மதன்லால் திங்கரா
இதயக் கனவுகளை ஈடேற்றும் சத்தியம்’ என்ற வாசகம், மனதுக்குள் புயலின் வேகத்தை அடிக்கடி உருவாக்கி விடுகிறது. இந்த சொல்லின் உணர்வுப்பூர்வமான ஆழத்தை அடிக்கடி தோழர் நல்லகண்ணு என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்த உணர்வுகள் அனைத்தும் தூக்குக் கயிற்றில் தொங்கியபோதும் செங்கொடி வாழ்க என்றவர்களின் கடைசிக்கட்ட காற்றில் கலந்த உணர்வாக நமக்கு கிடைக்கிறது.
தூக்குக் கயிற்றில் பிறந்த தியாகம்தான், சிறையிலிருந்த தோழர்களை வழிநடத்தி அவர்களின் உணர்வுப்பூர்வமான செயல்பாட்டிற்கான பாதையை திறந்து வைத்திருந்தது. வேறு வகையில் சொன்னால், பாட்டாளி வர்க்கம் தனக்கான உயிர்ப்பை எங்கிருந்து பெறுகிறது என்றால், தியாகத்திலிருந்துதான் பெற்றுக் கொள்கிறது. தூக்கு மேடை வரலாறு, ஒவ்வொரு சிறைச்சாலையிலும் உன்னத காவியமாக உலா வந்துகொண்டேயிருந்தது. ஒருவிதத்தில் பார்த்தால், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு அதன் தூக்கு மேடைகளில்தான் இருந்தது.
மரண தண்டனை என்பதை வெகுமக்கள் மனநிலையிலிருந்து யோசித்துப் பார்க்கிறேன். மரணம் எப்பொழுது எப்படி நிகழப்போகிறது என்பதை நாம் அறியமாட்டோம். தங்கள் மரணம் எப்பொழுது எப்படி நிகழப்போகிறது என்பதை தூக்குத்தண்டனை கைதிகள் அறிவார்கள். தனது மரணத்தின் தேதி நிர்ணயிக்கப்பட்ட பின்னர், ஒரு கைதியின் மனநிலை என்ன என்பதை நாம் அறியமாட்டோம். அதை அறிந்துகொண்டால் அது உயர்ஞானத்தை விட உயர்வானது, அனைத்து தியாகங்களுக்கும் அதுவே பிறப்பிடமாக அமைந்துள்ளது.
அந்தக் காலத்தை மாவீரர்களின் காலம் என்று அழைத்தனர். பகத்சிங் உள்ளிட்ட மாவீரர்கள் இந்த காலத்தில்தான் தோன்றினர். இவர்கள் அனைவருமே கம்யூனிஸ்டுகளாகவும் இருந்தனர். சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகள் பலவற்றை தோழர் நல்லகண்ணு கூறிய பின்னர் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அதில் புகழ்பெற்று இன்றுவரை வாழ்ந்துவருவது மதன்லால் திங்கரா கதை. லண்டன் மாநகரில், உயரதிகாரி ஒருவரை அவன் சுட்டுக் கொன்றான். அப்பொழுது அவனுக்கு வயது 22.
இந்தியாவில் பணியாற்றிய அதிகாரிகளில் பலர், இந்தியர்களை மிருகங்களைவிட கேவலமாக நினைத்துக் கொண்டனர். இவர்கள் தங்களின் அடிமைகள். இவர்களை அடிப்பதற்கு மட்டுமல்ல, சுட்டுக் கொல்வதற்கும் தங்களுக்கு உரிமை உண்டு என்று நினைத்துக் கொண்டார்கள். இந்தியாவின் இளைய தலைமுறையினருக்கு பெரும்கோபத்தை இது உருவாக்கியிருந்தது.
மதன்லால், லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரியில் 1906 ஆம் ஆண்டில், இயந்திரப் பொறியியல் படிக்க சென்ற மாணவன். இளம் வயதில் சிறந்த மாணவன் என்ற பெயரைப் பெற்றி ருந்தான். அந்த திறமை, இங்கிலாந் துக்கு அனுப்பிவைத் திருந்தது. படிக்கச் சென்றாலும் அவ னது எண்ணம் முழுவதும் இந்திய விடுதலையிலேயே மையம் கொண்டி ருந்தது. அப்பொ ழுது லண்டன் நகரில் இந்தியாவி லிருந்து கல்வி பயிலுவதற்காக செல்லும் மாணவர்களுக்கு தங்கும் இடம் தந்து உதவுவதில் இந்தியா ஹவுஸுக்கு ஒரு முக்கிய பங்கிருந்தது. இங்கு மாணவனாக இருந்தபோது மாகத்மா காந்தியடிகளும் சிலகாலம் தங்கியிருந்திருக்கிறார். அதைப்போல தீவிரவாத செயல்பாடுகளைக் கொண்ட வேறு சிலரும் இங்கே தங்கியிருந்தனர். "அபினவ் பாரத் சன்ஸ்தா' என்று அழைக்கப்படும் புரட்சிகர ரகசிய சங்கத்தில், இதன் பின்னர் தன்னை இணைத்துக் கொண்டான்.
