பிரதமர் மோடி "கிசான் சம்மன் நிதி' திட்டத்தினை 2019-ஆம் ஆண்டு கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள ஐந்து ஏக்கருக்கு உட்பட்டு நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்பட்டது.
இதன்படி 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திட்டம் துவங்கப்பட்டு, முதல் தவணைத் தொகை பெற்ற விவசாயிகள் எண்ணிக்கை 11.84 கோடி அதன்பிறகு பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது. உதாரணத்திற்கு, ஆறாவது தவணைத் தொகை பெற்ற விவசாயிகள் எண்ணிக்கை 9.87 கோடி. ஏழாவது தவணைத் தொகை பெற்றவர்கள் 9.30 கோடி. எட்டாவது தவணைத் தொகை பெற்றவர்கள் 8.59 கோடி, ஒன்பதாவது தவணைத் தொகை பெற்றவர்கள் 7.66 கோடி, பத்தாவது தவணைத் தொகை பெற்றவர்கள் 6.34 கோடி, பதினோராவது தவணைத் தொகை பெற்றவர்கள் 3.78 கோடி.
இதேபோல் ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், தெலுங்கானா, திரிபுரா உட்பட இந்தியா முழுவதும் உள்ள பெரும்பான்மை மாநிலங்களில் தவணைத் தொகை பெற்ற விவ சாயிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வந்துள்ளது. தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு 46.5 லட்சம் விவசாயிகள் பலனடைந்தனர். 2022-ஆம் ஆண்டு 23.04 லட்சம் விவசாயிகள் மட்டுமே உதவித்தொகை பெற்றுள்ளனர். சத்தமில்லாமல் கொஞ்சம் கொஞ்ச மாக விவசாயிகளின் எண்ணிக் கையைக் குறைத்துக்கொண்டே வந்து, கழுதை தேய்ந்து கட்டெறும் பான கதையாக திட்டத்தை முற்றிலும் கைகழுவிவிடுவதே மத்திய அரசின் நோக்கம் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
இதுகுறித்து சேந்தமங்கலம் நாகப்பன், “"விழுப்புரம் மாவட்டத் தில் மட்டும் 36,000 விவசாயிகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய 12-வது தவணைத் தொகை கிடைக்கவில்லை. இதற்காக இ-சேவை மையங்களை நோக்கி என்னைப் போல் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் படையெடுத்து வருகிறார்கள். பிரதம ரின் கிசான் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட இணையதளத்தில் ஆவணங்கள் எல்லாம் சரியாகவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறார் கள். ஆனால் வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கு, நிலத்தின் சிட்டா ஆகியவற்றை இ-சேவை மையங்கள் மூலம் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடு கிறார்கள். இ சேவை மையங்களுக்கு சென்று கேட் டால், எல்லாம் சரியாக உள்ளது என்கிறார்கள். வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளை அலைக்கழிக்கும் நோக்கத்தில் இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இது என்னைப் போன்ற விவசாயிகளை ஏமாற்றும் செயல்''’என்கிறார்.
கெடிலம் மணிகண்டேனோ, "இந்தத் திட்டத் தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வேளாண்துறை அதிகாரிகள், அலுவலர்களின் உள்ளடி வேலை காரணமாக விழுப்புரம், கள்ளக் குறிச்சி, கடலூர் உட்பட 14 மாவட்டங்களில், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை போலியான நபர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி மோசடிசெய்தனர். இந்த மோசடி குறித்து வேளாண்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி பல கம்ப்யூட்டர் சென்டர்களை மூடி சீல்வைத்தார்கள். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 75,000 பேரின் வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக முடக்கிவைத்தனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் போலி நபர்களுக்கு பணம் அனுப்பப்பட்டது அதிகாரி களின் விசாரணையில் தெரிய வந்தது.
