கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ளது வெங்கனூர் கிராமம். இங்குள்ள கம்பம் வரதராஜபெருமாள் கோவில் முகப்பில், சுமார் 80 வயது மூதாட்டி ஒருவர் வலது கையில் காயத்துடன் இருந்தார். (தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்.) அவரிடம் "உங்கள் கையில் எப்படி காயம் ஏற்பட்டது'' என்று பரிவுடன் கேட்டோம். "என் பெயர் பாப்பாத்தி. கணவர் ரங்கசாமி இறந்துவிட்டார். ஒரே ஒரு மகன். சாப்பாட்டை வடிக்கும்போது எனது இருகை விரல்களும் குறைவாக உள்ளதால் கை தடுமாறி என் கையில் கஞ்சி ஊற்றியதால் இந்த காயம் ஏற்பட்டது''’என்றார்.
"அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை உங்களுக்கு கிடைக்கவில்லையா?'' என்றோம். "அரசாங்கம் கொடுக்கிறது. கடந்த ஒரு ஆண்டாக அந்த பணம் கிடைக்கவில்லை. ராமநத்தத்திலுள்ள இந்தியன் வங்கிக்குச் சென்று கேட்டேன். அவர்கள் அங்கே போ... இங்கே போ.... என்று கூறுகிறார்கள். நடக்கக்கூட முடியாத நான் எங்கே போவது?''’என்றார்.
அவரது கண்ணீர் நமக்கு வேதனையை ஏற்படுத்தவே, அவருக்கு அரசு உதவித் தொகை பணம் கிடைக்க முயற்சி செய்வது என்று தீர்மானித்து களத்தில் இறங்கினோம்
திட்டக்குடி சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரனைச் சந்தித்தோம். அவர் கணினியில் ஆய்வு செய்துவிட்டு, "நாங்கள் மாதம்தோறும் வெங்கனூர் பாப்பாத்தியம்மாள் கணக்கு வைத்துள்ள ராமநத்தம் இந்தியன் வங்கிக்கு தொடர்ந்து பணம் அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறோம்'' என்றார்.
ராமநத்தம் இந்தியன் வங்கிக்குச் சென்றோம். அந்த வங்கியின் மேலாளர் பாலதண்டாயுதத்திடம், "பாப்பாத்தி அம்மாளுக்கு முதியோர் உதவித்தொகை தங்கள் வங்கியிலிருந்து ஏன் அளிக்கப்படவில்லை' என்ற விவரத்தைக் கேட்டோம்
"நீங்கள் யார்?'' என்றார். நாம் விவரம் கூறியதும், "சம்பந்தப் பட்ட பாப்பாத்தி அம்மாள் நேரடியாக வங்கிக்கு வந்தால் மட்டுமே பணம் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தைக் கூற முடியும்'' என கறாராகக் கூறினார். நாம் அவரிடம், பாப்பாத்தி அம்மாள் நடக்க முடியாதவர். (தொழு நோயாளி என்பதற்கான புகைப்படத்தையும் காட்டினோம்.) அப்படியும் வங்கி மேலாளர் விவரம் கூற மறுக்கவே, ஷேர் ஆட்டோ மூலம் பாப்பாத்தி அம்மாவை வங்கிக்கு அழைத்துவந்தோம். மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் சென்று விவரம் கேட்கு மாறு வங்கி ஊழியர்கள் பாப்பாத்தி அம்மாளிடம் தெரிவித்தனர். முதியோர் உதவித்தொகை பெறுவதற் கும் மங்களூர் ஒன்றிய அலுவலகத்திற்கும் என்ன தொடர்பு உள்ள தென குழப்பம் ஏற்பட்டது. மங்களூர் ஒன்றிய அலுவலகத்திலிருந்த அலுவலர்களிடம் பாப்பாத்தி அம்மாள் பற்றிய விவரம் கூறினோம்.
