(82) கடனா நதி
பொதிகை மலை தொடர்ச்சியில், அகத்திய மலையின் அழகிய நிலத்தில் உயிர்;ச்கோள பாதுகாப்புக் பகுதி என்று ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்க்கோளம், அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் பகுதி, அதற்கு தேவையான நீர், நிலம், நுண்ணுயிரிகள் அந்த இடத்தில் இருக்கும். இது சுற்றுச்சூழலின் தாய் வீடு என்று கூறப்படு கிறது. இதற்கு எந்த அழிவும் கூடாது என்பதை இன்றைய பசுமை சட்டங்கள் கூறுகின்றன. கடனா நதி இந்த பகுதியில்தான் பிறப்பெடுக்கிறது. அகத்தியர் மலையில் தோற்றம் பெற்று, இது திருப்புடைமருதூரில் தாமிரபரணியில் கலக்கிறது. மொத்தம் 43 கிலோ மீட்டர் நீளம். சிவசைலம், பூவன்குறிச்சி, ஆம்பூர் வழியாக சென்று வயல் வெளிகளுக் கெல்லாம் நீர் வழங்கி, நெல்லை விளையச் செய்து, பசியை போக்கி வருவ தால், இதை கருணா நதி என்றும் அழைக்கிறார் கள். இதன் கருணை உள்ளம் மேலும் கருணை கொண்டதாக அமைய, இன்றைய தென்காசி மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் இதில் ஒரு அணை கட்டப்பட்டது. இதை எல்லாம் அறிந்த சமூகத்துக்கு, இந்த அணை பிறந்த கதை இன்னமும் முழுமையாகத் தெரிந் திருக்கவில்லை. இதற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும், குறிப்பாக தோழர் நல்லகண்ணுக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது.
கம்யூனிஸ்டுகளின் ஆக்கப்பூர்வ பணிகளை, இன்றைய உலகம் சரிவர தெரிந்துகொள்ளவில்லை. ஆட்சியாளர்களின் சாதனைகளாக இன்று அறிவிக் கப்பட்ட அனைத்தையும் கம்யூனிஸ்டுகள் ஆய்வு செய்து தீர்மானமாக அறிவித்தவை. அதற்காக பல ஆண்டுகள் அவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இன் றைய தமிழகத்தின் அடிப்படையான தொழிற் சாலைகளில் பல கம்யூனிஸ்டுகளின் போராட்டத் தின் மூலம் வந்தவை என்பதை தெரிவிப்பதையும் இங்கு ஒரு வாய்ப்பாக கருதிக்கொள்கிறேன்.
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், திருச்சி பாய்லர் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, சேலம் இரும்பு உருக்காலை போன்ற பல திட்டங்களின் முன்மொழிவிற்கு கம்யூ னிஸ்டுகள்தான் முதல் காரணம். முதல், இரண்டாம் தேர்தல்களில் சட்டமன்ற உறுப்பினர்களாக கணிசமான எண்ணிக்கையில் கம்யூனிஸ்டுகள் தேர்வு பெற்றிருந்தார்கள். சட்டமன்றத்தில் சமரசமற்ற போராட்டத்தை இவர்கள் நடத்திக்கொண்டே யிருந்தார்கள். இவர்களின் போராட்டத்தின் தீவிரம் எத்தகையது என்பதை அன்றைய ஊடகச் செய்திகளிலிருந்தும், சட்டமன்ற -நாடாளுமன்ற குறிப்புகளிலிருந்தும் புரிந்துகொள்ள முடிகிறது.
நீர்ப்பாசன வசதிகளற்ற காலம் அது. மழைக்காலங்களில், பெய்யும் பெரும் மழையால், பெரும் வெள்ள சேதங்கள் ஏற்பட்டன. வெள்ள பாதிப்பில் குடியிருப்புகளும், வயல்வெளிகளும் அடைந்த சேதத்தை அரசாங்கத்தாலேயே அளவிட் டுச் சொல்லமுடியவில்லை. வெள்ளப் பெருக்கை அடுத்து, பெரும் வறட்சியை விவசாயிகள் சந்தித்தனர். வறட்சிக்கு பின்னர் உணவுப் பஞ்சம், பட்டினிச்சாவு என்பது தொடர்கதையாகிக் கொண்டிருந்தது.
இந்தக் காலத்தில் தாமோதர் அணைக்கட்டு திட்டம், ஹீராகுட் அணை, பக்ரா நங்கல் திட் டம், நாகர்ஜூனாசாகர் திட்டம் போன்றவை உருவாயின. பின்னதான் இந்தியா மின்மயமாக்கப் பட்டது. நெல், கோதுமை உற்பத்தி பெருகியது. ஆனாலும் இந்த பிரம்மாண்ட அணைகளால், ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பையும் நம்மால் மறந்துவிட முடியாது. தொலைநோக்குப் பார்வை யோடு அன்று ஆராய்ந்து பார்க்கப்படவில்லை. இந்தக் காலங்களில் பெரும் அணைகளைப் போலவே, ஒவ்வொரு துணை ஆறுகளிலும், காட்டாறுகளிலும், அணைகள் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பரவலாக கம்யூனிஸ்டுகள் முன்வைத்திருந்தார்கள்.
