(67) ஒன்பதாவது பிளாக்!

துரை சிறையில் நடந்த தூக்குத் தண்டனை பற்றிய பல விபரங்களை தோழர் நல்ல கண்ணு அறிந்திருந்தார். இது பற்றிய பல்வேறு தகவல்களை இவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த போதிலும், தமிழ் சான் றோர் பேரவை செய்தி மடலில் எழுதிய குறிப்புகள், இது குறித்த மேலும் சில தகவல்களை கூறுகின்றன..

அந்த குறிப்புகளில், தான் சிறையிலிருந்த காலத்தில், நூற்றுக் கணக்கான கைதிகளுக்கு, தூக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் பற்றி இவர் குறிப்பிட்டிருக்கிறார். இதில் சிலர் தூக்குத்தண்டனை பெற்ற போதிலும் கருணை மனு, மேல் முறையீடு போன்றவற்றால், தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள்தண்டனைக் கைதிகளாக சிறையில் காலத்தைக் கழித்தார்கள் என்கிறார். இவர் மதுரை சிறையில் இருந்த காலத்தில் மொத்தம் 22 பேர் தூக்கிலிடப் பட்டுள்ளார்கள். இந்தப் பின்னணி யிலுள்ள மற்றொரு கதையையும் நாம் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

Advertisment

கம்யூனிஸ்டுகள் பாதுகாப்புக் கைதிகளாக சிறைச்சாலைக்கு வந்தவுடனே கடுமையான சித்ரவதை களுக்கு இடையில், அவர்கள் ஒரு கோரிக்கை வைத்து போராடத் தொடங்கியிருந் தார்கள். கம்யூனிஸ்டு கைதிகள் அனைவரையும் ‘ஒரே பிளாக்கில் வைக்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. அதற்காக நீண்டகாலம், தொடர் போராட்டங்களை சிறைக்குள் நடத்திக்கொண்டிருந்தார்கள். பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னர் இவர்களை ஒரே பிளாக்கிற்கு மாற்றுவது என்று சிறை அதிகாரிகள் முடிவுக்கு வந்தார்கள். அவர்களுக்கு ஒரு பகுதியும் ஒதுக்கித்தரப்படுகிறது. ஆனால் அந்தப் பகுதி, பிரச்சினைக்குரிய பகுதியாக அறியப்படுகிறது. யாருமே அங்கு சென்றுவர அச்சப்படுகிறார்கள்.

நள்ளிரவு நேரத்தில் பாதுகாப்பிற்காக ரோந்துவரும் வார்டர்களும் கன்விக்ட் வார்டர்களும் இந்தப் பகுதியில் நுழைந்தவுடன் தங்கள் கையிலுள்ள விசிலை வேகமாக ஊதுகிறார்கள். எதற்கோ பயந்து, வேகமாகவும் நடக்கத் தொடங்கிவிடுவார்கள். இதற்கான காரணங்களில் பல்வேறு தகவல்கள் அடங்கியிருக்கின்றன. இதுபற்றிய பல்வேறு கதைகளும் சிறையெங்கும் உலவிக்கொண்டிருந்தது. இதை அடிப்படையாகக்கொண்டு, சிறையில் சிலர் தங்கள் கதை சொல்லும் கற்பனைத்திறனை வெகுவாக வளர்த்துக்கொண்டார்கள். கம்யூனிஸ்டு களுக்கு சிறைச்சாலையின், இந்த 9ஆவது பிளாக்  ஒதுக்கப்பட்டிருந்தது.

மனிதரிடம் அமைந்த மன பயத்தை யாராலும் அளவிட்டுச் சொல்ல முடியாது. இந்த பயத்திற்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும் பேய்களின் மீது, மனிதருக்கு உள்ள பயம் ஏதோ ஒரு விதத்தில் கூடுலாக இருக்கத்தான் செய்கிறது. புளியமரத்தில் தூக்கிலிட்டுக்கொண்டு, இறந்தவர்கள் பற்றிய எத்தனையோ கதைகளை, நாமறிவோம். அவர்களின் நிறைவேறாத ஆசைகளால், இறந்த பின்னர் அவர்கள் உருவாக்கும் அச்சம் தரும் நடவடிக்கைகள் பற்றி, எத்தனையோ கதைகள் உண்டு. புளிய மரத்திற்கே, இத்தனை கதைகள் உண்டென்றால். சிறைச் சாலைகளின் தூக்குமரத்திற்கு எத்தனை கதைகள் இருந்திருக்க வேண்டும். 9ஆவது பிளாக் தூக்குமேடைக்கு அருகாமை யில் இருந்தது.

