(66) குதிராம்போஸ்
பகத்சிங், தூக்கிலிடப்பட்ட செய்திகள் அனைத்தும், நாடறிந்த ஒன்று. ஆனாலும் அதை மறக்க முடிவதில்லை. அதன் உள்ளொளி பல லட்சம் இளைஞர்கள் நேர்மையோடும், லட்சிய உணர்வோடும் வாழ்வதற்கு இன்றுவரை வழிகாட்டிக்கொண்டிருக்கிறது. அதை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த தருணத்தில் மதுரை சிறையில் தூக்கிலிடப்பட்ட தோழர் பாலுவின் வாழ்க்கை யோடு, தோழர் நல்லகண்ணு இணைத்துக் கூறிய அனைத்தும் ஞாபகத்திற்கு வருகிறது. "தியாகங் களிலேயே உச்சபட்சமானது, லட்சியத்திற்காக மரண தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொள்வதுதான்' என்று நல்லகண்ணு அடிக்கடி கூறுவதை, இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்.
மீண்டும் பகத்சிங் ஞாபகங்கள். இந்திய விடுதலைப் போராட்ட வீரரான லாலா லஜபதி ராய் பிரிட்டிஷ் காவல்துறையால் கொல்லப்பட் டார். அதற்கு தண்டனை தருவோம் என்று பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு என்ற மூன்று வீரர்கள் கிளர்ந்தெழுந் தனர். மூவரும் ஆங்கி லேயக் காவல்துறை அதி காரி ஜெ. பி. சாண்டர்சைக் கொன்றனர். காவல் துறை அதிகாரியைக் கொன்ற வழக்கில், பிரிட்டிஷ் இந் திய அரசின் நீதிமன்றம், ராஜகுரு, பகத்சிங் சுக்தேவ் ஆகிய மூவருக்கும் தூக்குத்தண்டனை விதித்திருந்தது. இதுமட்டு மல்லாது, பகத்சிங் இவரது உற்ற தோழர் பட்டுகோஷ் தத் ஆகிய இருவரும் பாராளு மன்றத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கும் இருந்தது.
ஆனாலும் சாண்டர்ஸ் வழக்குக்காக இந்த மூவரும் தூக்கிலிடப்பட்டனர். தீர்ப்பின்படி, 1931ஆம் ஆண்டு, மார்ச் 23 அன்று இந்திய -பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனிவாலா கிராமத்தில் இவர்களது தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிட்டால், மக்கள் பெருங்கூட்டத்தால் சிறை உடைக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக முதல்நாள் இரவே, உசைனிவாலாவில் இவர் களது தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதைப்போலவே, விடுதலைப் போரில் தூக்குத்தண்டனையைப் பெற்றவர்களை நினைக் கும் போதெல்லாம், மற்றொருவரின் மாபெரும் வீரச்செயல் ஞாபகத்திற்கு வருகிறது.
இவர் பகத்சிங்குக்கு முன்னரே துக்கிலிடப் பட்டவர். பகத்சிங் 23 வயதில் தூக்கிலிடப் பட்டார். இவர் 18 வயதில் தூக்கிலிடப்பட்டவர். பெயர் குதிராம் போஸ். வங்க மண்ணில் பிறந்தவர். வங்காளத்தின் மிதுனப்பூர் மாவட்டத்தில், ஹபிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது வாழ்க்கை அன்றைய ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கொடுமைகளை எதிர்த்து இளைஞர்கள் எவ்வாறு வீரதீரச் செயல்களில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரத்தை வழங்குகிறது. இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர் இவர்.
மிதினாப்பூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதல் கிடைத்தது. பல புரட்சியாளர்களின் தொடர்பும் கிடைத்தது. தனது பதினாறாவது வயதில் ‘யுகந்தர்’ இயக்கத்தில் இணைந்தார். ஆங்கிலேய ஆட்சியை மறைமுகமாக எதிர்த்துப் போராடும் இந்த இயக்கத்தில், மூன்றாண்டுகள் தீவிரமாகச் செயல்பட்டார்.
ஆண்டு 1905. வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடே கொந்தளித்துக்கொண்டிருந்தது. ‘அனு ஷிலன் சமிதி’ என்னும் தலைமறைவு இயக்கம் வேகமாக வங்கத்தில் வளரத் தொடங்கியிருந்தது. ‘யுகந்தர்’ இயக்கத்திற்கும் இதற்கும் ஆழமான தொடர்பு இருந்தது. யுகந்தர் அமைப்பு அதே பெயரில் ஒரு செய்தி பத்திரிகையையும் நடத்திக் கொண்டிருந்தது. ஆட்சியாளர்கள் மீது பரவலான விமர்சனங்களை, முன்வைத்து வந்தது. அப் பொழுது அது இளைஞர்களிடம் செல்வாக்குப் பெற்று வளர்ந்துகொண்டிருந்தது,
அலிப்பூர் மாகாண நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பிலிருந்தார் நீதிபதி கிங்ஸ்ஃபோர்டு. சுதந்திரப் போராட் டத்தையும் அதன் உயர் கருத்துக்களையும் பிரச்சாரம் செய்த யுகந்தர் பத்திரிகையையும் வெளிப்படையாகவே விமர்சனம் செய்துவந்தார். யுகந்தர் பத்திரிகையை தடை செய்யும் முயற்சி யிலிருந்தார். இதில் மாணவன் குதிராம் பெரும் கோபம் கொண்டான். எப்பொழுதுமே ஒரு தடித்த புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டேயிருந்தான். அதில் கைத்துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த துப்பாக்கியும் இவனைப் போல வே அந்த நீதிபதியை சுட்டுத் தள்ளுவதற்கு நேரம் பார்த்துக் காத்திருந்தது. ஆனால் சரியான சந்தர்ப்பம் எதுவுமே கிடைக் காமல் போனது. இதற்கு பின்னர்தான் அடுத்த திட்டத் தை இருவர் தயாரித்தனர்.
