(80) ஓடும் குடிகள்!


டும் குடிகள் என்னும் சொல்லுக்குள் ஓர் அதிர்ச்சி அடங்கியிருக்கிறது. அந்த அதிர்ச்சி, நம்மை தொலை தூரத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. அங்கு வேட்டை சமூகத்தின் முகம் தெரிகிறது. வேட்டை சமூகம் வேளாண்குடிகளாக மாறியிருப்பதும் தெரிகிறது. வேளாண்குடிகளில்  ஓடும் குடிகளா? எப்படி வந்தது? என்ற கேள்வி அதில் எழுகிறது. அதில்தான் அதிர்ச்சி தரும் தகவல்கள் அடங்கியிருக்கின்றன.

Advertisment

உலக அளவில் அடிமைகளின் வாழ்வு பெரும் போராட் டத் துயர் நிறைந்தது. இதற்கு பல நூறு ஆண்டு கால வரலாறு உண்டு. ஓடும் குடிகளின் கிளர்ச்சியையும் தொன்மையான அடிமை முறையை எதிர்த்த கிளர்ச்சிகளையும் எனக்கு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது. அதன் வளர்ச்சியை உற்று நோக்குகிறேன். ஸ்பார்ட்டகஸ் திராசியாவைச் சார்ந்தவன். இது பால்கன் பகுதியைச் சார்ந்த பிரதேசம். இங்கு இவன் ரோமாபுரி ஆட்சியாளர்களால் அடிமையாகப் பிடிக்கப்பட்டான். அன்றைய போர்க்கலையின் உயர்ந்த நிலை ஏப்ஹக்ண்ஹற்ங்ழ் என்பது. அதில் உயர்தேர்ச்சி பெற்றவன் ஸ்பார்ட்டகஸ். இவை எல்லாம் கி.மு. முதலாம் நூற்றாண்டில் நிகழ்ந்தவை. 

இவன் அடிமைகளின் விடுதலையின் முதல் பாடலைப் பாடியவன். அவனது விடுதலைப் போர், அதற்கு முன்னர் யாருமே சந்தித்திராத அதிர்வுகளைக் கொண்டிருந்தது. இவன்தான் முதல் மாவீரன். நிலைதடுமாறும் மாவீரத்திற் கெல்லாம் நிரந்தரமான கலங்கரை விளக்கம். இந்தக் கலங்கரை விளக்கத்தைக் கண்டுகொண்ட எந்தக் கப்பலும் கரையேறாமல் இருந்ததில்லை.  இவன் அடிமைச் சங்கிலியை உடைத்து 70 மாவீரர் களுடன் ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்தின் கட்டுக்கோப்புகளை வீழ்த்திவிட்டு, வெளியேறுகிறான். ஒரு மலைப்பகுதி. மற்ற அடிமைகள் அனைவரும் இவனை நோக்கி ஓடி வருகிறார்கள். இன்றைய கொரில்லா போர்முறையை முயன்று உருவாக்குகிறார்கள். அடிமையுலகத்தின் விடுதலை உறுதி செய்யப்படுகிறது. 

இருபதாம் நூற்றாண்டில் கம்யூ னிஸ்ட்டுகள் புதிய கிளாடியேட்டர்கள் -ஸ்பார்ட்டகஸ்கள் கம்யூனிஸ்டுகளா? என்ற ஆராய்ச்சி எனக்குள் தோன்றி விட்டது. அதில் ஒன்றுதான் திருநெல் வேலி சீமையின் ஓடும் குடிகள் போராட்டமா என்று எண்ணிப் பார்க் கிறேன். அதை உருவாக்கியவர்களில் ஒருவரா தோழர் நல்லகண்ணு என்று நினைத்துப் பார்க்கிறேன். 

Advertisment

மனித மனங்கள் மிகவும் விசித்திர மானவை. அவை, ஒன்று நமக்கு உரிமை யுடையதா? அல்லது உரிமையற்றதா? என்பதை முதலில் முடிவு செய்துகொள் கிறது. உரிமைகொண்டது என்றால் அதை யாராலும் எதுவுமே செய்துவிட முடியாது. அந்த உரிமைக்காக எதையும் இழக்கத் தயாராகிவிடுகிறது. உலகில் உருவான உரிமைப் போராட்டங்கள் அனைத்திற்கும் இதுவே அடிப்படை யானது என்பதாக நான் உணர்ந்து கொள்கிறேன். 

ஆதிகாலம் முதல் ஆதிக்க சக்திகள் அனைத்தும் தனக்கு உரிமையானது என்பதை நிறுவுவதற்கே முயற்சி செய்கின்றனர். அதற்காக வன்முறையை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். அதை நிறுவனமாக்கிக் கொள்கின்றனர். காலப்போக்கில் தங்களை சிற்றரசுகளைப் போல உருவாக்கிக்கொள்கிறார்கள். இந்த வளர்ச்சியில் நாம் கவனித்துப் பார்க்கவேண்டிய ஒன்று இருக்கிறது. 

ஒவ்வொரு மன்னர்களும் ஒவ் வொரு வழிபாட்டு முறையைப் பின்பற்றி யிருக்கிறார்கள். இதில் சிலர் சிவ வழி பாட்டையும், வேறு சிலர் வைணவ வழி பாட்டையும் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்காக மடங்கள் தோற்றுவிக்கப்பட்டு பெரும் நிலம் தானமாக மன்னர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த மடங்களுக்கு தனித் தனியாக மடத்தலைவர்களும் இருந்தனர். பெரும்பாலும் மன்னர்கள், மடங்களின் நடைமுறைகளில் தலையிடுவதில்லை.

