(79) தாலியை அடகு வைத்தாவது காலில் செருப்பு போடு! 

தீண்டாமைக்கென்று கட்டியமைக்கப்பட்டிருந்த அடிமைத்தனம் எகிப்திய பிரமிடு போன்றது. இதற்கென்று அடிமை பழக்கவழக்கங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் தகர்க்கவேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் உறுதிப்பாடு கொண்டிருந்தனர். அடக்குமுறைகளுக்கு எதிராக மார்க்சீயம் உருவாக்கி வைத்தி ருக்கும் கருதுகோள் விஞ்ஞான பூர்வமானது. அதில் நின்று அதற்கான தீவிர முன்னெடுப்பு களைக் கம்யூனிஸ்டுகள் எடுத்தனர். இந்த சமூகப்பணிகளில் சில கம்யூனிஸ்டு தலைவர்கள் கூடுத லாகவே கவனம் கொண்டிருந்தனர். அதிலும், அந்த முக்கியமான தோழர்களில் தோழர் நல்லகண்ணு முன் வரிசையிலிருந்தார். 

Advertisment

அடக்குமுறைக்கு எதிரான எதிர் வடிவங்களை உருவாக்கு வதில் தனித்துவம்கொண்ட தலைவர் சீனிவாசராவ். இவரது வரலாறு கம்யூனிஸ்டுகளின் அடக்குமுறை எதிர்ப்பு வரலாறோடு இணைந்தே வளர்ந்து வருகிறது. அதற்காக ஒரு காலத்தில் அவர் உருவாக்கிய போராட்ட முறைகளில் ஒன்றுதான், காலில் செருப்பு போடவேண்டும், தோளில் துண்டு போடவேண்டும், இதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை என்பது. 

ஒவ்வொரு ஊரிலும், கம்யூனிஸ்டு ஊழியர்களில் ஆதிக்க சாதியை சார்ந்த தோழர்களும் இருந்தனர். இவர்கள், தலித் தோழர்களை அழைத்துக் கொண்டு, ‘நடக்கக்கூடாது’ என்று தடை விதிக்கப்பட்ட சாலை களுக்குள் அழைத்துச் செல்ல வேண்டும். அவர்கள் காலில் செருப்பு போட்டுக்கொண்டு, தோளில் துண்டு போட்டிருக்க வேண்டும் என்று கட்சியும் விவசாய சங்கமும் முடி வெடுத்தது. பல இடங்களில் நேருக்கு நேரான மோதலாக உருவெடுத்திருந்தது. 

ஜமீன் அமைப்பு முறை சுதந்திரத்திற்குப் பின்னர் இங்கு ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இதன்பின்னரும் அவர்களின் ஆதிக்கம் தொடரத்தான் செய்தது. அதேசமயம் சாதிய ஆதிக்க பழக்கங்களுக்கு  எதிரான போராட்டமும் சூடுபிடித்தது. ஆதிக்க சக்திகளும் கடுமையான விளைவுகளைச் சந்திக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அதுவும் நெல்லை மாவட்டங்களில் ஜமீன்களின் எண்ணிக்கையும் மடங்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகம். 

Advertisment

சிவகிரி ஜமீன் 125 கிலோமீட்டர் பரப்பள வைக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் ஜமீன்களில் செல்வாக்குள்ளதாக இந்த ஜமீன் அமைந்திருந்தது. இங்கு சாதி ஆதிக்கமும் கொடிகட்டிப் பறந்தது. முழு ஜமீனும் மக்களும், அதன் ஆதிக்கத்திற்கு கைகட்டி, வாய் பொத்தி, அவர்களின் சொல்லை நிறைவேற்றக் காத்திருந்தனர். 

kaithi1

அப்பொழுது நடந்ததை மூத்த தலைவர் செல்லையா கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் ஜமீனுக்கு மிக நெருங்கிய உறவினர். அவர் அப்பொழுது நடந்த போராட்டங்களைப் பற்றி கூறினார். கட்சியும், விவசாய சங்கமும் முடிவெடுத்துவிட்டது. கட்சி உறுப்பினர்களும், இதை நிறைவேற்றுவது என்ற உறுதியில் இருந்தார்கள். அப்பொழுது தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டும் பணியில் சந்திரன் என்னும் தோழர் முன்னணியில் இருந்ததாக தோழர் செல்லையா குறிப்பிட்டார். சாதிவாரியாக மக்கள் குடியிருப்பு இருக்க, இதில் மையப் பகுதியில் ஜமீன் அரண்மனை இருந்தது. ஜமீன் அரண்மனையைச் சுற்றி, அவருக்கு வேண்டிய குடும்பங்கள் இருந்தன. 

Advertisment

தாழ்த்தப்பட்ட குடியிருப்பு ஊரின் கடைசிப் பக்கத்தில் இருந்தது. இதை அடுத்து சாதி வாரியாக மக்கள் குடியிருந்தனர். ஊர்வலம் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்புகளி லிருந்து புறப்பட்டது. ஒவ்வொரு சாதியிலிருந்தும் விடுபட்டு கட்சித் தோழர்கள் ஊரில் பரவலாக இருந்தனர். அவர்கள் அனைவரையும் செல்லையா ஒன்றுதிரட்டியிருந்தார். இது ஒருநாளில் திடீரென்ற நிகழ்ந்துவிடவில்லை, பல மாதங்கள் மேற்கொண்ட முயற்சி என்றார் செல்லையா.

