பணிமூப்பு அடைந்தாலும் தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கும் சர்ச்சைக்குரிய வழக்கத்தை கடைப் பிடித்தவர் ஜெயலலிதா. அவரது ஆன்மாவின் ஆசியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் எடப்பாடி அரசிலும் அது தொடர்கதையாகி வருகிறது. இந்த சுயநல ஆட்டத்தில் சென்னை மாநகராட்சியையும் அவர்கள் விட்டு வைக்க வில்லை.
சென்னை மாநகராட்சி 15 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அதன் பணிகளை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். இதில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிவந்த புகழேந்தி என்பவர் கடந்த ஜூன் 30, 2016-லேயே பணிமூப்பு பெற்ற நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்தாண்டு ஜூன் மாதத்துடன் பதவிக்காலம் முடிந்த நிலையில், "முதன்மை தலைமைப் பொறியாளர்' என்ற புதிய பதவியை உருவாக்கி, அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பலரும் பேசத்தயங்கும் நிலையில்... புகழேந்திக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவம் பற்றி மாநகராட்சி பொறியாளர் ஒருவர் நம்மிடம், ""டெண்டர் களில் வரும் கமிஷன் பணத்தை முறையாக வசூலித்துக் கொடுப்பதால் அமைச்சர் கொடுத்த வெகு மதிதான் இது. அதனால் தான் ஆணையர்கூட இதைப்பற்றி வாய் திறப்பதில்லை. இந்தப் பணிநீட்டிப்புக்காக பெருமளவு பணமும் கைமாறியிருப்பதாக பேசப்படுகிறது. டெண்டருக்காக மாநக ராட்சி நிர்ணயிக்கும் தொகையைவிட அதிகமாக ஏற்றி வசூலிப்பதிலும் புகழேந்தி கில்லாடி'' என்றார்.
மாநகராட்சி டெண்டர் -கமிஷன் சமாச்சாரங்கள் பற்றி அறப்போர் இயக்கம் விரிவான ஆதாரத்தை வெளியிட்டது. இதுபற்றி அறப்போர் இயக்கம் ஜெயராமன் நம்மிடம், “""புகழேந்திக்கு இரண்டாவது பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு அமைச்சருக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் புரோக்கராக இருப்பதுதான் காரணமாகத் தெரிகிறது. மாநகராட்சி தீர்மானத்தின் மூலமே சட்டத்தில் இல்லாத முதன்மை தலைமைப் பொறியாளர் பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் தீர்மானம் போட்டால் மட்டுமே அந்தப் பதவியை நீக்கி புகழேந்தியையும் வெளியேற்ற முடியும்''’என்றார் அதிரடியாக.
இதுகுறித்து புகழேந்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ""தமிழ்நாடு ஆன்லைன் ஒளிவுமறைவற்ற டெண்டர் விதிகளின்படியே சென்னை மாநகராட்சியின் அனைத்து டெண்டர் களும் விடப்படுகின்றன. முறைகேடுகளுக்கு வழியில்லை. மாநகராட்சியின் ஒவ்வொரு டெண்டரையும் அந்தந்த துறைசார்ந்த உதவிப் பொறியாளர் அலுவலகம்தான் நடத்துகிறது. டெண்டரை விடுவதும் டெண்டரை இறுதி செய்வதுமான அதிகாரம் எனக்கோ எனது அலுவலகத்துக்கோ கிடையாது.
ஒப்பந்ததாரர்களோடு இணைத்துப் பேசுவதும் பணி நீட்டிப்பை கமிஷனோடு சம்பந்தப்படுத்துவதும் என்னை களங்கப்படுத்தும் முயற்சி. இதனை வன்மையாக மறுக்கிறேன். எனது நேர்மைக்கும் கடும் உழைப்புக்கும் கிடைத்ததுதான் பணி நீட்டிப்பு'' என்கிறார் அவருக்கு ஆதரவாகப் பேசுவோரும் இதே கருத்தை முன்வைக்கிறார்கள்.
"உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிகாரிகளை வைத்து இஷ்டம் போல கொள்ளையடிக்கிறது எடப்பாடி அரசு' என்ற குமுறல் எல்லா பக்கமும் கேட்கிறது.
-சி.ஜீவாபாரதி