(73) மிளகாய்ப் பொடி!
மதுரை சிறை வாழ்க்கையில் தோழர் நல்லகண்ணு இதர தோழர்களின் பல்வேறு கதைகளை உள்ளும் புறமும் அறிந்திருந்தார். அதில் ஒன்று கம்யூனிஸ்டு இயக்கம் நன்கறிந்த தோழர் கூத்தக்குடி சண்முகம் அவர்களின் ஆரம்பகால வீரதீர சாகசங்கள்.
மோகனசுந்தரம் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் மூத்த வழக்கறிஞர். அவரைப் பற்றிய நினைவுகள் இன்னமும் பசுமையாக என் மனத்தில் நிலைத்து நிற்கிறது. அவையெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த அனுபவங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என்று போராட்ட அனுபவங்களை நான் பெற்றுக்கொண்ட காலம். எனது இந்த வாழ்க்கை, புதிய அனுபவங்களையும், புதிய மனிதர்களையும் எனக்கு அறிமுகம் செய்துகொண்டே யிருந்தது.
முதலில் எனக்கும் தோழர் மோகனசுந்தரத்துக்கும் இடையில் அமைந்த நெருக்கம் பற்றி நான் சொல்லவேண்டும். நான் தஞ்சை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து தமிழ்நாடு மாணவர் பொறுப்பை ஏற்றிருந்தேன். பேருந்து, ரயில், லாரி என்று எனது பயணங்கள் சென்று கொண்டேயிருந்தது. அப்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் என்னை வரவேற்று அழைத்துச் சென்றவர் தோழர் மோகனசுந்தரம். மாவட்டத்தில் மாணவர் அமைப்பைக் கட்டும் தீவிரப் பணியில் இருந்தார். சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செயல்படத் தொடங்கியிருந்தார். என்னை சிவகங்கை கல்லூரி மாணவர்களை சந்திக்க வைத்து, மாணவர் பெருமன்ற அமைப்பை உருவாக்க இவர்தான் எனக்கு பாதை அமைத்துக் கொடுத்தார். அன்றைய சிவகங்கை நகரமும், அன்றைய இளமை ததும்பும் அழகு நிறைந்த மோகனசுந்தரமும், அப்படியே என் மனதுக்குள் இன்றும் காட்சியளிக்கிறார்கள்.
இவர் கூத்தக்குடி சண்முகம் பற்றிய அத்தனை தகவல்களையும் நன்கறிந்தவர். மதுரை சிறையைப் பற்றிய தகவலுக்காகவும் கூத்தக்குடியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் இவரை தொடர்புகொண்டேன். தகவல்களில் ஒன்று என்னை மிகவும் கிளர்ச்சியடைய வைத்தது. நீதிமன்றமும், காவல் நிலையமும் பயமுறுத்தியதைப் போல மக்களை வேறு எதுவுமே பயமுறுத்தியிருக்க முடியாது. அரச பயங்கரவாதம், கம்யூனிஸ்டு களின் மீது காட்டுமிரண்டித் தனங்கள் அனைத்தையும் அப்பொழுது கட்டவிழ்த்து விட்டிருந்தது. அந்த தருணத்தில் கூத்தக்குடி நீதிமன்றத்தில் அந்தக் கேள்வியை முன்வைத்திருந்தார்.
நீதிமன்றத்தில் குற்றவாளி யாய், நிறுத்தப்பட்ட ஒருவர் தைரியமாக இதைக் கேட்க முடியுமா? என்பது நமக்குத் தெரியவில்லை. சிவப்பு துண்டு அணிந்து, இவர் நீதிமன்றக் கூண்டுக்குள் ஏறுகிறார். நீதிபதி துண்டை எடுக்கச் சொல்லு கிறார். அவர் முடியாது என்று மறுத்து விடுகிறார். நீதிபதி, ‘இதற்காக உங்களை தண்டிக்க முடியும்’ என்கிறார். "உங்கள் தண்டனை பற்றிக் கவலையில்லை. ஆனால் அதற்கான காரணத்தை நீங்கள் சொல்ல வேண்டும்' என்கிறார்.
