"ஜெயபிரபாவுக்கு ஒரு நியாயம்! ஜெய ராமனுக்கு ஒரு நியாயமா?'’என்று நம்மிடம் கேட்ட அந்த சிறைத்துறை அதிகாரி, ""சட்டத் தின்முன் அனைவரும் சமம் என்று சொல்வதெல்லாம் வெறும் பேச்சளவில்தான். நடைமுறை யில் ஆளுக்கேற்றவாறு சட்டம் சலாம் போடு கிறது. கடந்த 26-ஆம் தேதி விருத்தாசலத்தில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா, ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், ரூ.3000 லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டு கைதாகியிருக்கிறார். புழல் சிறையிலோ, ஜெயிலர் ஜெயராமனின் தூண்டுதலின் பேரில் ரூ.40000 லஞ்சம் பெற்றது நிரூபணமாகி கடந்த 2018, மார்ச் 6-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமையக குற்ற எண் 02/2018) பதிவானது. இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. சம்பந்தப் பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை. சிறைத் துறை அதிகாரிகளுக்கு மட்டும் தமிழகத்தில் தனி நீதி போலும்''’என்று பெருமூச்சுவிட்டார்.
என்ன வழக்கு இது? சட்டத்தின் பிடியிலிருந்து ஜெயராமன் எப்படி தப்பினார்?
சென்னை, நெமிலிச்சேரியில் ராயல் புட்வேர் என்ற பெயரில் செருப்புக்கடை நடத்திவரும் மாஹின் அபுபக்கர் என்பவர், போதைப்பொருள் வழக்கில் புழல் மத்திய சிறை 2-ல் விசாரணை சிறைவாசியாக அடைபட்டிருக்கிறார். ஜெயிலர் ஜெயராமன் அவரிடம், ""தீவிரவாதிகளை அடைத்து வைத்திருக்கும் பூந்தமல்லி ஸ்பெஷல் ஜெயிலுக்கு உன்னை மாற்றப்போகிறோம்''’என்று மிரட்டலாகச் சொல்ல... மாஹின் அபுபக்கர் “""அப்படி மாற்றிவிட வேண்டாம் சார். அங்கு போனால் நான் மிகவும் துன்பப்பட வேண்டியதிருக்கும். ஸ்பெஷல் ஜெயிலில் அடை படும் அளவுக்கு நான் எந்த குற்றமும் செய்ய வில்லை''’’என்று கெஞ்சியிருக்கிறார்.
இப்படி ஒரு பரிதவிப்பை மாஹின் அபுபக் கரிடம் எதிர்பார்த்திருந்த ஜெயராமன், ""ஓ... அந்த அளவுக்கு உனக்கு பயம் இருக்கா? அப்படின்னா நான் சொல்லுறத கேளு. ரூ.20,000-ஐ சிறை வார்டன் பிச்சையாகிட்ட கொடுத்திரு.
உன்னை பூந்தமல்லி ஸ்பெஷல் ஜெயிலுக்கு மாற்றவிடாமல் பார்த்துக்கிறேன்''’என்றிருக்கிறார். அடுத்து, மாஹின் அபுபக்கரைச் சந்தித்த சிறை வார்டன் பிச்சையா, ""ஜெயிலருக்கு இருபதா யிரம்னா... எனக்கும் தனியா இருபதாயிரம் தரணும். மொத்தத்துல ரூ.40,000 தந்தால்தான் உன் வேண்டுகோள் பரிசீலிக்கப்படும். நானும் ஜெயிலர்கிட்ட சொல்லி உனக்கு உதவ முடியும்''’ என்று தனக்குரிய பங்கையும் கேட்டு, இரண்டு மொபைல் எண்களைச் (70105 64560 மற்றும் 99762 34108) சொல்ல, தன் கையில் குறித்துக் கொண்டார், மாஹின் அபுபக்கர்.
தனது செருப்புக்கடையில் மேலாளராகப் பணிபுரியும் ரெவிங்டன் கார்த்திக் லியோ, புழல் சிறையில் மனு போட்டு தன்னைப் பார்க்க வந்தபோது, ""சிறை அதிகாரிகள் இருவருக்கும் ரூ.40000 லஞ்சம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், பணம் கேட்டு அடிக்கடி நச்சரிக்கும் இவர்களின் தொந்தரவை என்னால் தாங்க முடியவில்லை. விஜிலன்ஸில் புகார் செய்து நடவடிக்கை எடுப்பதற்கான வேலையை நீ பார்க்க வேண்டும்''’என்று கூறியிருக்கிறார்.
