(76) குத்தகை விவசாயிகளிடம் சுரண்டல்!
நிலம் மானுடத்தின் தாய். நிலம் இன்றி மனிதரில்லை. நாடோடியாய் மனிதரை ஓட வைத்ததும் நிலம்தான். நீரும் உணவும் தந்த நிலம் நோக்கி மனிதக் கூட்டம் ஓடிக்கொண்டேயிருந்தது. அந்தக் கூட்டம் ஓரிடத்தில் ஒரு இடத்தில் நின்று நிலைத்து வாழக் கற்றுக்கொண்டது, மனித வரலாற்றின் திருப்புமுனை. அந்த ஓட்டத்தை நிறுத்தியவள் பெண்தான்.
பெண் கர்ப்பமாகிறாள். ஒரு இடத்தில் தங்கிய அந்த மனிதக் கூட்டம் இந்த புதிய பிறப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. சுற்றிலும் அபாயம். ஆபத்து எதுவுமே வந்துவிடக்கூடாது என்று தவியாய் தவித்து நிற்கிறது. ஆனாலும். வேட்டைத் தொழில் தவிர்க்க முடியாதது. ஆண் வேட்டைக்கு செல்கிறான்.
வயிற்றுக்குள் குழந்தை வளர்க்கும் தாய் மட்டும் தனித்திருக்கிறாள். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடக்கிறது. குழந்தை போலவே வேறொரு பிறப்பையும் அவள் பெற்றெடுத்துவிடுகிறாள். அந்தப் பிறப்பு மானுடத்தின் புதிய பாய்ச்சல்... புதிய வளர்ச்சி.
மனித பிறப்பை சுமந்த தாய், அமர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறாள். இரவு வருகிறது. பகலும் வருகிறது, பருவங்கள் மாறிவிடுகின்றன. வண்ண மலர்களைப் பார்க்கிறாள். தலையில் சூடிக்கொள்கிறாள். பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி அதிலிருந்து பிரிந்த விதை மண்ணில் விழுந்து, முளைவிடுவதைப் பார்க்கிறாள். விதைகளை பொறுக்கி, மண்ணில் வரிசையாக புதைத்து வைக்கிறாள், விவசாயம் பிறந்துவிடுகிறது. குழந்தையைப் பெற்றெடுப்பதில் மகிழ்ச்சி கொள்வதைப்போல விவசாயத்தைப் பெற் றெடுத்ததில் மகிழ்ச்சி கொள்கிறாள்.
பெண்ணால் பிறந்த விவசாயத்தை, ஆண்கள் கூட்டம் கையிலெடுக்கிறது. மனிதர் செய்த உழவில் நெற்களஞ்சியங்கள் தோற்றம் பெறுகின்றன. ஒரு சிலரிடம் செல்வம் கொழிக்கிறது. ஆனால் உழுபவன் கையில் நிலமும் இல்லை. அவன் வயிற்றுக்கு உணவும் இல்லை. இங்குதான் வர்க்கப் போராட்டம் தோன்றிவிடுகிறது. இந்தப் பின்னணியில் கம்யூனிஸ்டுகள் நடத்திய விவசாயிகளின் போராட்டத்தை புரிந்துகொள்ள வேண்டும். வேறுவிதமாகப் புரிந்துகொள்ளக் கூடாது.
இந்திய விவசாய நிலப்பரப்பில், அனைத்தும் நிலப்பிரபுகளின் கையிலிருந்தது. இதை உழைப்பவனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற வசந்த காலத்தின் இடி முழக்கம் போன்ற தீவிரம் கம்யூனிஸ்டுகளிடம் இருந்தது. தோழர் நல்ல கண்ணுவின் சிறை வாழ்க்கையின் விடுதலை, நெல்லை சீமைக்கு வசந்தகாலத்தின் வருகையாக அமைந்துபோனது.
அன்றைய சங்கம் சார்ந்த நடவடிக்கைகளில், தோழர் ஆதிமூலத்தின் பதிவு எனக்கு முக்கியமானதாக தோன்றுகிறது. இவர் தோழர் நல்லகண்ணுவைப் போல தமிழ்நாடு விவசாய சங்கத்தில் நீண்ட காலம் பொறுப்பிலிருந்தவர். இருவரையும் கட்சி வட்டாரங்களில் இரட்டை யர்கள் என்று அழைப்பார்கள். புதிதாக பார்ப்பவர்களுக்கு தென் தமிழ்நாட்டிலிருந்து சென்னைக்கு புதிதாக வந்து சேர்ந்த விவசாயி களைப் போன்று தோற்றத்தில் காணப்படுவார்கள். மிகவும் மேன்மையான தோழமை அபூர்வத்தை கொண்டவர்கள்.
தோழர் ஆதிமூலம் கூறியவை. ‘சிறையிலிருந்து விடுதலை பெற்ற நல்லகண்ணு, நெல்லை மாவட்ட விவசாய சங்க செயலாளராகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். திருவைகுண்டம் பகுதியில் விவசாயிகளின் நிலமை மிகவும் மோசமாக இருந்தது. அந்த பகுதியில் சிறைக்கு செல்வதற்கு முன்னரே இவருக்கு நல்ல அறிமுகம் இருந்தது. ஆறுமுகமங்கலம், பேத்துவார் குத்தகை விவசாயிகளின் பிரச்சினையைத்தான் முதலில் கையிலெடுத்தார். பரம்பரையாக உழைத்த விவசாயிகளுக்கு நிலத்தில் எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது. ஓடச் சொன்னால் ஓட வேண்டும், இருக்கச் சொன்னால் இருக்க வேண்டும் என்பதுதான் நிலவரம் என்கிறார்.
