(75) விடுதலை!
"சிரி கொத்து சரி'’ என்பது ஒரு வியட்நாமிய சொல். வியட்நாமிய மக்கள், உலகில் எங்கெல்லாம் வாழுகிறார்களோ, அங்கெல் லாம் அவர்களின் விடுதலை வரலாற்றை, இந்த சொல் இவர்களுக்கு தினம் தினம் நினைவுபடுத்திக்கொண்டே யிருக்கிறது. இந்த சொல்லின் மூலம், வியட்நாம் மொழி, உலகின் பல நாடுகளுக்கு அறிமுகமாகிறது. முதலில் சீனம், பிரஞ்சு ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த சொல் தந்த படைப்பு, பின்னர் ஆங்கிலத்தின் வழியாக, உலகில் மக்களின் கோபக் குமுறல்கள் உள்ள இடங் களுக்கு பயணம் செய்து, அங்கு தனது நிகரற்ற உறுதி யை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குகிறது.
"சிரி கொத்து சரி'’ என்னும் இந்த நூலை எழுதியவர் வியட்நாம் தந்தை ஹோசிமின். ஒரு காலத்தில் சீன சர்வாதிகாரத்தையும் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து சமரசம் செய்து கொள்ளமால் போராடியவர். இவரது சிறைவாழ்க்கையும், தலைமறைவு வாழ்க்கையும் தனித்துவம் கொண்டவை. உலகின் இளம் புரட்சிக் காரர்களுக்கான தலைசிறந்த வழிகாட்டுதல்களை இந்த நூல் கொண்டிருக்கிறது. தோழர் நல்லகண்ணு சிறைச்சாலையில் ஆழமாக வாசித்துத் தெரிந்துகொண்ட தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் ஹோசிமின்.
சிரி கொத்து சரி என்றால் சிறைக் குறிப்புகள் என்று பொருள். இது ஒரு கவிதை நூல். இதனை, ஐம்பதுகளில் இலங்கையின் புகழ்மிக்க எழுத்தாளர் கே.கணேஷ் தமிழில் மொழியாக்கம் செய்திருந்தார். தோழர் நல்லகண்ணு இன்றுவரை பாதுகாத்துவரும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. சிறைக் குறிப்பு நூலை எடுத்து அதன் சில பகுதிகளை என்னை வாசித்துப் பார்க்க சொன்னார்.
அதில், ‘தடித்த இரும்புக் கம்பிகளுக்கு இடையில் இரண்டு உலகம்’ என்ற ஒரு வரி என்னை சிந்திக்கத் தூண்டியது. அதற்குள் இப்படி ஒரு பார்வையா? என்று வியந்துபோனேன். ஒரே நாடு, ஒரே மக்கள். ஆனால் முரட்டுக் கம்பிகள். இதில் இரண்டு உலகங்களை உருவாக்கி விட்டன. உள்ளே இருக்கும் உலகம் குற்றவாளிகளின் உலகம், வெளியே இருக்கிறவர்களின் உலகம் நியாயவான்களின் உலகம். ஆனால் உண்மையில் குற்றவாளிகள் வெளியே இருக்கிறார்கள். நியாயவான் உள்ளே இருக்கிறார்கள் என்பதை யாரால்தான் மறுக்க முடியும்? ஹோசிமின் சிறைக் குறிப்புகள், இவ்வாறு நம்மை வேறு எதை எதையோ யோசிக்க வைத்துவிடுகிறது.
முரட்டுக் கம்பிகளிடமிருந்து பெரும் விடுதலை பெறுதல் மானுடத்தின் விடுதலை இன்பம். ஹோசிமின் சிறைக் குறிப்புகளின் வழியாக நடந்துசென்று, தோழர் நல்லகண்ணு விடுதலையை யோசித்துப் பார்க்கிறேன். விடுதலைக்கான குறியீடுகளில் வானம் சிவந்திருக்க வேண்டும். சுதந்திரமாக பறவைகள் வானத்தில் பரவசம்கொண்டு சிறகடித்துப் பறக்க வேண்டும். தென்றல் தேடி வந்து தொடும் சுகத்தையும், மலரொன்று அருகில் வந்து நறுமணத்தை தந்துசெல்லும் இன்பத்தையும் வழங்கவேண்டும். இத்தனையும் சிறை விடுதலையில் ஒருவருக்கு கிடைக்க வேண்டும். அத்தனையும் தோழர் நல்லகண்ணுக்கு கிடைத்த தருணம் அது. 1956ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி. அவர் மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்.
இவருக்கான விடுதலையில் ஒரு சிறப்பு செய்தி இருந்தது. இவரோடு கைது செய்யப்பட்டவர்களில் 42 பேர் வெவ்வேறு காலங்களில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இவருக்கும், சில தோழர்களுக்கு மட்டும் சிறையிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை. காவல் துறை இவர்கள் மீத இவ்வாறாக கடுமையான வழக்குகளை பதிவு செய்திருந்தது. இவருக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்பதை யாராலும் கணித்துச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் காலம் காத்திருந்து இவருக்கான இந்த விடுதலையை வழங்கியது.
