
(43) மன உறுதியும் சித்ரவதைக் கூடங்களும்!
சித்ரவதைகளை எதிர்கொள்வது என்பது மனஉறுதி சார்ந்தது. கொள்கையாளர்களை சித்ரவதைகள் எதுவுமே செய்துவிடுவதில்லை. அவர்கள் உயிரைப் பறிகொடுக்கும் சூழல்கள் வந்து அவர்களை பயமுறுத்தும் நேரத்தில் கொள்கை உறுதி அவர்களுக்கு பாதுகாப்புக் கவசமாக வந்து நின்றுவிடுகிறது.
சாதாரண உலகம் யோசிப்பதற்கும், இலட்சிய உலகம் சிந்திப்பதற்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. சாதாரண உலகத்திற்கு இத்தனை அடி வாங்கி, சித்ரவதைகளை அனுபவிப்பதற்குப் பதில், உண்மையைச் சொல்லிவிடலாமே என்று தோன்றும். இலட்சிய உலகத்திற்கோ உயிரைவிட லட்சியம்தான் முக்கியமானது. அவர்களின் மனஆழம் கடல் போன்று ஆழங்காண முடியாத மாபெரும் உறுதிகொண்டிருக்கும். அதில் ஆழ்ந்திருக்கும் ரகசியங்கள் விடுதலை உணர்வு சார்ந்தவை. மனிதகுல விடுதலையோடு அது இணைக்கப்பட்டிருக்கிறது. ரகசிய பாதுகாப்பு பற்றி உலகில் பல சித்தாந்தங்கள் இருக்கின்றன.
ரகசியக் குழுக்களின் செயல்பாட்டில் ரகசியங்கள் முக்கியமானவை. ஒவ்வொருவர் கையிலும் ஒரு ரகசிய முடிச்சு இருக்கிறது; இது ரகசியக் குழுவிலுள்ள அனைவரின் பொதுவான உயிர் முடிச்சுடன் இணைந்து நிற்கிறது. ஒரு கையிலுள்ள ஒரு முடிச்சு அவிழ்ந்தாலும், அனைவரின் பாதுகாப்புக்கும் பேராபத்து வந்துவிடுகிறது. தலைமறைவு வாழ்க்கையில் கம்யூனிஸ்டுகள் ரகசியங்களை பாதுகாப்பதை தங்கள் உயிர்க்கொள்கையாகக் கொண்டிருக் கிறார்கள்.
சுதந்திரப் போராட்ட காலத்தில், இந்தியாவில் இயங்கிய பல புரட்சிக் குழுக்களின் செயல்பாட்டை ஆராய்ந்தால், அவர்களின் செயல்பாட்டில் எதிரிகளை பெரிதும் அச்சுறுத்தி வைத்திருந்தது ரகசியங்கள்தான். பகத்சிங் உருவாக்கி, செயல்படுத்திய அமைப்புகள் மொத்தம் நான்கு. நவஜவான், பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி, இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு. இவை அனைத்தின் ரகசியப் பாதுகாப்பு நுட்பங்கள் ஆங்கில ஆட்சியாளர்களை மிரட்சிகொள்ள வைத்தன..
தோழர் நல்லகண்ணு வாழ்க்கையை, இந்த விரிந்த தளத்திலிருந்து பார்க்கமுடியும். மரணம் என்பது பேரச்சம். அந்த அச்சம் பகத்சிங்கிடம் இல்லை. அவன் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுவதைப் பற்றிய ஒரு விவரிப்பு. இவரை தூக்கிலிட தூக்குமேடைக்கு அழைத்துச் சென்றார். இவரை தூக்கிலிடப் பொறுப்பேற்றவர் ஒரு சிறை அதிகாரி.
அவர் எழுதிய நூல் ஒன்று கூறுகிறது... பகத்சிங் தூக்குமேடையை நோக்கி அழைத்துச் செல்லப்படுகிறான். அந்த சிறைஅதிகாரி எழுதுகிறார், அவரிடம் அச்சம் இல்லை என்று. அதை கண்டறிவதற்கு அவர் பின்பற்றும் நடைமுறைகளையும் அந்த நூலில் அவர் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
தூக்குமேடைக்குச் செல்பவர்கள் பல்வேறு மனநிலைகளில் இருப்பார்கள். சிலர் மௌனமாகிவிடுகிறார்கள். சிலர் அழுதுகொண்டேயிருப்பார்கள். சிலர் கடவுள் மீது கொண்ட தீவிர பக்தியை வெளிப் படுத்துவார்கள். "நான்தான் முட்டாள், அறிவற்றவன்... ஆத்திரத்தில் ஏதோ செய்து விட்டேன். அறிவாளிகளாலும், நீதிவான் களாலும் வழிநடத்தப்படும் அரசாங்கம், ஒரு கொலைக்கு மற்றொரு கொலையைச் செய்யலாமா?' என்று தர்க்கம் பேசத் தொடங்கி விடுவார்கள். இவ்வாறான பல தகவல்களை நாம் அறிந்திருக்கிறோம்.

ஆனால் பகத்சிங்குக்கு, தூக்குத்தண்டனையை நிறைவேற்ற அழைத்துச் செல்லும் அந்த அதிகாரி, தூக்கு மேடையை சந்திக்க விருப்பவரின் கால்களை கவனிக்கிறார். அந்த கால்களில்தான் ஒருவரின் மனஉறுதி தெரிகிறது என்கிறார். இதில் அவரிடம் இருப்பது பயமா? அல்லது தைரியமா என்று தெரிந்துவிடும் என்கிறார். இந்த அனுபவத்தை பலரிடம் பார்த்த விவரத்தை அந்த நூலில் அவர் விவரிக்கிறார்.
