(68) தூக்கு மேடை பாலு

துரை சிறைச்சாலையில் அதிகாலையில் அந்தப் பாடல் இசைக்கப்படுகிறது. அதன் நெடிய மதில் சுவர்களில் அந்த பாடல் வரிகள் மோதி தனித்த இசை தரும் எதிரொலியாக மாறியிருந்தது. அந்தப் பாடல், கனத்த இரும்புக்கம்பிகளையும் ஊடுருவி, எல்லா இடங்களுக்கும் போய்ச்சேரும் வலிமையையும் பெற்றிருந்தது. தூக்குக்கயிறால் கழுத்து முறிக்கப்பட்டு இதயத்தின் இயக்கம் நின்றுபோவதற்கு முன், பாடிய பாடல். சிறையில் கைதிகளாயிருந்த அனைத்து கம்யூனிஸ்டுளுக்கும் அந்தப் பாடல் தெரிந்திருந்தது. அந்தப் பாடலை ஒருவர் ஆரம்பித்தால் போதும், எல்லோரும் பாடத் தொடங்கிவிடுவார்கள். 

கம்யூனிஸ்டுகளின் நடைமுறை கள் சிலவற்றை, வெளியுலகம் பலநேரங்களில் வினோதக் கண்கொண்டு பார்க்கிறது. தீவிர முழக்கங்களை எழுப்புகிறார்கள். புரட்சிகர உணர்வு களை உருவாக்கித் தரும் பாடல்களை கூட்டாக இசைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஏன்? என்பது கேள்வி. இவை ஆதாயத்திற்கு செய்யப்படும் தனி வழிபாட்டு வழிமுறைகள் அல்ல என்பதை 

Advertisment

அவர்கள் தெளிவாகவே உணர்ந்திருக்கிறார்கள். மனித உணர்வுகளை ஒருங்கிணைத்து, தடை களை உடைத்து, மாற்றங்களை நோக்கி நகர வைக்கும் மாயத்தை அது செய்துவிடுகிறது. அதை பொதுஉலகம் அவ்வளவாக புரிந்து கொள்வதில்லை. 

அது தூக்குமரத்தடியில் பாடப்பட்ட பாடல். தூக்கு கயிறை கழுத்தில் மாட்டுவதற்கு முன்னர், அந்த பாடலைத்தான் பாடவேண்டும் என்ற அனுமதியையும் பாலுசாமி என்ற பாலு பெற்றிருந்தார். அந்தப் பாடலை அவர் தன் ஆத்மாவைவிட முக்கியமானதாகக் கருதியிருக்க வேண்டும். உயிர் பிரிவதைவிட அந்தப் பாடலை பாடி முடிப்பது அவருக்கு அந்த தருணத்தில்  முக்கியமாக இருந்தது. ஒரு பாடல் முழுவதையும் பாடி முடிக்கிறார்.

பாலுவின் தூக்கு மேடைக் குறிப்புகள் பற்றி எழுத்தில் பதிவு செய்தவர்கள் இருவர். ஒருவர் மாயாண்டி பாரதி, மற்றவர் நல்லகண்ணு. இருவரும் கடைசிவரை தியாகி பாலுவோடு உரையாடி வந்திருக்கிறார்கள். இவர்கள் இரு வரின் குறிப்புகளும் சில தகவல்களை நமக்குத் தருகிறது. அவர்களும், ஒரு முழுமையான நூலாக இதை எழுதி வைக்கவில்லை. தனித் தனி குறிப்புகளாக எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.  இதிலிருந்து அந்த அதிகாலையில் என்ன நடந்தது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது. 

Advertisment

தோழர் நல்லகண்ணு எழுதிய ‘"தூக்கு மேடையில் பாலு'’ என்னும் நூல், யாராலும் அறிந்துகொள்ள முடியாத விவரங்களை நமக்குத் தருகிறது. தூக்கிலிடப்படுவதற்கு முதல்நாள் நடந்த நிகழ்வுகள் அவை. அந்த விவரிப்புகள் ஒவ்வொன்றும் மிகவும் உருக்கமானவை. 

‘பாலுவுக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்படுகிறது. எட்டு மாதங்கள் தனிமைச் சிறை. சூரியனையோ, சந்திரனையோ பார்க்க முடியாது. மனித முகங்களைக்கூட மிகவும் அபூர்மாகத்தான் பார்க்கமுடியும். பாலு, பூட்டி வைக்கப்படுகிறார். தூக்குத்தண்டனையை எப்படியும் ரத்து செய்விட வேண்டும் என்ற முயற்சி மிகவும் கடுமையாக வெளியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்பொழுதுதான் அந்த உத்தரவும் வருகிறது. 1951ஆம் ஆண்டு  பிப்ரவரி 20ஆம் தேதி மதுரை சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்த அந்த உத்தரவு, சரியாக இரண்டு தினங்களில் அதாவது 22ஆம் தேதி பாலுவை தூக்கிலிட வேண்டும் என்கிறது. 

சுதந்திர இந்தியாவில் ஒரு ஆலைத்தொழி லாளியை தூக்கில்போடும் முதல் கொலையை இதன்மூலம் அரசாங்கம் செய்யப்போகிறது. கையூர் தோழர்களும், சின்னையம்பாளையம் தோழர்களும் இதற்கு முன்னர் தூக்கிலிடப் பட்டிருக்கிறார்கள். அவையெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்தவை. 

