71 ‘மலைய மறவு வைத்து...!’
கம்பன் கவிச்சாரலில் யார்தான் மகிழ்ச்சிகொள்ள மாட்டார்கள். குற்றாலத்தில் குளிப்பதைப்போல அதன் சாரலில் இன்பம் கண்டவர் தோழர் நல்லகண்ணு. கம்பனின் கவிதைச் சிறப்பைப் போலவே, கம்பன் பற்றிய நாட்டுப்புறக் கதைகளிலும் பல சிறப்புகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஆர்வத்துடன் கற்றறிந்திருந்தார். அதில் ஏற்றப் பாடல் ஒன்றின் கவிதாநுட்பத்தைப் பற்றிய கதை ஒன்று இருப்பதையும் இவர் அறிந்திருந்தார்.
அந்தக் கதை, சுவைமிகுந்த ஏற்றம் இறைப்பவரின் பாடல். அது மூன்று தினங்கள் தொடர்கிறது. 2005ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தில் மூழ்கிப்போன தோழர் நல்லகண்ணு, நோட்டுப்புத்தகத்தில் இதைப்போன்ற ஒரு அனுபவம் பதிவுசெய்யப்பட்டிருந்தது என் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த பதிவில் கம்பனைப் போலவே ஒரு அனுபவத்தைப் பெறுகிறார் தோழர் நல்லகண்ணு என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. .
கம்பன் ஏற்றப் பாடல் ஒன்றில், மயங்குவதாக கதை தொடங்குகிறது. ஏற்றம் இறைப்பவன் ராகமெடுத்துப் பாடுகிறான். அதன் ராகம் கம்பரை கிறக்கம் கொள்ள வைத்துவிடுகிறது. அப்படியொரு இனிமையான குரல் அவர் கேட்டதில்லை. கொஞ்ச நேரத்தில் கிறக்கம்தரும் இசை ஓசையிலிருந்து விடுபடுகிறார். பாடலின் பொருள் ஈர்க்கிறது.
அவன் ‘மூங்கில் இலை மேலே’ என்று முதல் வரியை தொடங்குகிறான். அதில் அதற்கு அடுத்த வரி என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறார். கண்டறிய முடியவில்லை. அடுத்த கவிதாவரிக்காக அவர் காத்திருக்கிறார். பலமுறை இதையே திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டிருந்த ஏற்றக்காரனின் பாடல் முடிந்துவிடுகிறது. கம்பர் ஏமாற்றமடைகிறார்.
ஏற்றக்காரன் இரண்டாம் நாள் வருகிறான். கம்பரும் வந்துவிடுகிறார். முதல்நாள் பாடிய மூங்கில் இலை மேலே என்ற வரியை பாடிவிட்டு, அடுத்த வரிக்கு செல்கிறான். கம்பர் அதிர்ச்சிக்குள்ளாகிறார் ஏற்றக்கார னிடம் இத்தனை கற்பனை வளமா? தூங்கும் பனி நீரே என்று பாடு கிறான். இதையே மடக்கிப் பாடியே ஏற்றக்காரனின் இரண்டாம் நாளும் முடிந்துவிடுகிறது. ஏற்றக்காரன் அமைதியாக வீட்டுக்குச் சென்று விடுகிறான். ஆனால் கம்பர் அமைதி இழந்துவிடுகிறார்.
கம்பருக்கு இருந்த பிரச்சினை ஏற்றக்காரனுக்கு இல்லை. ஏற்றக்காரன் ஒரு கர்மயோகி. அவன் ஏற்ற இறவையையும், ஏற்றப் பாட்டு பாடுவதையும், ஒரு கடமையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருபவன். "மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே'’ என்ற பாடல் வரிகளை மீண்டும் தனக்குள் சொல்லிப் பார்த்துக்கொள்கிறார் கம்பர். அடுத்த வரி என்னவென்று யோசிக்கிறார். அதற்கு பொருத்தமான வரிகளை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது அன்றைய இரவு, தூக்கமின்றி நகர்ந்து செல்லுகிறது.
மூன்றாம் நாள் காலை ஏற்றம் இறைக்கும் பகுதி சென்று வெகுநேரம் கம்பர் காத்திருக்கிறார். ஏற்றக்காரன் வருகிறான். தன் இறவையைத் தொடங்குகிறான். மூங்கில் இலை மேலே என்ற பாடலை மீண்டும் பாடத் தொடங்குகிறான். கம்பர் ஆர்வ மிகுதியால் பதட்டமடைகிறார். அடுத்த வரியைப் பாடுகிறான். அவருக்குள் இருந்த கவிதாகர்வம் அடங்கிப்போகிறது என்று இந்த நாட்டுப்புற கதை முடிவடைகிறது.
ஏற்றக்காரனின் முதல் வரி ‘மூங்கில் இலை மேலே’ என்பது, இரண்டாவது வரி ‘தூங்கும் பனி நீரே’, மூன்றாவது வரி ‘தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’ என்பது. இதைப் போன்றே சிறைச்சாலையில் தோழர் நல்லகண்ணுவுக்கு கிடைத்த அனுபவம் நமக்கு ஒருவிதமான வியப்பைத் தருகிறது. இந்த அனுபவம் ஒரு ‘கன்விக்ட் வார்டர்’ மூலம் வெளிப்படுகிறது.
