(64) உண்ணாவிரதம் நிறைவு!

சியல் உலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தின் வலிமையை நன்கறிந்தவர் பாலன். சுதந்திரப் போராட்டத்தில், சிறைச் சாலைகளில் கம்யூனிஸ்டுகளின் உண்ணாவிரதப் போராட்டம் மிகுந்த தீவிரத்துடன் இருந்தது. காந்தியடிகளின் உண்ணாவிரதம் அனை வருக்கும் தெரிந்த அளவில் இது தெரியவில்லை என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது. சிறையிலிருந்த கம்யூனிஸ்டுகள் உண்ணாவிரதப் போராட்டங்களின் மூலம், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு பெரும் அச்சத்தைக் கொடுத்துவந்தனர்.

Advertisment

தோழர் நல்லகண்ணு கூறிய, பல்வேறு உண்ணாவிரத அனுபவங்கள் நினைவுக்கு வருகிறது. உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு சிறைச்சாலையில் பல வழிமுறைகளை, சிறை நிர்வாகம் பின்பற்றும் என்கிறார். சிறையில் பட்டினியோடு யாரும் ‘லாக்கப்பிற்கு செல்லக்கூடாது என்கிறது சிறைச்சாலையின் சட்டம். அதை நிறைவேற்ற முரட்டுத்தனமான சிறைக்காவலர்களும், கன்விக்டு வார்டர்களும்  பயன்படுத்தப்படுவார்கள். தோழர் நல்லகண்ணு கூறியவை அனைத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். இது அவருடைய தனிப்பட்ட அனுபவமாகவும் கூறியிருக்கிறார். கை, கால்களை முரடர்கள் அழுத்திப் பிடிக்க, ஒருவர் வாயை இறுக்கி மூட, ஒரு டியூப் மூலம் மூக்கின் வழியாக பால் ஊற்றுவார்கள். இது ஐந்துபேருக்கும் கைதிக்கும் இடையில் நடக்கும் போர்க்களமாகவே மாறிவிடும். இதில் ஊற்றிய பால், மூச்சுக்குழல் ஏறி இறந்து போனவர்களும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

அந்தக் காலத்தில் கட்சி, கல்வியைக் கற்பிப்பதைப்போல, உண்ணாவிரத போராட்டங்களும், கற்பிக்கப் பட்டிருக்கிறது. உண்ணா விரதத்தின் பல நிலைகளில், எப்படி தாக்குப்பிடித்து, மன தைரியத்தோடு எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பவை இங்கு சொல்லித்தரப் பட்டிருக்கிறது, இந்திய உண்ணா விரதப் போராட்டத்தின் முன் னோடியாக ஒருவரை இவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர் மாவீரன் பகத்சிங்கின் தோழன். பெயர் சஜிந்திரநாத் தாஸ். 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்து போனார். . லாகூர் சிறைச் சாலையில் அவரது மரணம் நிகழ்ந்தது. இவர்தான் சிறைச் சாலையின் உண்ணாவிரதப் போராட்டக்காரர்களுக்கு ஒரு மானசீகமான குரு. இது பற்றிய பல்வேறு விபரங்களை தோழர் நல்லகண்ணு கூறியிருக்கிறார்.

பாலன் தனது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இவரை முன் னோடியாகக் கொண்டிருந்தாலும், அவர் ஐரோப்பிய சிறைச்சாலைப் போராட்டங்களையும் மிக நன்றாகவே அறிந்திருந்தார். இவரது ஆங்கில வாசிப்பு வேறு யாருக்குமே அமையவில்லை. சிறைச்சாலைப் போராட்டங்கள் ஒவ்வொன்றும் இவருக்கு தலைகீழ் பாடம். இவரது அறிவையும், உறுதியையும் பார்த்த சிறை அதிகாரிகள் இவர் மீது ஒருவிதமான பிரமிப்பைக் கொண் டிருந்தனர். அதில் சில அதிகாரிகள் ஆழ்ந்த நட்பையும் பெற்றிருந்தனர். ஆனாலும் இந்தமுறை உண்ணா விரதப் போராட்டத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதம் ஏமாற்று வேலை என்று எண்ணினார். இது இவரது கோபத்தை பலமடங்கு கூட்டிக்கொண்டேயிருந்தது. 

Advertisment

இதன் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால்தான், அதன் உள் நிலவரத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதன் உள் விபரங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு முடிச்சு இருந்தது. இந்தப் பிரச்சனையை மூன்று நிலைகளில் யோசித்துப் பார்ப்பது அவசியமானதாகும். ஒன்று மாநில அரசு, மிக விரைவாக உண்ணா விரதப் போராட்டத்தை முடித்து வைக்கவேண்டும் என்பதில் தனித்திட்டம் வகுத்திருந்தது, மதுரை சிறையில் தொடங்கிய உண்ணாவிரதம், தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை உருவாக்கிவிட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பாலனை நாக்பூருக்கு மர்மமான முறையில் அனுப்பி வைத்துவிட்டது அரசாங்கம்.