குதிராம்போஸ் நண்பனின் பெயர் பிரஃபுல்லா சாக்கி. இவன் குதிராமைவிட ஒரு வயது மூத்த வன். இவர்கள் இருவரும் தங்கள் ரகசியத் திட்டத்தை நிறைவேற்ற பெயரை மாற்றிக் கொண் டார்கள். அவர்கள் முசாபர் பூருக்குப் பயணம் செய்தனர். அங்கு கிங்ஸ்ஃபோர்டு மாவட்ட நீதிபதியாக மாற்றப்பட் டிருந்தார்.
அன்றைய புரட்சிகர இளைஞர்கள் ஒரு செயல் தந்திரம் ஒன்றைக் கையில் வைத்திருந்தனர். பிரிட்டிஷ் அதிகாரிகளை குண்டுகளை வீசி, அடிக்கடி பயமுறுத்திக் கொண்டிருக்கும் நடவடிக்கை அது. இதனால் ஆட்சியாளர்களின் நடவடிக்கையில் அச்சத் தின் காரணமாக மாற்றம் ஏற்படும் என்று நம்பினார்கள். அன்று மாலை, கிங்ஸ்ஃபோர்டும் அவரது மனைவியும் பிரிட்டிஷ் எழுத்தாளரும் வழக்கறிஞருமான பிரிங்கிள் கென்னடியின் குடும்பத்தினருடன் ஒரு மகிழ்ச்சி சந்திப்பில் இருந்தனர்.
பிரிங்கிள் கென்னடியும், நீதிபதி கிங்ஸ்ஃபோர்டும் காரில் புறப்பட்டபோது, வாசலில் குதிராமும் பிரஃபுல்லாவும் தயார் நிலையில் இருந்தார்கள். காரின் மீது குண்டுகளை வீசினார்கள். பலத்த வெடிச்சத்தம் கேட்டது. கென்னடியின் மனைவியும் மகளும் இறந்து போயினர். கிங்ஸ்ஃபோர்டும் கென்னடியும் உயிர் பிழைத்துக் கொண்டார்கள்.
குண்டுவீசித் தப்பியவர்களைப் பிடிக்க அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. புரட்சியாளர்கள் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில், சமஸ்திப்பூரில் போலீஸ்காரர்களிடம் பிடிபடும் தருணத்தில் பிரபுல்ல சாஹி, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.
குதிராம் போஸ் கதை வேறாக இருந்தது. 25 மைல்கள் நடந்து சென்ற பிறகு, வாணி என்னும் இடத்திற்கு போய்ச் சேர்ந்தான் அப்பொழுது அவன் களைப்பாகவும், சோர்வாக வும் இருந்தான். ஒரு சாதாரண தேநீர்க்கடையில், குடிக்க தண்ணீர் கேட்டான். அலங்கோலமான அவனது தோற்றம், சுற்றியிருந்தவர்களுக்கு இவன் யார் என்ற கேள்வியை எழுப்பியது. போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரண்டு கான்ஸ்டபிள்கள் வந்து சேர்ந்தனர். சோதனையிட்டபோது அவனிடம் 37 தோட்டாக்கள், ரூ.30 ரொக்கம், ஒரு ரயில்வே வரைபடம், ரயில் கால அட்டவணையின் ஒரு பக்கம் ஆகியவை இருந்தன. பல காவல் நிலையங்களை குதிராமின் குழு, குண்டுகளால் தாக்கியது என்றும், நாட்டின் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடத்தியது எனவும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் முக்கிய மான தாகும். ‘அப்பாவி இளைஞர்களுக்கு கொடும் தண்டனை யை, வழங்கி இந்த மண்ணின் மைந்தர்களுக்கு கொடுமை யைச் செய்துகொண்டிருக்கும் நீதிபதி கிங்ஸ்போர்டைக் கொல்ல குண்டு வீசியதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இதில் ஒரு வருத்தம் உண்டு. இதில் எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாத பிரிங்கிள் கென்னடியின் மகளும், மனைவியும் இறந்துபோனது. புரட்சிக்காரர்களின் நடவடிக்கையில் எச்சரிக்கை வேண்டும். இது, பெரும் வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
குதிராம்போஸ், 1908-ஆம் ஆண்டு ஆகஸ்டு 11ஆம் தேதி முசாபர்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இதைப் போலவே மற்றொரு மாவீரனும் மதுரை சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
(தொடரும்)