இப்பொழுது சிறைச்சாலைகளில் ‘கன்விக்ட் வார்டர்’ முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. கன்விக்ட் வார்டர்களுக்கு இரவு நேர விசில் சப்தங்கள் இப்பொழுது சிறைச்சாலைகளில் கேட்பதில்லை. நான் 1982 ஆம் ஆண்டு மதுரை சிறையில் 15 நாட்கள் இருந் திருக்கிறேன். அப்பொழுது நான் கல்லூரி மாணவன். அப்பொழுது அவ்வாறான கன்விக்ட் வார்டர்களை சந்திக்கவும், பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் மிகவும் வித்தியாசமான மனிதர்கள். அவர்கள் மனதுக்குள் இருந்த துயரம் எல்லை யில்லாதது. அது கைதிகளை குரூரமாக நடத்தும் நடைமுறையை தந்து விட்டதோ என்று அப்பொழுது நான் யோசித்தது உண்டு. அவர்களில் பலரின் கதையைக் கேட்டு பெரிதும் பரிதாபப் பட்டிருக்கிறேன். தோழர் நல்லகண்ணுவின் வெள்ளத்தில் மூழ்கிய நோட்டுப் புத்தகப் பதிவிலும் ஒரு கன்விக்ட் வார்டர் வருகிறார்.
அமைதி நிலவும் இரவில் அங்கு கன்விக்ட் வார்டர் உலகம் அலாதியானது. அவர்கள் பாதுகாப்பு வலம் வரும் நள்ளிரவில்,. சில நேரங்களில் நிலவை பார்க்க முடியும். சில நேரங்களில் இருளை மட்டுமே பார்க்கமுடியும். அந்தத் தருணங்களில், அவர்களுக்குள் பெருகி நிற்கும் பாட்டு ஊற்றெடுக்கத் தொடங்கிவிடுகிறது. அதில் எத்தனை விதமான துயரங்கள் கரைந்து நிற்கிறது.
கம்பரின் ஏற்றக்காரனை போலவே, இந்த கன்விக்ட் வார்டரும் பாடுகிறார். கம்பனைப் போலவே சிறைக் கம்பிகளுக்கு பின்னிருந்து நல்லகண்ணுவும் பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறார். துயரத்தைப் பாடிப்பாடி குரல் குயிலின் குரலோசையின் இனிமையோடு பாடல் வெளிப்படுகிறது. அவரது அம்மைத் தழும்புகள் நிறைந்த முகத்தை அவர் பார்த்திருக்கிறார். அவரது விகாரமான முகத்தையும் அவரது குரலின் இனிமையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். அவருக்குள் ஒருவிதமான ஆர்வம் பிறந்துவிடுகிறது.
‘மலையை மறவு வைத்து, மல்லியப்பூ சாட்சி வைத்து’என்று பாடத் தொடங்கிறார். முதுமை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, இளமை குரலில் பெருக்கெடுக்கிறது. மலையை மறைவில் வைத்து என்ன நடந்தது, என்ற எண்ணம் நல்லகண்ணுக்கு வந்து விடுகிறது. பாடல் மடக்கி மடக்கி பாடப்படுவதை நல்லகண்ணுவால் கேட்க முடிகிறது. திடீரென்று பாட்டு நின்றுவிடுகிறது. காரணத்தையும், அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. கன்விக்ட் வார்டர்களை கண்காணிக்கும் வார்டர் வருகிறார் என்பதுதான் அது.
மறுநாள், கன்விக்ட் வார்டரின் வரவுக்காக காத்திருக்கிறார் நல்லகண்ணு. விசில் சத்தம் கேட்கிறது. மீண்டும் மலையை மறவு வைத்து, மல்லியப்பூ சாட்சி வைத்து என்று பாடியவர், அதற்கு அடுத்த வரியையும் பாடுகிறார். ஆனால் அந்த வரிகள், இவர் எதிர்பார்க்காத ரகசியம் ஒன்றையும் சொல்லுகிறது. அந்த வரிகள், இதுதான் ‘ஒன்ன நா தொட்டதுக்கு, உங்கப்பன் சாட்சி சொன்னதற்கு’ என்பதாக வெளிப்படுகிறது அந்தப் பாடல். இந்த வரிகளில் மனித வாழ்வில் மறைந்திருக்கும் கள்ள உறவை வெளிப்படுத்துகிறது,
அடுத்தநாளும் காத்திருக்கிறார். பகல் வந்து போகிறது, இரவும் வருகிறது. கன்விக்ட் வார்டரின் பாட்டும் வருகிறது. அந்தப் பாட்டை கேட்டவுடன், அவருக்குள் மனிதரைப் பற்றிய ஒரு கிண்டல் கலந்த சிரிப்பு வந்துவிட்டது. மீண்டும் பாடலை சொல்லிப் பார்க்கிறார்.
மலையை மறவு வைத்து
மல்லியப் பூ சாட்சி வைத்து
உன்ன நா தொட்டதுக்கு
உங்கப்பன் சாட்சி சொன்னதற்கு
மதுரை ஜெயிலிலே மாடா உழைக்கிறேண்டி’
என்பது அந்தப் பாடல்.
மீண்டும் பாடல் தந்த பொருளை யோசித்துப் பார்க்கிறார். மீண்டும் அவருக்குள் சிரிப்பு வருகிறது.