அவர்கள், "பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்படி தமிழக அளவில் கிராமப்புறங்களிலுள்ள விதவைகள், ஆதரவற்ற ஏழை முதியோர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக அதிகாரிகளால் கணக்கெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் பாப்பாத்தி அம்மாள் போன்றவர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள சொல்லி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ராமநத்தம் இந்தியன் வங்கிக்கு அவரது பெயருக்கு 29 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளோம். அவரோ, "நான் ஒரு தொழுநோயாளி. நான் கம்பி, கல், சிமெண்டு, வாங்கி கொத்தனார் பிடித்து எப்படி வீடு கட்ட முடியும்' என்று மறுத்துள்ளார். ஒன்றிய அதிகாரிகள் அவர் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்ட பணத்தை எடுத்து செலவு செய்துவிடுவாரென்று, அவர் வீடு கட்டி முடிக்கும்வரை அவர் வங்கிக்கணக்கை முடக்கி வைக்கும்படி வங்கி மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்''’என விவரம் கூறினர்.
அவருக்கு கிடைக்க வேண்டிய முதியோர் உதவித்தொகையை எப்படித்தான் பெறுவது என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, "பாப்பாத்தியம்மாளுக்கு சேரவேண்டிய அரசு உதவித்தொகை கிடைக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவரிடமிருந்து வீடு கட்டச்சொல்லி வங்கிக்கு அனுப்பியுள்ள பணத்தை மட்டும் நிறுத்தி வைத்துவிட்டு, பாப்பாத்தி அம்மாள் சொந்த வரவு-செலவு கணக்கிலுள்ள பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்குமாறு பரிந்துரைக் கடிதம் வாங்கி வந்து கொடுங்கள். அதை நாங்கள் பரிந்துரை செய்து வங்கி மேலாளருக்கு அனுப்புவோம்'' என விவரம் கூறினர்.
விக்கிரமாதித்தன் வேதாளம் கதைபோல நாமும் விடாமல் அடுத்தகட்டமாக வெங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாரிடம் பாப்பாத்தி அம்மாள் படும் கஷ்டத்தை எடுத்துக்கூறி, அவருக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் அளிக்குமாறு கேட்டோம். மாதங்கள் ஆனபோதும் ஒன்றிய அலுவலகத்திலிருந்து பரிந்துரை கடிதம் வந்துசேரவில்லை. நாம் பஞ்சாயத்து கிளார்க் வீரமணியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, "நான் பரிந்துரைக் கடிதம் கொடுத்துவிட்டேன்'' என்றார் .
இரண்டு மாத இழுத்தடிப்புக்குப் பிறகு ஊராட்சி மன்றத் தலைவரின் பரிந்துரைக் கடிதம் ஒருவழியாக ஒன்றிய அலுவல கத்திற்கு சென்று சேர்ந்தது. மீண்டும் நாம் ஆணையரைச் சென்று சந்தித்தோம். அவர், பாப்பாத்தி அம்மாள் சொந்த கணக்கிலுள்ள பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு ராமநத்தம் இந்தியன் வங்கி மேலாளருக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு பாப்பாத்தி அம்மாளை ஒரு ஷேர் ஆட்டோவில் ராமநத்தம் இந்தியன் வங்கிக்கு அழைத்துச்சென்றோம். அன்று மேலாளர் பாலதண்டாயுதம் வரவில்லை. உதவி மேலாளர் மட்டுமே இருந்தார். அவரிடம் கடிதத்தைக் கொடுத்தோம். கணினியில் தேடிப் பார்த்துவிட்டு, "பாப்பாத்தி அம்மாவுக்கு வீடு கட்ட இரண்டு முறை பணம் அனுப்பியுள்ளனர். ஒருமுறை அனுப்பப்பட்ட பணத்தை மட்டுமே நிறுத்தி வைக்குமாறு ஆணையர் கடிதம் கொடுத்துள்ளார். இரண்டாவது தவணை அனுப்பப்பட்ட பணத்தையும் நிறுத்திவைக்குமாறு ஆணையரிடமிருந்து கடிதம் வாங்கி வந்தால் மட்டுமே பாப்பாத்தி அம்மாவுக்கு சேரவேண்டிய முதியோர் உதவித் தொகை பணத்தை எடுப்பதற்கு அனுமதிக்க முடியும்'' என்று கறாராகக் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நாம், வங்கி உதவி மேலாளரிடம் விவாதம் செய்தோம். "ஒரு ஒன்றிய ஆணையர் ஒரு தனிப்பட்ட நபரின் வங்கிக் கணக்கை முடக்கிவைக்குமாறு உத்தரவிட்டால் அதை நிறைவேற்ற உங்கள் வங்கிச் சட்டத்தில் இடமுண்டா? உங்கள் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளீர்களா? வயதானவர்களை ஏன் இப்படி போட்டு வதைத்து வருகிறீர்கள்'' என்று கேட்டோம். அவர் பதில் சொல்லமுடியாமல் திணறினார்.
