(105) கோவை தேர்தல்!
அதிகாரம் ஒரு போதை. அது அதிகார நாற்காலியில் அமர்ந்திருப் போருக்கு அது அப்பொழுது தெரிவ தில்லை. தங்களை அறியாமலேயே தங்கள் ரத்தத்தில் சுற்றியிருப்பவர்களால், அது போதையாக ஏற்றப்படுகிறது என்பதை அவர்கள் உணர்வதும் இல்லை. அது சாதாரண மனிதரைக்கூட கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்லராக மாற்றிவிடுகிறது. இந்த சூழலில்தான் முசோலினிகள் பிறந்துவிடுகிறார்கள். ஆளுமை பொருந்திய பல அரசியல் தலைவர்கள், நாற்காலியில் அமர்ந்துவிடுகிறார்கள். ஆனால் இந்த அதிகார போதை அவர்களை நாற்காலியிலிருந்து இறங்க வும் வைத்துவிடுகிறது. ஆளும்கட்சி வரிசையிலிருந்தவர் களை எதிர்க் கட்சியின் வரிசையிலும் அமரவைக்கிறது. இவை எல்லாவற்றையும் அதிகாரம் படுத்தும்பாடு என்று புரிந்துகொள்ளலாம். மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்களைப் பற்றி, இந்த நடுநிலைப்புரிதலை முன்வைத்து ஆராய்ந்து பார்ப்பது இங்கு அவசியமாகிறது.
மனிதர் பாதி, மிருகம் பாதி சேர்ந்தது போலத்தான், பொதுவாக மனிதர்கள் இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் இவ்வாறான அரசியல் கதாபாத்திரங்களை நான் ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். இவை ஒவ் வொன்றையும், தனித்தனியாக பிரித்து ஆராய்ந்து பார்க்கும்போது, அவை ஒவ்வொன்றும் பல மனித இயல்புகளின் ஆழத்தை நமக்கு புரிய வைத்துவிடுகிறது. இதை சரியாக புரிந்துகொள்ளுதல் மனிதப் பண்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதுகிறேன். மானுட இணக்கத்தில் அக்கறை கொண்டவர்கள் இதனைப் புரிந்துகொள்ளுதல் அவசியமான தாகும்.
தோழர் நல்லகண்ணு, மேனாள் முதல்வர் ஜெயலலிதா ஆகிய இருவரையும் எதிர் எதிர் துருவங்களில் வைத்துப் பார்க்கமுடியும். அவர்கள் அரசியலுக்கு வந்த பாதை வேறுபடுகிறது. அவர்களின் பழக்க வழக்க நடைமுறைகளில் பெருத்த வேறுபாடு இருக்கிறது. ஆனால் அவர்களின் இணக்கம் எந்த புள்ளியில் அமைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இதைப் புரிந்துகொண்டால்தான் ஜெயலலிதா, தோழரின் மீது வைத்திருந்த அபிமானத்திற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும். இதை அறிந்துகொள்ள முயன்றதில் பல்வேறு நுட்பங்களை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
மேனாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசியல்வாதிகளில் விசித்திர இயல்பு களைக் கொண்டிருந்தவர். அவரது செயல் பாடுகள் அதிர்ச்சிதரும் பல அதிர்வுகளை தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறது. அவரால் பாதிக்கப்பட்ட நல்லவர்களும் இருக்கிறார்கள். சங்கராச்சாரியாரை கைது செய்யும் அளவிற்கு, அவரிடம் துணிவும் இருந்திருக்கிறது. இவர், இனிப்பும் கசப்பும் கலந்த கலவை யாகவே அமைந்துபோனார். இவரது இந்த இயல்புகளும், தோழர் நல்லகண்ணுவின் உணர்வுகளும் எவ்வாறு ஒத்துப்போயின என்பது மிகவும் முக்கியமானதாகும். ஜெயலலிதாவைப் பற்றி எனக்கு சில அனுபவங்கள் உண்டு.
தேர்தலிலே போட்டியிடாத எனக்கு, இவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் சூழலும் நேர்ந்தது. அது தந்த அனுபவம் எனக்கு தேர்தல் அரசியலில் ஆழ்ந்திருக்கும் பல்வேறு உண்மைகளை கற்றுத் தந்தது. அண்ணா தி.மு.க.வின் கட்சி அணிகள் எத்தனை விசுவாசத்துடன் களப்பணி செய்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தேன். கண்களை மூடிக்கொண்டு அவர்களால் எதையும் செய்ய முடிந்தது. நான் கற்றுக்கொண்ட மார்க்சீயத்தில் எனக்கு இது ஒரு கலவையாக தெரிந்தது. இந்த தேர்தல் களத்தில் எனக்கு ஒரு மகிழ்ச்சியு மிருந்தது. எல்லா கம்யூனிஸ்டு கட்சிகளும் நேரடியாக களத்தில் இறங்கி பணிபுரிந்தன. "தமிழ்நாட்டில் இத்தனை கம்யூனிஸ்டு அமைப்புகளா? அதில் இத்தனை ஆளுமை கொண்ட தோழர்களா?' என்பதை நேரடியாக அறிந்துகொண்டதில் தனி மகிழ்ச்சியும் இருந்தது.
