""தினகரன் கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்தார். "பொறுமையாக இரு. நான் உரிய நேரத்தில் திவாகரன் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன்' என தினகரனிடம் சசிகலா சொல்லியனுப்பினார்'' என நக்கீரன் ராங்-கால் பகுதியில் செய்தி வெளியான அடுத்த நாளே ""எனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது. திவாகரனுக்கு சசிகலா தடை'' என அறிக்கை ஒன்றை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கை சசிகலா குடும்பத்தை இரண்டாகப் பிளந்திருக்கிறது என்கிறது மன்னார்குடி வட்டாரம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sasi-family_0.jpg)
""சசிகலா யார், எதை சொன்னாலும் நம்பி விடும் எடுப்பார் கைப்பிள்ளை. சசிகலா சிறையில் ஒரு இருட்டறையில் இருக்கிறார். அரசியல் அனுபவமே அவருக்குக் கிடையாது. அ.தி.மு.க.வில் தற்பொழுது நடப்பது எதுவும் அவருக்குத் தெரியாது. தினகரன் உருவாக்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெயர் மற்றும் செயல்பாடுகள் எதுவுமே அவருக்குத் தெரியாது. இனிவரும் காலங்களில் சசிகலா பொதுச் செயலாளராக இருக்க மாட்டார். சசிகலாவை டம்மியாக்கிவிட்டு தனது சொந்த பந்தங்களுக்காக தினகரன் கட்சி நடத்துகிறார். சசிகலாவுக்கு தினகரனின் செயல்பாடுகள் எதுவும் பிடிக்கவில்லை என சசிகலா பற்றி திவாகரன் ஏடாகூடமாக பேசியதையெல்லாம் குறிப்பிட்டு, ""இப்படி தாங்கள் பேசுவது தங்களது வயதுக்கும் குடும்ப பின்னணிக்கும் தகுதியல்ல'' என காட்டமாகவே சசிகலா சொல்லியிருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
இப்படி ஒரு அறிக்கை வெளியாகியுள்ளதே என திவாகரன் தரப்பிடம் கேட்டோம். ""இது நிச்சயமாக சசிகலாவின் அறிக்கை அல்ல. சசிகலாவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி தினகரனுக்கு நெருக்கமான வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியன் வெளியிட்டிருக்கும் பொய்யான அறிக்கை. இன்று சசிகலா சிறையில் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார். சசிகலாவுக்கு தினமும் தகவல் சொல்லவும் அவர் இடும் வேலைகளை செய்யவும் நான்கு ஆட்களை தினகரன் கையில் வைத்திருக்கிறார். அவர்கள்தான் ஜெயில் அதிகாரிகள் துணையுடன் தினமும் சசிகலாவை சந்திப்பார்கள். அவர்களிடம் தினமும் சசிகலா தமிழகத்தில் என்ன நடக்கிறது என விசாரிப்பார். அவர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றை சொல்வார்கள். தினமும் தமிழக செய்தி சேனல்களை தனக்கென வைத்துள்ள செட்டாப் பாக்ஸ் மூலம் பார்க்கும் சசிகலா செய்தியில் வரும் விஷயங்களில் எழும் சந்தேகத்தை கேட்பார். அவர்கள் பெங்களூரு புகழேந்தி போன்ற தினகரன் ஆட்களிடம் பேசிவிட்டு சசிகலாவிடம் சொல்வார்கள். இதுதான் சிறையில் சசிகலா நடத்தும் அரசியல் விவாதம்.
