ஜெயா டி.வி.யும் "நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழும் அ.ம.மு.க.வின் அதிகாரப்பூர்வமாகி விட்டதால், தங்களுக்கான டி.வி.யையும் நாளிதழையும் ஆளும் அ.தி.மு.க.வினர் உருவாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆளும் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.சை நிறுவனர்களாகக் கொண்டு "புரட்சித் தலைவி நமது அம்மா' இதழ் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.
கடந்த வாரம் சென்னை -கலைவாணர் அரங்கில் "நியூஸ் ஜெ.' என்ற பெயரில் டி.வி. சேனலின் தொடக்க விழா நடந்தது. இப்போது செய்திகளின் முன்னோட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் முதல் நிரந்தரமாகுமாம்.
இந்த "நியூஸ் ஜெ.' சேனலுக்கு ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும் ஐம்பது விழுக்காடு முதலீடும், அமைச்சர்கள் வீரமணி, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகிய நால்வரும் ஐம்பது விழுக்காடு முதலீடும் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
"நியூஸ் ஜெ.'யின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன். இதுவரை தம்பியின் நிழலாக இருந்தவர் இப்போது முன்னணியில் நிறுத்தப்பட்டிருப்பதாக விழுப்புரம் அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
இது ஒருபுறம் எனில், இன்னொரு புறம் விழுப்புரம் அ.தி.மு.க.வின் இந்நாள் மா.செ. குமரகுருவுக்கும் முன்னாள் அமைச்சரும், மா.செ.யும் இப்போது அமைப்புச் செயலாளர் பதவி பெற்றவருமான மோகனுக்கும் மல்லுக்கட்டுத் தொடங்கிவிட்டது.
அமைப்புச் செயலாளர் பதவியோடு 15.9.18 அன்று கள்ளக்குறிச்சியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தார் மாஜி மோகன். அவரை வரவேற்க, தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஒ.செ.க்களில் ஒருவரான தியாக துருவம் அய்யப்பன் மட்டுமே வந்தார். மற்ற ஒ.செ.க்கள் சிட்டிங் மா.செ. குமரகுருவின் ஆதரவாளர்கள்.
மாஜி மோகனுக்கு பதவி தரக்கூடாது என எடப்பாடியிடம் எவ்வளவோ போராடிப் பார்த்தார் குமரகுரு.
""உங்க மாவட்டக் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, இப்போது டி.டி.வி. தினகரனிடம் போகக் காரணமே நீங்கதான். பிரபு போன்றவர்களை மீண்டும் கட்சிக்கு அழைத்து வர வேண்டுமென்றால், மோகன் போன்றவர்களுக்கு பதவி தந்தாக வேண்டும்'' என்று முகத்துக்கு நேராகக் கூறிவிட்டாராம் எடப்பாடி. மனம் நொந்து திரும்பியுள்ளார் குமரகுரு.
""எம்.எல்.ஏ. பிரபுவை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு கொண்டுவரும் பணியை முன்னாள் அமைச்சர் மோகனிடம்தான் இ.பி.எஸ். ஒப்படைத்திருக்கிறார்'' என்கிறார்கள் மாஜியின் ஆதரவாளர்கள்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வில் மல்லுக்கட்டுகள் வேகம் பிடிக்கின்றன.
-எஸ்.பி.சேகர்