(100) ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்!

ன்றைய நீதிமன்றம் வழக்கமான நீதிமன்றமாக இல்லை. தோழர் நல்லகண்ணு தன் விவாதங்களை முன்வைத்த முதல் அமர்வு. சரியாக 2.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.ஜோதிமணி, எஸ்.நாக முத்து இருவரும் அமர்வுக்கு பொறுப்பேற்றிருந்தார்கள். அவர் முன்வைத்த கருத்துரைகள், நீதிமன்ற நடைமுறைகளுக்கு கொஞ்சம் மாறுபட்டிருந்தது. பொதுவான நீதி சார்ந்த கருத்துக்களை முன்வைத்திருந்தார். இயற்கைக்கும், மக்களுக்கும் பொறுப்பேற்காத நீதிசார் நடைமுறைகளை பற்றிய அவரது விமர்சனம் அதில் நளினமாக இருந்தது. அடுத்த தலைமுறையைப் பற்றிய கவலைகள் அதில் மிகுதியாகவே காணப்பட்டது. இயற்கைக்கு எதிரான மனிதரின் சுயயநலத்திற்காக எல்லாவற்றையும் அழித்து முடிக்கும் இன்றைய சுயநல உலகத்திற்கு கண்டனத்தைத் தெரிவித்தார்.

Advertisment

இலக்கிய ஆதாரங்களை முன்வைத்து, தன் வாதத்தை தொடங்கியிருந்தார். அவை ஔவையாரின் வரிகள். இந்த தலைமுறை அந்த வரிகளை படித்திருக்குமா? என்பது தெரியவில்லை. ‘"ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்  அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்'’ என்ற வரிகளோடு தனது வாதத்தைத் தொடங்கினார். அந்த தருணத்தில் நீதிபதி நாகமுத்து இடையில் தலையிட்டார். நீதிமன்ற நடைமுறைகளுக்கு புறம்பாகப் பேசுகிறார் என்பதற்காக தலையிடுவதாக மற்றவர்கள் நினைத்திருக்கக்கூடும். அவரது தலையீட்டில் எந்த அதிகாரத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை. "ஔவையார் பாடலை மீண்டும் சொல்லுங்கள் அதை நான் எழுதிக்கொள்கிறேன்' என்றார். தோழர் அவர்கள், இந்த பாடலுக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார் அந்தக் காலத்தில் எழுதியுள்ள உரையை ஒருமுறை நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டினார். அதையும் மீண்டும் வாசித்துக் காட்டச் சொன்னார். 

Advertisment

கம்யூனிஸ்டுகளுக்கு சில நடைமுறைகள் உண்டு. நீதிமன்ற விவாதங்களை சமூக விழிப்புணர்வுக்கு பயன்படுத்திக்கொள்ளும் நடைமுறை, கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ நீதி மன்றத்தில் ஆற்றிய உரை "வரலாறு என்னை விடுதலை செய்யும்'’என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

 1953ஆம் ஆண்டு மான்கடா பராக்ஸ் தாக்குதலை அவர் முன்னெடுத்தார். அது அன்றைய கியூபா ஆட்சியின் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தியது. அதுதான் கியூபா புரட்சியின் அடிப்படை எழுச்சிக்கு ஊக்கத்தை வழங்கியது. இதைப்போல ஜெர்மன் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்ததாக பல்கேரிய கம்யூனிஸ்டு தலைவர் ஜார்ஜ் டிமிட்ராவை கைது செய்து வழக்கு தொடுத்திருந்தான் ஹிட்லர். அது சதிக்குற்றம். நீதிமன்ற விவாதத்தைப் பயன்படுத்திக்கொண்டார். பாசிசத்தின் கோர முகத்தை வெளியுலகத்திற்கு காட்டிவிட்டார். இதே பாதையில்தான்    தோழர் நல்லகண்ணு அவர்களின் நீதிமன்ற விவாதமும் தனது பயணத்தைத் தொடங்கி யிருந்தது.  

Advertisment

அடிக்கடி தோழர் ஜீவா பயன்படுத்தும் வார்த்தை ஒன்று நினைவுக்கு வருகிறது. படிப்பறிவு புட்டிப்பால், அனுபவ அறிவு தாய்ப்பால் என்பார். தமிழகத்தின் நீர்நிலைகள் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு தாய்ப்பால் போன்றது. நீதிமன்ற விவாதங்களில் அது, அவரது அனுபவம், செழுமையுடன் வெளிப்பட்டது. தமிழகத்திற்கு கிடைக்கும் மழை விபரங்களை இவர் குறிப்பிடுகிறார். சராசரியாக 330 முதல் 900 மில்லி மீட்டர் மழைதான் என்கிறார். இந்த குறைந்த மழை அளவைப் பயன்படுத்தி ஒரு தொன்மையான விவசாயத்தை மேற்கொண்டவர்கள்  தமிழர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நீர் மேலாண்மை அறிந்த உலகின் மூத்த விவசாயிகள் தமிழர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே 39 ஆயிரம் ஏரிகளை உருவாக்கி யிருந்தார்கள். அதற்கு ஆற்றுநீர் மட்டும் பயன்படுத்தவில்லை. ஊற்று நீரையும் பயன்படுத்தினார்கள். ஆற்று மணல் முற்றாக மறைந்துபோனால், ஊற்று நீர் எங்கிருந்து கிடைக்கும் என்பது இவரது கேள்வி. 