இவர் விடுதலையாகும் செய்தி, காட்டுத்தீ போல் நெல்லை சீமை முழுவதும் பரவியது. காடுகளிலும் வனாந்தரங்களிலும் வாழ்ந்த உழைத்துக் கருத்துப் போன, மனிதக் கூட்டத்திற்கு ஒரு கோடைக்கால மழையைப் போல இவரது வருகை மகிழ்ச்சியைத் தந்தது. அவர் வருவரா? வரமாட்டாரா என்று ஏக்கம்கொண்டிருந்திருந்த தாய் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினருக்கு, இவரது விடுதலை கனவில் நடந்ததைப் போல இருந்தது. தோழர்கள் செங்கொடிகளோடு அவரை வரவேற்க தயாரானர்கள்.
இவரது விடுதலை பற்றிய தகவல்கள் விரிவாக நமக்குக் கிடைக்கவில்லை. ஜனசக்தி நாளிதழில் விடுதலையான தேதியும் விடுதலை என்ற சிறு விபரமும் மட்டுமே உள்ளது. மற்றவர்களிடமிருந்து இது குறித்த தகவல்களைத் திரட்டலாம் என்றாலும், அவர்களில் யாருமே இப்பொழுது உயிரோடு இல்லை. நூறு வயதில் பயணம் செய்யும் தோழர் நல்லகண்ணு அவர்களால் எதையுமே ஞாபகப்படுத்தி சொல்ல முடியவில்லை. ஆதாரத்தை ஆவணமாக சொல்வதில் சிரமம் நிகழ்ந்து விடுகிறது. தியாகம் செய்த கம்யூனிஸ்டுகள் வாழ்க்கையில் இதை எல்லாம் முக்கியமாக கருதவில்லை என்பதை அதன்மூலம் தெரிந்துகொள்ள முடி கிறது. செய்த எதையும் வெளியில் சொல்லக் கூடாது என்ற உணர்வு அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
மதுரையிலிருந்து நெல்லைக்கு எவ்வாறு அழைத்து வந்தார்கள் என்ற விபரம் முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால் நெல்லையில் அவருக்கு வரவேற்பு கொடுத்த தற்கான ஆதாரம் மட்டும் ஒரு தடயத்தின் மூலம் நமக்கு கிடைத்திருக்கிறது. அந்த தடய ஆதாரம் ஒரு புகைப்படம். அந்தப் புகைப்படத்தில் இவருக்குத் தரப்பட்ட வரவேற்பு பற்றிய விபரங்கள் கிடைக்கின்றன.
அந்தக் காலத்தில் கார் வாடகை என்பது பெரும் பொருள் செலவைக் கொண்டது. இந்த கார் வரவேற்புக்கு, முதலில் தோழர் நல்லகண்ணு மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். மக்களின் குதூகல நிர்பந்தம் இவரை கட்டாயப்படுத்தி காரில் அமர வைத்துவிட்டது. இவரை காரில் அமர வைத்து யாரெல்லாம். இவரை காட்டிக் கொடுத்ததில் மகிழ்ச்சியடைந்தார்களோ, யாரெல்லாம் இவர் கைது செய்யப்பட்டதைக் கொண்டாடினார்களோ அவர்கள் வீடுகளுக்கு முன்னர் ஊர்வலத்தை தோழர்கள் வழிநடத்திச் சென்றனர். இது மக்களின் கொண்டாட்டமாக மாறியது.
ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டென்றால், புரட்சிக்காரர்களுக்கும் ஒரு வரலாறு உண்டு. அவர்களை எத்தனை கொடுமைப்படுத்தினாலும், சித்ரவதைகள் செய்தாலும் கால வளர்ச்சி அவர்களை யார் என்பதை சமூகத்திற்கு புரிய வைத்துவிடுகிறது. இவர்கள் யாருக்காக இத்தனை செயல்களையும் செய்து, இத்தனை துன்பங்களை சந்திக்க நேர்ந்ததோ, ஆரம்பத்தில் இதை புரிந்து கொள்ளாத அந்த மக்கள் ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டு, கடவுளுக்கு நிகராக அவர்களை வழிபடத் தொடங்கி விடுகிறார்கள் எப்படியோ. ஒவ்வொரு புரட்சிக்காரருக்கும் அவருக்கான கௌரவத்தை அந்த மக்கள் கணக்குப் பார்த்து திருப்பித் தந்துவிடுகிறார்கள்.
நூறாவது பிறந்த ஆண்டில் 2025 டிசம்பர் 25 ஆம் நாளில் புகழ்மிக்க தலைவர் அடியெடுத்து வைக்கிறார். இவர் பிறந்த ஊர் திருவைகுண்டம். இங்குதான், இவர் ஓடி ஓடி தேடப்படுகிறார். கண்டவுடன் சுடுவதற்காக போலீஸ்காரர்கள் சுற்றிவருகிறார்கள். கண்டுபிடித்துக் கொடுத்தால் பணம் தருவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன அதே ஊரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு மருத்துவமனை என்று பெயர் சூட்டப்படுகிறது. அடக்குமுறையும், சிறைத் தண்டனையும் இங்கு தோல்வியடைந்துவிடுகிறது. தியாகம் வெற்றி பெற்றுவிடுகிறது.
(தொடரும்)