நீதிமன்றத்தில், துண்டு அணியக்கூடாது என்பதற் கும், அதுவும் சிவப்புத் துண்டு என்றால் அது பயங்கர வாதத்தின் அடையாளம் என்ற கருத்து நிலையில் நீதிபதி கள் அன்று இருந்தனர். "தோளில் துண்டு போடக்கூடாது என்றால், நாங்கள் அடிமைகளா?'' என்றார். அதன் அர்த் தம் நீதிபதிக்குத் தெரிந்திருக்க வேண்டும். பண்ணையார் முன் ஒடுக்கப்பட்ட விவசாயக் கூலிகள் காலில் செருப்பும், தோளில் துண்டும் போட்டுக்கொண்டு செல்லக்கூடாது. இதைத்தான் கேட்கிறார் என்பதை நீதிபதி புரிந்துகொள் கிறார். இதைப்போலவே "சிவப்பு என்பது ஒரு நிறம். நான் விருப்பம் கொண்டு ஏற்றுக்கொண்ட நிறம். இதன் மீது நீதிமன்றம் ஏன் வெறுப்பு கொள்ள வேண்டும்'' என்கிறார். இதன்பின்னர் நீதிமன்றங்களில் சிவப்புத் துண்டு போட்டுக்கொண்டே தங்கள் வழக்கை கம்யூனிஸ்டுகள் சந்திக்கத் தொடங்குகின்றனர்
கூத்தக்குடி சண்முகம், போலீஸ் காவலிலிருந்து தப்பிச் சென்ற சாகச நிகழ்வுகளை தோழர் நல்லகண்ணு என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார். அதன் மேலதிக தகவல்கள் வழக்கறிஞர் மோகனசுந்தரத்திடமிருந்து இப்பொழுது எனக்குக் கிடைத்தது.
கிருங்காகோட்டை என்பது இன்றைய சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். அங்கு விவசாயிகள் பிரச்சினை. இதில் ஒரு தலைப் பட்சமாக செயல்பட்ட, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கூத்தக்குடி அரிவாளால் வெட்டிவிட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. போலீஸ் கைதுசெய்து, சிறிதுகாலம் சிறையில் விசாரணைக் கைதியாக வைத்திருக்கிறது. ஒருநாள் தேவகோட்டை நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக கொண்டுவரப்படுகிறார்.
நீதிமன்ற விசாரணைக்கு பின்னர், இவர் மீண்டும் பஸ்ஸில் அழைத்துச் செல்லப்படுகிறார். தேவகோட்டை ரஸ்தா ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கிறது. ரயில் செல்லும் வரை பஸ், காத்திருக்க வேண்டும். அப்பொழுது அங்கு ஒரு இளம்பெண் ஓடிவருகிறார். அவரது கையில் ஒரு தூக்குச் சட்டி இருக்கிறது. அது கூத்தக்குடியின் தங்கை சிவகாமி என்பது காவலுக்கு வந்த போலீஸ்காரர் ஒருவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அண்ணனுக்காக தூக்குச்சட்டியில் உணவு கொண்டு வந்துள்ளார் என்று நினைத்துக்கொள்கிறார். தூக்குவாளியை கூத்தக்குடியிடம் கொடுக்க அனுமதிக்கிறார். வாளியை திறந்து என்ன உணவு என்று பார்க்கிறார். அப்பொழுது எதிர்பாராத அந்த செயல் நடைபெறுகிறது.
சிலர் மின்னல் வேகத்தில் பஸ்ஸில் ஏறுகிறார்கள். கூத்தக்குடி திறந்து பார்த்தால், அதில் உணவு இல்லை. வேறொரு ஆயுதம் இருக்கிறது. ஆயுதம் என்றால் வெடி குண்டு, துப்பாக்கி இல்லை... மிளகாய்ப்பொடி. மின்னல் என பாய்ந்து வந்தவர்கள் மிளகாய்ப்பொடியை கையில் எடுக்கிறார்கள் போலீஸ்காரர்கள் கண்களில் வீசுகிறார்கள். கூத்தக்குடி சண்முகம் அங்கிருந்து தப்பிவிடுகிறார்.
இதை முன்நின்று நிகழ்த்தியவர் திருப்பத்தூரைச் சார்ந்த தங்கசாமி. அவருக்கு உதவியாக செயல்பட்டவர் காரை சண்முகம் என்பதை வழக்கறிஞர் மோகனசுந்தரம் உறுதி செய்கிறார் தோழர் கூத்தக்குடி சிறிதுகாலத்திற்கு பின்னர் மறைந்திருந்த இடத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறைக்குக் கொண்டுவரப்படுகிறார். அங்கு அவர் தோழர் நல்லகண்ணுவுடன் பல ஆண்டுகள் சிறையி லிருக்கிறார். சிறையில் நடைபெற்ற பல போராட்டங்களுக்கு இவரும் தலைமையேற்கிறார். இவையெல்லாம் தோழர் நல்லகண்ணுவின் சமகால தோழர்கள் அடக்குமுறை காலத்தில் நிகழ்த்திய சாகசங்களாக நாம் புரிந்துகொள்வது இங்கு அவசியமாகிறது.
(தொடரும்)