(108) திருமாவின் எழுச்சியும் நல்லகண்ணுவின் பரிவும்!
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு. அவரது சமூகப்பார்வை என்பது மிகவும் கூர்மையானது. மற்ற கம்யூனிஸ்டு தலைவர்களைவிட வித்தியாசமானது. நான் பல காலம் அவரது வாசிப்பு முறையை கவனித்திருக்கிறேன். வாசிப்பு முறைதான் ஒருவரது எதிர்கால சிந்தனையை நமக்கு விளங்கவைக் கிறது. நான் அரசியலில் அடியெடுத்து வைத்த காலத்தில் அம்பேத்கர் பற்றிய போதுமான புரிதல், கம்யூனிஸ்டு இளைஞர்களிடம் இல்லாமல் இருந்தது. தோழர்கள் ப.மாணிக்கம், நல்லகண்ணு போன்றவர்கள் இந்திய சமூகம் சார்ந்த அரசியலில், தந்தை பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் பார்வை எத்தனை முக்கியமானது என்பதை உணரச் செய்தார்கள். ஐரோப்பிய நாடுகளைப்போல வெறும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பிரச்சினைகளாக மட்டும் இந்திய விடுதலையைப் பார்க்கக்கூடாது என்பதை உறுதிபட கூறி வந்தார்கள். சுரண்டலுக்கான ஆதிக்க சக்திகளின் கட்டமைப்பு மிகவும் சூழ்ச்சித் திறன் கொண்டது என்பதை உணரவைத்தார்கள்.
மராட்டிய மாநில கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தோழர் சர்தேசாய். அவர் அம்பேத்கர் அரசியலைப் பற்றிய பல்வேறு ஆய்வுகளைச் செய்து வந்தார். அம்பேத்கர் பற்றி இவர் எழுதிய கட்டுரைகளை, சிறு வெளியீடாக நல்லகண்ணு அவரது விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெளியிட்டுவந்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பதிப்பகம் people publishing house. இதில் அம்பேத்கர் பற்றிய மற்றொரு நூலும் வெளிவந்திருந்தது. இதன் ஆசிரியர் குபேர். இதே காலத்தில் அம்பேத்கர் பற்றிய புரிதலுக்கான மற்றொரு நூலும் தமிழ்நாட்டில் வெளிவந்திருந்தது. துறைமுக தொழிலாளர் சங்கத்தை உருவாக்கிய ஏ.எஸ்.கே. அய்யங்கார், அம்பேத்கர் என்னும் ஆழமான அனுபவப் பார்வை கொண்ட ஒரு நூலை எழுதியிருந்தார். பகத்சிங் நினைவாக இவர் பகத் பதிப்பகம் ஒன்றை நடத்திவந்தார். அதில், இது புத்தகமாக வெளியிடப்பட்டிருந்தது. இதையெல்லாம் எங்களை வாசிக்க வைத்து, அந்த கருதுகோளை கட்சிக்கு புரியவைக்கும் தோழர் நல்லகண்ணு வின் ஒவ்வொரு முயற்சியும், தொலை நோக்கத்தைக் கொண்டிருந்தது.
இந்திய அரசியலை புரட்டிப் போடும் நெம்புகோல் புரட்சியை செய்தவர் வி.பி.சிங் என்றால் அது மிகையானது அல்ல. மண்டல் ஆணைய பரிந்துரைகள் என்று, இவர் பிறப்பித்த சட்டம் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தது. அந்த கருதுகோள் இந்துத்துவ மத வெறியர்களை அச்சம்கொள்ள வைத்துவிட்டது. இது ஒடுக்கப்பட்ட மக்களிடம் மிகப்பெரிய அதிர்வுகளை உருவாக்கியிருந்தது. இதே காலத்தில்தான் தலித் மக்களின் எழுச்சியும், நம் நாட்டில் வேகம்கொண்டிருந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி எங்கெல்லாம் பட்டியலின மக்களுக்கு எதிராக மேல்சாதிக்காரர்களின் கொடுமை நடக்கிறதோ, அங்கெல்லாம் சென்று இயக்கங்களை நடத்திவந்தது. அந்த காலத்தில், அதன் அடுத்த கட்டத்தைப் பற்றி சிந்தித்தவர் தோழர் நல்லகண்ணு. இந்த இவரது புரிதல் தோழர் நல்லகண்ணுக்கு, தோழர் திருமாவளவன் மீதான தத்துவப் புரிதலாக மாற்றமடைந்ததை என்னால் இப்பொழுது புரிந்துகொள்ள முடிகிறது. இதை நான் காலத்தின் அரசியலாகத்தான் புரிந்துகொள் கிறேன். இந்தக் காலத்தின் அரசியலை தோழர் நல்லகண்ணு தெரிந்து வைத்திருப்பதை திருமா வும் புரிந்திருந்தார்.