Advertisment

kaithi1

திருநெல்வேலி மாவட்டத்தில் வைணவ மடங்களுக்கு பெரும் நிலம் சொந்தமாக இருந் தது. அவர்கள்தான் ஓடும் குடிகள் என்ற அமைப்பு முறையை உருவாக்கி வைத்திருந்தனர். இந்த நடைமுறை தமிழ்நாட் டின் மற்ற மடங்கள் எதிலும் இருக்கவில்லை. ஓடும் குடிகளைப் பற்றி தோழர் நல்லகண்ணு அவர்களிடம் பல்வேறு தகவல்களை நான் பெற்றுக்கொண்டிருக் கிறேன். இன்றைய தாமிர பரணிக் கரையின் வளம் பொருந்திய திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வைணவ மடங்கள் கூடுதலாகவே இருக்கின்றன. இவை "திவ்ய தேசங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

நவதிருப்பதிகள் இங்கு அமைந்துள்ளன. 108 திவ்ய தேசங்களில்  இந்த நவதிருப்பதிகளும் அடக்கம். நவம் என்றால் ஒன்பது என்று பொருள். இவை ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப் பட்டதாகக் கூறப்படு கிறது. வைணவம் சார்ந்த பல்வேறு தத்துவார்த்த தகவல்களை தோழர் நல்லகண்ணு அவர்களிடம் என்னால் தெரிந்து கொள்ள முடியும். ஆல யங்களுக்கும் இதர வழி பாட்டுத்தலங்களுக்கும் நிலம் எப்படி வந்து சேர்ந்தது என்பதைப் பற்றிய தகவல்கள் அவை. 

பிரமதேயம், தேவதானம் முதலான சொற்களை, நான் முதலில் அவரிட மிருந்துதான் தெரிந்து கொண்டேன். பிரமதேயம் என்பது ஆட்சியாளர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் என்பதையும், இவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதைப் போலவே தேவதானம் என்பது கோயில்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலம் என்றார். சில மாவட்டங்களில் மொத்தக் கிராமமும் தேவதான அடிப்படையில் கோயில்களுக்கு மானியமாக வழங்கப்பட்டிருந்தது. தோழர் நல்லகண்ணு எழுதிய இரண்டு நூல்கள் எனது ஞாபகத்திற்கு வருகிறது. ஒன்று கோயில் மடங்களைப் பற்றியது. மற்றொன்று நிலப்பறி நடத்தியது யார் என்ற நூல். இவை இரண்டும் நிலமீட்சிப் போராட்டத்தைப் பற்றி ஆழ்ந்த புரிதலை உருவாக்கித் தந்திருந் தன. இதன் மையம் ஆதிக்கக்காரர்கள் எவ்வாறு தர்மகர்த்தா என்ற பெயரில் கோயில் நிலங்களின் முழுப்பயனையும் பெற்றுவருகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளச் செய்தது. இதில் விவசாயத் தொழிலாளர்களும் குத்தகை விவசாயிகளும் மூர்க்கத்தனமான சுரண்டலுக்கு உட்பட்டிருந்தார்கள். 

இந்த பெரும் சுரண்டலை நீண்டகாலத்திற்கு பாதுகாத்து வைத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட மாபெரும் சூழ்ச்சிதான் ஓடும் குடிகள் என்னும் அமைப்பு முறை. இதை பல நூற்றாண்டுகள் நடைமுறைப்படுத்தி, குரூரம் கொண்டதாக மாற்றியிருக்க வேண்டும். அவர்கள் அந்த பசுமை பூத்த பெரும் வயல்வெளிகளில் இரவு பகலென்று பாராமல் உழைக்கவேண் டும். அவர்களுக்கு அந்த பெரும் நிலத்தின் எங்கோ ஒரு சிறு நிலத்தில் சிறு குடிசை போட்டுக்கொள்ள  உரிமையில்லை; அவ்வாறான உரிமை எதுவும் அவர்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்யும் முறைதான் ஓடும் குடிகள் முறை.

மடங்கள் இதற்கு மிகவும் கடுமையான சட்டங்களை உருவாக்கியிருந்தன. பல ஆண்டுகள் தலைமுறை, தலைமுறை யாக அவர்கள் இருந்தாலும் நாடோடிகளின் கூடாரங்களைப் போலத்தான் இவர்கள் குடியிருக்கும் இடம் இருக்கவேண்டும் என்பது இதில் அடிப்படையான விதி. அதற்கேற்றவாறு துணை விதிகளை உருவாக்கியிருந்தார்கள். இந்த துணை விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மடத்தின் சார்பில் கெடுபிடி மிகுந்த அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருந்தார்கள்.

ஓடும் குடிகள் நிலத்தில் எதையுமே மண்ணில் பதிக்கக் கூடாது. பொதுவாக ஆட்டுக்கல், அம்மிக்கல் ஆகியவற்றை மண்ணில்தான் புதைத்து வைத்திருப்பார்கள். சிறிய வீடாக இருந்தாலும் வாசலில் நிலை வைத்து, அதை மண்ணில் புதைத்து வைத்திருப்பார்கள். ஓடும் குடிகள் இவ்வாறாக மண்ணில் எதையும் புதைத்து வைத்திருக்கக்கூடாது. அப்படி புதைத்து வைத்திருந்தால் அதற்கு பெரும் தண்டனையை வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பு. 

அந்த கொடுமையை மண்ணில் குழிதோண்டிப் புதைத்த கூட்டம் தோழர் நல்லகண்ணு அவர்களின் கூட்டம் என்பதை இங்கு தெரிந்து கொள்வது நமக்கு அவசியமாகிறது.

(தொடரும்)