(101) ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!

முத்துக்குமார் உயிர் பிரிந்துவிட்டதாக தகவல் வந்தது. இந்த மரணம் தந்த அதிர்வைப் போல வேறு எதுவும் அதிர்வை தந்திருக்க முடியாது. எல்லாமும் தெளிவாக இருந்தது. அதன் லட்சிய நோக்கங்கள் தெளிவாக எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. மரணத்துக்கு முன் இத்தகைய தெளிவுடன் ஒருவரால் எழுத முடியுமா? என்பது, யாருமே எதிர்பார்க்க முடியாதது. முத்துக் குமார் எழுதி வைத்திருந்த உயில் அப்படிப்பட்டது. 

Advertisment

முள்ளிவாய்க்கால் படு கொலைக்கு முந்தைய காலம் அது. லட்சக்கணக்கில் மக்களை கொல்லு வதற்கு நடக்கும் சூழ்ச்சி என்பது எல்லோருக்கும் புரிந்துவிட்டது. இதைத் தடுக்க ஒவ்வொரு தமிழரும் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற உணர்வின் கொந்தளிப்புக்குள் சிக்கியிருந்தனர். என்ன செய்ய முடியும்? ஏகாதிபத் திய சதிவலைகள் ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொருவிதத்தில் பின்னப்பட்டுவிடுகிறது. இந்த தருணத்தில், முத்துக்குமார் தன் உடலை ஆயுதமாக கொண்டு தன் போராட்டத்தை தொடங்கியிருந் தான். அவனது உடலில் பற்றிய தீயின் தீவிரம் ஒவ்வொருவரது மன சாட்சியையும் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. இந்த காலத்தில் பாலன் இல்லத்தில் தோழர் நல்ல கண்ணு அவர்களுடன் இதுகுறித்து பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களை நான் நிகழ்த்தியிருக்கிறேன். 

Advertisment

இப்பொழுது பழைய நினைவு கள் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதல், சென்ற நூற்றாண்டின் தொன்னூறுகளிலேயே வந்து விட்டது. இரண்டுமுறை எனக்கு இலங்கைக்குச் சென்று திரும்பும் வாய்ப்பும் கிடைத்தது. 1988 ஆம் ஆண்டில் ஒருமுறை. 1995ஆம் ஆண்டு இரண்டாம் முறை. இரண்டுமே கட்சி சார்ந்த பயணங்கள். இலங்கை கம்யூனிஸ்டு கட்சி நிலையை ஒட்டியே, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிந்திக்கும் முறை இருந்தது. இந்த நிலைப்பாட்டிற்கும், அங்கிருந்த எதார்த்தத்திற்கும் மிகுந்த வேறுபாடுகள் இருந்தன என்பதை என்னால் இந்த பயணத்தின் நேரடி அனுபவங்களாகப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அப்பொழுது நான் "தீக்குள் விரலை வைத்தேன்' என்ற நூலை எழுதியிருந்தேன். இந்த நூலில் இது குறித்த என் உணர்வுகளைப் பதிவு செய்திருந்தேன். தோழர் நல்லகண்ணு இதை அறிந்து கொண்டார். இதன்பின்னர் இவருக்கும், எனக்கும் இடையில் அமைந்த கருத்து உடன்பாடு மேலும் வளர்ச்சியடைந்தது. அவரோடு பல கருதுகோளை விவாதிக்க முடிந்தது. 

தேசிய இனங்கள் குறித்த பார்வையில் கம்யூனிஸ்டுகளுக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. உலகில் பல உதாரணங்களை, இதற்குக் கூறமுடியும். இன்னமும் சொல்லப்போனால் இந்தக் கருத்தை விஞ்ஞானப்பூர்வமாக மாற்றியமைத்தவர்கள் கம்யூனிஸ்டு கள்தான். ஆனால் எல்லா நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டு கட்சி களாலும் அதை முழுமையாகப் பின்பற்ற முடிவதில்லை. அதற்கு அங்குள்ள சிக்கலான பிரச்சினைகள் பெரும் தடையாக இருந் தன. ஆனாலும் கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு பகுதியினர் ஆரம்ப காலம் முதலே இதில் வலுவான கருத்துக்களைக் கொண்டிருந் தனர். தலைவர் ஜீவா அவர்களை அதற்கு மிகச்சிறந்த உதாரண மாகக் கூறமுடியும். தமிழ் பண்பாட்டுக் கூறுகளை நன்கு அறிந்து, அதனை உணர்ந்திருந்தவர். தோழர் நல்லகண்ணும், இந்த வழிநின்று சிந்திக்கக்கூடியவர் என்பதுதான் இவரது தனிச்சிறப்பு. 

