தென்காசி மாவட்டப் பஞ்சாயத்துக்களின் (ஊராட்சிகளின்) கவுன்சில் கூட்டத்தில் சர்வ அதிகாரத்தையும் கையிலெடுத்துக்கொண்டு எல்லைதாண்டி செயல்பட்டிருக்கிறார் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவி. தென்காசி மாவட்டப் பஞ்சாயத்துக்களின் கூட்டம் 6.07.2022 அன்று நடந்திருக்கிறது. அந்தக் கூட்டத்தில் நிதிப்பங்கீடு பற்றிப் பேசியிருக்கிறார்கள் உறுப்பினர்கள்.
இந்த விவாதம் முடிந்து அடுத்த சப்ஜெக்ட்டிற்கு வந்திருக்கிறார்கள். 2021- 22-ஆம் ஆண்டு 15-வது மத்திய நிதிக்குழு மானியத்திலிருந்து மாவட்டப் பஞ்சாயத்து வளர்ச்சிக்காக புதிய பணிகளை மேற்கொள்கிற வகையில் 5.75 கோடி நிதி மாவட்டப் பஞ்சாயத்திற்கு வந்திருப்பதை அறிவித்த தலைவி, வார்டுகளின் பணிக்காக அந்த நிதியிலிருந்து, 12 உறுப்பினர்களுக்கு தலா 31 லட்சம் வரை ஒதுக்கியிருக்கிறார்.
6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான கனிமொழி, "நிதியில் எங்களுக்கு 31 லட்சம் வீதம் ஒதுக்கியிருக்கீக. சேர்மனுக்கும், வைஸ்சேர்மனுக் கும் எவ்வளவு?''’என்று கேட்டதில், "எனக்கு 1 கோடியும், வைஸ்சேர்மனுக்கு 80 லட்சமும் எடுத்திருக்கோம்' என்று தலைவி தமிழ்ச்செல்வி பதிலளித்திருக்கிறார்.
"போன முறை 46 லட்சம், இப்ப 1 கோடின்னு மொத்தம் 1.46 கோடி பெரிய தொகையை நீங்க எடுத்துக்கொண்டு, எங்களுக்கு 31 லட்சம்மட்டும் கொடுத்தால் எங்களின் வார்டுகளில் எந்தப் பணிகளை மேற்கொள்வது. மக்கள் பணிக்கான நிதி சரிசமமாகப் பிரிக்கப்படவேண்டும்''’என்று சொல்ல, அரங்கம் பரபரப்பானது.
கடந்த மார்ச் மாத மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இடைச் செருகலாக, தனது வார்டுகளின் கிணறுகள் தோண்டும் பணிக்காக 1.71 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தீர்மானங்களின் ஊடே எழுதி நிறைவேற்றப்பட்ட விவகாரம் கவுன்சிலர்களுக்குத் தெரியவர, மன்றக் கூட்டத்தில் அந்த விவகாரமும் புயலைக் கிளப்பியது.
2-ஆவது வார்டு தி.மு.க. கவுன்சிலரான மதிமாரிமுத்து, “"போன தடவ தலைவி முறைகேடா கவுன்சிலர்களுக்குத் தெரியாம தனக்குப் பெரிய அளவுல நிதி ஒதுக்கிட்டாகன்னு எங்களோட சேர்ந்து போராடுன துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், தலைவி அதிக நிதி ஒதுக்குனதால சைலண்டாகி, தலைவிக்கு ஆதரவாயிட்டார்''’ என்றார் வேதனையோடு.
கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவி தமிழ்ச்செல்வியிடம் பேசியபோது, "எனது வார்டு மக்கள், நிவாரணப் பணிகளைச் செய்து கொடுங்கள் என்று கேட்டார்கள், எடுத்தேன். துணைத்தலைவர் தன்னோட வார்டு பணிகளுக்குக் கேட்டதால், அவருக்கு 80 லட்சம் கொடுத் தேன்''’என்று சமாளித்தார்.