாரதியைப் பற்றிய புரிதலை, தோழர் நல்லகண்ணுவின் பார்வையி லிருந்து நான் கற்றுக் கொண்டேன். இதனை எனக்குக் கிடைத்த வாய்ப்பாக நினைத்து, இப்பொழுதும் நான் மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய வாய்ப்புகள் யாருக்கும், அத்தகைய எளிதில் கிடைத்து விடுவதில்லை. இவரை சரியாக புரிந்து கொள்ளாத நிலை இன்று தமிழ்ச்சமூகத்தில் இருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.
பாரதி ஒரு காலத்தின் முன்னோடி. காலத்தின் முன்னோடிக் கவிஞர்களைப் புரிந்து கொள்வதற்கு, அவர்களின் ஆழ்ந்த கவிதையின் பொருளை அறிந்துகொள்வது அவசியமாகிறது. எந்த ஒரு கவிதையின் பாடுபொருளுக்கும், அழகுணர்ச்சி முக்கியம் என்பதில் கருத்து வேறுபாடு எதுவுமே இல்லை. மொழி தரும் அழகுணர்ச்சி, கவிதையினை மேம்படுத்திவிடுகிறது. ஆனாலும் கவிதையின் தொலை நோக்கு வாழ்க்கைக்கு காரணமாக அமைவது அதன் தொலைநோக்கு சமூகப் பார்வைதான். பாரதிக்கு ஒரு நீண்ட தொலைநோக்குப் பார்வை இருந்தது.
பாரதியின் தத்துவப் பார்வை எது என்பதில் தமிழ் நாட்டில் ஒரு பெரும் போராட்டமே தொடர்ந்து நடந்துவருகிறது. சுதந்திரத்தை ஒட்டிய காலங்களில் பாரதியை சனாதனத்திற்குள் அடைக்கப் பார்த்தார்கள். அதிலிருந்து பாரதியை விடுவிக்கப் பெரும் போராட்டம் ஒன்றை தொடங்கினார் இலக்கியப் பேராசான் ஜீவா. பாரதியை, முதலில் கவிதா உலகத்தில் புரிய வைக்கும் போராட் டத்தை முன்னின்று நடத்துவதற்கு ஒரு பெரும் படையை ஜீவா உருவாக்கியிருந்தார். தொ.மு.சி.ரகுநாதன், ஆர்.கே.கண்ணன், தி.க.சிவசங்கரன், எஸ்.ஆர்.ராமகிருஷ்ணணன், கே.முத்தையா என்ற இந்த பட்டியல் நீளமானது. இந்தப் பெரும் படையில் தோழர் நல்லகண்ணும் ஒருவர்.
தோழர் நல்லகண்ணுவை பாரதி தொண்டர் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியும். தனது மூத்த மகளுக்கு காசிபாரதி என்று பெயர் வைத்திருந்தார். இதைப்போல முதல் பேத்திக்கு சண்முக பாரதி என்று பெயர் வைத்தார். பாரதி பெருந்தொண்டர் என்ற முறையில் அவருக்கான எல்லா பணிகளையும் மகிழ்ச்சியுடனேயே செய்து வந்துள்ளார். அது மட்டுமல்லாது, பாரதியை புரிந்துகொள்ள, ஜீவாவை தனது ஆசானாகவே கருதிக் கொண்டார். ஜீவா எழுதிய ‘"பாரதி வழி'’என்று நூலை தனது வாழ்நாள் வழிகாட்டியாக கொண்டிருந்ததை நான் அறிவேன்.
பாரதி, இறை வணக்கப் பாடலை எழுதினார். அதைப் பற்றிய விமர்சனங்கள் இன்றும் உண்டு. ஆனால் அதற்குள் எங்கும் மானுட விடுதலையை விட்டு விலகிவிடவில்லை என்பதையும், காலத்திற்கேற்ற வளர்ச்சி அவரிடம் இருந்தது என்பதையும் ஜீவா, நன்கு புரிந்துகொண்டிருந்தார். இதுதான் ஜீவாவுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் அமைந்த வேறுபாடு. பாரதியிடம் புரட்சிகர உள்ளடக்கம் ஒன்று இருந்தது. இது குறித்து கவிதைகள், கட்டுரைகள், கதைகள் உள்ளிட்ட பலவற்றை தேடி ஆராய்ந்து பார்த்தார் ஜீவா. ‘பாரதி "ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி'’ என்ற பாடலை பாடினான். "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிக்க’ வேண்டும்' என்றான். ‘"ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்’' என்றான். இது குறித்த முக்கியமான தகவல் ஒன்றை தோழர் நல்லகண்ணுவிடம் நான் தெரிந்துகொண்டேன். ஒருமுறை அவர் பாரதி, தனக்குத்தானே ஷெல்லிதாசன் என்ற பெயர் சூட்டிக்கொண்டான் என்றார்.
ஷெல்லிதாசன் என்று பெயர் வைத்துக் கொள்வதற்கான காரணங்களை ஆராய்ந்த போது, பாரதியின் மற்றொரு உலகம் என் கண் முன்னால் தோற்றம்தரத் தொடங்கியது. ஷெல்லி, ஆங்கில தேசத்தின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இவன் எழுதிய முக்கிய நூல்கள், ணன்ங்ங்ய் ஙஹக்ஷ, பட்ங் ம்ஹள்ந் ர்ச் ஆய்ஹழ்ஸ்ரீட்ஹ். ஊய்ஞ்ப்ஹய்க் ண்ய் 1819 ஆகும். இவை ஐரோப்பிய நாடுகளில் நடந்த ஜனநாயகப் புரட்சிக்கு, புதிய வசந்தமாக வருகை தந்திருந்தன. ஷெல்லியைப் போலவே பாரதிக்கு மற்றொரு கவிஞனும் உகந்தவனாக இருந்தான். அவன் பெயர் வால்ட் விட்மன்.
