(78) துஷ்டி சொல்லுதல்!
துஷ்டி என்பது ஒரு சமஸ்கிருத சொல். இது தமிழ் மொழிக்கு எந்தக் காலத்தில் வந்தது என்பது யாருக்குமே தெரியவில்லை. சடங்குகள், சம்பிரதாயங்களுக்குள் மனிதரை அடைத்து வைத்து, அதற்குள் தீண்டாமையை வளர்ப்பதற்காகவே இந்த சொல் உருவாக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தீண்டாமையை அகற்றுவதற்கு சடங்கு சம்பிரதாயங்களைத் தகர்ப்பது அவசியம் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.. இந்த சடங்குகளை அகற்றுவதில் கம்யூனிஸ்டுகள் உறுதி கொண்டிருந்தனர்.
அடக்குமுறை காலத்தில், அதன் நுட்பமான பகுதிகளை கம்யூனிஸ்டுகள் ஆராய்ந்து பார்த்தனர். தலைமறைவு காலங்களில் தாங்கள் தங்கியிருந்த தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் குடியிருப்புகளில், இந்த தீண்டாமையை வளர்ப்பதில், சடங்குகள் ஆழ்மனச் செயல்பாடாக அமைந்திருந்ததை இவர்கள் நன்கு உணர்ந்துகொண்டார்கள். இதில் நல்லகண்ணு கூடுதல் கவனம் செலுத்தி வந்தார். துஷ்டிக்கும் தீண்டாமைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததை ஆராய்ந்து பார்த்தார்.
பேராசிரியர் ஆ. சிவசுப்ரமணியம் தமிழகத்தின் தனித்துவமான மார்க்சீய அறிஞர். தமிழ் சமூகத்தின் அடித்தள மக்களின் வரலாற்றை ஆய்வு செய்ததில், இவரது பங்களிப்பை அளவிட்டு சொல்லிவிட முடியாது. வாழ்நாளை இதற்காக அர்ப்பணித்துக் கொண்டவர். பேராசிரியர் நா. வானமாமலையின் மாணாக்கன் என்பதில் பெருமை கொள்பவர். துஷ்டி சொல்வது பற்றிய இவரது குறிப்புகள் ஆராய்ந்து பார்க்கத்தக்கதாக இருக்கிறது. இதை தென்மாவட்டங்களில் துட்டி சொல்வது என்பார்கள்.
பேராசிரியர் தனது வார்த்தைகளில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் ரெட்டியார் பட்டி, முனைஞ்சுப்பட்டி, மூலக்கரப்பட்டி, என்கிற ஊர்கள் உள்ளன. இந்த ஊர்களிலும், இதை சுற்றியுள்ள ஊர்களிலும் ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கூடுதலாக வசித்து வருகிறார்கள். ஐம்பதுகளின் தொடக்கம் வரை, இங்குள்ள பண்ணையார்களிடம் வேலை செய்த வந்த ஆதி திராவிடர்கள் துட்டி சொல்லுதல் என்னும் வேலையை செய்து வந்தனர்.
துட்டி சொல்லுதல் என்பது மேல்சாதிக்காரர்களின் வீட்டில் யாராவது இறந்து போனால், அவர்களின் உறவினருக்கு ஊர் ஊராகப் போய் கூனிக்குறுகி நின்று துக்க செய்தியை சொல்லுதல். இவ்வாறு சொல்ல வருபவர்களுக்கு நெல் அளந்துதரும் வழக்கமும் இருந்தது. இந்த வழக்கம் தங்களைத் தாங்களே அடிமைப்படுத்திக்கொள்ளும் மனநிலையை அவர்களுக்கு உருவாக்கியிருந்தது. இந்தப் பழக்கத்தை மாற்றுவது என்று கம்யூனிஸ்டுகள் முடிவு செய்தனர். இது அத்தனை சுலபமான வேலையில்லை என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்திருந்தனர்.
இதில் வேறொன்றையும் பேராசிரியர் குறிப்பிடத் தவறவில்லை. இந்தப் பகுதியில் பிழைப்புக்காக பம்பாய் சென்று திரும்பி வந்தவர்களும் இருந்தார்கள். இவர்கள் அம்பேத்கர் விடுதலை சிந்தனையை ஓரளவிற்கு அறிந்திருந்தார்கள். அவர்களில் சிலர், முதலில் ஒரு துஷ்டி சொல்வதற்கு மறுப்பு தெரிவித்தனர். மறுப்பு சொல்பவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு மற்றவர்களை பயன்படுத்திக்கொள்ளும் தந்திரத்தை பின்பற்றினர் நிலப்பிரபுகள். இவை எல்லாவற்றையும் மிகவும் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார் நல்லகண்ணு. அவருக்குள் ஒரு திட்டம் உருவானது.
இதில் உருவான எதிர்ப்புகள் அனைத்தை யும் ஒருங்கிணைத்தார். இதைத் தீண்டாமை ஒழிப்பின் குறியீடாக்கினார். கடின முயற்சிக்குப் பின்னர் இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இந்த பகுதிகளில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட மக்களிடம் இது குறித்து தொடர்ந்து விவசாய சங்கம் பிரச்சாரம் செய்து வந்தது.
