(61) கள்ள நோட்டு வித்தகன்!
"சிறையில் நாங்கள் அமைதியாகவும் கௌரவத்துடனும் வாழவேண்டுமென்றால், நாங்கள் யார் என்பதைக் காட்ட வேண்டும்'’ என்கிறார் அவர். இதில் ஒருவித ஆணவம் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கக்கூடும் என்று நினைத்து, அடுத்த வரிகளில் மற்றொன்றையும் சொல்லுகிறார். ‘"நாங்கள் யார் தெரியுமா? கம்யூனிஸ்டுகள். சிறைக் கொடுமைகளை எதிர்த்து நின்ற நெடிய தியாகப் பாரம்பரியத்தின் வாரிசுகள். நெஞ்சை நிமிர்த்தி இதை சொல்லிக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? இது தற்புகழ்ச்சி ஆகாது'’ என்று ஒரு தனித்துவமான விளக்கத்தைத் தருகிறார்.
இதைச் சொல்லிய தோழர் பாலதண்டா யுதம், இவர் தமிழகம் நன்கறிந்த தலைவர். அவரைப் பற்றி தோழர் நல்லகண்ணு வைத்திருந்த மதிப்பு அளவற்றது. தலைமறைவுக் காலங்களில் அவரோடு இணைந்து செயலாற்றியிருக்கிறார். ஆனால் சிறைச்சாலையில் அவரது பண்புகளை, மிக அருகில் இருந்து அவரால் அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு மனிதரில் இத்தனை தைரியம் இருக்க முடியுமா? என்று பலநேரங்களில் ஆச்சரியப்பட்டுக்கொள்கிறார். மதுரை சிறையில் பாலதண்டாயுதம் என்னும் பாலனால் நிகழ்த்தப்பட்டவை அவருக்குள் பல்வேறு வெளிச்சத்தைத் தந்தது என்கிறார்.
தோழர் பாலதண்டாயுத்தைப் பற்றி தோழர் நல்லகண்ணுவிடமிருந்து அறிந்து கொண்டதைவிட வேறொரு நூலில் கூடுதலாக அறிந்து கொண்டேன். அந்த நூலை உருவாக்கியவர் சிறந்த கல்வியாளர். பாலதண்டாயுதத்திற்கு பல காலத்திற்குப் பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்யூனிஸ்டு களின் மாணவர் அமைப்பு என்று அறியப்பட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். இன்றும் ஆரவாரம் எதுவுமே இல்லாமல் வாழ்ந்துவரும் ஒரு தேர்ந்த கம்யூனிஸ்டாக அறியப்படும் "மே.து.ரா.' என்று அழைக்கப்படும் மே.து.ராஜ்குமார்தான் அவர்.
இந்த நூல் உருவாக்கம் பற்றி இவர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது, "பல அரிய தகவல்களைத் தருகிறது. பத்தாண்டுகளை சிறையில் கழித்துவிட்டு, விடுதலையானவுடன், தோழர் பாலதண்டாயுதம் "ஆனந்த விகடன்', "சமரன்' ஆகிய ஏடுகளில் எழுதிய ஆயுள் தண்டனை அனுபவங்கள் இங்கு நூலாக உருப்பெறுகிறது' என்றும், "மக்கள் வெளியீடு தரும் முதல் நூலாகவும் இது அமைகிறது' என்றும் அவர் இதில் குறிப்பிடுகிறார். மக்கள் வெளியீடு மே.து.ரா தொடங்கிய பதிப்பகம், பல அரிய நூல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
இந்த நூல் வெளிவர மே.து.ரா எடுத்த தனிப்பட்ட முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. "சமரன்' இதழ் புகழ்மிக்க எழுத்தாளர் வ.விஜயபாஸ்கர் அவர்களால் நடத்தப்பட்டு வந்தது. அந்த இதழில் 1965 மே மாதத்தில் பாலன் எழுதத் தொடங்கியிருக்கிறார். மொத்தம் 14 கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இதை சேகரித்து வைத்திருந்த பலரிடம் தேடிப் பிடித்து அதை தோழர் ராஜ்குமார் பதிப்பிக்காமல் இருந்திருந்தால், தோழர் பாலன் என்னும் பாலதண்டாயுதம் பற்றிய இந்த தகவல்கள் நமக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும் என்பதை இங்கு பதிவு செய்வது என் கடமை.
இந்த நூலில் பாலதண்டாயுதம் எழுதிய ஒவ்வொரு சொல்லும் சிறைப் போராட்டத்தின் சாட்சியமாகவே அமைந்துவிட்டது.
"நான் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற காலத்திலும், சிறையில் தண்டனையை அனு பவித்த காலத்திலும், இன்று விடுதலையாகி வெளியே வந்த தருணத்திலும் என் மனசாட்சியை கேட்டுப் பார்க்கிறேன். அது நான் குற்றவாளி இல்லை என்று கூறிக்கொண்டேயிருக்கிறது. ஏன்? எனக்குத் தண்டனை அளித்த நீதிபதிகள் கூட, எங்கள் குற்றங்கள் அனைத்தும் தன்னலமில்லாத கொள்கைரீதியான அரசியல் குற்றங்கள் என்ப தைத்தான் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருந் தனர்'’என்று கம்யூனிஸ்டுகளின் கொள்கை உறுதிப் பாட்டை தெளிவுபடுத்துகிறார்.