விட்மன் அமெரிக்க கவிஞன். நியூயார்க் மாநிலத்தில் பிறந்தவன். சுரங்கத்தின் ஆழத்தில் கிடந்த, தொழிலாளியின் துயரத்தையும், பெரு ஆலைகளின் சக்கரங்களில் சிக்கிய உழைப்பாளி களின் உழைப்புச் சுரண்டல் பற்றியும் பாடினான். இவன் எழுதிய கவிதை நூல்களில் பாரதிக்குப் பிடித்தமானது கங்ஹஸ்ங்ள் ர்ச் ஏழ்ஹள்ள் என்னும் தொகுப்பு நூலாகும். மனித சுதந்திரத்தைப் பற்றி இவனைப்போல் எழுதியவர்கள் யாருமே இல்லை. பாரதியின் இந்த ஆளுமையை ஜீவா கண்டறிந்துகொண்டார். பாரதியின் புரட்சிகர செயல்பாடு, இதன்மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரியவந்தது.
பாரதி, ஆய்வுலகை இதை எல்லாம் ஒரு கூட்டு முயற்சியாகக் கையில் எடுத்திருந்த போது, மற்றொரு கூட்டம் செயல்பாட்டுத் தளத்தில் வேகமாக செயல்படத் தொடங்கியிருந்தது. இதற்கு இன்றும் சாட்சியமாக விளங்குவது எட்டையபுரம் பாரதி விழா. எட்டையபுரம் பாரதி விழாவுக்கும் ஒரு கதை இருக்கிறது. இதன் தொடக்கப்புள்ளி தோழர் ஜீவா என்றபோதிலும், இதன் செயலாக்க பெருங்குழுவில், தோழர் நல்லகண்ணுக்கும் மேனாள் சட்டமன்ற உறுப்பினர், மக்கள் தொண்டர் தோழர் அழகர்சாமி அவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இதைப் போலவே எட்டையபுர பாரதி வாலிபர் சங்கத்திற்கும், பாரதி மணிமண்டபத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.
பாரதிக்கு மணிமண்டபம் கட்டும் முயற்சியிலே பலரும் ஈடுபட்டிருந்தார்கள். இந்தப் பணிகள் 1945ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. எழுத்தாளர் கல்கி இதன் முன்னணியில் இருந்தார். அரசியலில் அன்று செல்வாக்குப் பெற்ற தலைவர் ராஜாஜி. அப்பொழுது மேற்குவங்க ஆளுநர். பாரதியை கல்கியும், ராஜாஜியும் வேதாந்த அடிப்படையில் பார்த்தார்கள். எட்டையபுரத்தில் ராஜாஜியை முன்னிறுத்தி மணிமண்டப திறப்பு விழா வைக்கப்பட்டிருந்தது. இந்த மண்டபத்திற்கு நிதி திரட்டியவர்களில் தோழர் நல்லகண்ணுவும் ஒருவர். வெகுமக்களிடம் 700 ரூபாய் நிதி திரட்டி அதை அனுப்பி வைத்துள்ளார். மணி மண்டபத் திறப்புவிழா வெகு சிறப்புடன் தொடங்கியது. இதற்கு வருகை தந்திருந்தார். இதில் நிகழ்ந்த ஒரு குழப்பத்தைப் பற்றி பேசியபோது, தோழர் நல்லகண்ணு மிகவும் உணர்ச்சிவயப்பட்டவராக காணப்பட்டார். அந்த நிகழ்வை கேட்டவுடன் நானும் உணர்ச்சிவசப்படத் தொடங்கினேன்.
மணிமண்டபத் திறப்பு விழாவிற்கு வந்தவர்கள் அனைவருமே பாரதியின் மீது ஜீவா கொண்டிருந்த ஈடுபாட்டை நன்கறிவார்கள். ஜீவாவின் வருகையை முக்கியமானதாகக் கருதினார்கள். ஆனால் அவருக்கு மேடையில் இடம் இல்லை. பேசுவதற்கும் அனுமதி இல்லை. வந்திருந்த பாரதி அன்பர்கள் முகம் சுழிக்கத் தொடங்கிவிட்டார்கள். கூட்டத்தில் சலசலப்பு எழத் தொடங்கிவிட்டது. ஒருவர் எழுந்து "ஜீவா பேசவேண்டும்' என்றார். முழுக் கூட்டமும் அதற்கு ஆதரவு தெரிவித்தது. அவர் பேச அனுமதிக்கப்பட்டார். கூட்டத் தலைவர் "ஐந்து நிமிடம் மட்டும்' என்றார். ஜீவா அரைமணி நேரம் பேசி முடித்தார்.
"நுங்கு நுரையுடன் புது வெள்ளமெனப் பாய்ந்தோடிய அந்தப் பேச்சை, யாரால்தான் இடைநிறுத்தம் செய்யமுடியும்' என்றார் நல்லகண்ணு. அதன் பின்னர்தான் எட்டையபுரத்தில் அந்த தனித்துவமான பாரதி கொண்டாட்டம் தொடங்கியது.
(தொடரும்)