Advertisment

kaithi1

தோழர், 1965 ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி நிலை குறித்து என்னிடம் பேசியிருக்கிறார். இதில் இவருக்கு இருந்த மாறுபாட்டை நான் அறிந்திருந்தேன். ஆட்சிமொழி, பயிற்று மொழி, நீதிமன்ற மொழி அனைத்தும் தமிழில் வேண்டும் என்று கொள்கை உறுதியோடு போராடிக் கொண் டிருந்த கம்யூனிஸ்டு கட்சியை இந்திக்கு ஆதர வானவர்கள் என்ற முத்திரையைக் குத்தினார்கள். ஆங்கிலம் வேண்டாம் என்றோம். இது இந்தி வேண்டும் என்பதாக தமிழ் மக்களால் புரிந்து கொள்ளப்பட்டது. இதன்மூலம் வர்க்கம் என்ற பெயரால் தமிழ் மக்களைப் பற்றி கவலைப்படாத வர்கள் கம்யூனிஸ்டுகள் என்று நாம் கொச்சைப் படுத்தப்பட்டோம். இதுபோன்ற விளக்கங்களையும் தோழர் நல்லகண்ணு அவர்களிடம் என்னால் விளக்கமாக புரிந்துகொள்ள முடிந்தது. தேசிய இன கோட்பாட்டின் அடிப்படையில் இந்தப் பிரச் சினையை தோழர் நன்றாகப் புரிந்துவைத்திருந்தார் என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. 

கட்சியில் கால மாற்றங்களையும், கால அரசியலையும் நன்கு புரிந்துகொள்வதில் தொலை நோக்குப் பார்வை கொண்டவர் தோழர். தா.பாண்டின். முள்ளிவாய்க்கால் படுகொலை தருணத்தில் இவர் மாநிலச் செயலாளர். இவர் கட்சியின் செயலாளராக பணி யாற்றிய காலம் முழுவதிலும், நானும் மாநில துணைச்செய லாளராகப் பணியாற்றிவந்திருக்கிறேன். அவரது செயல்பாட்டு தீவிரத்தை அவரிடம் நான் கற்றுக்கொண்ட காலமும் அதுதான். இவருக்கு ஈழ விடுதலைப் போராளிகளுடன் சில கசப்பான அனுபவம் இருந்தது என்பதை நான் அறிவேன். அது மிகவும் துயரம் மிகுந்த ஒன்று. அப்பொழுது அவர் ஐக்கியப் பொதுவுடமை கட்சியில் தலைவராக இருந்த நேரம். தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப் பட்டார். அதில் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர் தோழர் தா.பா. அவர்கள். 

அந்த நிகழ்வு பற்றி தோழர் தா.பா கூறிய காட்சி என் மனதைவிட்டு இந்த நிமிடம்வரை அகலவே இல்லை. ‘நான் ராஜீவ்காந்தியின் ஆங்கில உரையை மேடையில் தமிழாக்கம் செய்து கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான் தூக்கியெறியப்பட்டிருக்க வேண்டும். யாரோ பேசிக்கொள்வது மட்டும் கேட்கிறது. யாரோ செத்துக் கிடக்கிறார்கள் என்று அவர்கள் கூறியவை என் காதுகளில் கேட்டன என்றார். இதற்குப் பின்னால் அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் தீவிரத்திற்கு வந்திருந்தார். இதனை இவரின் காலத்தைப் புரிந்துகொள்ளும் அரசியலாக நான் புரிந்துகொண்டேன். 

ஒரு நாள் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கும் எனக் கும் இடையில் நடந்த உரையாடல் எனக்கு முக்கியமானதாக இப்பொழுதும் தோன்றுகிறது. புலிகள் நடத்திய சகோதர யுத்தம் குறித்து அவர் தனது வருத்தத்தை வெளியிட்டார். நான் தயங்கித் தயங்கி அவரிடம் ஒரு கருத்தைச் சொன்னேன். அவர்களின் விடுதலைப் போராட்டத்தில் பல கட்டங்கள் இருக்கின்றன. மக்களைக் குறிவைத்து தாக்கும் இன்று, நாம் ஏன் போர் நிறுத்த கோரிக்கையை முன்வைக்கக் கூடாது என்று கூறினேன். அவர் எதையுமே யோசிக்கவில்லை. இது சரியானது என்றார். அந்த குரலில் உற்சாகம் மிகுந்திருந்தது. அதுதான் தோழர் தா.பா. அடுத்த வார்த்தை தோழர் நல்லகண்ணுவை அழைத்து வாருங்கள் என்றார். அந்த சூழலில் பிறந்ததுதான் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யவேண்டும். இந்திய அரசு இலங்கைக்கு எந்த ஆயுதத்தையும் வழங்கக் கூடாது என்ற கம்யூனிஸ்டு கட்சியின் புகழ்மிக்க முழக்கம். 

தோழர் நல்லகண்ணு அவர்கள் தன் டைரியை எடுத்து அவசரம் அவசரமாக புரட்டினார். காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தலாம் என்றார். இது பின்னர் மாநிலக் குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இது ஒரு காலத்தில் கம்யூனிஸ்டு கட்சி அரசியலில் ஏற்பட்ட முக்கிய மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)