மிகவும் பிடிவாதமாக இருந்த சிறை நிர்வாகம் தூக்கில் போடும் முடிவு செய்த பின்னர், தன் பிடிவாதத்தை தளர்த்திக்கொள் கிறது. பார்வையாளர்கள், பார்க்க அனுமதிக் கப்படுகிறார்கள். தோழர் நல்லகண்ணு இரண்டு தினங்களை மேலும் விவரிக்கிறார்... 

‘இவரை அடைத்துவைத்திருந்த தூக்கு கொட்டடி பூட்டப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னால் சிமெண்டிலான நடை பாதை. அதில் குறுக்கும் நெடுக்குமாக கம்பி வலை போடப்பட்டுள்ளது. அந்த கம்பியை தாண்டி பார்வையாளர்கள் நின்று பாலுவோடு பேச முடியும். அப்பொழுது கட்சிப் பாடலின் மீது தனக்குள்ள ஆர்வத்தை, பாலு தன்னை பார்க்க வந்த தோழர்களிடம் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துகொள்கிறார். நாளை தூக்கு இன்று அந்த உணர்வு பகிர்ந்துகொள்ளப்படுகிறது. ஒரு பாடலில் சில வரிகளைப் பாடிக்காட்டுகிறார். அதை அப்படியே தோழர் நல்லகண்ணு, தன் நூலில் விவரித்து எழுதியுள்ளார். 

"எனக்கு பாட்டில் ரொம்ப பிரியம். மதுரையில் கே.பி. ஜானகியம்மாள், மாயாண்டி பாரதி, எம்.ஆர்.எஸ்.மணி ஆகியோர் 1940ஆம் ஆண்டிலேயே மேடையில் பேசும்போது, நான் மேடைக்கு முன்னர் அமர்ந்திருப்பேன். தலை வர்கள் பேசுவதற்கு முன் னர், ஐ.வி.சுப்பையா, எம்.எம். மாணிக்கம் போன்றவர்கள் புரட்சிப் பாடல்களைப் பாடுவார்கள். இந்த பாடல்கள்தான், செங்கொடியின் மீது ஈடுபாடுகொள்ள வைத்து, என்னை கம்யூனிஸ்ட்டாக்கியது’என்று குறிப்பிட்டதாகக் கூறுகிறார். அந்த பாடலைத்தான் தூக்குக்கயிற்றை கழுத்தில் மாட்டுவதற்கு முன்பும் பாடியிருக்கிறார். 

மேலும் விவரிப்பு தொடர்கிறது...

காலை மணி 4.30. அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். மெதுவாக கம்பி வேலியின் கதவு திறக்கப்படுகிறது. நாதாங்கியின் சப்தம் தெளிவாகக் கேட்கிறது. பாலுவின் கைகளில் விலங்கு மாட்டப்படுகிறது. தூக்குத்தண்டனை கைதிகள் வைத்திருக்கும் ‘செல்’ "கண்டம்' என்று அழைக்கப்படுகிறது. பாலு, கண்டத்தை விட்டு கீழே இறக்கப்படுகிறார். கண்டத்தை அடுத்த ஏ செல் இருக்கிறது. அதை அடுத்து 9ஆவது பிளாக். அதன் பின்னர் "ஏ' கிளாஸ். இங்குதான் தோழர்கள் பேராசிரியர் எம்.எஸ்.நாடார், ஆவுடையப்பன் ஆகியோர் இருந்தனர். பாலு, இதன் வழியாக அழைத்துவரப்படுகிறார். இந்தப் பகுதியெல்லாம் புயலின் ஆவேசம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும் 

ஆனாலும் பாலு மரணத்தின் தலைவாயிலில் பாடிய பாடலை அறிந்துகொள்வது நமக்கு இங்கு அவசியமாகிறது. இந்தப் பாடலுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. மனிதத் தலைகளை தொங்க வைத்துவிடும், அந்த தூக்குமரம் ஒரு போதும் இந்த பாடலை கேட்டிருக்க முடியாது. அழுகுரலை கேட்டிருக்கும். புலம்பல் கேட்டிருக்கும். பைத்தியக்கார நிலையில் எழுந்த சிரிப்பலைகளை கேட்டிருக்கிறது. முதல்முறையாக நம்பிக்கையும், தெளிவும் கொண்ட பாடல் ஒன்றைக் கேட்கிறது. 

ஒரு பெரும்துயரம் புதிய நம்பிக்கையாக இங்கு மாற்றப்படுகிறது. அவநம்பிக்கைகள் அனைத்தும் அகற்றப்படுகின்றன. ஒப்பாரிக்கும், முழக்கங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை நாம் அறிவோம்.       

இங்கு ஒப்பாரி, நம்பிக்கை முழக்கங்களாக  மாறுகின்றது. "மக்கள் வாழ்க! கம்யூனிஸ்டு கட்சி வாழ்க!' என்ற முழக்கத்தோடு நின்றுபோன தோழர் பாலு உயிர்மூச்சாகப் பாடிய, ஜீவா எழுதிய செங்கொடிப் பாடலின் ஒரு பகுதி இதுதான். 

சுட்டுப் பொசுக்கினாலும் -தோழர்களை 
தூக்கினில் ஏற்றினாலும்
விட்டுப் பிரியாது -செங்கொடி
வீரம் குறையாது. 

தூக்கிலிடப்பட்டபோது, பாலுவுக்கு வயது 31.

(தொடரும்)