கடவுளை நம்பும் அனைவருக்கும், சாமியார்கள் என்றாலே ஒரு பிம்பம் இருக்கும். அதிலும் அற்புதங்கள் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்கும் சாமியார்களுக்கான மவுஸே தனி. குருவி உட்கார பனம்பழம் விழுவதுபோல், சாமியாரைப் பார்த்த நேரம் நம் பிரச்சனைகளில் ஒன்று தீர்ந்தாலும் அவரை கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்திவிடுவார்கள் பலர்.
என்னதான் மக்கள் அவரை கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்தினாலும், மக்கள் விரோதச் செயல்களால் எத்தனையோ போலிச் சாமியார்கள் குற்றவாளிகள் பட்டியலுக்கு இடம்மாறியிருக் கிறார்கள். திருச்சியில் அப்படி ஒரு சாமியார், இப்போது குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். அந்த தேஜஸ் சுவாமிகளின் லீலை களை இங்கே பார்ப்போம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகரம் முதல் புறநகர் வரையுள்ள காவலர் ளின் செல்போனில் பெரு வாரியாகக் கேட்கப்பட்ட ஆடியோ இவருடை யதுதான். திருச்சி அல்லித்துறையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிக்கும், வழக்கறிஞர் கார்த் திக்குக்கும் இடையி லான கலந்துரை யாடல் அம்பலமாக, தமிழக காவல்துறை அவர்களை விசாரித்து வழக்குப் பதிந்துள்ளது.
அந்த ஆடியோவில் வழக்கறிஞர் கார்த்திக் என்பவரைத் தொடர்புகொள்ளும், தேஜஸ் சுவாமி, தான் ஒரு பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் பேச்சுவாக்கில் திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களின் ஹிட் லிஸ்ட் ரெடி ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 42 பேர் என்கவுண்ட்டர் பட்டியலில் உள்ளனர். அதில் திருச்சி மற்றும் தஞ்சை பகுதிகளில் 12 பேர் இடம் பெற்றுள் ளார்கள். உங்களுடைய ஆட்களும் அதில் இருப்பதாகக் கூறினார்கள்.
அப்படி யாராவது இருந்தால் முன்கூட்டியே சொல்லிவிடுங்கள். நான் டிபார்ட்மெண்டில் பேசி அவர் பெயரை நீக்கிவிடுகிறேன் என்று சொல்கிறார்.
அதில் சத்யா என்ற பெயர் அடிபடுவதாகத் தெரியவந்தது. அவருக்கு வேண்டிய சிலர் அவரது பெயரை நீக்கவேண்டுமென என்னிடம் கூற, "நான் டெல்லியில் பேசியிருக்கிறேன். அவர் அங்கிருந்து திருச்சி மாநகர ஆணையரிடம் பேசிவிடுவார். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் முன்கூட்டியே கூறுங்கள். அவர் களுடைய பெயரை நீக்கிவிடுகிறேன்''’என்று வழக்கறிஞர் கார்த்திக்கிடம், தன் செல்வாக்கை ஜம்பமடிக்கும் ஆடியோ நீண்டுகொண்டே போகிறது.
இந்த விவகாரம் பரபரப்பானதும் காவல்துறையினர் சாமியாரை அழைத்து விசாரணை நடத்தி அனுப்பியுள்ளனர். ஆனால் அவர்கள் பேசிய அந்த ஆடியோவில் இடம்பெற்ற மற்றொரு ரவுடியான கொட்டப்பட்டு ஜெய் என்பவர், சாமியாரின் சர்ச்சைப் பேச்சால் தலைமறைவானார். கடந்த 27.6.2021 அன்று அரசு மதுபானக் கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி அத்துமீறி உள்ளே நுழைந்த ஜெய் மற்றும் அவரது சகோதரர் ராஜ்குமார் இருவர் மீதும் பொன் மலை காவல்நிலையத்தில் ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 20.07.2021 அன்று சாட்சிகளை கலைக்க முயன்றதோடு, கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால், காவல்துறையினர் ஜெய்யை தேடி வருகின்றனர்.
காவல்துறை மீண்டும் தேஜஸ் சுவாமியை கைது செய்து விசாரணை ஆரம்பித்த நிலையில், இதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் கார்த்திக்கையும் காவல்துறை தனிப்படை விசாரணைக்காக அழைத்துள்ளது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற பலகட்ட விசாரணையில், தேஜஸ் சுவாமிக்கு தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதாம். மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளின் பெயர்களை விசாரணையில் அவர் கூறியதாகவும் தெரிகிறது.
தற்சமயம் அவர் கொடுத்த அனைத்து தகவல்களையும் முழுமையாக பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. பலகட்ட விசாரணைக்குப் பிறகு இருவர் மீதும் 6 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு ஆகியுள்ளது.
ரவுடி ஜெய், சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து அரசியல் மற்றும் காவல்துறையினரிடம் செல்வாக்கு உள்ளதுபோல உரையாடியது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியதோடு, பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உண்மையிலேயே என்கவுன்ட்டர் பட்டியலில் உள்ளவர்களைக் காப்பாற்ற பேரம் பேசுவதற்காக சாமியார் பேசினாரா?… இல்லை தனக்கு எத்தனை தூரம் மேல்மட்ட ஆட்கள் பழக்கம்,… தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என காட்டுவதற்காக பேசினாரா என்பது உறுதியாக நிலையில் தற்போது ஆசிரமத்துக்கும் காவல் நிலையத்துக்குமாய் நடையாய் நடந்துகொண்டிருக்கிறார் தேஜஸ் சாமியார்.
என்கவுன்ட்டர் லிஸ்டில் இருப்பவர்களைக் காப்பாற்றுவதாகச் சொன்னவர், தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாரா பார்க்கலாம்!