இதையறிந்த ஜமீன் ஆதரவாளர்கள், தடுப்பதற்கு உரிய ஏற்பாடுகளை யோசித்தனர். சுதந்திரத்திற்குப்பின் வந்த அரசியல் சட்டம், தீண்டத்தகாதவர்கள் என்று கூறுவது சட்ட விரோதமானது என்பதையும், அதை மறைந்து ஒளிந்து செய்தால் அதை கம்யூனிஸ்டுகள் போôரட்டமாக மாற்றிவிடுவார்கள் என்பதையும் அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள். எனவே அவமானப்படுத்தவும், அச்சுறுத்தவுமான செயல்களில் ஈடுபடுவது என்று முடிவெடுத்து வைத்திருந்தார்கள். அதற்கான தயாரிப்புகள் முன்னேற்பாடாக செய்யப்பட்டிருந்தது.

காலில் செருப்பணிந்து, தோளில் சிவப்பு துண்டணிந்த தொண்டர்கள் மற்ற குடியிருப்பு களைக் கடந்து, ஜமீன் தெருவில் வருகிறார்கள். மாடிவீடுகள். மாடியிலிருந்து குடம் குடமாக மாட்டுச் சாணம் கரைத்து ஊற்றுகிறார்கள். தலையில் விழுந்த சாணி முகத்தில் வழிந்து உடல் முழுவதும் வழிந்தோடு கிறது. கம்யூனிஸ்டு ஊழியர்கள் இதனை ஒரு அவமானமாகக் கருத வில்லை. தங்கள் போராட் டத்தில் எதையும் சந்திக்கும் திறனை இதன்மூலம் வளர்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு போராட்டமும் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு சிறந்த படிப்பினையாக அமைந்துவிடுகிறது. 

இதையடுத்து கல்லை எறிந்தார்கள். இதற்கும் கம்யூனிஸ்டுகள் கொஞ்சம்கூட கலங்கவில்லை. அவர்கள் நேர்கொண்ட பாதையில் முன்னேறிக்கொண்டே சென்றார்கள். அதன்பின்னர் சிவப்பு துண்டணிந்து, காலில் செருப்பு போட்ட தலித் தோழர்களை சிவகிரியின் எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தது. இந்த நடைமுறை, சுற்றியிருந்த மற்ற ஜமீன் கிராமங்களிலும் பரவத் தொடங்கியது; அப்பொழுதுதான் அந்த முழக்கமும் பிறந்தது. அதை முன்வைத்தவர் நல்லகண்ணு. 

விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வு மிகவும் நெருக்கடிமிக்கது. வாழ்க்கையைச் சுரண்டல் கொள்ளையர் களிடம் பறிகொடுத்திருந்தார்கள். எல்லா இடங்களிலும் பஞ்சம் தலை விரித்தாடியது. கந்தல் ஆடைதான் அவர்களிடம் இருந்தது. உணவுக்கு பெரும் திண்டாட்டம். அப்பொழுது நல்லகண்ணு அந்த முழக்கத்தை முன்வைத்திருந்தார். இந்த முழக்கம் முன்வைத்தபோது எல்லோருமே பெரிதும் சங்கடப்பட்டுக்கொண்டார்கள். காலில் செருப்பு போட வேண்டும் என்றால், செருப்பு வாங்க பணத்திற்கு எங்கே போவது என்ற கேள்வியை எழுப்பினர். 

தோழர் நல்லகண்ணுவின் இதற்கான பதில் மனித விடுதலை சார்ந்திருந்தது. உணவைவிட, கந்தல் இல்லாத ஆடையைவிட மானம் பெரிதென எண்ணினார். தனது கௌரவத்தை மனிதர் அடைய எதையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அப்பொழுதுதான் அந்த முழக்கம் பிறந்தது. அந்த முழக்கத்தைக் கேட்டு ஆதிக்க சக்திகள் பெரிதும் அலறிப் போனார்கள். ‘"தாலியை அடகு வைத்தாவது காலில் செருப்பை அணிந்துகொள்'’ என்பதுதான் அந்த முழக்கம். 

இந்த முழக்கத்தை சுய கௌரவம் சார்ந்ததாக நான் பார்க்கிறேன். மனித கௌரவத்தை மீட்டெடுக்க ஒடுக்கப்பட்ட மக்களிடம் முதலில் மனஉறுதியை உருவாக்க வேண்டும். அந்த உறுதிதான் விடுதலை உணர்ச்சிக்கு அடிப்படையை உருவாக்கித் தருகிறது. இந்த விடுதலை  இன்பம் மானுடத்தின் உயர் இன்பம். 

இன்றைய காலம், இலவசங்களை நோக்கி மக்களை ஓடவைக்கும் காலமாக மாறிக்கொண்டிருக்கிறது. இலவசங்கள் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை சார்ந்திருக்கவில்லை. அவை தேர்தலின் வாக்கு கணக்குகளை சார்ந்திருக்கிறது. மக்களை இது சுயகௌரவத்தை இழக்க வைத்துவிடுகிறது. சுயகௌரவத்தை இழந்த மக்களை உருவாக்குவது, இன்றைய ஜனநாயகத்திற்கு அவமானமானது அல்லவா? இன்றைய காலத்தில் யார் இதையெல்லாம் யோசிக்கப் போகிறார்கள். இதற்கான தோழர் நல்லகண்ணுவின் அர்ப்பணிப்பு மட்டும் என் மனதில் ஆழமாக பதிந்துநிற்கிறது.  

(தொடரும்)