ன்றைய மதுரை சிறை நிலவரத்தை தோழர் நல்லகண்ணு விளக்கிச் சொல்கிறார். "எங்களோடு உண்ணாவிரதம் இருந்த தோழர் பாலதண்டாயுதம் எங்களிடமிருந்து பிரிக்கப்பட்டார். அவரை எங்கே அழைத்துச் சென்றார்கள் என்பது யாருக்குமே தெரியவில்லை. பல்வேறு அனுமானங்கள் செய்திகளாக வெளிவந்துகொண்டேயிருந்தன. வேறு சிறைச்சாலைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று சிலர் கூறினர். மற்றொரு தகவல் கைதிகளை மிகவும் கோபப்படுத்தியது. அவரை மர்மமான முறையில் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. எங்களால் சக கைதிகளுக்கு எந்த சமாதானத்தையும் சொல்ல முடியவில்லை' என்கிறார்.

"சிறைச்சாலைக்கும், கட்சித் தலைமையிடமிருந்து சில தகவல் கள் வருகின்றன. அவர்களுக்கும் எந்த தகவலும் தெரியவில்லை என்பதுதான் அந்த தகவல். சட்டமன்றத்தில் பிரச்சனையைக் கிளப்பிப் பார்க்கிறார்கள். சரியான பதில் எதுவும் கிடைக்க வில்லை. தெரிந்தவர்களை வைத்து அரசு அதிகாரிகளிடம் விசாரித் துப் பார்க்கிறார்கள்; விவரங்கள் எதுவுமே கிடைத்தபாடில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றோம்' என்றார் நல்லகண்ணு.

Advertisment

பொதுவாக அந்த காலத்தில், சென்னை மாகாணத்தில் தமிழ்நாடு எல்லைக்கு உட்பட்ட சிறைகளைத் தவிர்த்து, கம்யூனிஸ்டுகளை அலிபுரம், ராஜமுந்திரி, கண்ணூர் ஆகிய சிறை களுக்கு கொண்டுசெல்வார்கள். அங்கெல்லாம் முயன்று விசாரித்தத்தில், அங்கு கொண்டு செல்லவில்லை என்பதும் தெரியவருகிறது. இவ்வாறு குழப்பங்கள் தமிழக எல்லைக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில், தோழர் பாலதண்டாயுதத்தை சுமந்துசென்ற ரயில், தமிழ்நாடு எல்லையைத் தாண்டி வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடர்ந்துகொண்டிருந்தது.

இவர் பயணம் செய்வது இரண்டாம் வகுப்பு பெட்டி. இவரது உடல்நிலையைக் கவனிக்க ஒரு மருத்துவர் அரசாங்கத் தால் நியமிக்கப்பட்டு அவருடன் செல்கிறார். நான்கு காவலர்கள் பாது காப்புக்கு வருகிறார்கள். இவர்கள் யாரும் இவரிடம் பேசுவதை தவிர்க்கிறார்கள். அவர்களிடம் இவராலும் பேசக்கூட முடியாத அள விற்கு உடல் நலிவடைந்துவிட்டது. எங்கே போகிறோம் என்று அவருக்கும் தெரியவில்லை.

kaithi1

Advertisment

ரயில், பிரம்மாண்டமான ரயில் நிலையம் ஒன்றில் வந்து நிற்கிறது. எல்லோரும் பரபரப்படைவதை பாலன் உணர்ந்துகொள்கிறார். இவரை சுமந்து வந்த ஸ்ட்ரெச்சரும் இவருடனேயே கீழே இறக்கப்படுகிறது. இதுவரை இவருடன் பேசாமல் பயணத்தில் வந்த போலீஸ்காரர்கள் வாய் திறந்து பேசுகிறார்கள். அவர்கள் பேசவில்லை... அவர்கள் மனசாட்சி பேசுகிறது. "இவ்வளவு கஷ்டத்தை உங்களுக்கு ஏன் கொடுக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரிவில்லை. எங்களால் உங்களுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை' என்கிறார்கள். அவர்களுடைய கண்கள் கலங்குகின்றது. மருத்துவரும் ஆழ்ந்த சிந்தனையோடு விடைபெற்றுக் கொள்கிறார்.

நாகபுரி என்று அழைக்கப்படும் நாக்பூர் இந்தியாவின் மையப்பகுதி. சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் பகுதியோடு எந்த தொடர்பையும் அது கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் மிக அதிகமான வெயிலையும், மிக அதிகமான குளிரையும் சந்திக்கும் நிலம் இது. தோழர் பாலதண்டாயுதத்தை இங்குள்ள சிறைச்சாலையில் அடைத்து வைக்கவே முதலமைச்சர் ராஜாஜி திட்டம் வைத்திருந்தார். எவரிடமும் வாதம் செய்து, கேட்பவர் எத்தகைய உறுதிகொண்டவராக இருந்தாலும் அவர்களை மாற்றிவிடும் இவரது திறமையை ராஜாஜி நன்கறிவார். கண்காணாத பிரதேசத்தில், மொழியறியாத சிறையில் இவரது வாதத் திறமையால், என்ன செய்துவிட முடியும் என்று கூட ராஜாஜி நினைத்திருக்கலாம், ஆனால் நடந்தது வேறு. நாக்பூர் சிறைச்சாலையில் அவர் இந்தியைக் கற்றுக்கொண்டார். "இந்தியில் அவரது உரையாடலைப் பார்த்து, சிறைச்சாலையின் அதிகாரிகள் அசந்துபோனார்கள்' என்கிறார்கள்.

