(107) படகு ஒன்று, போராளிகள் இருவர்!
சிந்தாந்த அடிப்படையிலான தமிழகத்தின் வலிமை என்று அய்யா வீரமணி அவர்களை கூறமுடியும். தந்தை பெரியாருக்கு பின் இவரது பங்களிப்பின் மேன்மையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. தேர்தல் ஜனநாயகத்திற்கு எப்பொழுதுமே சில நெருக்கடிகள் இருக்கத்தான் செய்கிறது. சித்தாந்த அடிப்படையில் சரி செய்தல் ஒன்று இதற்கு தேவைப்படுகிறது. ராணுவத்தைப் போல விழித்திருந்து செயல்படும் செயல்பாடு அது. இதற்கான பல நூறு முயற்சிகள், அன்றாடம் தமிழகம் எங்கும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இந்த ஒருங்கிணைப்பின் தலைமையாக என்னால் பார்க்க முடிகிறது.
ஆசிரியர் ஒரு ஒளி பொருந்திய சிந்தனை வட்டம். முகத்துதிக்காக சந்திப்பவர்களால் இதை தெரிந்துகொள்ள முடியாது. ஒளிவுமறைவு இல்லாமல் அவரிடம் மனம்விட்டுப் பேசவேண்டும். கொள்கை அடிப்படை யில் செயல்படுபவர்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவர்களை கண்டறிந்து, அவர்களை நட்புணர்வுடன் பாராட்டும் அவரது இயல்பு அலாதியானது. தீவிரமான கொள்கையாளர்கள் என்ற வகையில் தோழர் நல்லகண்ணு, அய்யா வீரமணி இருவருக்கும் இடையில் அமைந்த உறவை நானறிவேன். இவர்களிடம் அமைந்த கொள்கை யின் ஆழத்தையும், அதன் அடிப்படைகளையும் இன்றைய தலைமுறை அறிந்துகொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.
தோழர் நல்லகண்ணு பற்றிய அய்யா வீரமணி அவர்களின் மதிப்பீடு மிகவும் துல்லியமானது. தோழரின் 80ஆவது பிறந்த நாளில் அவர் வழங்கிய வாழ்த்துச் செய்தியே அதற்கான ஆதாரம். ‘"பொதுவாழ்வுக்கு சொந்தக் காரர், தியாகத் தீயில் புடம் போடப்பட்டவர், வாழ்வின் வசந்தத்தை சிறைக்கொட்டடியில் கருக்கிக்கொண்டவர், தியாகத்தை விலை பேசாதவர், எளிமையின் இலக்கணம்' என்பது அவரது வாழ்த்து செய்தி!
இத்தனை உயர் மதிப்பீடுகளை தோழர் மீது, ஆசிரியர் கொண்டிருந்தாலும் ஆசிரியரின் சிந்தாந்தக் கூர்மையின் ஒருங்கிணைப்பைப் பார்த்து, நான் பெரிதும் வியந்துபோயிருகிறேன். தஞ்சை பெரியார் பல்கலைக் கழகத்தின் நிகழ்ச்சி, இதை ஆசிரியர் அவர்கள் சிறப்புடன் ஏற்பாடு செய்து அய்யா மூப்பனார், தோழர் நல்லகண்ணு ஆகிய இருவரையும் அழைத்திருந்தார். விழாவுக் குச் சென்று திரும்பிய தோழர், மிகுந்த மகிழ்வுடன் காணப்பட்டார். சில நிகழ்ச்சி களுக்கு சென்று வரும்போது தோழர் மகிழ்ச்சியோடு காணப்படுவார். சென்று வந்தபின்னர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வது அவரது வழக்கம். என்னிடம் மட்டுமல்ல, எல்லா இளைஞர் களிடமும் நல்லவற்றை ஒரு உரையாடலாக பகிர்ந்து கொள்ளும் நடைமுறையைக் கொண்டிருந்தார்.
அன்று அவர் கூறிய தகவல் சமூக நீதியின் அடிப்படையை விளக்குவதாக இருந்தது. அது வெற்றுப் பிரச்சாரம் அல்ல... ஆழமான புரிதல். அது தந்தை பெரியார் பற்றியது. பல்கலைக் கழக விழாவில், ஆசிரியர் செய்திருந்த ஏற்பாடுகளில் மனநிறைவை பெற்ற அய்யா மூப்பனார் கூறிய வார்த்தைகள் அவை. தோழரை அருகில் அழைத்து அய்யா மூப்பனார் கூறியுள்ளார். ‘"அய்யா பெரியார் இல்லை என்றால் நீங்களும், நானும் கையில் கம்பை வைத்துக்கொண்டு அலைந்துகொண்டிருக்கும் கூட்டத்துடன்தானே வாழ்ந்திருப்போம்' என்று கூறியுள்ளார். அய்யா மூப்பனார் மிகவும் சாதாரண மாக கூறிய இந்த வார்த்தைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வேலை திட்டத்தைக் கடந்த காலத்தில் தந்தை பெரியார் வகுத்துக் கொடுத்ததை ஞாபகப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் ஆசிரியர் ஒருங்கிணைத்த பல மேடைகள் பல்வேறு புதிய புரிதலுக்கான நெருக்கத்தை உருவாக்கித் தந்துகொண்டேயிருந்தது. இதைத்தான் ஆசிரியரின் சித்தாந்த ஒருங்கிணைப்பு என்கிறேன் நான்.