ஆனாலும், ஒரு முயற்சி எடுத்து 23-2-2018 அன்று மாலை சிறை வார்டன் பிச்சையாவை புழல் சிறை 2-ன் வெளி வளாகத்தில் சந்தித்த ரெவிங்டன் கார்த்திக் லியோ, ""எங்க ஓனர் அபுபக்கரை பணம் கேட்டு தொந்தரவு செய்யா தீங்க ப்ளீஸ்..’.''’என்று கேட்க, “""நாற்பதாயிரம் தரலைன்னா உங்க ஓனருக்கு பூந்தமல்லி ஸ்பெஷல் ஜெயில்தான்...''’ என்று கறாராகச் சொல்லிவிட்டார் பிச்சையா.
பிறகுதான், சிறை அதிகாரிகள் இருவரும் லஞ்சம் கேட்பதை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சிறப்பு புலனாய்வுப் பிரிவில், ரெவிங்டன் கார்த்திக் லியோ புகாராக எழுதிக் கொடுத்தார்.
ஜெயிலர் ஜெயராமன் சொன்னபடி சிறை வார்டன் பிச்சையா, புழல் சிறைக்கு வெளியே ரெவிங்டன் கார்த்திக் லியோவிடம், "அய்யா ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு சொன்னார்...'’என்று கேட்க, ரசாயனம் தடவப்பட்ட கரன்ஸி நோட்டுகள் ரூ.40,000-ஐ கையில் திணித்திருக் கிறார்.
பிறகென்ன? கையும் களவுமாக விஜிலன்ஸ் போலீசாரிடம் சிக்கிய பிச்சையா, ""ஜெயிலர் ஜெயராமன் சொல்லித்தான் லஞ்சம் வாங்கி னேன்''’என்று உண்மையை ஒப்புக்கொள்ள, விசாரணை நடத்தப்பட்டு வழக்குப் பதிவானது.
ரூ.3000 லஞ்சம் பெற்றதற்காக சமூகநல விரிவாக்க அலுவலர் ஜெயபிரபாவை கைது செய்ய முடிந்த விஜிலன்ஸ் போலீசாரால், ஜெயராமனையும் பிச்சையாவையும் ஏன் கைது செய்ய முடியவில்லை? சிறைத்துறைக்கே உரித்தான செல்வாக்கும் அரசியலும் விஜிலன்ஸ் போலீசாரின் கைகளைக் கட்டிப்போட்டன.
அம்பு தானாகவா வில்லிலிருந்து பாயும் என்பது தெரிந்தும், சிறைவார்டன் பிச்சையா மீது மட்டும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்தது சிறைத்துறை. இன்று வரையிலும் அவர் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளார். பிச்சையாவை கைது செய்ய விஜிலன்ஸ் போலீசார் எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை.
லஞ்சம் பெற்று வழக்கு பதிவான நிலை யிலும் ஜெயிலர் ஜெயராமன் மீது துறை ரீதியான எந்தவொரு நடவடிக்கையையும் சிறைத்துறை எடுக்கவில்லை. மாறாக, தலைமறைவாகிவிட்டார் என்ற நாடகத்தை அரங்கேற்றி, அந்த சில நாட்களுக்குள், ஜெயராமனுக்கு மிகவும் வசதி யாக, அவரது சொந்த ஊரான மதுரைக்கு இடமாற்றம் செய்தனர். அவரும் சட்ட ரீதியான எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஆளாகாமல், மதுரை மத்திய சிறையிலும் அதே அதிகாரத் தோரணை யில் பணிபுரிந்துவிட்டு, தற்போது பணி ஓய்வும் பெற்று, நிம்மதியாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பொற்கால ஆட்சி தொடர்வதாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜெயிலர் ஜெயராமனை, அவர் ஓய்வு பெற்றும்கூட சட்டத்தால் நெருங்க முடியவில்லை. ஏன் தெரியுமா?
தனது மகளை, தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகனுக்கு மணம் முடித்து வைத்த வகையில், சம்பந்தியாக ஜெயராமன் இருப்பதுதான்!
-ராம்கி