தோழர் திருமாவின் மீது தோழர் நல்லகண்ணு கொண்ட அன்பு பல சிறப்புகளைக் கொண்டது. ஆரம்ப காலம் முதல் அவரது தீவிரம், செயல்பாட்டுத் திறன், பொதுநல நோக்கு ஆகியவற்றின் மீது தனிப்பார்வை வைத்திருந்தார். இதற்கு என்னையே சாட்சியாகக் கூறிக்கொள்ள முடியும்.
திருமாவின் வருகை, சென்ற நூற்றாண்டில் தொண்ணூறுகளில் நிகழ்ந்தது. விடுதலைச் சிறுத்தைகள் என்னும் பெயருக்குள் ஒரு பேரெழுச்சியை உருவாக் கிக் காட்டினார். புதுவகை முழக்கங்கள், புதிய பிரச்சாரமுறை என்று மக்கள் கவனத்தை இது கவரத்தொடங்கியது. அந்த காலத்தில் விடுதலைச் சிறுதைகளின் பல அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டங்களில் நான் பங்கேற்றி ருக்கிறேன். ஒவ்வொரு கூட்டத்திற்கும் தோழர் நல்லகண்ணு என்னை உற்சாகப் படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார். திருமாவைப் பற்றி, தோழருக்கு இருந்த உயர் மதிப்பீடுகளை தனிப்பட்ட முறையில் நான் அறிவேன். அவர் தமிழக சூழலில் அரசியல் மாற்றத்திற்கான புதிய நடைமுறைகளை உருவாக்கக்கூடியவர் என்ற எண்ணம் அவருக்கிருந்தது. திருமாவுக்கு நெருக்கடி மிகுந்த சூழல் பல காலகட்டங்களில் உருவானது. அவை ஒவ்வொன்றையும் கவனித்து அதற்கு உதவி செய்வதை ஒரு கடமையாகவே கருதிவந்தார். எல்லா கொள்கையாளர்களிடமும் தோழர் நல்லகண்ணு அணுகுமுறை இப்படித்தான் இருந்தது.
இதில் திருமா மீது அவர் கொண்டிருந்த அணுகுமுறை தனித்துவம் கொண்டது. அதை ஒரு தருணத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அது 2000ஆவது ஆண்டில் எதிர்கொண்ட ஒரு விபத்து. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் கார் விபத்தில் சிக்கிக்கொண்டார் திருமா. கார் முற்றாக நொறுங்கிவிட்டது. விமானம் மூலம் சென்னை மலர் மருத்துவமனைக்கு, ஐயா மூப்பனார் அவர்களின் முழு ஏற்பாட்டில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். அந்த தருணத்தில் தோழர் நல்லகண்ணு அவர்களின் உள்ளத் தகிப்பை என்னால் பார்க்கமுடிந்தது. நெருக்கடி மிகுந்த தருணங்களில்தான், ஒருவரின் ஆழ்மன உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்.
இதைப்போல மற்றொரு நிகழ்ச்சி. 2003ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சில அரசியல் தலைவர்கள் மீது பொடா சட்டம் வெறிகொண்டு பாய்ந்தது. அந்த காலத்தில் தோழர் திருமா எதற்கும் அச்சப்படாமல் தனது கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்துவந்தார். இவர் பொடா சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்ற நிலையும் இருந்தது. தோழர் நல்லகண்ணுவின் கவலை வேறுவி தமானது. ஒரு புது இயக்கம், இப்பொழுதுதான் அதன் அமைப்புகள் உருக்கொண்டு வளர்ச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றன என்ற மனசஞ்சலம் தோழர் நல்லகண்ணுவுக்கு வந்துவிட்டது. இதையொட்டி நடந்த கூட்டத்தில் பொடா எதிர்ப்பு முன்னணிக்கு இவரே தலைமைப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்கி விட்டார். திருமா மீது பாயவிருந்த பொடா சட்டம் பாய முடியாமல் நின்றுபோனது. இதைப் போல தர்மபுரியில் இளவரசன் கொலையை ஒட்டி ஒரு கலவரம். விடுதலை சிறுத்தைகளை தனிமைப்படுத்தும் முயற்சி. அதிலும் திருமாவுக்கு உறுதுணையாக இருந்தார்.
தோழர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழாவில் திருமா ஆற்றிய உரையை, மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்க்கிறேன். ‘தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு கால இருப்பே, நமக்கான பாதுகாப்பு என்று கூறியுள்ளார். தோழர் நல்லகண்ணு, அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான பேராயுதம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
மேலும், அவர் கூறிய வார்த்தைகளின் சத்திய ஆவேசம், உண்மையை தலைநிமிர்ந்து வைக்க வைத்துவிட்டது. "முன்னுக்குப் பின் முரண் இல்லாமல், ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு மாறாக செயல்படாதவர், மக்களுக்கு துரோகம் இழைக்காமல் தாம் கொண்ட கொள்கையே உயிர் மூச்சு என்ற பிடிப்போடு நமக்காக வாழ்ந்துவரும் வழிகாட்டி' என்று குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு எதிர்காலத்திற்கான வழிமுறையைக் காணமுடிகிறது.
(தொடரும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/kaithi-2025-12-12-16-04-08.jpg)