அந்த நாலுபேரும் சமீபகாலமாக திவாகரனை பற்றி தப்பும் தவறுமாக போட்டுக் கொடுத்து வந்தார்கள். தினகரன் ஏற்பாட்டில் நடக்கும் இந்த விவாதத்தின் தரம் எப்படி இருக்கும்? விரைவில் திவாகரன் சசிகலாவை சந்திக்க உள்ளார். அப்பொழுது திவாகரனை பாராட்டி அறிக்கை ஒன்று வெளியே வரும்'' என்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/karnataka-jail.jpg)
இந்த அறிக்கை பற்றி தினகரன் ஆதரவாளர்களின் கருத்து வேறு மாதிரி இருக்கிறது. நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ., ""இந்த அறிக்கையையே போலி என்கிறார்களா? இந்த அறிக்கை வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கையெழுத்தோடு வெளியாகியுள்ளது. இத்துடன் சசிகலாவின் கையெழுத்து போடப்பட்ட இதே அறிக்கை ஒன்று எங்களிடம் உள்ளது. அந்த அறிக்கையை வெளியிட்டால் வழக்கறிஞர் கையெழுத்து போட்டு வெளியான அறிக்கையை உண்மையென ஒத்துக் கொள்வார்களா?'' என்று திவாகரன் தரப்பிற்கு எதிர் கேள்வி வைக்கிறார்.
அத்துடன், ""அந்த அறிக்கையில் வந்த ஒரேயொரு விஷயத்தை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். மகாதேவனின் மரணத்தின் போது தினகரனுடன் இருந்த எம்.எல்.ஏ.க்களையும் அமைச்சர்களையும் நெருங்கி, "இனி தினகரனுடன் இருக்காதீர்கள் என ஆலோசனை சொன்னார் திவாகரன்' என செய்திகள் வந்தன. சசிகலாவின் கவனத்திற்கும் அந்த செய்தி கொண்டு செல்லப்பட்டது.
திவாகரன் ஆலோசனைப்படி, தினகரன் வேண்டாம் என சொன்னதோடு சசிகலாவின் புகைப்படங்களையும் தலைமைக் கழகத்தில் இருந்து அமைச்சர்கள் நீக்கினார்கள். தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்திக் கொண்டு தனி ஆவர்த்தனத்தை தொடங்கிவிட்டார் என சசிகலாவிடம் சொல்லப்பட்டது. அந்த தனி ஆவர்த்தனம் வளர்ந்து ஓ.பி.எஸ். அணி இணைப்பு, இரட்டை இலை மீட்பு, எடப்பாடிக்கு எதிராக மனு கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் என வளர்ந்தது என சசிகலாவிடம் சொன்னபோதெல்லாம் அவர் நம்பவில்லை. "தம்பி அப்படியெல்லாம் செய்ய மாட்டான்' என அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
எடப்பாடி டீமுடன் திவாகரன் நெருக்கமாக உள்ளார், ஓ.பி.எஸ்.சுடன் பேசுகிறார் என பலமுறை சொன்னபோதும் சசிகலா திவாகரனை எதிர்க்க தயாராக இல்லை. ஆனால் தினகரனுக்கு எதிராக பேட்டி கொடுக்கிறேன் என கிளம்பிய திவாகரன் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், "மகாதேவன் மரணத்திற்கு வந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை தினகரனை விட்டு பிரிந்து போகச் சொன்னேன்' என அவரது பேச்சில் வெளிப்படையாக ஒத்துக் கொண்டார். இது சசிகலாவை பெரிய அளவில் பாதித்தது.
"ஆட்சியும் அதிகாரமும் சசிகலா குடும்பத்தினர் கையை விட்டு எடப்பாடி-ஓ.பி.எஸ். கைக்கு போனதற்கு நான்தான் காரணம்' என திவாகரனே வெளிப்படையாக ஒத்துக் கொண்டதை சசிகலாவால் ஜீரணிக்க முடியவில்லை. தினகரன் போய் நடந்த சம்பவங்களை சசிகலாவிடம் சொன்னார். உடனே சிறையிலிருந்து ஒரு பதிவுக் கடிதம் ஒன்றை வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு அனுப்பினார். அந்த கடிதத்தின் அடிப்படையில் ராஜா செந்தூர் பாண்டியன் சசிகலாவை பார்த்தார். அப்பொழுது சசிகலா சொன்னதை அறிக்கையாக வழக்கறிஞர் எழுதித் தர, சசிகலாவின் அறிக்கை வெளியானது'' என்கிறார் வெற்றிவேல்.
