ம் நாட்டில் ஏமாற்றுவதொன்றும் அத்தனை சிரமமான விஷயமல்ல. நாளுக்கொரு ஃபைனான்ஸ் புரட்டு, சீட்டு மோசடி நடக்கும் நாட்டில் புதிது புதிதாக ஏமாற்றுவதற்கு தேவை கொஞ்சம் கூடுதல் புத்திசாலித்தனம்! நம் நாட்டில் மக்களுக்குக் கொஞ்சம் ஆசை அதிகம்! பிறகென்ன, ஏமாற்றவேண்டியதுதான்.

இப்படி தலையுமில்லாமல் வாலுமில்லாமல் நடுவிலிருந்து சொன்னால் விளங்காதுதான். கொளத்தூர் அன்னபூமலரைத் தெரியுமா உங்களுக்கு? அதுதான் பூம்புகார் நகர், 17-வது தெருவில் தட்டச்சு, ஜெராக்ஸ் கடை வைத்து நடத்துகிறாரே அவர்தான். கடைக்கு அடிக்கடி ஜெராக்ஸ்போட வந்துபோயிருந்தவர்தான் கிருத்திகா.

d

அடிக்கடி வந்துபோய் வாடிக்கையாளரான கிருத்திகா, ஒருநாள் முகம்மலர்ந்த புன்னகையோடு இப்படி ஒரு பிட்டைப் போட்டார்.

Advertisment

"நீங்க ஏன் தொழிலை விரிவுபடுத்தக்கூடாது?'’

"எங்கங்க அதுக்கெல்லாம் காசு வேணுமே'’என பூமலர் அலுத்துக்கொள்ள... "பிரதம மந்திரி வேலை உருவாக்கத் திட்டத்தின்கீழ் (டஙஊஏட) பெண்கள் சுயதொழில் தொடங்க, பாரதிய மகிளா வங்கியில் கடன்தருகிறார்களே'’-இப்படித்தான் அந்த உரையாடல் தொடங்கியது.

முதல்கட்டமாக கிருத்திகா யோசனைப்படி ஆன்லைன் விண்ணப்பம் போட்டுள்ளார். அதன்பிறகு 3 மாதம் கழித்து கிருத்திகா, "உங்களுக்கு ஐந்துலட்சம் லோன் கிடைத்துள்ளது'’என்று பூரிப்பாய்ச் சொல்ல, முகம் மலர்ந்த பூமலரிடம், “"அதுல ஒரு சிக்கல். நீங்க முன்பணமா ஐம்பதாயிரம் கட்டணும். அங்க ஆடிட்டரா இருக்கும் சுபாஷ் என்பவருக்கு போன் போட்டுத் தர்றேன், பேசுங்க'’என்றிருக்கிறார். லைனில் வந்த சுபாஷும், நம்பிக்கையளிக்கும் விதமாகப் பேசி, “"50 ஆயிரம் போட்டுவிடுங்க'’என்றிருக்கிறார். கிருத்திகா, பூமலர் இருவரும் சேர்ந்தே சுபாஷ் தொடங்கித் தந்த கணக்கில் ஐம்பதாயிரம் போட்டுவிட்டிருக்கின்றனர்.

Advertisment

ஐம்பதாயிரம் அனுப்பியும் ஏன் லோன் வரவில்லையென பூமலர், கிருத்திகாவைக் கேட்க, பாரதிய மகிளா வங்கியின் மேனேஜர் என்று சொல்லி சங்கீதா என்பவர் லைனில் வந்தார். “"கருப்புப் பணப் பிரச்சனை தொடர்பான ஒரு ஆர்.பி.ஐ. இன்ஸ்ட்ரக்ஷன் போய்க்கிட்டிருக்கு. உங்க லோன் பணம் அப்படியே பேங்க்ல இருக்கு'’என எதிர்முனையில் இருப்பவர் பேசி சமாளித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு பூமலருக்கு, மேனேஜர் சங்கீதாவிடமிருந்து போன் வருகிறது. "நீங்க இத்தனைநாள் காத்திருந்ததற்கு பலன் கிடைச்சிருக்கு. யூ.ஒய்.ஈ.ஜி.பி. திட்டத்தின்கீழ் உங்களுக்கு 21 லட்சம் கடன் அலாட் ஆகியிருக்கு. இந்தப் பணத்தைப் பயன்படுத்தணும்னா உங்க கணக்கில் ஒன்றரை லட்ச ரூபா இருப்பு வைக்கணும்கிறது வங்கி நிர்வாக விதி'’என்று சொல்ல, பூமலருக்கு மனதில் ஏதோ ஒரு உறுத்தல்.

