லங்கையின் போர்ச் சூழலால் தமிழகத்தில் அகதிகள் வந்து குவிந்த காலகட்டத்தில் மெசஞ்சர்ஸ் ஆப் ஜீசஸ் சபையின் அருட்தந்தை மரிய நாயகம், திருச்சி கே.கே. நகர் பகுதியில் அக்ரோ ஹீயூமன் டெவலப்மெண்ட் வெல்பர் சொசைட்டி என்ற பெயரில் ஒரு ட்ரஸ்டை ஆரம்பித்து இலங்கைத் தமிழர் களுக்காக தொண்டு செய்துவந்தார். இங்குள்ள தமிழர்களுக்கும், இந்தப் பகுதியிலுள்ள ஏழை மக்களுக்கும் கைத்தொழில், கல்வி ஆகியவற்றுக்கான வசதிகளை செய்து தந்தார்.

trust

Advertisment

1996-ல் சொசைட்டியின் நிறுவனர் மரியநாயகம் இறந்தபிறகு அருட்பணி செய்த இலங்கையைச் சேர்ந்த அருட்சகோதரி ஸ்டெல்லாமேரி முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். திருச்சி நாகமங்கலம் பகுதியில் நாசரேத்தில் 100 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் வாங்கப்பட்டு, அதில் விவசாயப் பணிகள் செய்து அதை நம்பி சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த இல்லத்தை ஆக்ரமிப்பு செய்ய முயற்சி நடப்பதாக புகார் வரவே... விசாரணை செய்தோம். அருட்சகோதரி ஸ்டெல்லாமேரி, “"கடந்த 2019-ஆம் ஆண்டோடு இந்த இல்லத்தின் பதிவு எண் காலாவதி யானதால், செயிண்ட் மேரீஸ் நர்சரி ஆரம்பப் பள்ளியை நடத்த முடியாமல் தற்காலிக மாக இதை மூடி வைத்துள்ளோம். பள்ளியின் உரிமம் உள்ளிட்டவற்றை புதுப்பிப்பதற்கான அனைத்து பணிகளையும் செய்ய சாம் என்பவரை நியமனம் செய்திருந்தோம். அவர்மூலம் அறிமுகமான வழக்கறிஞர் ராமச்சந்திரன், இந்தப் பள்ளியின் அரசு உரிமம், இல்லம் நடத்துவதற்கான உரிமங்களை பெற்றுத் தருவார் என எதிர்பார்த்த நிலையில்... தன்னுடைய டிரஸ்ட் சார்பில் ஏழைப் பெண்களுக்கு இலவச கணினிப் பயிற்சி, தையல் பயிற்சி, தட்டச்சுப் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியதால், சில நிபந்தனைகளுடன் எங்களுடைய பள்ளியில் 2 அறைகளை அவருக்கு ஒதுக்கிக் கொடுக்க சம்மதித்தேன்.

Advertisment

tt

பள்ளிக்கான உரிமம் கிடைத்து விட்டால் உடனே பள்ளியைத் தொடங்குவோம். அப்போது எந்தவிதத்திலும், தாங்கள் வழக்கு தொடரவோ, பிரச்சனை செய்ய வோ கூடாது என்ற நிபந்தனையுடன் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 2020, அக்டோபர் 2-ஆம் தேதி தொடக்கவிழாவை நடத்தியவர், 2021 ஜூலை மாதம் இறுதிவரை எந்த பயிற்சியும் நடத்தவில்லை. பிறகு தன்னுடைய டிரஸ்ட் பதிவு மூலம் இல்லம் நடத்தும்படி கேட்டார். நான் மறுத்துவிட்டேன்.

அத்துடன் நிறுத்தாமல் இவர் தன்னை இந்த சொசைட்டியில் உறுப்பினராகச் சேர்க்கவேண்டும் என்று என்னிடம் கேட்டார். அதற்கும் மறுத்துவிட்டேன். அதன்பிறகுதான் பிரச்சனை ஆரம்பமாகியது. 2021 ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியோடு அவர் போட்ட 11 மாத கால ஒப்பந்தம் முடிந்த நிலையில், அவருடைய பயிற்சி வகுப்புகளை ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஆரம்பித்தார். காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் கொடுத்தோம். ஆனால் அவர் 10 வருடங்கள் இங்கே இருக்கப்போவதாக சொன்னார். மிரட்டல் தொனி தெரிந்தது.

trustஅப்போதிருந்தே காவல்துறையினர் மூலம் எங்களுக்கு பல நெருக்கடிகளைக் கொடுப்பதுடன், இந்த வளாகத்தில் மசாஜ் சென்டர் வைத்து நடத்துவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பள்ளி, இல்லம் அடங்கிய வளாகங்களை காவல்துறையினர் உதவியோடு பூட்டி வைத்துவிட்டார். எங்கள் மீது திருட்டு வழக்கு போடப்பட்டது. தேடப்படும் குற்றவாளிகளாக, எங்களை மாற்றி அவரே ஆட்களை வைத்து அவருக்கு என்று வாடகைக்கு கொடுத்த அறையின் பூட்டை உடைத்து பொருட்களைத் திருடிவிட்டு, நாங்கள் அவருடைய அறையிலிருந்து ரூ.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிவிட்டதாகவும், இடத்தைக் காலி செய்ய வேண்டுமென்றால் நஷ்டஈடாக ரூ.10 லட்சம் தரவேண்டும் என்றும் படாதபாடு படுத்தி விட்டார்''’என்கிறார்.

வழக்கறிஞர் ராமசந்திரனின் தரப்பைக் கேட்டபோது, "10 வருடத்திற்கு அந்த இடத்தைக் கேட்டேன். முதலில் தர மறுத்துவிட்டார்கள். பிறகுதான் 11 மாத கால வாடகைதாரராகச் சென்றேன். அதிலும் நானாக அவர்களிடம் செல்லவில்லை, அவர்கள்தான் என்னைத் தேடிவந்தார்கள்.

அவர்களது எல்லா பிரச்சனைகளையும் முடித்துக் கொடுத்தேன். அவர்களோ எனக்கு வாடகைக்குக் கொடுத்த அறையிலிருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திருடிவிட்டனர். ரவுடி பட்டறை சுரேஷின் கூட்டாளியான மணிகண்டன் என்ற ரவுடியை வைத்து என்னை மிரட்டினார்கள். நான் என்னுடைய மனைவியின் பெயரையோ வேறு பெயர் சொல்லியோ மிரட்ட வில்லை''’என்றார்.

ஆளுங்கட்சி செல்வாக்கை ராமச்சந்திரன் பிரயோகிப்பதாக ஸ்டெல்லாமேரியும், ஒப்பந்த மீறலுடன் பொருட்களைத் திருடிவிட்டதாக ராமச்சந்திரனும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகிறார்கள். மாணவ-மாணவிகள், விவசாயக் குடும்பங் கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இப் பிரச்சினையில் காவல்துறை, நீதித்துறை தலையிட்டு நியாயமாகத் தீர்வுகண்டால் மட்டுமே ஏழைக் குடும்பங்களுக்கு வழிபிறக்கும்.