சசிகலாவின் அறிக்கையை பற்றி அ.தி.மு.க.வினரிடம் கேட்டோம். ""இது நிச்சயமாக சசிகலாவின் அறிக்கைதான். அந்த அறிக்கையில் ஜெ.வுடன் பணியாற்றிய சசியின் அனுபவம், அப்பொழுது அரசியல் முடிவுகளை எப்படி சசிகலா எடுத்தார் என்பதை பற்றிய விளக்கம், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக செயல்படுகிறேன் என்பதை பற்றிய சட்ட விளக்கம், ஜெ.வின் மரணத்தைப்பற்றி விசாரிக்கும் கமிஷனில் ஜெ.வின் மரணத்திற்கும் சசிகலாவிற்கும் தொடர்பில்லை என நிரூபிக்க தினகரன் போராடுவதற்காக நன்றி என பல விஷயங்கள் இடம் பெற்றிருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு தொடர்பான வழக்கில் எடப்பாடி ஆட்சி கவிழும் நிலை உருவாகும். அப்படி ஒரு சூழல் வந்தால் எடப்பாடி தரப்பினர் சசிகலாவிடம்தான் பேச வேண்டும். அவர்கள் திவாகரனிடம் பேசக்கூடாது என்கிற தவிப்பும் வெளிப்படுகிறது'' என்கிறார்கள்.
"அடுத்ததாக என்ன நடவடிக்கை?' என வெற்றிவேலிடம் கேட்டோம். ""இதுவரை திவாகரன், வெற்றிவேல் தினகரனிடம் அதிருப்தியில் இருக்கிறார். தங்க.தமிழ்செல்வன் அதிருப்தியில் இருக்கிறார் என எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் 18 எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியே பேசி வந்தார். அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளியை சசிகலா தனது அறிக்கை மூலம் வைத்துவிட்டார். அடுத்தகட்டமாக, எப்படியெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் தூதுவர்களை அனுப்பி திவாகரனுடன் பேசினார். எந்தெந்த தேதிகளில் அந்த சந்திப்புகள் நடந்தன என புள்ளிவிவரத்தோடு சொல்லப் போகிறோம்'' என்றார்.
திவாகரன் தரப்பிடம் கேட்டபோது, ""வெற்றிவேல் உள்பட அனைவரையும் திவாகரனுக்கு எதிராக இயக்குவது தினகரனின் மனைவி அனுராதாதான். ஒருவேளை திவாகரனை எதிர்த்து சசிகலா அறிக்கை அளித்தது உண்மைதான் என்றாலும் அது திவாகரனை பாதிக்காது. எந்த நேரத்திலும் திவாகரன் சசிகலாவோடு இணைந்துவிடுவார். நீர் அடித்து நீர் விலகாது'' என்கிறார்கள். திவாகரனின் அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் இளந்தமிழனும் சசிகலாவின் அறிக்கை போலியானது என்கிறார்.
ஆனால் இந்த சண்டை, ஜெ.வின் சடலம் கிடத்தப்பட்டிருந்த மேடையில் ஒன்றாக நின்று பிரமிக்க வைத்த சசிகலா குடும்பத்தை ரெண்டாக உடைத்துவிட்டது. திவாகரன், அவரது மனைவி ஹேமலதா, மகன் ஜெய்ஆனந்த், திவாகரனின் மகள் மாதங்கி ஆகியோர் தனித்தீவாக மாறிவிட்டார்கள். திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், தினகரனின் சகோதரரான பாஸ்கரனின் மகளை மணம் முடிக்க உள்ளார். அதனால் பாஸ்கரன், திவாகரன் அணியில் வெளிப்படையாக செயல்படுகிறார். தினகரனின் மனைவி அனுராதாவின் சகோதரியான பிரபாவின் கணவர் டாக்டர் சிவக்குமாருக்கும் தினகரனுக்கும் ஏழாம் பொருத்தம். அதனால் அவர் திவாகரனுடன் டச்சில் இருக்கிறார். இளவரசியின் மகனான விவேக், திவாகரனின் வளர்ப்பு பிள்ளை மாதிரி. அதனால் விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணப்ரியா, ஷகிலா அவர்களது கணவர்களான ராஜராஜன், கார்த்திகேயன் ஆகியோர் இருதரப்பிலும் தொடர்பில் இருக்கிறார்கள். மறைந்த நடராஜனின் சகோதரர்களும் சகோதரிகளும் திவாகரன் பக்கம் சாய்ந்திருக்கிறார்கள்.
