கைதி எண் 9658 -சி.மகேந்திரன்

kaithi

 

தோழர் பாலதண்டாயுதம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார். பரபரப்பான 22 நாட்கள். மதுரை சிறையில் இவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய போது இவரோடு உண்ணா விரதத்தைத் தொடங்கியவர்கள் 13 பேர். அதில் தோழர் நல்லகண்ணுவும் ஒருவர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் ராஜாஜியின் நேரடி கவனத்தைப் பெற்றிருந்தது. தோழர் பாலதண்டாயுதத்தை மற்ற உண்ணாவிரதப் போராட்டக்காரர்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தும் திரைமறைவு நாடகம் ஒன்றை அவர் இயக்கிக்கொண்டிருந்தார். இது யாருமே அறிந்திராத திரைமறைவு நிகழ்வு என்கிறார் தோழர் நல்லகண்ணு.

சாகும் வரையில் உண்ணாவிரதம் இருப் போம் என்று இவர்கள் அறிவித்திருந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து பார்ப்பது அவசியமானது. இது பற்றி தோழர் நல்லகண்ணு கூறிய தகவல்கள் எனக்கு பெரிதும் அதிர்ச்சி யைத் தந்தது. அரசியலில் இத்தனை வஞ்சனை இருக்க முடியுமா? என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியது. இதன்பின்னர் இந்த உண்ணா விரதம் பற்றிய எனது சந்தேகங்களை மேலும் பலரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். தனித்தனியாக தகவல்களையும் திரட்டிக் கொண்டேன்.  இது கைதிகளின் தனிப்பட்ட உரிமைப் பிரச்சனையாக எனக்குத் தோன்ற வில்லை. ஆழ்ந்த அரசியல் பிரச்சனையாகத் தோன்றியது. 

கம்யூனிஸ்டுகள் மக்கள் செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளும் புறச்சூழல் இருந்த காலம். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரிதும் ஆபத்து என்று கணக்குப் போட்டிருந்தார் ராஜாஜி. தோழர் நல்லகண்ணு கூறிய தகவல்களில் ஒன்று நம் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கக் கூடியது. தமிழ்நாட்டின் இரண்டு முதலமைச்சர் கள் பாலதண்டாயுதம் சிறையிலிருந்தபோது அவரோடு ஒன்றாக இருந்தவர்கள் என்கிறார். எனக்கு அப்பொழுது அது, நான் அறிந்திராத செய்தியாக இருந்தது. அந்த இருவர் மூதறிஞர் ராஜாஜியும், பெருந்தலைவர் காமராஜரும் என்பதை தெரிந்து கொண்டேன். இவர் அவர்களுடன் சிறைவாசியாக இருந்ததைப் போலவே அவர்கள் இருவரும் முதலமைச்சராக இருந்தபோதும் இவர், சிறைச்சாலையில் கைதியாகவே இருந்திருக்கிறார். இப்படி ஒரு சிறைவாழ்க்கை தமிழ்நாட்டில் யாருக்குமே இருந்திருக்கவில்லை. தோழர் நல்லகண்ணு கூறிய மற்றொரு தகவலும் முக்கியமானது. ராஜாஜி, பல ஆண்டுகளாக பாலதண்டாயுதத் தின் நுட்பமான திறமையை நன்கறிவார். அவரை அரசியல் ரீதியாக தங்களால் சந்திக்க இயலாது என்பதையும் அவர் அறிந்திருந்தார். 

இதை தோழர் நல்லகண்ணுவின் வார்த்தைகள் மேலும் உறுதிசெய்கின்றன. சிறை நிர்வாகத்தையும், அரசாங்கத்தையும் எதிர்த்து இவரிடமிருந்த செயல் திட்டங்களின் சாதுரியம், அவரிடம் நீண்ட காலம் பழகிய எங்களையே மூக்கின் மேல் விரல் வைத்து வியக்க வைத்துவிட்டது என்கிறார். இந்த பெருமைக்கு அவரது தியாகமும் அர்ப் பணிப்பும்தான் காரணம் என்கிறார்.

பிரச்சனை இதுதான். நாடு விடுதலை பெற்ற பின்னர், சிறைச்சாலைகளில் ஒரு புது பிரச்சனை வெடிக்கிறது. அதில் காங்கிரஸ் கட்சியின் பொய்த் தோற்றம் வெளிப்பட்டு விட்டது. அந்த கட்சியின் நீண்டகால கோரிக் கைகளில் ஒன்று, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, அரசியல் காரணங்களுக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது. சுதந்திரத்திற்கு பின்னர்  அதே காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறது. சென்னை மாகாணத்தின் முதல்வர் பொறுப்பை ராஜாஜி ஏற்கிறார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், ஆயுள் தண்டனை குறித்து ஒரு அறிவிப்பையும் வெளியிடுகிறார். இது சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. 

