
(53) வெளிச்சமும் இருட்டும்!
"கரை சேர்க்கும் உயிர்த் துடிப்பாய்' என்ற, என்.டி வானமாமலை பற்றிய நூலை வழக்கறிஞர் எஸ்.அருணாசலம் எழுதியுள்ளார். இதில் தலைமறைவுக் கால கம்யூனிஸ்டுகள் பற்றிய சில குறிப்புகள் இருக்கின்றன தோழர் நல்லகண்ணு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நெல்லை கொக்கிரகுளம் சிறையிலிருந்தார். இதன் பின்னர்தான் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கறிஞர்களான வானமாமலை, பாளை சண்முகம் ஆகியோரும் சிறிது காலம் இந்த சிறையில் இருந்தனர். இது பற்றிய குறிப்புகள்சில இந்த நூலில் இருக்கின்றன. தலைமறைவு கம்யூனிஸ்டுகள் விசாரணைக் கைதிகளாக வாழ்ந்த காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நூல் எனக்கு உதவியது.
அதில் தோழர் வானமாமலை பற்றிய தகவல். தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு சிறைச்சாலையில், இந்த வாசிப்பு எவ்வாறு ஒரு நெருக்கடியாக மாறிவிடுகிறது என்பதை நூல் விரிக்கிறது. தோழர் வானமாமலை இரவில் முக்கிய தகவல்களை வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பகல் முழுவதும் நெல்லை சதி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடுவார். இரவில்தான் இதைத் தொகுத்து வாசித்துப் பார்க்கவேண்டிய அவசியம். ஆனால் இரவில் வாசிப்பதற்கு வெளிச்சம் இல்லை.
சிறைச்சாலைகளில் இவ்வாறு வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு அரிக்கேன் விளக்கு பயன்படுத்தும் சலுகை வழங்கப்பட்டிருந்தது. தோழர் வானமாமலை இந்த விளக்கு தனக்கு வேண்டும் என்று மனு செய்திருந்தார். இவர் எதை வாசிப்பதற்கு விளக்கு கேட்கிறார் என்று நீதிமன்றமும், காவல்துறையும், சிறை அதிகாரிகளும் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். அவர்கள் இந்த மனுவை நிராகரித்துவிட்டார்கள். ஆனால் தோழர் வானமாமலைக்கு இதிலும் ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்த வாய்ப்பை அவர் நன்கு பயன்படுத்திக்கொண்டிருந்தார்.
சிறைச்சாலையில் சில கைதிகளின் அறைகளுக்கு அருகில் இந்த வாய்ப்பு அமைந் திருந்தது. கம்பிகளின் வழியாகக் கிடைக்கும் வெளிப்புற வெளிச்சம். இதை கைதிகள் தங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக கருதிக்கொள்வார்கள். இருட்டு வாழ்க்கையில் இது எவ்வாறு முக்கியத்துவமுடையது என்பது அவர்கள் மட்டுமே உணர்ந்த உண்மை. தோழர் வானமாமலைக்கு கிடைத்த அறை இரவு வெளிச்சம் கிடைக்கும் அறை.
இரவு நேரங்களில் கம்பிகளுக்கு இடையில் நடக்கும் வாசிப்பு, சிறைச்சாலை மூலம் ஒரு முக்கிய செய்தியாக பரவிவிட்டது. சிறைக் காவலர்களும் ‘கன்விக்ட்’ வார்டர்களும் இந்த செய்தியை சிறை முழுவதும் எடுத்துச் சென்றிருந்தனர். இரவு நேரங்களில் இவர் நின்று வாசிப்பதை வேடிக்கை பார்ப்பது ‘பாரா’ வரும் சிறைக்காவலர் களுக்கு ஒருவிதமான பொழுதுபோக்காக அமைந்துபோனது என்கிறார் நல்லகண்ணு.
இதில் ஒரு சிறை அதிகாரிக்கு கோபம் வந்துவிட்டது. அதிகாரம் அவரை சும்மா இருக்க விடவில்லை. இந்தக் கோபத்தைக் காட்ட மாற்று வழி ஒன்றையும் கண்டுபிடித்திருந்தார். அந்த மாற்று வழி மிகவும் எளிதானது. இவரது அறைக்கு அருகில் எரிந்துகொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டார். இது எத்தகைய பதட்டத்தை தோழர் வானமாமலைக்கும் இதர கைதிகளுக்கு உருவாக்கியிருக்கும் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள இயலும். ஆனால் அது வேறொரு நெருக்கடியாக மாறியது. இதனால் சிறைச்சாலை சீர்த்திருத்த போராட்டம் தீவிரமடைந்தது.