தினகரன், அவரது மனைவி அனுராதா, அனுராதாவின் சகோதரரான டாக்டர் வெங்கடேஷ், சுதாகரன் ஆகியோர் தினகரன் பக்கம் வெளிப்படையாக அணிவகுக்கிறார்கள். "குடும்பமா? கட்சியா? என்றால் எனக்கு கட்சிதான் முக்கியம்' என தினகரன் சொன்ன வார்த்தைகள் சசிகலா வெளியிட்ட அறிக்கையிலும் இருப்பதால் மன்னார்குடி வட்டாரம் மயான அமைதியில் அடுத்து என்னவென யோசித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே சிறையிலிருக்கும் ரிசர்வ் பேங்க் பாஸ்கரனும் வனிதாமணியின் இன்னொரு மகளான ஸ்ரீ என்கிற சீதளாதேவியும் எல்லோருக்கும் போன் போட்டு "என்ன நடக்கிறது' என விசாரிக்கிறார்களாம். நேற்று வரை திவாகரனுக்கும் எடப்பாடிக்கும் தூதுவராக இருந்த ராவணன் சசியின் அறிக்கைக்குப் பிறகு தினகரனிடம் சரணடைந்து நடந்தவற்றை ஒப்புவித்துவிட்டார் என்கிறது மன்னார்குடி வட்டாரம்.
-தாமோதரன் பிரகாஷ், மகி
---------------------------
செல்லூர் ராஜுவுக்கு செருப்பு பார்சல்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sellur-raj.jpg)
""கட்சி ஆரம்பிச்சு ரஜினியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. வேண்டுமென்றால் ஆச்சியை (நகரத்தார் சமூகப் பெண்மணிகள்) பிடிக்கலாம்'' என மைக் நீட்டப்பட்டதும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு உளறி வைக்க... வெள்ளிக்கிழமையன்று காரைக்குடி அறுபத்து மூவர் மடத்தின் முன் திரண்ட நகரத்தார்கள், தங்களை இழிவுபடுத்திப் பேசிய அமைச்சருக்கு எதிராக தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்தனர். நகரத்தார் சமூகப் பெண்மணிகளான ஆச்சிமார்களோ, தங்களிடமிருந்த அறுந்து பிய்ந்து போன பழைய செருப்புக்களை எடுத்து வந்து, ஓங்கி உயர்த்திக் காட்டிவிட்டு அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு அதனையே பார்சலாக அனுப்பினார்கள். அத்துடன் இல்லாமல், ""அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு வெயில் காலத்தில் ஏதோ ஆகிவிடுகிறது. போன வருஷத்தில் வைகைக்கு தெர்மோகோல் மூடி போட்டு அடைச்சுப் பார்த்தார். இப்ப என்னடான்னா... ஆச்சியை வம்புக்கு இழுக்கின்றார். ஏதோ அவருக்கு தலையில் உருகிடுதுபோல. வெயிலில் அலையவிடாமல் வீட்டிலேயே வைச்சுக்கிட்டு, நாலு எலுமிச்சைப் பழத்தை தலையில் நசுக்கித் தேய்ச்சால்தான் ஆட்சிக்கும் நல்லது'' என அமைச்சரை வறுத்தெடுத்துவிட்டனர் ஆச்சிகள்.
இந்த நிலையில் பா.ஜ.க. ஹெச்.ராஜா, தானாக முன்வந்து, நகரத்தார் சமூகத்திற்கு ஆதரவளிக்க டெல்லி உத்தரவோ... என மிரண்ட மந்திரி, ""நான் நடிகை மனோரமா ஆச்சியைத்தான் சொன்னேன்'' என இறந்துபோனவரை பாதுகாப்புக் கவசமாக்கிப் பேட்டியளித்தார்.
-நாகேந்திரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05-13/sasi-family-t.jpg)