சிறை குறித்து இவரிடம் அமைந்த பார்வை வேறு யாரிடமும் அமையாத பார்வை. "ஒவ்வொரு மனிதனின் சமூக வாழ்க்கையிலும், இந்த சுரண்டல் சமூகம் ஒரு இருள் திரையை உருவாக்கி, இதில் உண்மையின் ஒளிச்சுடர் ஊடுருவிச் செல்ல முடியாமல் தடுத்துவிடுகிறது. இந்த இருள் திரையை புகலிடமாகக்கொண்டு தீய பழக்கங்கள் பெருகத் தொடங்கிவிடுகின்றன'’ என்கிறார்
இந்த புரிதலுடன் மேலும், "என்னைச் சுற்றி யிருப்பது 40 கோடி மக்களைக் கொண்ட ஒரு சமூகம் அல்ல' என்கிறார். (அன்றைய மக்கள் தொகையை அவர் குறிப்பிடுகிறார்) "நாங்கள் இருப்பது நாலாயிரம் பேர்களைக் கொண்ட, சிறிய சிறை சமூகம். வெளியுலகத்தின் சகல தீய சக்திகளின் பிரதிபலிப்பும், இங்கும் இருக்கிறது. மனி தனை வஞ்சிப்பது, அடிமை கொள்வது, இம்சிப்பது, சுரண்டுவது, ஆகிய சகல பேதங்களும் இங்கேயும் நிலவுகின்றது. இந்த சிறிய சமூகத்திற்கு எங்கள் பணியை சிறப்பாக செய்யலாம் என்று யோசித்தோம்' என்கிறார்..
இதற்குப் பின்னர் நடைபெற்ற அந்த நிகழ்ச்சி ஒன்றை பாலன் தனது நூலில் குறிப்பிடுகிறார். கைதிகள் தங்களுக்கு பிடித்த கலைகளைச் செயல்படுத்தும் வாய்ப்புகள், பாலனின் முயற்சியால் கைதிகளுக்கு சிறையில் கிடைக்கிறது. சிறையில் பஜனை மடம் ஒன்று இருக்கின்றது. அதனை அழகுபடுத்தும் பொறுப்பை கைதிகள் ஏற்றுக்கொள் கிறார்கள். அங்கு பல வண்ணங்களைக் குழைத்து ஆடலரசர் நடராஜரின் அழகிய ஓவியம் ஒன்று வரையப்படுகிறது. அதை வரைந்த கைதியுடன் நடந்த உரையாடலை அப்படியே பதிவு செய்கிறார் பாலன்.
"இந்த ஓவியத்தைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?'’என்று கேட்கிறான் ஓவியன். ‘"மிக அருமையாக இருக்கிறது'’ என்கிறார். ஆனால் அவன் ‘"எனக்கு இது பிடிக்கவில்லை'’ என்கிறான். ‘"ஏன்?'’என்று பாலன் கேட்கிறார், அதற்கு அவன் சொல்கிறான். "அதன் முகத்தைப் பாருங்கள். அதில் மகிழ்ச்சி இல்லையே'’என்று. பாலன் அந்த ஓவியத்தை உற்றுப் பார்த்துவிட்டுச் சொல்கிறார். ‘"ஆம் உண்மைதான். காரணம் என்ன?'’ என்று கேட்கிறார். அவன் அளித்த பதில் அவரை அதிர்ச்சியடைய வைக்கிறது. "என் முகத்தில் மகிழ்ச்சியில்லையே. பின் எப்படி அந்த ஓவியத்தின் முகத்தில் மகிழ்ச்சி இருக்க முடியும்?'’என்கிறான். "இவனைவிட சிறந்த இலக்கிய புரிதல் கொண்ட படைப்பாளி யார் இருக்க முடியும்?' என்ற கேள்வியை எழுப்புகிறார் பாலன். அவன் கள்ளநோட்டை அச்சடிக்கும் இயந்திரத்தை தயாரித்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை பெற்றவன்.
இந்த அனுபவங்களைப் பெறுவதற்கு முன்னர் தோழர் பாலனுக்கு இன்னொரு வாழ்க்கை இருந்தது. அதை நாம் அறிந்துகொள்வது அவசியமானது. அது இதுவரை அறியப்பட்ட சிறை கதைகளிலேயே தனித்துவம் கொண்டது. மதுரை மத்திய சிறையில் தொடங்கிய உண்ணாவிரதம் பற்றியதாகும். இதன் கதை மாநிலம் விட்டு மாநிலம் செல்கிறது.
மதுரை சிறையில் அவர் உண்ணாவிரதம் இருக்கிறார்... மயக்கமடைகிறார். இவரது உண்ணாவிரதத்தை நிறுத்த முடியவில்லை. எங்கு கொண்டு செல்லுகிறார்கள் என்பதை இவரால் ஊகித்து அறிந்துகொள்ள முடியவில்லை தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ஜெயிலுக்குக் கொண்டு செல்லுகிறார்கள் என்று வைத்திருந்த நம்பிக்கை மாறத்தொடங்குகிறது. மயங்கிய இவரது காதுகளில் மாற்று மொழிச் சொற்கள் வந்து விழுகின்றன. அவருக்கு எங்கே செல்கிறோம் என்பது புரியவில்லை.
கம்யூனிஸ்ட்களின் உண்ணாவிரதப் போராட்டத்தின் புதிய கதை ஒன்று ஆரம்பமாகிறது.
(தொடரும்)