தோழர் நல்லகண்ணு அடிக்கடி சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். திராவிட இயக்கமும் கம்யூனினிஸ்டு இயக்கமும் சித்தாந்த அடிப்படை யில் அமைந்துள்ள ஒற்றுமையை புரிந்து கொள்ள வேண்டும் என்று. கம்யூனிஸ்டு இயக்கத்தில் இத்தாலிய நாட்டின் கிராம்சி போன்ற தலைவர்கள் இதைப்போன்ற கருதுகோள்களை முன் வைத்துள்ளார்கள். சில நேரங்களில் இரண்டு இயக்கங்களிடையேயும் தீவிரமான கருத்து வேறுபாடுகள் ஏற்படும் புறச்சூழல் ஏற்படுவது உண்டு. அந்த நேரங்களில் தோழர் நல்லகண்ணு அவர்களின் தலையீடு, ஒரு சரியான பார்வையை தரக்கூடியதாகவே இருக்கும். இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை நிறைவேற்றும் இரண்டு செயல்முறைகளை கையில் எடுத்துக் கொண்டவை என்பார். அய்யா வீரமணி அவர்களும் பல இடங்களில் இதே கருத்தை கூறியதைப் பார்த்திருக்கிறேன். தோழர் நல்லகண்ணு அவர்களின் பிறந்த நாள் கட்டுரை ஒன்றில் ஆசிரியர் இதனை அழுத்தமாகப் பதிவு செய்துள் ளார். இந்த வார்த்தைகளை இரண்டு இயக்கங் களும் தங்களின் வழிகாட்டும் நெறியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.
‘தந்தை பெரியாரைப் பொறுத்தவரை அவர் சோவியத்து ரஷியாவிற்கு செல்லுவதற்கு முன்பே, மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து, அவர் நடத்திய குடியரசு பத்திரிகையில் வெளியிட்டவர். பொதுவுடமைக் கொள்கையை பிரச்சாரம் செய்கிறார் என்பதற்காக பிரிட்டிஷாரால் தண்டிக்கப்பட்டவர்.’ இதில் கடைசியாக ஆசிரியர் எழுதிய வார்த்தையை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். ‘திராவிடர் கழகமும், கம்யூனிஸ்டு இயக்கமும் ஒரே படகில் பயணம் செய்யும் சக போராளிகள் என்பது. வெளிப்படையானதாகும்.
அய்யா வீரமணி எழுதியதைப் போலவே தோழர் நல்லகண்ணு கூறியவையும், மிகவும் முக்கியமானதாக எனக்கு தோன்றுகிறது. நெருக்கடி மிகுந்த தலைமறைவுக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள்தான், உற்ற தோழனாக இருந்து, பெரும்பாலான கம்யூனிஸ்டுகளுக்கு உயிர் பாதுகாப்பைத் தந்தவர்கள். இதற்கு ஜீவாவுக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் உள்ள தொடர்பு ஒரு காரணம் என்பதையும் அடிக்கடி கூறிக்கொள்வார். இதைப்போலவே கம்யூனிஸ்ட் கட்சியின் மீது தடை விதிக்கப்பட்ட அடக்குமுறை காலத்தில் அதை எதிர்த்து குரல் கொடுத்தது மட்டுமல்லாது, அடக்குமுறைக்கு எதிராக இயக்கங்கள் பலவற்றை திராவிடர் கழகம் நடத்தியுள்ளது. 1951ஆம் ஆண்டு சேலம் சிறையில் தோழர்கள் சிறையில் சுட்டுத் தள்ளப்பட்டபோது, அந்தக் கொடுமைகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியதில் திராவிடக் கழகத்திற்கு தனிப் பங்கு உண்டு.
இந்த விபரங்களை எல்லாம் தோழர் நல்லகண்ணு மூலம் அறிந்துகொண்டேன் என்றாலும், ஆசிரியர் வீரமணி அவர்கள் வெளியிட்ட ஆவணம் ஒன்று கம்யூனிஸ்டு இயக்கத்திற்கும் திராவிடர் கழகத் தலைவர்களுக்கும் இடையில் அமைந்த ஆழம் காண இயலாத உறவைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. அந்த ஆவணம் ஒரு கடிதம். இந்த கடிதத்தைப் புகழ்பெற்ற கம்யூனிஸ்டு தலைவர் எம்.கல்யாணசுந்தரம் எழுதியிருக்கிறார். இது விடுதலை நாளேட்டிற்கு, இவர் 1951ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதியில் எழுதியுள்ளார்.
கடிதத்தில், "நான் புதுக்கோட்டை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டேன். என்னுடைய விடுதலைக்காக திராவிடர் கழகமும், விடுதலை பத்திரிகையும் செய்த கிளர்ச்சிக்கு என் சார்பிலும் என் கட்சியின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய விடுதலை என்பது திராவிடர் கழகம், கம்யூனிஸ்டு கட்சியின் ஐக்கியத்தின் வெற்றியாகும். இது மட்டுமல்லாது மற்ற ஜனநாயக சக்திகளை திரட்டவல்ல அச்சாணியாகும்'’ என்று எழுதியுள்ளார்.
இந்த வெளிச்சத்தில் நின்று ஆசிரியர் அவர்களையும் அய்யா நல்லகண்ணு அவர்களையும் நான் பார்க்கிறேன்.
(தொடரும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/kaithi-2025-12-08-16-47-56.jpg)