இதன்பின்னர் இவனுக்குள் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. துப்பாக்கி சுட கற்றுக்கொண்டான். தாய்நாட்டில், தன் மக்களைக் கொன்ற ஆங்கில அதிகாரிகளின் பட்டியலை தயாரித்திருந்தான். அதில் வெளியுறவுத்துறை செயலாளர் லார்ட் மோர்லியின் அரசியல் உதவியாளர் சர் கர்சன் வைலியின் பெயரும் இருந்தது.
1909 ஆண்டு, ஜூலை 1, மாலை, லண்டனில் இம்பீரியல் ஸ்டடீஸ் நிறுவனத்தின் ஜஹாங்கிர் இல்லத் தில் ஆடம்பரமான ஒரு விழா நடைபெற்றது. இந்திய தேசிய சங்கத்தின் ஆண்டு தின விழாவில் கலந்துகொள்ள ஏராளமான இந்தியர்களும், ஆங்கிலேயர்களும் கூடியிருந்தனர். இசை அமர்வு முடிந்த சிறிது நேரத்திலேயே சர் கர்சன் வைலி, தனது மனைவியுடன் மண்டபத்திற்குள் நுழைந்தார். அங்கு காத்திருந்த மதன்லால் திங்கரா மிகவும் நிதானமாக ஐந்துமுறை சுட்டான். வைலி ஒரு அலறல் சத்தமும் இல்லாமல் இறந்துபோனார். இவரைக் காப்பாற்ற முயன்ற பார்சி மருத்துவரான கோவாஸ்ஜி லால்காகா, மதன்லாலின் ஆறாவது குண்டுக்கு பலியானார். அதை லால்காகா தன்னைப் பிடிக்கவந்தார். தற்காப்புக்காக சுட்டேன் என்றான். அவரைக் கொல்லும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அது தற்செயலானது என்றும் மதன்லால் நீதிமன்றத்தில் பின்னர் கூறினான்.
மதன்லால் தப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தானே முன்வந்து, கைது செய்யும்படி காவல்துறையைக் கேட்டுக்கொண்டான். எந்த பயத்தையோ அல்லது பதட்டத்தின் எந்த அறிகுறியையோ அவன் காட்டவில்லை. கூட்டத்திலிருந்த ஒருவர் "கொலைகாரன்' என்று அழைத்தபோது, மதன்லால் அதை உடனே ஆட்சேபித்தான். "தாய்நாட்டை, அந்நிய நுகத்தடியிலிருந்து விடுவிப்பதற்காக பாடுபடும் ஒரு தேசபக்தன் இதைத்தான் செய்ய முடியும்' என்று இதற்குப் பதிலளித்தான்.
மதன்லால், தான் தயாரித்த உரையை வெளியே எடுத்து உரத்த குரலில் தெளிவாக நீதிமன்றத்தில் வாசித்தான்.
"நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள எதையும் இங்கு சொல்லப் போவதில்லை. நான் செய்த செயல் நியாயமானது என்பதை சொல்லவே விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை, எந்த ஆங்கில நீதிமன்றத்திற்கும் என்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும் தார்மீகம் இல்லை. என்னை சிறையில் அடைப்பதோ, எனக்கு எந்தவிதமான தண்டனை அளிப்பதோ அநீதியானது. இதற்காக தாங்கள் எடுத்துக் கொண்ட அதிகாரத்தை நான் நிராகரிக்கிறேன். வெளிநாட்டு துப்பாக்கிகளால் அடக்கப்பட்ட ஒரு நாடு என் நாடு. துப்பாக்கி எனக்கு மறுக்கப்பட்ட ஒன்று. எனக்கான துப்பாக்கியை நானே தயாரித்துக்கொண்டேன். நான் இறப்பதன் மூலம் எவ்வாறு சுதந்திரப் போராட்டத்தை நடத்துவது என்பதை நான் இங்கு புரிந்துகொண்டேன். எனது ஒரே கேள்வி இதுதான்... பிரிட்டன் தேசத்தை ஜெர்மானியர்கள் ஆக்கிரமித்தால், எந்தவொரு ஆங்கிலேயரும் அவர்களை எதிர்த்துப் போராடினால், அதை தவறு என்று சொல்லமாட்டார்கள். தேசபக்தி என்பார்கள். எங்கள் நாட்டை ஆக்கிரமித்த ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினால் அது மட்டும் எப்படி தேசபக்தி இல்லாமல் போய்விடும்.
கடந்த 50 ஆண்டுகளில் என் நாட்டு மக்கள் எட்டு மில்லியன் பேரை கொலை செய்ததற்கு ஆங்கிலேயர்கள் பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், என் நாட்டிலிருந்து 100 மில்லியன் பவுண்டுகள் சுரண்டி எடுத்து வரப்படுகிறது. அதற்கும் ஆங்கிலேயர் பொறுப்பேற்க வேண்டும். ஆயிரக்கணக்கான என் நாட்டு மக்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டதற்கும், நாடு கடத்தப்பட்டதற்கும் யார் பொறுப்பு? -இவை அனைத்தும் அவன் எழுதி வாசித்த உரையில் இருந்தது.
லண்டன் நகரத்தில் அமைந்த பென்டன்வில் சிறையில் 1919ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி, அந்த மாவீரன் தூக்கிலிடப்பட்டான்.
இதைப்போன்ற மற்றொரு மாவீரன் கதையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
(தொடரும்)