kk

(23) தோழமை என்றவர்...

விரிந்து பரந்து படர்ந்து கிடக்கும் மானுட உறவில் பல வண்ணங்களில் அமைந்துள்ளது தோழமை உறவு. தொழிற்புரட்சியின் விளைவாக வர்க்கம் தோன்றியது. அந்த வர்க்க தோற்றம் பெற்றெடுத்த புத்தம் புதிய வடிவமாக தோழமை வந்து சேர்ந்தது. ஒரு எல்லைக்குள் வாழ்ந்த மனிதரை எல்லை களைத் தகர்க்க வைத்து, ஒருங்கிணைந்த பிரபஞ்ச சக்தியாக இவர்களை இது மாற்றிவிட்டது. இதன் வலிமையில் சமூக பூகம்பங்கள் தோன்றின. அடிமைச் சங்கிலிகள் அறுந்தன. இருளகன்ற செவ்வானத்தை அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் கண் விழித்து பார்க்கத் தொடங்கினர்.

இந்த தோழமை உறவின் வலிமைதான் பொதுவுடமையின் கொள்கை வலிமை. பொதுவுடமைக் கட்சிகளின் வலிமை. தோழமைக்கு சிதைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை கம்யூனிஸ்டு கட்சிகள் சட்டமாக்கிக்கொண்டன. அந்த தோழமையில் ஏற்படும் சிதைவு கம்யூனிஸ்டு கட்சியின் சிதைவாக அமைந்து போனது, கடந்த கால சோக வரலாறு.

Advertisment

‘காம்ரேட்’ என்னும் ஆங்கில சொல்லுக்கு இணை யாக, அதே பொருள்பட அமைந்த சொல் தமிழில் வேண்டும் என்று, இலக்கியப் பேராசான் ஜீவா விரும்பினார். அந்த சொல்லைத் தேடி, சில காலம் இலக்கிய பயணமும் செய்தார். கம்பராமயணத்தில் அந்த சொல்லை கண்டறிந்து அதில் வெற்றியும் கொண்டார்.

தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ?

ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ?

Advertisment

(கம்ப. குகப்படலம். 2405)

பரதன் பெரும்படையுடன் வருவதைத் தூரத்திலே இருந்து பார்த்து, ராமனுடன் போரிட வருகிறானோ என்று நினைத்த அவனது தோழன் குகன் உணர்வாக கம்ப ராமாயணத்தில் இது வெளிப்படுகிறது.

இந்த உலகில் வரலாற்று சிறப்புகொண்ட தாக சில தோழமை அமைந்துவிடுகிறது. இதில் இரண்டு பேருக்குள் அமைந்த தோழமை உறவு என்னை மிகவும் திகைக்க வைத்தது. சுயநலத் தால் எழும் வேறுபாடுகளை சிலர் அரசியல் வேறுபாடாகக் காட்டி, சிலரை அழித்தொழிக் கும் முயற்சிகளை நான் பாரத்திருக்கிறேன். அரசியலில் ஆழமான கருத்து வேறுபாடுகள் இருந்தும், இருவரும் எதிரும் புதிருமாக இரண்டு கட்சிகளில் செயல்பட்டும், எவ்வாறு இந்த தோழமை இவர்களிடம் ஆண்டு பலவாகத் தொடர்ந்தன. என்பது எனக்கு இன்று வியப்பாகவே இருக்கிறது. அந்த இருவரில் ஒருவர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் செயலாளராகப் பணியாற்றிய தோழர் ஏ.நல்லசிவன், மற்றவர் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக செயல்பட்ட தோழர் நல்லகண்ணு.

தலைமறைவுக் காலத்தில் பிறந்த இந்த தோழமை மிகவும் அபூர்வமானதாகத் தெரி கிறது. இன்றுபோல், இது தங்கள் வசதிக் கேற்றவாறு நிறங்களை மாற்றிக்கொள்வதில்லை. வசீகரமிக்க இந்தத் தோழமையை மீள்வாசிப்பு செய்துபார்க்கத் தோன்றுகிறது. இதில் நல்லகண்ணு, நல்லசிவன் தோழமையின் தூய்மை, எதிர்காலத்தில் புரட்சியை நேசிக்கும் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும் என்ற நம்பிக்கையில் பதிவு செய்கிறேன்.

kk

சிறை வாழ்க்கையில் இவர்களிடம் உருவான திட்டம் ஒன்று, ஒளி பொருந்திய முன்மாதிரியாக எனக்குத் தெரிகிறது. மனிதர் புரிந்துகொள்ள முடியாத மானுடத்தின் மேன்மையை இது எனக்கு விளங்கப்படுத்தியது. சிறைவாழ்க்கை பல்வேறு நெருக்கடிகளை மனிதருக்குத் தந்துவிடுகிறது. அங்கு கைதி களுக்கு விடுதலை என்ற ஒன்றைத் தவிர வேறு எதையுமே நினைக்கத் தெரிவதில்லை. சிறைச்சாலை கைதிகளில் யாருமே சிந்தித்துப் பார்க்காத ஒன்றை இவர்கள் சிந்தித்திருக்கிறார் கள். வெளியே வந்தபின்னர், இருவரும் திருமணத்தை முடித்துக்கொண்டு ஒரே வீட்டில் வாழவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் கள். இந்த தோழமையின் ஆழத்தை சாதாரண மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது.