kaithi1

ஆயுள் தண்டனை குறித்து ராஜாஜி அறிவித்த உத்தரவு இதுதான். சிறைச் சாலையிலிருந்த கைதிகள் மூன்று ஆண்டுகளை சிறைத்தண்டனையாக கழித்திருந்தால் ஆயுள் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. இதில் கடைசியாக மற்றொரு வரியும் இருந்தது. இதில், "கம்யூனிஸ்டுகளைத் தவிர' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது மாபெரும் அநீதி என்ற குரல் எழுந்தது. சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளைப் போல சிறைக் கொடுமையை அடைந்தவர்கள் வேறு யாருமே கிடையாது என்பதை அனைவரும் அறிவார்கள். சிறைச்சாலையிலும் வெளி யுலகிலும் கோபம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. தீவிரமான போராட்டம்  ஒன்றை கையிலெடுக்கும் அவசியத்தை இது உருவாக்கியது. பாலதண்டாயுதம் சாகும் வரையிலான போராட்டத்தைத் தொடங்கி விட்டார். 

அந்த 22 நாட்களில், அவர் நிகழ்த்திய கொள்கைப் போராட்டத்தை உலகில் யாராவது நிகழ்த்தியிருக்கக்கூடும். தமிழ்நாட்டில் யாருமே நிகழ்த்தவில்லை என்று என்னால் கூற முடியும். கொள்கைக்காக, தன்னலம் இல்லாத ஒருவர் நடத்தும் வாழ்வா சாவா என்ற போராட்டம் எத்தனை வலிமை கொண்டது என்பதற்கு இதை ஒரு உதாரணமாகக் கூற முடியும். 

மதுரை சிறைச் சாலையில் ஒன்றாக உண்ணாவிரதம் தொடங் கிய 13 கைதிகளிலிருந்து இவர், தனியாகப் பிரிக்கப்படுகிறார். இதை தன் ஆயுள் தண்டனை அனுபவத்தில் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ளார். ஒரு மனிதர் 12 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் அவரது நிலை என்னவாக இருக்கும் என்பதை நாம் நன்றாக அறிவோம். அந்த நிலையை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடிவதில்லை.

மயங்கிய நிலை, ஆனால் நினைவு தவறவில்லை. இதை இவர், தான் எழுதிய நூலில் பதிவு செய்துள்ளார். இன்றும் சிறை இலக்கியங்களில் இதை முதன்மையான நூல் என்று என்னால் கூற முடியும். ஆனாலும் இது ஒரு முற்றுப்பெறாத ஒரு நூல். இந்த நூலை முடிப்பதற்கு முன்னரே விமான விபத்து ஒன்று, தோழர் பாலதண்டாயுதத்தின் வாழ்க்கையை முடித்து வைத்துவிட்டது... அவர் மரணமுற்றார்.

மதுரையில் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம், இங்கிருந்தால் ஆபத்து வரும் என்பதால் அவரை வேறு சிறைக்கு மாற்றுவது என்று முடிவு செய்கிறார்கள். இதற்கேற்ப சிறைக்குள்ளும் வெளியிலும் போராட்டங்கள் தொடங்கிவிட்டது. மிக மிக மர்மமான முறையில் இவர் இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறார். மதுரையிலிருந்து ரயிலில் இரண்டு நாள் பயணம். மயங்கிய நிலையிலிருந்து, இந்த மனப்பதிவுகளை அவர் எழுத்தில் பதிவு செய்கிறார். 

ஒவ்வொன்றும் ஒரு தத்துவப் பார்வையுடன் உணர்ச்சிப்பெருக்கு கொண்டதாக இருக்கிறது. இதிலுள்ள சிறை அதிகாரிகள். காவல்துறை அதிகாரிகள், அடித்தளத் தில் பணியாற்றும் போலீஸ்காரர்கள்.என்று அனைவரின் இயல்புகளையும் வர்க்க அடிப்படையில் அலசி ஆராய்ந் திருக்கிறார். இவரது உறுதிப்பாடு இமயமலை போல உயரமாகவும், பொதிகை மலைபோல உள்வலிமை கொண்டிருப்பதையும் வாசிப்பில் வாசகர்களால் உணர்ந்துகொள்ள முடியும். 

மதுரையிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறார். ஒரு இரவு சென்னை மத்திய சிறையில் கழிக்கிறார். இவரை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு  கொண்டு செல்லாமல், ஆந்திராவை ஒட்டிய நாயுடு பேட்டை ரயில் நிலையம் கொண்டு செல்லுகிறார்கள். இவை எல்லாம் ஏன் நடக்கிறது என்பது தோழர் பாலனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதற்காக இவர்கள் செய்யும் தேவையற்ற செலவையும், நேர விரயத்தையும் யோசிக்கிறார். தன் நிலை மறந்து அரசாங்கத்தின் கோமாளித்தனத்தை நினைத்துக்கொள்கிறது மனம். 

"என்னால் எழுந்து உட்கார முடியவில்லை. நான் தப்பி ஓடிவிடுவேன் என்று பயப்படுகிறார்களா?' அவர் தனக்குள் சிரித்துக் கொள்கிறார். 

(தொடரும்)

nkn050725
இதையும் படியுங்கள்
Subscribe