Advertisment

இதையொட்டி  சில செல்கள் வரிசையாக இருந்தன. இவை தூக்குத் தண்டனை கைதிகளுக் கானவை. இதில் முக்கியமான கேள்வி ஒன்றும் இருந்தது. தூக்குத்தண்டணை கைதிகளை ஒட்டிய பிளாக் கம்யூனிஸ்டுகளுக்கு ஏன் வழங்கப்பட வேண்டும்? சிறை நிர்வாகத்திற்கு சில நோக்கங்கள் இருந்திருக்கிறது. சிறையிலிருந்த கம்யூனிஸ்டுகளைப் பற்றி அவர்களுக்கு ஒருவித மான எச்சரிக்கை உணர்வு இருந்தது. தண்டனைக் கைதிகளின் பிளாக்குக்கு பக்கத்தில், கம்யூனிஸ்டு களுக்கு இடம் ஒதுக்கித் தரப்படுமானால், இவர்கள் மற்ற கைதிகளையும் கலக்காரர்களாக மாற்றி விடுவார்கள் என்ற அச்சம் சிறை நிர்வாகத்திற்கு இருந்தது. இதனால் தூக்குத் தண்டனை கைதிகளுக்கு பக்கத்தில் அமைந்த 9ஆவது பிளாக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இதில் மற்றொரு வேடிக்கையும் இருந்தது. இந்த இடம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதைப் பற்றி கம்யூனிஸ்டுகளுக்கு எந்தக் குறையும் இல்லை. அவர்களுக்கு பேய் பிசாசு பற்றி எந்த நம்பிக்கையும் இல்லை என்பது உண்மை என்ற போதிலும், தலைமறைவு வாழ்க்கையில் மக்களிடமிருந்த பேய் பிசாசு பற்றிய நம்பிக்கை இவர்களுக்கு வசதியாக அமைந்துவிட்டது. சுடுகாட்டுப் பகுதிகளையும், பேய்கள் நடமாடுவதாக நம்பப்படும் இடங்களையும் தங்கள் மறைவிடமாக இவர்கள் மாற்றிக் கொண்டார்கள். இதனால் தூக்குமேடை பற்றிய எந்த பயமும் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை.  9ஆவது பிளாக்கை மனமுவந்து ஏற்றுக்கொண் டார்கள். இந்த இடம் தோழர் நல்லகண்ணுவின் சில பணிகளுக்கு வசதியாகவும் இருந்தது.

பிளாக் நம்பர் 9, பகல் நேரங்களில் தூக்குத் தண்டனை கைதிகளை சந்திக்கும் வாய்ப்பை இவருக்கு உருவாக்கித் தந்திருந்தது. இதை ஒரு முழு நேரப் பணியாகவே செய்து வந்திருக்கிறார். இவர்களில் பெரும்பாலோர் கொலை செய்துவிட்டு வந்தவர்கள் என்கிறார். கோபத்தில் ஆரம்பத்தில், எதையோ நினைத்து எதையோ செய்துவிடு கிறார்கள். அதன்பின்னர் மனதிற்குள் ஏற்படும் குற்றஉணர்ச்சி அவர்களுக்குப் பெரும்போராட்ட மாகவே அமைந்துவிடுகிறது. இந்த அனுபவங்கள் இவரைர வாழ்க்கையின் பக்குவ நிலைக்கு அழைத்துச் செல்லுகிறது. மரணம் என்ற ஒன்று மனிதருக்குள் எத்தனை வகையான மனநிலைகளை உருவாக்கி வைத்திருக்கிறது என்பதை இவரால் உணர்ந்துகொள்ள முடிகிறது. தோழர் நல்லகண்ணு அவர்களிடம் பிற்காலத்தில் அமைந்த நிதானம், பொறுமை போன்றவற்றிற்கு அந்த அனுபவங்கள் காரணமாக இருக்குமோ என்பதை இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன்.

ஒருவருக்கு தூக்கிலிடும் நாள் குறித்த பின், அந்தக் கைதிகளை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதில் ஒருவர் எழுப்பிய கேள்வியை இவர் பதிவு செய் துள்ளார். நீதிசார் உலகம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்த இன்றைய உலகம், இந்த கேள்விக்கான பதிலை இன்றுவரை சொல்ல முடியாமல் மூச்சு திணறிக்கொண்டிருப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒரு கைதியை சந்திக்கிறார். அவர் எழுப்பும் கேள்வி இரவு, பகல் இவரை தூங்கவிடாமல் தொந்தரவு செய்துகொண்டேயிருக்கிறது.

தூக்குத் தண்டனை கைதியின் கேள்வி இதுதான்...

"அய்யா நாங்கள்தான் படிக்காதவர்கள். முட்டாள்கள். கொலை செய்துவிட்டோம். ஆனால் அரசாங்கத்தை அப்படி கூற முடியாது. அது அறிவாளிகளால் நடத்தப்படுகிறது. எங்களை தூக்கிலே போடுவதன் மூலம் அரசாங்கம் மற்றொரு கொலை செய்கிறது. இந்த அறிவாளிகளுக்கு தெரியாதா? என்று அவரிடம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இவ்வாறு எத்தனையோ அனுபவங்கள் இவரை வந்தடைகின்றன. இதில் வித்தியாசமான மற்றொன் றையும் நல்லகண்ணு சந்திக்கிறார். அது நம்மை வெகுவாக மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது.  

தூக்குத் தண்டனைக் கைதிகளை, அவர்கள் தூக்கில் போடுவதற்கு முதல் நாள் மாலையே எப்படியும் சந்தித்து விடுவேன். அவர்களிடம் அமைந்த அத்தனை உணர்ச்சிகளையும் என்னால் அறிந்துகொள்ள முடியும். இவர்களில் 21 பேரிடம் வித்தியாசமான, ஆனால் ஒரே உணர்வை வெளிப்படுத்தும் மனநிலை இருப்பதைக் கவனித்தேன். அதில் ஒருவர் மட்டும் மாறுபட்டிருந்தார். அவரிடம் பயம் என்பது சிறிதுகூட இல்லை. அவரது நடவடிக்கை, ஒரு கடமையைச் செய்து விட்டு, வேறொரு கடமையை செய்ய பயணத்தைத் தொடர் வதைப் போல இருந்தது. அந்த சூழலில், அவரது அந்த மனநிலை, என்னை எதையெல்லாமோ சிந்திக்க வைத்துவிட்டது என்கிறார் நல்லகண்ணு.

(தொடரும்)