இதில் வேறொரு செய்தியையும் இங்கு நான் குறிப்பிட வேண்டும். கலைஞரோடு நெருக்கம் கொண்டவர் தோழர் நல்லகண்ணு. அவர் மீது தனித்த அபிமானமும் கொண்டி ருந்தார். இதில் கலைஞரைப் பற்றி செல்வி. ஜெயலலிதா எத்தகைய உணர்வுகொண்டிருந் தார் என்பது நாடறிந்த உண்மை. கலைஞரோடு நட்புகொண்டிருந்தார்கள் என்பதற்காக பலருக்கும் நேர்ந்தவற்றை நம்மால் தொகுத்து இந்த தருணத்தில் பார்த்துக்கொள்ள முடியும். இந்தப் பின்னணியில் தோழர் நல்லகண்ணு பற்றிய அவரது மதிப்பீட்டின் அடிப்படை என்ன? என்ற எண்ணமும் எனக்கு அடிக்கடி வந்துகொண்டேயிருந்தது.
அந்த நாடாளுமன்றத் தேர்தல் 1999ஆம் ஆண்டு நிகழ்ந்தது. மிகவும் முக்கியமான தேர்தல். மாறுபட்ட கூட்டணி. தி.மு.க.வும், கம்யூனிஸ்டு கட்சிகளும் எதிரும் புதிருமாக தேர்தலில் போட்டியிட்டனர். கோவை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கோவையில் குண்டு வெடிப்பு நடந்து, இதன் தாக்கம் தொகுதி முழுவதும் கூடுதலாக இருந்தது. கோவையில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் கட்சிக்குள் மும்முரமான விவாதங்கள் நடைபெற்றன. யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. கடைசியில் தோழர் நல்ல கண்ணு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் எந்த காலத்திலும் தேர்தலில் நிற்பதில் ஆர்வம் காட்டியதில்லை. அவரை வேட்பாளராக நிறுத்திய அந்த கமிட்டிக் கூட்டத்தை நினைத்துப் பார்க்கிறேன். அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். கடைசிவரை, "தான் நிற்க மாட்டேன்' என்ற உறுதியோடு பேசினார். கம்யூனிஸ்டு கட்சியில் ஒரு நடை முறை உண்டு. பல சுற்று விவாதங்கள் நடந்தன. அவர்தான் வேட்பாளராக இருக்க வேண்டும் என கமிட்டி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிவிட்டது. கூட்டு முடிவை யாரும் மீற முடியாது. தோழர் நல்ல கண்ணும் மீறவில்லை.
அந்த தேர்தலில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை நாம் தெரிந்துகொள்வது அவசியமனதாகும். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கூட்டணியை ஆதரித்து நின்றது. அதுவும் அப்பொழுது பெரும் நெருக்கடியை சந்தித்தது. இதற்கு கோவை குண்டுவெடிப்பும் காரணமாக இருந்தது. அதில் தேர்தல் முடிந்த பின்னர் ஒரு முக்கியமான முஸ்லீம் தலைவர் கண்கலங்க கூறியதை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லுகிறார்கள். இந்துக்கள் பகுதிக்கு வாக்கு கேட்க செல்லவேண்டும். மூஸ்லீம் தோழர்கள் அங்கு வர மறுக்கிறார்கள். அங்கு அப்படி வந்தால் கோபத்தில் மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என்கிறார்கள். தோழர் இதை மறுத்து விட்டார். இந்த தேர்தலில் எனது நோக்கம் வெற்றி பெறுவ தில்லை. எப்படியாவது இங்கு ஒரு மத நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று சற்று அழுத்தமாக கூறியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு நடைமுறையும் இருந்தது. ஜெயலலிதா ஒரு வேனில் பிரச்சாரம் செய்துகொண்டு வருவார். வேட்பாளர்கள் அவர்கள் பேசி முடிக்கிறவரை கும்பிட்டுக் கொண்டு நிற்கவேண்டும். இந்த நடைமுறையில் நல்லகண்ணு என்ன செய்யப்போகிறார் என்று ஊடகங்கள் கேள்வியை எழுப்பிவிட்டன? தேர்தல் நேரத்தில் இது ஒருவித நெருக்கடியை எங்களுக்கு உருவாக்கிவிட்டது. தேர்தல் பிரச்சார நாள் நெருங்க நெருங்க எங்களுக்கு இது குறித்து கவலை வந்துவிட்டது. பிரச்சாரத்திற்கு முதல்நாள் இரவு போயஸ் கார்டனிலிருந்து ஒரு செய்தியை ஜெயலலிதா அவர்களின் உதவியாளர் பூங்குன்றன் அனுப்பியிருந்தார். "அம்மா பிரச்சார வேனிலிருந்து பேசும்போது அய்யா நல்லகண்ணு அவர்கள் மேடையில் அமர்ந்திருந்தாலே போதுமானது நிற்க வேண்டாம்' என்று. இது நம்மைப் பொறுத்தவரை, சாதாரண செய்தி என்றாலும் அண்ணா தி.மு.க.வை பொறுத்தவரை இது ஒரு முக்கியச் செய்தியாகும்.
(தொடரும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/02/kaithi-2025-12-02-11-22-26.jpg)