இந்தப் பிரச்சனையின் இரண்டாவது முடிச்சு, கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்தது. அந்த நேரத்தில் முதல் பொதுத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் மூலம், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக, தேர்வு பெற்றுவிட்டது. மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு பலமடங்கு பெருகத் தொடங்கியிருந்தது. இந்த நிலையில் கட்சியின் முக்கியத் தலைவர்களும், கணிசமான முன்னணித் தோழர்களும் சிறையிலிருந்தார்கள்.

அதே நேரத்தில் ஆயுதப் புரட்சியை கைவிட்டு ஜனநாயக அடிப்படையில் அரசியல் செயல் பாடுகளை தீவிரப்படுத்துவது என்று முடிவெடுத் திருந்தது. இந்த தருணத்தில், அதாவது 1953 ஆம் ஆண்டில், கட்சியின் 3ஆவது அகில இந்திய மாநாட்டை, மதுரையில் நடத்துவது என்றும் முடிவு செய்திருந்தது. இந்த சூழ்நிலையில் மதுரை சிறைச்சாலைப் போராட்டம் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு முக்கியப் பிரச்சினையாக மாறியிருந்தது. புதிய பிரச்சினைகளும் உண்ணாவிரதப் போராட்டமும் கட்சிக்கு இரண்டுமுனை நெருக்கடிகளைத் தந்தன. பாலதண்டாயுதம் எந்த இடைக்கால சமாதானத் திற்கும் உடன்படமாட்டார் என்ற அவரின் உறுதிப்பாட்டையும் கட்சி நன்கறியும்.

ஆனால், மதுரை சிறைச்சாலையில் உண்ணா விரதமிருந்த தோழர்களுக்கு பாலதண்டாயுதம், உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று கூறி, அவர்களை நம்ப வைத்துவிட்டது சிறை நிர்வாகம். இதன் பின்னர் கட்சியும் சில ஆலோசனைகளை வழங்கியதில், மதுரை சிறையிருந்தவர்கள் 13ஆவது நாளில் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டார்கள்.

இதில் அவிழ்க்கப்பட வேண்டிய மூன்றாவது முடிச்சாக இறுதியில் அமைந்திருந்தது நாக்பூர் சிறைச் சாலை மட்டுமே. சென்னை மாகாண அரசாங்கத்தின் நிர்பந்தங்கள் அனைத்து, நாக்பூர் சிறை நிர்வாகத்திற்கு வந்துசேருகிறது. அவர்கள் தோழர் பாலதண்டாயுதம் எத்தனைதான் கோபத்தால் கொந்தளித்தாலும் இதை செய்யத்தான் வேண்டும் என்ற நிலைக்கு, சிறை நிர்வாகம் வந்துவிட்டது. அதற்காக பல திட்டங்களை யோசித்துப் பார்க்கிறார்கள். ஒன்றும் பயனளிக்கவில்லை. அப்பொழுது தான் அவர்கள் அந்த தந்திரத்தை செயல்படுத்துகிறார்கள். இதுபற்றி, தனது ‘ஆயுள்தண்டனை அனுபவத்தில் இவரே எழுதியிருப்பவை, அவரது கோபத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவி செய்கிறது.

மருத்துவரும், துணை ஜெயிலரும் எனக்கு குளுக்கோஸ் கலந்த தண்ணியைக் கொடுத்து விட்டார்கள் என்கிறார் பாலன்.

"கூப்பிடு அந்த ‘சூப்பிரெண்டை'’ என்றார். வேகமாக படுக்கையிலிருந்து எழுந்து நின்றவுடன் தலை சுற்றியது. மயக்கத்தில் மெத்தையில் விழுந்துவிட்டார். கண் விழித்துப் பார்த்தபோது, சூப்பிரெண்ட் ஜெயிலர், கம்பவுண்டர், நாலு வார்டர்கள் சுற்றிநின்று பரிதாபமாக அவரையே  பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

கண்ணை திறந்து அவர்களைப் பார்த்து "நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்'' என்றார். அவர் குரல் அவர்களுக்கு கேட்டிருக்குமா என்பது தெரியவில்லை. அவர் சொல்வது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. அமைதியான அந்த சூழலை மாற்றியவர் சூப்பிரெண்ட்தான்.

அவர், "அமைதியாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள், என்ன தவறு நடந்தாலும் திருத்திக் கொள்கிறோம்'' என்றார். என்று பாலன் தன் எழுத்துகளில் பதிவு செய்துள்ளார். இதன் பின்னர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்த தோழர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டார்கள் என்பதையும், உரிய வாக்குறுதியை கட்சி பெற்றுவிட்டது என்பதைத் தெரிந்துகொண்ட பின்னர் இவரது 22 நாள் உண்ணாவிரதமும் முடிவடைந்தது. இதை தோழர் நல்லகண்ணு தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சிறை நிகழ்வு என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார்.

(தொடரும்)