நாக்பூர் சிறைச்சாலை பற்றிய இவரது குறிப்புகள் மிகவும் அலாதி யானவை. இவர் வைக்கப்பட்ட இடத்தை சிறைக்குள் அமைந்த சிறை என்கிறார். குகை போன்ற அதன் உள்ளமைப்பை விவரித்து எழுதுகிறார். அந்த குளிரையும் வெயிலையும் அவரது மெலிந்து போன உடல் எவ்வாறு எதிர்கொண்டது என்பதையும் எழுதுகிறார். தலைமறைவு வாழ்க்கையில் காடு மேடு என்று திரிந்த இவருக்கு நாக்பூர் சிறைச்சாலை வித்தியாசமான அனுபவத்தை தந்து கொண்டிருந்தது.

நாக்பூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்த காலம்பற்றி பாலன் கூறும் தகவல்கள் அந்த இடத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. உள் அடுக்கு, வெளி அடுக்கு என்று பலகட்ட கண்காணிப்பு இவருக்கு. என்ன நடக்கிறது, இவர் என்ன செய்கிறார் என்பதை கண்காணித்துக்கொண்டேயிருக்க வேண்டும். இதைத்தவிர சிறை மருத்துவர், சூப்பிரெண் டண்ட் உள்ளிட்ட சிறை அதிகாரிகள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை வந்து போனதாக இவர் எழுதியுள்ளார். "இந்தப் பின்னணியில் நான் அரை மயக்கத்திலும், அரை தூக்கத்திலும். இருந்தேன்' என்கிறார். ஒரு கட்டத்தில் மருத்துவரிட மிருந்து ஒரு கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நான் கழிப்பறைக்குச் செல்லக்கூடாது. எனக்கு பணிவிடை செய்ய நான்கு கைதிகள் இருந்தார்கள். என் கண்கள் அசைந்தால் போதும், ஓடி வந்துவிடுவார்கள். எனது காலும், கையும் குளிரில் விறைத்துப் போய்விடாமல் கம்பளியால் அடிக்கடி போர்த்திவிடுவார்கள். இந்தச்சூழல் இன்னமும் எத்தனை நாள் தொடரப்போகிறது என்ற யோசனை அடிக்கடி வந்துகொண்டிருந்ததாக எழுதினார். ஆனால் அதற்கும் ஒரு முடிவு வரத்தான் செய்தது.

பாலனின் மனஉறுதியை யாராலும் அளவிட்டுச் சொல்லிவிட முடியாது. மதுரையிலிருந்து புறப்பட்ட இவர், தமிழ்நாட்டின் எல்லையைக் கடந்து வெகுதொலைவு வந்துவிட்டார். மொழி தெரியாத பிரதேசத்தில் பெயர் தெரியாதவர்களுடன் இப்பொழுது இவரது சிறை வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. இது, இவர் சந்தித்த எல்லையில்லாத் துயரம். ஆனால் இவர் ஒன்றை மட்டும் கைவிடவில்லை. அது மதுரை மத்திய சிறையில் தொடங்கிய உண்ணாவிரதம். நாட்கள் சென்றுகொண்டேயிருக்கின்றன. என்ன நடக்கப்போகிறது என்று யாருக்குமே எதுவுமே தெரியவில்லை.

நாக்பூர் சிறையின் சிறை நிர்வாகத்தின் முழுக்கவன மும் இவர் மீது இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் சிறைசாலைகளில் உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த முதல் இடம் நாக்பூர் என்ற சொல் தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்ற அச்சம் இவர்களுக்கு வந்துவிட்டது. உண்ணாவிரதத்தை நிறுத்த எல்லா வழிமுறைகளையும் பின்பற்றுகிறார்கள். இதில் எந்த பயனும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

ஒரு நிகழ்வு பாலனை வெகுவாகப் பாதித்துவிட்டது. தான் கடைப்பிடித்து வந்த சமரசமற்ற உறுதிப்பாடு தன் கையைவிட்டு நழுவிச் சென்றுவிட்டதா? எச்சரிக்கை இல்லாமல் இருந்துவிட்டோமே என்ற குற்றஉணர்வு வந்துவிட்டது. தனக்கு குடிக்க வைக்கப்பட்டிருந்த குடிநீரை மீண்டும் ஒருமுறை எடுத்து சுவைத்துப் பார்க்கிறார். அவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை உண்மை என்று புரிந்து கொள்கிறார். தனக்கு பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்ட கைதிகளை கோபம் கொண்டு பார்க்கிறார். அவர்களின் முகத்தில் ஒருவிதமான பயம் தெரிந்தது. பொறுப்பான சிறை அதிகாரியை அழைத்து வரவேண்டும் என்பதை கோபத்துடன் செய்கையின் மூலம் உத்தரவிடுகிறார். சிறை அதிகாரியும், இவரை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் இருப்பதைப் பார்த்து இவரது கோபம் பல மடங்கு அதிகரித்துவிட்டது.

(தொடரும்)