கடவுளின் கருவறையிலேயே சாதி ஏற்றத்தாழ்வு கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தைத் தகர்த்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக கருவறைக்குள் போகும் உரிமையை பெறவேண்டும் எனப் போராடியவர் பெரியார். அவர் இருக்கும்போதே அதற்கான சட்டத்தைக் கொண்டுவந்தார் அப்போதைய முதல்வர் கலைஞர். ஆனால், நீதிமன்றத் தடைகளால் அது நிறைவேறவில்லை. "இது என் நெஞ்சில் குத்திய முள்ளாக இருக்கிறது' என்ற பெரியார் 1973-ல் மறைந்தார்.
அந்த முள்ளை எடுப்பதற்காக 2006-ல் முதல்வரான கலைஞர், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து, அதன் அறிக்கைப்படி, "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்கிற அரசாணை வெளியிட்டு அதனை சட்டமாக்கினார். சைவ -வைணவ ஆகம முறைகளைக் கற்றுத் தருவதற்காக 6 இடங்களில் பயிற்சி மையங்கள் 2007 மே 11-ந் தேதி தொடங்கப்பட்டன. பல சாதிகளைச் சேர்ந்த 240 இளைஞர்கள் ஆர்வமாக சேர்ந்து படித்தனர். ஆகமங்கள் பயிற்றுவிக்கப்பட்டு எழுத்துத்தேர்வு, செயல்முறை தேர்வு நடந்து அதில் 206 பேர் தேர்ச்சி பெற்றபின் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய தீட்சை தந்தனர்.
2007-ஆம் ஆண்டு அனைத்து சாதியினருக்கான சட்டம், அரசாணையை எதிர்த்து மதுரை "ஆதி சைவ சிவாச்சாரியர்கள் சங்கம்' உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கியதால், பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகராக்க முடியவில்லை. 2015 டிசம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்பில், சில குழப்பங்கள் இருந்தாலும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதா அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை. அவர் மறைவுக்குப் பின் 2018-ஆம் ஆண்டு, மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்துக்குட்பட்ட ஒரு கோயிலில் மாரிச்சாமி என்கிற அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவரையும், 2020-ஆம்ஆண்டு மதுரை நாகமலை பிள்ளையார் கோயிலில் தியாகராஜன் என்ற மாணவரையும் பெயரளவுக்கு பணி நியமனம் செய்தது எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. அரசாங்கம்.
அதேநேரத்தில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆகமப் பயிற்சி முடித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்படுவார்கள்' என்று வாக்குறுதி தந்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். பதவிக்கு வந்து 100-வது நாளான ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று, அர்ச்சர்கள், ஓதுவார்கள், வாத்தியங்களை இசைப்போர், மடப்பள்ளி, மற்ற பணியென 208 பேருக்கு பணி ஆணை வழங்கினார் ஸ்டாலின். சென்னை கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் குன்றக்குடி பொன்னம்மபல அடிகளார், திருப்போரூர் சாந்தலிங்க அடிகளார் கலந்துகொண்டனர்.
அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற அரசாணைப்படி, பட்டியலினத்தவர் 5 பேர், பிற்படுத்தப்பட்டோர் 12 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த 6 பேர், பொதுப்பிரிவில் ஒருவர் என இங்கும் சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 58 பேரில் 24 அர்ச்சகர்கள் கலைஞர் அரசு கொண்டுவந்த ஆகமப்பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள். மீதி 34 பேர், தனியார் பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள். நியமிக்கப்பட்ட 19 ஓதுவார்களில் தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவார் சிவ.சுஹாஞ்சனா என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியின் செஞ்சுரி நாளில் ஸ்டாலின் அரசு அடித்த சிக்ஸராக இது அமைந்தது.
இதுகுறித்து அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர் சங்க தலைவரான அரங்கநாதனிடம் பேசியபோது, "தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் கோயில்களில் பணி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளார் முதலமைச்சர். பெரியாரின் இதயத்தில் இருந்த முள்ளை நீக்கி அவரின் துயரத்தைப் போக்கியுள்ளார். எனினும் இதனை முழுமையாக கொண்டாடவிடுவார்களா என்கிற ஏக்கமும் உள்ளது. காரணம், ஆகம விதிகள் அனைத்தும் அறிந்தவர்கள் என்பதாலே, பயிற்சிப் பள்ளியில் படித்தவர்களும் கோயில்களில் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஒவ்வொரு கோயில் சார்பிலும் விளம்பரம் தரப்பட்டது. சேலம், ஆத்தூர், திருப்பூர், திருச்செந்தூர், மதுரை, திருச்சி போன்ற கோயில்களில் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்கச் சென்ற பிராமணர் அல்லாத சாதியினரை அந்த கோயிலில் உள்ள பிராமண சாதியை சேர்ந்த அர்ச்சகர்கள் மிரட்டி துரத்தினர். போராடித்தான் விண்ணப்பிக்கச் செய்தோம். விளம்பரங்கள் வெளி வந்தபோதே ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, "இருக்கும் நிலையே தொடரவேண்டும்' என்கிற உத்தரவு வாங்கி வைத்துள்ளார். அதை யெல்லாம் கடந்துதான் பணி நியமன ஆணை வழங்கியுள்ளார் முதலமைச்சர். எங்கள் கோரிக்கை யின்படி, ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் நாகநாதசுவாமி கோயில், குமாரவயலூர் சுப்பிரமணியசாமி, மதுரை நாச்சடை கோயில்களிலும் பிற சாதியினரை அர்ச்சகராக்கி ஆணை வழங்கியுள்ளது அரசு. தடைகளையும் இடையூறுகளையும் முதல்வர் வெல்வார் என்கிற நம்பிக்கையுள்ளது'' என்றார்.
"அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களில் 35 வயதை கடந்தவர்கள் பலர் உள்ளனர். வயது தளர்வு வழங்கி அவர்களுக்கும் பணி வழங்கவேண்டும், பெண் அர்ச்சகர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்கிற வேண்டுகோள் பலதரப்பாலும் வைக்கப்படுகிறது.
பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை கலைஞர் நீக்க முயன்று இறுதியில் மு.க.ஸ்டாலின் நீக்கி வெற்றி பெற்றுள்ளார்.