பகத்சிங் கால்களைப் பற்றி அவரால் வியந்து எழுதமுடிகிறது. மரண பயம் என்பது துளி கூட இல்லை. நடுக்கமற்ற கால் நரம்புகளில் தைரியத்தின் தீவிரம் தெரிந்தது. அந்த மாபெரும் தைரியத்தைப் பார்த்து அவரும், அவரது காக்கிச்சட்டையும் அந்த இடத்திலேயே வெட்கப் பட்டிருக்க வேண்டும். அந்த அளவிற்கு அவரது விவரிப்பு அமைந்திருக்கிறது.
பகத்சிங் போன்றவர்களை எந்தக் கொள்கை வழிநடத்தியதோ, அதே கொள்கைதான் நல்லகண்ணு போன்றவர்களை வழிநடத்தியது. அவர்களிடம் பயம் என்பது துளிகூட இல்லை. இவர் கைது செய்யப்பட்ட தருணத்தில் இவர் அஞ்சி நடுக்கம் கொள்வார் என்று எதிர்பார்த்தார்கள். அவ்வாறான நடுக்கமோ, பயமோ அவரிடம் இல்லை என்பது இவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. கைகளிலும் கால்க ளிலும் விலங்கு மாட்டினார்கள். அவர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கல்லை.
முதலில் இவரது வாயைத் திறக்கவைக்க எல்லா முயற்சிகளையும் எடுத்துப் பார்க்கிறார்கள். அவர் திறந்து பேசவேண்டும். அவரிடம் உறைந்து கிடக்கும் ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட வேண்டும். காவல்துறை ஓராண்டு தேடியதும், மரணபயத்துடன் கையில் விலங்கு மாட்டி யதும் இந்த ரகசியங்களைப் பெறுவதற்காகத்தான். அவர்களால் வாயைத் திறக்க வைக்க முடியவில்லை. அது ஆத்திரமாக மாறியதில் அடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இதை தைரியத்துடன் எதிர் கொள்கிறார். இந்த மனஉறுதி இவருக்கு எங்கிருந்து வந்தது என்பதை புரிந்துகொள்ள எனக்கு ஒரு உதாரணம் கிடைக்கிறது. இது ஹிட்லரின் கொடும் சித்ரவதை முகாமிலிருந்து கிடைத்த உதாரணம்.
உலக வரலாற்றில் சித்ரவதைகளை ஆய்வின் மூலம் கண்டறிந்து அதனை செயல்படுத்திக் காட்டியது ஹிட்லரின் வதை முகாம்கள்தான். இதில் ஒரு நிகழ்வு. ஹிட்லரின் ராணுவ அதிகாரி ஒருவரை, பரிசோதனைக்கு உட்படுத்துகிறார். அவருக்கு எல்லாவிதமான சித்ரவதை பரிசோதனைகளும் செய்யப்படுகிறது; உணவின் அளவைக் குறைக்கிறார்கள். வேலை நேரத்தைக் கூடுதலாக்குகிறார்கள். இரவில் தூங்கக்கூடாது என்பதற்காக மிகவும் குளிர் நிறைந்த காலத்தில் தூங்கும் இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றி வைக்கிறார்கள். அந்த சித்ரவதை அதிகாரியின் நோக்கம், எப்படியும் இவரை முதலில் பயப்பட வைக்கவேண்டும் என்பது. ஆனால் அவரை அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவர் புகழ்பெற்ற மனோதத்துவ மருத்துவர், யூதர்.
இறுதியில் குரூரம் மிகுந்த அதிகாரி, தான் செய்த பரிசோதனையில்... தான் தோல்வி அடைந்ததாக முடிவுக்கு வந்தார். அந்த சித்ரவதை செய்யப்பட்டவரிடம் "நீங்கள் மனோதத்துவ மருத்துவர் என்பதால் ஏதாவது விஷேச தந்திரங்களை வைத்திருக்கிறீர்களா? எப்படி உங்களால் இத்தனை வதைகளையும் சகித்துக்கொண்டு மன வருத்தமின்றி இருக்கமுடிகிறது' என்றார். அதற்கு அவர் அளித்த பதில், அதிகாரியின் கண்களை அகல திறக்க வைத்துவிட்டது. "நீங்கள் என்னை அடிக்கலாம், சிறையில் போடலாம்... விஷவாயுக் கூடங்களில் தள்ளி சாம்பலாக்கி விடலாம். ஆனால் எனது சுதந்திரம் உங்களிடம் இல்லை. என்னிடம் பத்திரமாக இருக்கிறது. நீங்கள் என்ன சித்ரவதை செய்தாலும் சிரிக்க வேண்டுமா? அல்லது அழ வேண்டுமா? என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டுமேயன்றி நீங்கள் அல்ல' என்றார்.
தோழர் நல்லகண்ணு மீது அன்று தொடுக்கப்பட்ட சித்ரவதைகள் சாதாரணமானவை அல்ல. அவை எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் வலிமை அவர் மனதில் இருந்தது. மனதின் வலிமை என்ன என்பதை சித்ரவதைக்கூடங்களால் அறிந்துகொள்ள முடியாது. தான் கொள்கை உறுதியோடு மனதுக்கு தகுந்த பயிற்சி கொடுத்து சுதந்திர உணர்வோடு, அதை வளர்த்து எடுப்பவர்களால் மட்டுமே சாத்தியப்படுத்திக்கொள்ள முடிந்தது. தோழர் நல்லகண்ணுவிடம் அந்தப் பயிற்சியும் இருந்தது... அதனை எதிர்கொள்ளும் திறனும் இருந்தது.
(தொடரும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-04/kaiti-t.jpg)