தோழர் நல்லசிவத்தின் குடும்பமும் உறவினர்களும் ஓரளவிற்கு வசதி படைத்தவர் கள் என்பது தெரியவருகிறது. தோழரின் குடும்பத்தில் சில சிரமங்கள் இருந்தபோதிலும், பள்ளிக் கல்வியை முடித்து, கல்லூரிக் கல்வியிலும் அடியெடுத்து வைத்திருந்தார். பாண்டியன் என்பது தலைமறைவு வாழ்க்கையில் இவரது பெயர்..

நீண்ட தாடியுடன் இவரது தலைமறைவுத் தோற்றம் இருந்தது. காங்கேயநல்லூர், ஆம்பூர், பிரம்மதேசம், வகைக்குளம் ஆகிய பிரதேசங் கள் இவருக்கான தலைமறைவுத் தளம். இவர் சிறந்த பயிற்றுவிப்பு திறன்கொண்ட ஆசிரியர். திறந்த வயல்வெளிகளிலும் வனாந்திரங்களிலும் இவருக்காக தோழர்கள் காத்திருப்பார்கள். மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து அரசியல் வகுப்புகளில் பங்கேற்பார்கள். மார்க் சீயத்தை நன்கு புரிந்துகொள்வார்கள். அந்த மார்க்சீயம் எத்தனை நெருக்கடிகள் வந்தபோதி லும் அவர்களை வழிநடத்திச் செல்லும்.

தோழர் மாணிக்கம் எழுதிய குறிப்பு ஒன்றை மனதுக்குள் கற்பனை செய்து பார்த்துக் கொள் கிறேன்.

1949 ஆம் ஆண்டு. கட்சியின் மாவட்டக் கூட்டத்தை கூட்டுவதற்கான மேலிடத் தலைமறைவு சுற்றறிக்கை வருகிறது. தலைமறைவு காலத்தில் கமிட்டி கூட்டமா? என்று நமக்கு தோன்றலாம். ஆனால் அவர்கள் ஒரு இடத்தைத் தேர்வு செய்கிறார்கள். நாங்குனேரி தாலுகா, தேவநேரி கிராமம். அந்த ஊரில் பெரிய பாதுகாப்பான வீடு அதுதான் என்று தேர்வு செய்யப்படுகிறது. அது தோழர் நல்லசிவத்தின் உறவினர் வீடு. காவல்துறையின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு நீண்ட விவாதங்களின் மூலம் இவ்வாறு ஜனநாயகப்பூர்வ மான முடிவுகளை எடுத்திருப்பது ஒருவிதமான சாகசமாகத்தான் தெரிகிறது..

தலைமறைவு கமிட்டிக் கூட்டம் பற்றி தோழர் மாணிக்கத்தின் குறிப்புகளிலிருந்து சில விபரங்களைப் புரிந்தகொள்ள முடிகிறது. இதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல அடுக்குகளைக் கொண்டிருக்க வேண்டும். அச்சத்துடன், இது குறித்த எந்த முடிவையும் இவர்கள் எடுப்பதில்லை. எல்லாவற்றையும் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே எடுக்கிறார்கள்.

மாவட்டக் கூட்டம் ஆரம்பமாகிவிட்டது. அந்தநேரம் பார்த்து, காவல்துறை வரலாம் என்று ஒரு சந்தேகத் தகவல் வருகிறது. உடன் புறப்படுவது என்பது ஆபத்தானது என்று அவர்கள் அறிவார்கள், ஆனாலும் நெருக்கடி நேரத்தில் தப்பிக்கும் வழிகள் முக்கியமானவை. முதல் அடுக்கில் தொண்டர்கள் காவல் காத்து நிற்பார்கள், அதிலும் தவறு ஏற்பட்டால் என்ன செய்வது என்பதற்காக முக்கியமான நேரங்களில் முக்கிய தலைவர்களே மாறி, மாறி காவலில் பங்கெடுத்துக் கொள்வார்கள்.

தோழர் மாணிக்கம் அதன் தகவல்களை எழுதுகிறார். ‘அந்த தருணத்தில் முக்கிய தலைவர்களே காவலில் நேரடியாக இறங்குவது என்று முடிவு செய்தோம். இந்தக் குழுவில் இருந்த முக்கியத் தோழர்கள் பாலதண்டாயுதம், நல்லகண்ணு, நல்லசிவம், மீனாட்சிநாதன், நான் உள்ளிட்ட ஐந்து பேர். ஒவ்வொருவரும் இரண்டுமணி நேரம் காவலில் இருந்தோம். வெளியேறும் சூழல் அமைந்தது, வெளியேறினோம். 19 மைல் துரத்தில் ஒரு பாதுகாப்பான குகைக்கு வந்து சேர்ந்தோம்’என்கிறார் மாணிக்கம்.

இத்தகைய அபாயத்திலிருந்து மீண்டு, மறுநிமிடம் கடமைக்குத் திரும்பிவிடுகிறார்கள். இது ஒருவிதத்தில் வேடிக்கை தருவதாக இருக்கிறது. காவல்துறை வந்துவிடும் என்பதால் பாதியில் நிறுத்திவிட்டு வந்த கமிட்டி விவாதத் தை, இரண்டுநாள் தங்கி இங்கே முடித்துவிடுகிறார்கள். இதனால்தான் கம்யூனிஸ்டுகள் பொதுவுலகத்தால் புரிந்தகொள்ள முடியாத புதிராக இன்று வரை வாழ்ந்துவருகிறார்கள்.