சிறைச்சாலை, இப்படியொரு நெருக்கடியை இதற்கு முன்னர் சந்தித்ததில்லை. அதிகாரிகள் பதட்டமடையத் தொடங்கினார்கள். அவர் களுக்கு அஞ்சி பயந்து வாழ்ந்த கைதிகள், அவர்கள் செய்யும் திருட்டுதனங்களை கையும் களவுமாகப் பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒவ்வொரு இடங்களிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் அனைத்துத் தொடர்புகளும் கைதிகளுக்குத் தெரிந்திருந்தது. கைதிகளின் வலிமை என்ன என்பதை கைதிகளே தெரிந்துகொண்டார்கள்.
உண்மையை அறிந்து கொள்கிறபோது, மனிதருக்கு முதலில் தைரியமும் பின்னர் போராட்ட குணமும் வந்துவிடுகிறது. சிறை ‘மேனுவல்’ கைதிகளுக்கு வழிகாட்டும் புத்தகம். இப்படி ஒரு புத்தகம் இருப்பதும், அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரமும் கைதிகளுக்கு இதுவரை தெரிந்திருக்கவில்லை. கைதிகளில் பலர் எழுதப் படிக்கத் தெரியா தவர்கள். ஆனால், எதையும் கேள்வி ஞானத்தின் மூலம் உணர்ந்துகொள்ளும் கூர்மை அவர்களிடமிருந்தது. சிறை முழுவதும் மேனுவல் கைதிகளின் உரையாடலாக மாறியது.
ஒவ்வொரு கைதிக்கும் சிறையின் உரிமை என்ன என்பதும், இதன்மூலம் உணவுப் பொருட்களிலும் மற்ற வகையிலும் அவர் களுக்கு எவ்வளவு தரப் படுகிறது என்பதையும் கைதிகளால் அறிந்துகொள்ள முடிந்தது. தங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எவ்வாறு சிறைக்காவலர்களால் திருடப்படுகிறது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
இதில் எத்தனை தந்திரங்களைப் பின்பற்றுகிறார்கள் என்ற தகவல்களையும் இவர்களால் திரட்டிக்கொள்ள முடிந்தது. இதில் ஊக்கம்கொண்டு செயல்படத் தொடங்கினர். இதன் பின்னணில் வழக்கறிஞர்களும் மற்ற கம்யூனிஸ்டு கைதிகளும் இருந்தனர்.
இதைப்பற்றி தோழர் நல்லகண்ணு தெரிவிக்கும் தகவல்கள் சில நேரங்களில் நமக்கு சிரிப்பை வரவழைத்துவிடும். கைதிகளை திருடர்கள் என்று மிரட்டிக்கொண்டிருந்த சிறைக்காவலர்களின் திருட்டுத்தனம் நேரடியாக அம்பலமான தருணங்கள் அவை. திட்டமிட்டு அவர்களை கையும் களவுமாக கைதிகள் பிடித்து, அந்த இடத்திலேயே அவர்களை அம்பலப்படுத்திவிடுவார்கள். ஒருபுறம் அதிகாரத்தையும், மறுபுறம் பிடிபட்டதால் ஏற்பட்ட அவமானத்தையும் எவ்வாறு அவர்கள் சமாளித்துக்கொண்டார்கள் என்பதை சில நேரங்களில் சுவைபட அவர் கூறுவார். அதை கற்பனை செய்து பார்த்தால் நமக்கு சிரிப்பு வந்துவிடும்.
மேலதிகாரிகளில் சில நேர்மையாளர்கள் உண்டு என்பதையும் தோழர் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பார். இந்தக் குறைபாடுகளை களையவேண்டும் என்ற முயற்சியை அவர்கள் எடுத்துப் பார்த்தாலும் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. முயற்சி தொடங்கியவுடனேயே பெரும் தடைகள் வந்துவிடுவதால் அவர்களுக்கு பெரும் சோர்வு ஏற்பட்டு விட்டது. இதில் அவர்களால் நேர்மையோடு செயல்பட முடியாத இயலாமையைப் பற்றியும் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
ஆனால் இவர்கள் அனைவரும் கடைசியில் அந்த அமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். சிறைச்சாலைகள் அனைத்தும் புனிதமானவை. அவை குற்றவாளிகளை திருத்த வந்த ரட்சகர்கள். இந்த சிலுவையை இவர்கள் சர்வ சதாகாலமும் தங்கள் தலையில் சுமந்துதான் செல்ல வேண்டும். போலீஸுக்கு ஒரே வழிதான் இருந்தது. வழக்கறிஞர்கள் இருவரையும் சிறையிலிருந்து வெளியனுப்பும் நடவடிக்கை.
வழக்கறிஞர்கள் இருவரும் இந்தக் காலங்களில் மிகவும் மனநிறைவுடன் இருந்தார்கள் என்பதை தோழர் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார். அவர்கள் வழக்குக்குத் தேவையான அனைத்தையும் சிறையில் சேகரித்து விட்டார்கள். இதைவிடவும் இவர்களுக்கு வேறு என்ன திருப்தி வேண்டும். இவர்களும் சிறையிலிருந்து வெளியேறும் மனநிலையில் இருந்தார்கள். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது.
(தொடரும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-06/kaithi-t.jpg)