d

இதற்கிடையே ஜி-மெயில் மூலம் பூமலரின் வங்கிக் கணக்குக்கு லோன் தொகை இரண்டு தவணையாக சாங்ஷன் ஆகிவிட்டதாக தகவல் வந்திருக்கிறது. மீண்டும் மீண்டும் பணம் கேட்டபடியே இருந்ததால் பூமலர் தயங்க... "என்ன சந்தேகமா, இதோ மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி மேடம் தற்செயலா இந்தப் பக்கம் வந்திருக்காங்க, பேசுங்க'’என்கிறார் சங்கீதா. போனில் பேச்சு நடக்கிறது.

கலெக்டரே பேசிட்டார் அப்புறமென்ன என, ஏற்கனவே போட்ட ஐம்பதாயிரம் போக, மீதி ஒருலட்ச ரூபாயை அந்தக் கணக்கில் செலுத்தியிருக்கிறார். இப்போது லோன் தொகையை பயன்படுத்துவதற்கு இறுதியாக ஒரு இருபதாயிரம் ரூபாயைச் செலுத்தவேண்டுமென சங்கீதா போனில் தெரிவித்திருக்கிறார். சந்தேகம் தாளாமல் அண்ணாசாலை பாரதிய மகிளா வங்கிக்கே கிளம்பிவிட்டார் பூமலர்.

அங்கே இருந்த அதிகாரிகள், "1-04-2017-லேயே பாரதிய மகிளா வங்கியை ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட்டனர். எங்கள் வங்கியிலிருந்து உங்களுக்கு லோன் எதுவும் தருவதாகச் சொல்லவில்லை. நீங்கள் ஒரு ஏமாந்த சோணகிரி' என்பதை நாசூக்காகத் தெரிவித்துள்ளனர்.

இதுவரை தொடர்புகொண்டு பேசிய சுபாஷ், சங்கீதாவுக்கு போன் செய்தால் அவர்களது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கிருத்திகா வீட்டுக்குச் சென்று பூமலர் கதறியழ, "போலீஸ் கீலிஸ்னு போகாதீங்க. நானே உங்க பணத்தை வாங்கித்தருகிறேன்' என உத்தரவாதம் கொடுத்துள்ளார். உத்தரவாதம் மட்டும்தான்...…பணம் கொடுக்கவில்லை.f

d

கடைசியில் தான் ஏமாற்றப்பட்டதையறிந்த அன்னபூமலர், ""என்னைப்போல நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். தற்போதும் இந்த கிருத்திகா, பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வீடு வாங்கித் தருவதாக எல்லோரிடமும் பணத்தை வாங்கிக்கொண்டு திரிகிறார்''’என குமுறுகிறார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளியிடம் பேசியபோது, “""நிச்சயமாக அது என் கையெழுத்தே இல்லை. பேசியதும் நானில்லை. மாவட்ட ஆட்சியர் கையெழுத்தைப் போடுமளவு துணிந்தவர்களை நிச்சயமாக சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவேன்''’என்றார்.

கிண்டியிலுள்ள சிறுதொழில் வட்டார கூடுதல் இயக்குநர் தயாவோ, ""செட்டப் செய்து ஏமாற்றியிருக்கின்றனர். அதற்காகத்தான் எங்கள் வெப்சைட்டில் இடைத்தரகரை நம்பவேண்டாமென தெளிவாகத் தெரிவித்துள்ளோம்''’என்கிறார்.

ஒரு அன்னபூமலரின் காதில் பூசொருகியவர்கள், தற்சமயம் வேறொரு அமுதாவுக்கு அல்வா கிண்டிக்கொண்டிருக்கலாம். காவல்துறை இவர்களை எப்போ கைதுசெய்து...…மக்களே உஷாரா இருந்துக்கோங்க!

-அ.அருண்பாண்டியன்