தமிழர் நிலம் சமவெளி மிகுந்தது. இதன் பரந்த நீர்ப்பாசனத்திற்கு அணைக்கட்டுகள் வேண் டும் என்ற கோரிக்கையை, கம்யூனிஸ்டுகள், முன் வைத்தபோது, அதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வில்லை. பணம் இல்லை என்று அரசாங்கம் கையை விரித்துக்கொண்டே இருந்தது. கம்யூனிஸ்டுகளும் விடுவதாக இல்லை. தொடர் முயற்சி அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தது. அந்தப் போராட்டங் களில் ஒன்றுதான் கடனா நதி அணை அமைக்க வேண்டும் என்ற போராட்டமும். அதன் கதாநாய கன் என்று நல்லகண்ணு அவர்களைத்தான் கூறவேண்டும். இதற்கான இயக்கத்தை இவர் தொடங்கினார்.
காந்தியடிகள், ஆங்கிலேயரை எதிர்த்த போராட்டத்தில் முதலில் நம்பிக்கை வைத்தது உண்ணாவிரதப் போராட்டத்தில்தான். ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கள், சுதந்திரத்திற்கு பின்னர், காந்தியின் பெயரால் ஆட்சி நடக்கிறது என்ற காங்கிரஸ் கட்சியிடம் கோரிக்கைகளை வைத்து, சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் கள். காந்திவழி என்பதால் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களால் எந்த விமர்சனத்தையும் செய்ய முடியவில்லை. கடனா நதிக்கு அணைவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தோழர் நல்லகண்ணு சாகும்வரையி லான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங் கினார். உண்ணாவிரதம் அம்பாசமுத்திரத்தில் தொடங்கியது. அவரோடு அந்தப் பகுதியில் செல்வாக்குப் பெற்ற தலைவர் வி.பி.நாயகமும் உண்ணாவிரதம் இருந்தார்.
ஆம்பூருக்கு கடனா நதியின் செல்லப்பிள்ளை என்று பெயர். விவசாய சங்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் பலம் பொருந்தியதாக இங்கு இருந்தது. மலையரசு என்னும் மக்கள் தலைவர் இங்கு இருந்தார். இவர் ஆம்பூர் ஊராட்சிமன்றத் தலைவராகவும் இருந்து செயல்பட்டார். இது மட்டுமல்லாது மந்தியூர், பாப்பாங்குளம், பிரம்மதேசம், மன்னார்கோயில் ஆகிய பகுதிகளிலும் ஊராட்சிமன்றத் தலைவர்களாக கம்யூனிஸ்டுகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். விக்கிரமசிங்க புரத்திலும் கட்சி வலுவோடு இருந்தது. அங்கு பேரூராட்சித் தலைவர் கம்யூனிஸ்டுதான். இந்த வெகுமக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்று போராட்டத் திற்கு பெரும் எழுச்சியை உருவாக்கித் தந்தார்கள்.
தென்தமிழ்நாட்டில் இதற்கு முன்னர், பல உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்திருந்தாலும், அதில் முக்கியமானது சங்கரலிங்கனார் நடத்திய போராட்டம். மெட்ராஸ் ஸ்டேட் என்னும் பெயரை "தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்தவர். அன்றைய சென்னை மாகாண அரசு அவரது கோரிக்கையை நிறைவேற்றாமல் வேறு தந்திரங்கள் செய்து உண்ணாவிரதத்தை நிறுத்த முயற்சிசெய்தது. உண்ணாவிரதத்தின் 76ஆம் நாளில் மரணமடைந்தார். அதன்பின்னர் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கிய போராட்டம் தோழர் நல்லகண்ணு, வி.பி. நாயகம் இருவரும் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்தான்.
சங்கரலிங்கனாரைப் போலவே மன உறுதிகொண்டவர் நல்லகண்ணு. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் உண்ணா விரதம் இருந்துவிடுவார். இவர் சிறைச்சாலைகளில் இதற்கு முன்னர் பலநாட்கள் உண்ணாவிரதமிருந்து பழக்கப்பட்டவர், என்பதை காவல்துறையின் ரகசியப் குறிப்புகள் கூறின. நாட்கள் நகர்ந்து கொண்டேயிருந்தன. ஏழு நாட்கள் முடிந்து, எட்டாம் நாளும் பிறந்தது. மக்கள் பெரும் வெள்ளமென அம்பாசமுத்தி ரத்தில் குவியத் தொடங்கினார்கள். இதில் அச்சம்கொண்ட அரசு, கடனா நதியில் அணை கட்டும் திட்டத்தை அறிவித்தது.
சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு தியாகங்களை செய்தவர் நல்லகண்ணு. சிறையில் பல ஆண்டுகள் அடைபட்டும், கொடுமைகளை அனுபவித்தவர். இதற்குப் பின்னரும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக தன் உயிரையும் பணயம் வைத்த பல போராட்டங்களை நடத்தியுள்ளார். அதற்கான உயிர்சாட்சியமாக இந்த கடனா நதி அணை இன்றும் திகழ்ந்து வருகிறது.
அணையிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு சொட்டு நீரும் நல்லகண்ணுவின் பெயரை உச்சரித்துக்கொண்டிருப்பதாக நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.
(தொடரும்)