அப்பொழுதுதான் அந்த தீவிரம் நிகழ்ந்தது. அந்த தீவிரத்திற்கான அடிப்படை, சமூகங்களின் ஒற்றுமை. அடித்தள மக்கள் ஒரு சிறந்த ஜனநாயகமுறையை தங்களுக்குள் செயல்படுத்தி வந்தனர். அது கூட்டாகக் கூடி, தங்களுக்குள் முடிவெடுத்துக் கொள்ளும் முறை. இந்த முறை தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒருவிதமாக இருந்தது.
தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த எளிய மக்களின் குடியிருப்புகள்தோறும், இந்த கூட்டங்கள் நடந்தன. இதனை விளக்கி, தீண்டாமையை எவ்வாறு இவ்வாறான வழக்கத்தின் மூலமாக பாதுகாத்து வருகிறார்கள் என்று எடுத்துச் சொல்லப்பட்டது. இந்தக் கூட்டங்களில் ஒரு தீவிரமான முடிவும் எடுக்கப்பட்டது. அந்த முடிவு சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாது மற்ற சமூகத்தினருக்கும் அதிரச்சியை அளித்தது. துஷ்டி சொல்வதை ஏற்று செயல்படுவர்களோடு, அந்த சமூகத்தின் இதர பகுதியினர், மண உறவு எதுவுமே வைத்துக் கொள்ளக்கூடாது என்பதுதான் அந்த முடிவு.
ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தன. பெரும்பாலான கிராமங்களில் இதற்கு பொதுவான இணக்கமும் வந்திருந்தது. இதற்கு காலமாறுதல் காரணம். சுதந்திரத்திற்குப் பிந்திய காலங்களில் மேல்சாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொண்ட ஒரு பகுதியினரிடம் முற்போக்கு எண்ணங்கள் உருவாகியிருந்தன. இந்த வழக்கங்கள் கால வளர்ச்சியில் தேவையில்லை என்ற நிலைக்கு. இவர்களும் வந்திருந்தார்கள். இந்த பகுதிகளில் துஷ்டி சொல்லுவதை நிறுத்த முடிந்தது.
எல்லா நேரங்களிலும் சில ஆதிக்க சாதிக்காரர்கள்தான் பிரச்சினை. தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்ற திமிர் அவர்களை வெகுவாக ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதி இருந்தார். அவர், தனது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டார். இதைப் பற்றிய விபரங்களையும் பேராசிரியர் சிவசுப்ரமணியம் தன் குறிப்புகளில் தெரிவித்துள்ளார். அந்த அரசியல்வாதியை எதிர்த்து, கம்யூனிஸ்டு கட்சியும் விவசாயிகள் சங்கமும் ஒரு தொடர் போராட்டத்தை நடத்தியது. அந்த ஆதிக்கக்காரர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அந்தக் குடும்படுத்தைக் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து மிரட்டி அச்சுறுத்தத் தொடங்கிவிட்டார்.
தோழர் நல்லகண்ணுவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. இவரே நேராக காவல் நிலையத்திற்கு சென்றுவிட்டார். தோழர்கள் கூட்டம் அருகில் இருக்க, காவல்துறை அதிகாரியிடம் தன் பேச்சுவார்த்தையை தொடங்கினார். எதிலும் நடைமுறை வாழ்க்கையிலிருந்து உதாரணங்களை எடுத்துச்சொல்வதில் இவர் கெட்டிக்காரர். இந்த அணுகுமுறை, இவரின் வாழ்நாள் வெற்றி என்று கூறமுடியும்.
காவல்துறை அதிகாரி அந்த அரசியல்வாதியான பண்ணையார் என்ன சொன்னாரோ அதை அப்படியே நல்லகண்ணுவிடம் திரும்பவும் சொன்னார். அவரிடம் அமைந்த அதிகாரத் திமிர், மற்றவர்களை அலட்சியப்படுத்தும் வெளிப்பாடுகளைக் கொண்டிருந்தது. இதை தோழர் நல்லகண்ணு பொருட்படுத்திக் கொள்ளவில்லை. காவல்துறை அதிகாரி கேட்ட கேள்வி இதுதான். அவரவர் குடிதொழிலை அவரவர் செய்ய வேண்டும் என்பது கிராமத்தின் விதிமுறை. இதை எப்படி நிறுத்துவது என்று எதிர்க்கேள்வி கேட்டார். சாதாரண விவசாயியைப் போன்ற தோற்றம் கொண்ட நல்லகண்ணுவிடம் இப்படிப்பட்ட ஒரு பதில் வரும் என்று அந்த அதிகாரி எதிர்பார்க்கவில்லை. செய்யும் தொழிலைத்தான் பரம்பரையாக செய்யவேண்டும் என்றால், உங்கள் தாத்தா போலீசா... உங்கள் அப்பா போலீசா? நீங்கள் ஏன் இந்தத் தொழிலை செய்றீர்கள்? என்றார். அவரால் பதில் பேச முடியவில்லை. அதற்குமேல் இந்தப் பிரச்சினையை ஒரு சட்டபூர்வமான பிரச்சினையாக மாற்றினார். துட்டி சொல்ல மறுத்தால் சமந்தப்பட்டவர் மீது வழக்குத் தொடரப்படுகிறது என்று நீங்கள் ச்ண்ழ் பதிவு செய்யுங்கள் என்றார். இதன் பின்னர் அங்கு துட்டி சொல்லுவது நிறுத்தப்பட்டது. இதைப்போன்ற சடங்குகள் எதிர் போராட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் வாழ்க்கையில் நெருப்புப்பொறி ஒன்று விழுந்து தீப்பிடிக்கத் தொடங்கிவிட்டது.
(தொடரும்)