இப்படி மோசடி வழிகளில் பணத்தை விரய மாக்கிவிட்டு தற்போது உண்மையான விவசாயி களுக்கு உதவித்தொகை அனுப்பாமல் முடக்கிவைத் துள்ளனர். வேளாண்துறை அதிகாரிகள் வேண்டு மென்றே அலைக்கழிய விடுகிறார்கள்''’என்கிறார்.
திருநாவலூர் ஏழுமலை “"பிரதமர் மோடி யின் பேச்சு மட்டும் பகட்டாக உள்ளது. ஏற்கனவே வீட்டுச் சமையலுக்குப் பயன்படுத் தப்படும் எரிவாயு சிலிண்டருக்கு மானியத்தொகை வழங்குவதை சத்தமில்லாமல் நிறுத்திவிட்டார். அதேபோல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணத் தொகையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப் பட்டு விரைவில் சுத்த மாக நிறுத்திவிடுவார் கள். மத்திய அரசு திட்டமிட்டு செய்யும் நம்பிக்கை மோசடி இது''’என்கிறார்.
"காட்டிலும் மேட்டிலும் கரம் பிலும் பாடுபட்டு விளைய வைக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வில்லை. பாடுபட்டு விளைய வைத்து வெட்டி அனுப்பிய கரும்புக்கு பல நூறுகோடி ரூபாய் பணத்தை தனியார் சர்க்கரை ஆலைகள் பல ஆண்டுகளாகத் தராமல் எங்களை ஏமாற்றி வரு கின்றன. கஷ்டத்திலும் நஷ்டத்திலும் உழன்றுகொண்டிருக்கும் எங்களுக்கு பிரதமரின் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகை போதுமானதாக இல்லாவிட்டாலும் சிறிதளவு உதவி யாக இருந்தது. அதையும் நிறுத்திவிட்டார்கள். இதே நிலை நீடித்தால் என்னைப் போன்ற விவசாயிகள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நிகழும்''” என்கிறார் கடலூர் மாவட்டம் செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி
மேலும் அவர், “"வேளாண் துறை அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்தும் சரியான பதிலில்லாமல் பரிதவித்த என்னைப் பார்த்து பரிதாபப்பட்ட ஒரு வேளாண்துறை அலுவலர் ஒரு ரகசியத்தை போட்டு உடைத்தார்.
அவர் கூறியது இதுதான். "பிரதமரின் கிசான் திட்டத்தில் வேளாண்மைத்துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டரில் ஒவ்வொரு விவசாயி பற்றிய விவரம் ஏற்கனவே பதிவு செய்யப்ப ட்டுள்ளது. அந்தப் பதிவில் லேண்ட் செண்டிங் என்று ஒரு இடம் உள்ளது. அதில் "எஸ்' என்று குறிப்பிட்டிருந்தால் அந்த விவசாயிக்கு பணம் கிடைக்கும். அந்த இடத்தில் "நோ' என்று இருந்தால் பணம் கிடைக்காது. இந்த "எஸ்' என்ற ஆப்ஷனை மாற்றிவிட்டு நோ என்ற ஆப்ஷனை பதிவு செய்துள்ளனர். இணையதளத்தில் "எஸ்' என்ற ஆப்ஷனை பதிவுசெய்ய வேண்டு மானால் சென்னையில் உள்ள உயர் அதிகாரிகள் சம்பந்தப் பட்ட அந்த லாகினை ஓப்பன் செய்யவேண்டும். அதன் பிறகு வட்டார அளவிலுள்ள வேளாண் துறை அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் அந்த ஆப்ஷனை "எஸ்' என்று மாற்றி பணம் கிடைக்கச்செய்வார்கள். ஆனால் அந்த ஆப்ஷனை திட்டமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக் கையைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை. இதன்மூலம் விவசாயிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இறுதியில் முற்றிலும் நிறுத்திவிடுவார்கள்''”என்கிறார் கந்தசாமி.
பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பதுபோல் என்பார் கள். அப்படி பூப்போல வழங்கிவந்த குறைந்தபட்ச உதவித் தொகையையும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டு, விவ சாயிகளின் காதில் அந்தப் பூவை வைப்பதாகக் கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள்.