(103) நல்லகண்ணு எனும் திறந்த புத்தகம்!

 
ம்யூனிஸ்டு இயக்கத் தலைவர்களின் தியாகத்தை, அளவிட்டுச் சொல்ல முடியாது. இதில் சில அரிய தகவல்கள் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே போய்விடுகிறது. ஒரு புகழ்மிக்க கம்யூனிஸ்டு தலைவர். தமிழ்நாட்டின் முதல் தலைமுறை தலைவர்களில் மிகவும் புகழ்பெற்ற வர். தலைமறைவு வாழ்க்கையிலும் சிறைச் சாலை வாழ்க்கையிலும் சிக்கிச் சிரமப்பட்டவர். சொந்த வாழ்க்கையில் மிகவும் கண்டிப்புமிக்க வர். தோழர் நல்லகண்ணு போன்ற தலைவர்களே அவரிடம் பேசும்போது கொஞ்சம் மரியாதை யுடனும், எச்சரிக்கையுடனும் பேசுவார்கள். அவர் பற்றிய குறிப்பு ஒன்றை இங்கு பதிவு செய்யவேண்டும். 

Advertisment

அவர் தமிழ்நாட்டின் கட்சி வரலாறு ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். இதை எழுத வேண்டும் என்று தோழர் நல்லகண்ணுதான் கூறினார். அப்பொழுது அவருக்கு வயது முதிர்ந்துவிட்டது. அவர் எழுதிய நூலின் பின் அட்டையில் அவரது புகைப்படத்தை அச்சிட வேண்டும் என்று நல்லகண்ணு விரும்பினார். எங்கு தேடிப் பார்த்தாலும், அவரது படம் கிடைக்கவில்லை. தோழர் என்னை தனியாக அழைத் தார். "நீங்கள்தான் அவரிடம் நெருக்கமாக இருக்கிறீர் களே. ஒரு கேமராவை வரவழைத்து ஒரு படம் எடுத்துவிடுங்கள்'' என்றார். நான் "இது என்ன? சாதாரணமானதுதானே'' என்று அவரை அணுகினேன். ஆனால் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் போட்டோ எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார். 

Advertisment

ஏன் என்று கேட்டதற்கு தெளிவான விளக் கத்தை அவரால் தர முடிந்தது. "கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் செய்யும் அர்ப்பணிப்பு அவர்கள் மனசாட்சி சார்ந்தது. புகைப்படங்கள் அதை பிரச்சாரமாக மாற்றிவிடுகிறது' என்றார். மேலும் "கொஞ்ச காலத்தில் அது அவர்களுக்கு தெரியாமலேயே அது போதையாகவே மாறிவிடுகிறது'' என்றார். அந்த நேரத்தில் நான் தடுமாறிப் போனேன். வெற்றுப் புகழுக்காக தனது டிஜிட்டல் பேனரை, தானே கையில் வைத்து அலைந்துகொண்டிருக்கும் இன்றைய காலத்தில், இதை வாசிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் இது உண்மை என்பதற்கு நானே சாட்சி. இதைப் போன்ற எத்தனையோ நடைமுறை கொள்கைகளை, ஆரம்பகால கம்யூனிஸ்டுகளிடம் நான் பார்த்திருக்கிறேன். 

அவர்கள் யாருக்குமே அமையாத தமிழக அங்கீகாரம் தோழர் நல்லகண்ணுக்கு கிடைத் துள்ளது, தனித்து ஆராய்ந்து பார்க்கத்தக்க ஒன்று.  கம்யூனிஸ்டு தலைவர்கள் பலரிடம் யாருமே நெருங்க முடியாது. கட்சி கமிட்டிகள் மூலம்தான் வெகுமக்கள் தங்களை அணுக வேண்டும் என்ற இயந்திரகதியிலான வழக்கம் பலரிடம் இருந்தது. தோழர் நல்லகண்ணு இதில் வேறுபட்டவர். இவர் சமூகத்தோடு இடை யறாது சமூக உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருப்பவர். இதனால் ஒரு காந்தத்தின் ஈர்ப்பைப்போல எல்லோருமே இவரிடம் வந்து போயினர். பாலன் இல்லத்தின் கூட்டு வாழ்க்கை, அன்பால் கூடுகட்டிய வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் ருசி அறிந்தவர்கள் எத்தனையோபேர் உண்டு. அந்தக் காலத்தின் அந்த வாழ்க்கை முறை அலாதியானது. சிறிது தூரத்தில் ஒரு டீக்கடை, அதற்கு பக்கத்தில் ஒரு பெட்டிக்கடை.  தோழர் நல்லகண்ணு எங்களோடு நடந்துவந்து அங்கு டீ குடித்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். சில நேரங்களில் பெட்டிக்கடையில் சோப்பு வாங்கிக் கொள்வோம். நடந்து செல்லும்போது எத்தனை உரையாடல்கள், எத்தனை அரசியல் விவாதங்கள் எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கிறேன். 