ஒன்றிய ஆணையர் சிவகுருவை வங்கியிலிருந்தபடியே தொடர்புகொண்டோம். நிலவரத்தை விளக்கமாக எடுத்துக்கூறினோம். அவர் இன்னொரு பரிந்துரைக் கடிதம் தர தயாராக இருக்கவே, பாப்பாத்தி அம்மாளை வங்கி வாசலிலேயே இருக்குமாறு கூறிவிட்டு, மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று இன்னொரு பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுவந்தோம். இத்தனைக்கும் பிறகே, பாப்பாத்தி அம்மாளுக்கு சேரவேண்டிய 16 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்தது. ஆனந்தக் கண்ணீர் வடித்த அவரை ஷேர் ஆட்டோ மூலம் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்தோம்.
இது ஒரு பாப்பாத்தி அம்மாளுக்கு மட்டும் நேர்ந்த சம்பவமல்ல. மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் 66 கிராம ஊராட்சிகளும் அதனைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட துணை கிராமங்களும் உள்ளன. இப்படி வீடு கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, கட்டிக்கொள்ள வசதியில்லாது பலர் தவிக்கிறார்கள். மங்களூர் ஒன்றியத்தி லுள்ள மங்களூர், ராமநத்தம், திட்டக்குடி, ஆவினன்குடி, கீரனூர் இப்படி பல்வேறு ஊர்களில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித் தொகை, நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலைசெய்ததற்கான கூலிப் பணம், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்குச் சேரவேண்டிய பணத்தைப் பெற முடியாமல் ஆயிரக்கணக்கான முதியவர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மங்களூர் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் தவித்துவருகிறார்கள்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் மேற்படி பயனாளிகளிடம் சென்று, உடனடியாக வீடு கட்டவேண்டும் இல்லை யேல் எங்களால் வீடு கட்ட முடியவில்லை என்று எழுதிக்கொடுங்கள். அந்த வீடு களை வேறு நபர்களுக்கு வழங்குகிறோம் என்று கூறி பயனாளிகளிடம் கைப்பட எழுதிவாங்கும் பணி நடைபெறுகிறது. இதன் மூலம் மாற்று நபர்களுக்கு அந்த வீடுகளைக் கொடுத்து அவர்களிடமிருந்து கணிசமான அளவு பணம் கறக்கும் நோக்கத்தில் உள்ளனர் சில அதிகாரிகள் என்ற புகாரும் எழுந்துள்ளது.
திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வும் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத் துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்ச ருமான சி.வி.கணேசன் கவனத்திற்குக் முதியோர்கள் படும் சிரமத்தை கொண்டு சென்றோம். அவர் கனிவோடு பிரச்சினை கள் முழுவதையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, "மாவட்ட ஆட்சியர் தலைமை யில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து ரெவியூ மீட்டிங் நடத்தி இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார். தமிழக அளவில் ஏழைப் பயனாளிகளுக்கு வீடு கட்டிக்கொடுப்பது சம்பந்தமாக உள்ள சிக்கல்கள் தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச்செல்லப் படும்'' என்றதோடு, நக்கீரனுக்கும் நன்றி தெரிவித்தார்.