ஆற்று மணல் மறைந்து போனதால் ஏற்பட்ட இழப்பை இவர் பட்டியலிட்டுச் சொல்கிறார். ஆற்று மணலோடு தொடர் புடையது கூட்டுக் குடிநீர் திட்டம். வறண்ட நிலப்பகுதியில் வறட்சியால் தாகமெடுத்த மக்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம். தமிழக ஆறுகளின் மையப் பகுதியில் ஆழ்கிணறு உருவாக்கப்பட்டு, இந்த குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆறு முற்றாக மணலை இழந்துவிட்டால், இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் எவ்வாறு உயிர் வாழுதல் இயலும்? கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பல கோடி செலவழிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். 

நீரற்ற நிலம், கதறி அழும் குரலை எப்படியோ நீதிமன்றத்தை கேட்க வைத்துவிட்டார் நல்லகண்ணு. ஆற்று மணல் கோடை காலத்தில் ஊற்றுநீரைத் தருவதோடு தன் பணியை நிறுத்திக் கொள்வதில்லை. நிலத்தடி நீருக்கு ஆதாரத்தை வழங்குகிறது. ஆற்றில் மணல் இல்லை என்றால் நிலத்தடியில், எந்த நீரும் இருக்காது. பெய்யும் மழை நீர் அனைத்தும் கடலில் கலந்து போய் விடும். இதைப் போலவே, நீரை சுத்திகரிப்பதில் மணலுக்கு உள்ள பங்கை இவர் மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறார். செயற்கையாக பெரும் செலவில் நீரை சுத்திகரிப்பதைவிட மணலில் உள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகள், மாசடைந்த நீரை மிகவும் எளிதாக சுத்திகரித்துவிடுகிறது. ஆற்றில் மணல் இல்லாததால் கிடைக்கும் நிலத்தடி நீரும் அறுபது சதவீதம் புளோரைடு கலந்து இருக்கிறது. இது எலும்புருக்கி நோய் ஏற்படவும், பற்சிதைவுகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது. ஆற்று மணல் அதைப் போக்குவதில் எத்தகைய பங்காற்றுகிறது என்பதையும் இவரால் கூற முடிகிறது. சமூகத்தின் மீது பொறுப்பு கொண்ட மனிதருக்கு எல்லா தகவல்களும் தானே வந்து சேர்ந்துவிடுகிறது. 

ஆறுகளின் அவலக்குரலுக்கு நீதிமன்றம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற சூழல் உருவாகுகிறது. நீதிபதிகள் தங்கள் உணர்வுகளை நீதிமன்றத்தில் பகிர்ந்துகொள்கிறார்கள். தோழர் நல்லகண்ணு மீதிருந்த மதிப்பு இதன் பின்னர் இன்னமும் கூடுதலாகிறது. நீதிபதி ஜோதிமணி அவர்கள். தோழரின் அர்ப்பணிப்பை நீதிமன்றத்தில் பதிவுசெய்கிறார். அவரது வார்த்தைகளில் அப்படியே இங்கு பதிவு செய்வது எனக்கு இங்கு அவசியமாகிறது. அந்த மாமனிதரின் வார்த்தையைக் கேட்டுதான் நாங்கள் இந்த முடிவுக்கு வருகிறோம். "நாமெல்லாம் தனிப்பட்ட சொந்த வேலைக்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்கிறோம். இந்த மனிதருக்கு எந்த நேரத்திலும் பொதுமக்கள் பற்றிய சிந்தனையும் அவர்களுக்காக உழைப்பதைத் தவிர வேறு வேலையில்லை'’ என்கிறார். 

இறுதித் தீர்ப்பில் நீதிபதிகள் நாகமுத்து, பானுமதி ஆகிய இருவரும் இவரது வாதத்தின் உட்பொருளை நன்கு அறிந்து புகழ்மிக்க தீர்ப்பை வழங்கினார்கள். மணலை காப்பாற்றுவதன் மூலம் தாமிரபரணியை காப்பாற்றும் பெருந்தீர்ப்பு ஒன்று இவர்களால் வழங்கப்பட்டது. இந்திய அளவில் ஆற்றுமணல் கொள்ளை பற்றிய தீர்ப்புகளில் இது முக்கியமான தீர்ப்பாகக் கருதப்படுகிறது. 

நெல்லை நகரம் தோன்றுவதற்கு முன்னர் தாமிரபரணி தோன்றியிருக்க வேண்டும். இதன் நீரால் நெல் விளைந்த, அந்த மண்ணுக்கு திருநெல்வேலி என்று பெயர் வந்திருக்க வேண்டும். இந்த மக்கள் வழிபடும் ஆலயத்திற்கு இதனால் நெல்லையப்பர் என்ற பெயர் வந்திருக்க வேண்டும். இங்கு நெல் பயிரிடத் தொடங்கி பத்தாயிரம் ஆண்டுகள் இருக்கும் என்கிறார்கள். 

தாமிரபரணிக்கு ஒரு தொன்மை வரலாறு உண்டு என்றால்... இன்றைய மணல் கொள்ளையைத் தடுத்ததின் மூலம் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கும் அதில் ஒரு சிறு இடம் இருப்பதை யாரால்தான் மறுக்க முடியும்? 

(தொடரும்)