இதில் வேறொரு முக்கிய செய்தியும் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் குத்தகை விவசாயிகள். இன்றைய காலத்தில் குத்தகை விவசாயத்தின் கொடுமையைப் பற்றி, பொதுவுலகம் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பு இல்லை. நிலப்பிரபுத்துவத்தின் முதல் சுரண்டல் விவசாயத் தொழிலாளர்கள் மீது என்றால், இரண்டாவது சுரண்டல் குத்தகை விவசாயிகளின் மீதுதான் இருந்தது. மொத்த விளைச்சலில் 75 சதவீதம் பண்ணையாருக்கு போய்ச் சேர்ந்துவிடும். குத்தகை விவசாயிக்கு 25 சதவீதம். இவர்தான் விவசாயத்திற்கான அத்தனை முதலீடுகளையும் செய்ய வேண்டும். இதைத்தவிர தச்சர், கொல்லர், நாவிதர், சலவை செய்து தருபவர் என்று பலருக்கும் நெல் அளந்து கொடுக்கவேண்டும். இதுவும் குத்தகைதாரர்கள் பங்கில் சேர்ந்து விடும். குத்தகை விவசாயிகளுக்கு அளந்து தரும் நெல்லை அளப்பதற்கு என்று தனியாக மரக்கால் வைத்திருப்பார்கள். இது ஒரு மோசடி மரக்கால். இதை எதிர்த்த போராட்டத்தை தோழர் நல்லகண்ணு தொடங்கியதாக தோழர் ஆதிமூலம் குறிப்பிட்டிருந்தார்.
"சரி வாரம்’ ‘சுத்த வாரம்'’ என்ற முழக்கத்தை முன்வைத்து, அன்றைய நாட்களில் போராட் டத்தை நல்லகண்ணு தொடங்கினார். நெல் அளவை மோசடி உள்ளிட்ட அனைத்தையும் அம்பலப் படுத்தி, முதலில் விவசாயிகளிடம் விழிப்புணர்வை உருவாக்கினார். சரி வாரம் என்பது விளைச்சலில் சரி பாதி பண்ணையாருக்கு, சரி பாதி குத்தகை விவசாயிகளுக்கு. பண்ணையாருக்கு இதில் பிரச்சனைகள் ஏற்படும்போது, குத்தகைதாரர்களை நிலத்தை விட்டு வெளியேற்றிவிடுவார்கள்.
சட்ட ஆதாரங்கள் இல்லாமல் பரம்பரை பரம்பரையாக நிலத்தில் பெரும்பான்மை மக்கள் குத்தகை விவசாயம் செய்துவந்தார்கள். அவர்களை நிலத்திலிருந்து, ‘கட்டாய வெளியேற்றம்’ செய்தால் அதைவிடவும் வேறு கொடுமை எதுவுமே இருக்கமுடியாது. இந்த பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரு சட்டப் போராட்டமாகவும், மக்கள் போராட்டமாகவும் நடைபெற்றது. இதில் இரவு பகலென்று பாராமல் அந்த மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நல்லகண்ணு பற்றிய பல விபரங்களை ஆதிமூலம் பதிவு செய்துள்ளார்.
மக்கள் போராட்டம் ஒரு போர்க்களத்தை போல நிகழ்ந்ததாக, அந்தக்காலத்தில் வாழ்ந்தவர்கள் கூறுகிறார்கள். இதில் எளிய விவசாயிகள் கொலைக்குற்றத்தையும் நேரடியான அடிதடிகளையும் சந்திக்கும் சூழலில் இருந் தார்கள். இவை எல்லாவற்றிற்கும் தோழர் நல்லகண்ணு தலைமையேற்றார்
தோழர் ஆதிமூலம் கூறும் மற்றொரு தகவல்... பண்ணையார் அதிகாரத்தை அகற்றி, எவ்வாறு மக்கள் அதிகாரம் கிராமங்களில் நிறுவப்பட்டது என்பதை பற்றியது. ஒவ்வொரு கிராமத்திலும் பொது விவசாய நிலங்கள் கிராமத்திற்கு சொந்தமாக இருந்தது. பண்ணையார் ஆதிக்கத்தில் இருந்தது. அவர்கள் அதை தங்கள் நலனுக்கு பயன்படுத்திவந்தார்கள்.
இந்த அதிகாரங்கள் அனைத்தையும் கிராம மக்கள் கையிலெடுக்கும் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் தொடங்கி, அதில் வெற்றியும் பெற்றனர்.
இதைப் போல தமிழ்நாட்டில், நீர்நிலைகள் நிறைந்த ஊர்கள் அதிகம் இருக்கின்றன. இந்த ஊர்களிலுள்ள ஏரி, குளங்களில் உள்ள மீன்கள், பெரும் வருமானத்தைத் தரக்கூடியவை. இதை அனைத்தையும் பண்ணையார்கள் தங்களுக்கு சொந்தமானவை என்பதைப்போல பயன்படுத்தி வந்தனர். இதை எதிர்த்த குரல்கள், ஒவ்வொரு ஊரிலும் எழுந்தன. ஒவ்வொன்றின் பின்னணியிலும் தோழர் நல்லகண்ணு இருந்தார் என்கிறார் தோழர் ஆதிமூலம்.
இவர் நடத்திய போராட்டங்களில் ஒன்றை நான் வாசிக்க நேர்ந்தபோது, இதைப்போன்ற முறை, தமிழ் நாட்டின் வேறு எங்குமே இல்லாமல் இருந்ததைப் புரிந்துகொண்டேன். மேலும் அது பற்றிய விபரங்களைத் தேடி, அதை அறிந்து கொள்வதில் பெரும் ஆர்வம் கொள்ளத் தொடங்கினேன். அதற்குள் ஒரு புதிய வாழ்க்கைமுறை இருந்தது.
(தொடரும்)