Advertisment

இவர் காலத்தில் பல்வேறு வகையினர் வந்துபோகும் இடமாக பாலன் இல்லத்தை மாற்றினோம். கவிதா பாரதி, அன்றைய பாலன் இல்லத்தில் சிறப்பு உரிமை பெற்றவர். அவரும் நானும் சைக்கிளில் சுற்றிய காலங்கள் மிகவும் இனிமையான காலங்கள். எங்கு சென்றா லும் பாலன் இல்லம் வந்து விடுவார். அறிவுமதியைப் பார்த்தவுடன் தோழர் நல்லகண்ணுவின் முகம், மகிழ்ச்சியால் மலர்ந்துவிடும். இயக்குநர்கள் பாரதிராஜா, பொன்வண்ணன், ராஜ் முருகன், கவிஞர் யுகபாரதி, ஓவியர்கள் ஆதிமூலம், வீரசந்தானம், மருது, விஸ்வம், சிற்பி தட்சணா மூர்த்தி ஆகியோர் அவரைப் பார்க்க வந்துபோவார்கள். எழுத்தாளர் பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி ஆகிய படைப்பாற்றல் கொண்டவர்கள், பாலன் இல்லம் வந்து, ஓரிரு நாள் தங்கிச் செல்வார்கள். மறைந்த நாட்டார் இசை மேதை, பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் மீது, மிகச் சிறந்த மதிப்பைக் கொண்டிருந்தார். தாமரை இலக்கிய இதழுக்கான இலக்கிய முன்னெடுப்பு களும் இங்கிருந்துதான் செயல்பட்டன.  

kaithi1

இதைத்தவிர, தோழ ரின் ஆழ்ந்த மனிதநேயத்திற்கு ஒரு உதாரணமும் உண்டு. பாலன் இல்லத்தின் கூட்டு வாழ்க்கை கூட்டுக்குள், ஒரு புதுவரவு வந்து சேர்ந்தது. அது அவனது குழந்தைப் பருவம். அவன் பெயர் இளங்கோவன். கீழ் கட்டளையிலிருந்து பஸ்ஸில் ஏற்றி அவனை கைப்பிடித்து அழைத்து வந்தது எனக்கு இன்று நினைவிருக்கிறது. குடும்ப வறுமையின் காரண மாக அவன் பள்ளிப் படிப்பு, ஆரம்பித்த இடத்திலேயே நின்றுபோனது. கட்சி அலு வலகத்தில் குடும்பத்தினர் பற்றி எப்போதுமே நல்லகண்ணு அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டார். அப்பொழுதுதான் பாலன் இல்லத்தின் பயன்பாட்டுக்கு கம்ப்யூட்டர் வந்திருந்திருந்து. அதைக் கற்றுக்கொள்ள இளங்கோவை ஊக்கப்படுத்தினார். ஆரம்பத்தில் தயங்கினான். அதற்கான ஊக்கத்தை அவனுக்கு அவர் தந்து கொண்டேயிருந்தார். அவன் சொந்த முயற்சியால், கம்ப்யூட்டர் இயக்குவதில் நிபுணத்துவத்தை பெற்றுவிட்டான். அந்த இளங்கோ விற்கும் அவருக்கும் அமைந்த தோழமை உறவின் ஆழத்தை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். என் உடல் சிலிர்க்கிறது. இவ்வாறான இவரது பல்வேறு உயர் மனிதநேயத்தின் உள்ளொளி நல்லகண்ணு என்னும் அடையாளமாக மாறிப்போனது. 

எனது வாழ்க்கையில் எத்தனையோ சதிகாரர்களை நான் சந்தித்திருக்கிறேன். எனது நீண்ட அரசியல் பயணத் தில் அவர்கள் சமூகத்தில் எதற்கும் பயனற்ற அற்பப்பதர் களாகத்தான் இன்று எனக்குத் தோன்றுகிறார்கள். ஆனா லும் மாமனிதர்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். என்னையறியாமல் நான் பக்குவப்படுவதற்கு இவர்கள்தான் காரணமாக அமைந்தவர்கள். இவர்களோடு நான் செய்த பயணம்தான் என் வாழ்வின் மகிழ்ச்சி. இந்த பின்னணியில் தோழர் நல்லகண்ணு அவர்களை என் ஆழ்மனம் அளந்து மதிப்பிட்டுப் பார்க்கிறது.   

கம்யூனிச வாழ்க்கை முறையை பொதுஉலகம் சரிவர உணர்ந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் நல்லவர்களா? பயங்கரவாதிகளா? சமூகத்திற்கு நன்மை செய்கிறார்களா? அவர்களை அறியாமல் தீமை செய்துகொண்டிருக்கிறார் களா? என்று புரிந்துகொள்ள முடியாது குழப்பங்கள் இருந்துகொண்டேயிருக்கிறது.. இதில் தோழர் நல்லகண்ணு பொதுவாழ்க்கை, ஒரு திறந்த புத்தகமாக எல்லோருக்கும் தெரியத் தொடங்கியது. இதை தெரிந்துகொண்டவர்கள் இப்படி ஒரு வாழ்க்கையா என்று உணரத்தொடங்கினார் கள். அவரது எளிமை வெளிப்படைத் தன்மை வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிந்து அதிர்ந்துபோனார்கள். காலம் கம்யூனிசத்தைப் புரிந்துகொள்ள இவரை ஒரு கருவியாக மாற்றிக்கொண்டது. இவரிலிருந்து கம்யூனிசத்தை அறிந்து கொண்டவர்களை நான் பார்த்திருக்கிறேன். 

இது ஒருபுறம் என்றால் இவரது மற்றொருபுறம் மிகவும் வெளிச்சம் நிறைந்ததாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கட்சி வேறுபாடுகள் இல்லாமல் தத்துவ சித்தாந்த வேறுபாடுகள் இல்லாமல் இவரைப்போல எல்லோராலும் நட்புறவு பாராட்டப்பட்ட தலைவர்கள் யாராவது உண்டா? என்று யோசித்துப் பார்க்கிறேன். அந்த யோசனை நீண்டுகொண்டே செல்கிறது.       

 (தொடரும்)