மிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் செஞ்சி பேரூராட்சியில் மாவட்டச்செயலாளர் குணா.சரவணன் தலைமையில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியேவந்த  மா.செ. குணா.சரவணனை மடக்கிய மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய முன்னாள் துணைச்செயலாளர் சரண், “"என்னை ஏன்டா கட்சியில இருந்து எடுத்தீங்க? எனக்கு பொறுப்பு தர்றதுக்கு முப்பதாயிரம் ரூபாய் பணம் வாங்கினீங்க, பொறுப்பிலிருந்து எடுத்துட்டல்ல, பணத்தைத் திருப்பிக் கொடுடா''’என கோபமாகக் கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாகும் நிலை உருவானது. உடனே குணா.சரவணனை அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிட்ட னர். அதேபோல் விழுப்புரம் வடமேற்கு மாவட்ட மகளிரணிப் பொறுப்பாளராக பதவி வகித்துவரும் ரோஸ்லினும் மா.செ.விடம் சண்டையிட்டார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரோஸ்லின், "மா.செ. குணா. சரவணன் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. ஆபாசமாக முகம்சுளிக்கும் வகையில் பெண் நிர்வாகிகளிடம் பேசுகிறார். இதுபற்றி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து  இரண்டு முறை புகார் மனு அளித்தும் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. நீ யாரைச் சென்று சந்தித்தாலும் கடைசியில் எங்கிட்டதான் வரணும்னு பேசறார் மா.செ. என்னை நம்பி 100 பெண்கள் இருக்கின்றனர், எனக்கே பாதுகாப்பு இல்லாதபோது மற்ற பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? பணம் கொடுத்தால்தான் கட்சியில் பதவிபோடுவேன் என்கிறார். மாவட்ட மகளிரணி பொறுப்பிற்காக என்னிடம் பணம் வாங்கியபின்பே பொறுப்பு வழங்கினார்''’என குற்றம்சாட்டினார். 

திருவண்ணாமலை வடக்கு மா.செ. சத்தியா தலைமையில் ஆரணி நகரில் கடந்த மாதம் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தபோது, அங்குவந்த ஆரணி ஓவியர் ஹரீஷ், மா.செ.வை மடக்கி "என்னை ஏன் ஒதுக்கறீங்க?'' என கேள்வியெழுப்ப, அது கைகலப் பானது. "நான் கடந்த 13 ஆண்டு காலமாக விஜய் மக்கள் நல இயக் கத்தில் இருந்து வருகிறேன். கள்ளக் குறிச்சி விஷச்சாராய மரணத்துக்கு உதவி செய்யவேண்டும் எனச் சொன்னதும் இளைஞ ரணி சார்பில் ரூ50 ஆயிரம் நிதியுதவி அளித்துள் ளேன். கடந்த பிப்ரவரி மாதமே மா.செ. சத்தியா, பணம் வாங்கிக்கொண்டு பதவிதருகிறார், ஒவ்வொரு பதவிக்கும் ஒரே ரேட் பிக்ஸ் செய்து வசூல்செய்கிறார் என குற்றம்சாட்டியிருந்தேன். அதற்கான ஆதாரத்தோடு புகார் சொல்ல 3 மாதமாக தலைமைக் கழகம் சென்று புஸ்ஸி ஆனந்தை சந்திக்கமுயன்றபோது, நான் யாருன்னே தெரியாதுன்னு சொல்லி சந்திக்கல. இதே ஆனந்தை கர்நாடகா கே.ஜி.எப்.க்கு அழைத்துச்சென்று தமிழர் பகுதியில் 40 மன்றங்கள் திறக்கவச்சேன். கட்சிப் பதவிக்கு பணம் வாங்குவது தலைமை நிர்வாகிகள் வரை போகுதுன்னு அப்போதான் தெரிஞ்சிக்கிட் டேன், இந்த கட்சியே வேணாம்'' எனச் சொல்லி வீடியோ வெளியிட்டிருக்கிறார். 

Advertisment

விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ள குஷிமோகன், கட்சியில் பதவிதர 3 லட்சம், 5 லட்சம், 10 லட்சம் என ரேட் பிக்ஸ் செய்து வசூல்நடத்துகிறார். லாட்டரி சீட் விற்பனை செய்தவருக்கும், மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர் களுக்கு பணம் வாங்கிக்கொண்டு பதவிகளைத் தருகிறார். இதுகுறித்து தலைமையில் முறையிட்டால் கண்டுகொள்ளவில்லை. கோவை கிழக்கு மாவட்ட மா.செ.க்கள் மீதும் பணம் வாங்கிக்கொண்டு பதவிதந் துள்ளார்கள் என குற்றம்சாட்டும் விஜய் ரசிகர் மன்றத்தினர், இதுகுறித்து தலைமைக்கும் புகார் தந்துள்ளனர். 

இதுகுறித்து நீண்ட காலம் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்த ஒருவரிடம் பேசியபோது, “"20 வருடம், 15 வருடமாக தளபதியின் ஒவ்வொரு படம் வரும்போதும் பேனர் வைத்து பட்டாசு வெடித்த மன்ற நிர்வாகிகள் கேள்வி கேட்கிறார்கள் என்பதால் டீலில் விடுகிறார்கள். மற்ற கட்சிகளில் பதவி கிடைக்காதவர்கள் எங்கள் கட்சிக்கு வருகிறார் கள். அவர்கள் மா.செ.க்களைப் பார்த்து 2 லட்சம், 3 லட்சம் தந்ததும் அவர்கள் அப்படி யே மயங்கி பதவி வாங்கித் தந்துவிடுகிறார்கள். புதிதாக வருபவர்களுக்கு ஏன் உடனே பதவி தருகிறீர்கள் என கேட்க முடியவில்லை. தலைமைப் பதவியில் இருப்பவர்கள் பலரும் வேறு கட்சியிலிருந்து வந்தவர்கள். மாநில - மாவட்ட நிர்வாகிகள் வசூல் வேட்டை நடத்தி வாரிச் சுருட்டுகிறார்கள், அதனை தொண்டர் கள் புகார் சொல்கிறார்கள், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக விஜய், குழுவின் தலைமை உறுப்பினர்களாக புஸ்ஸி.ஆனந்த், உறுப்பினர் சேர்க்கை அணி மாநிலச் செயலாளர் விஜயலட்சுமி உள்ளனர். இவர்கள் அந்த புகார்களை கண்டுகொள்வதேயில்லை, இதெல்லாம் தளபதிக்கு தெரிவதில்லை” என்கிறார் கவலையுடன். 

கட்சிக்குள் மாவட்டங்கள்தோறும் பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் கோஷ்டி, தேர்தல் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கோஷ்டி இருக்கிறது. செஞ்சியில் ஆதவ் அர்ஜுனா படம்போட்டு பேனர் வைத்த நிர்வாகியிடம், "அதை முதலில் கிழித்துப் போடு, இல்லன்னா என் போட்டோவை எடுத்துட்டு வை'' என ஆனந்த் கோஷ்டி மா.செ. மிரட்டியது பிரச்சனையாகியுள்ளது. 

Advertisment

"நாட்டு பிரச்சனைக்காக போராடுவதற்கு முன்பு, முதலில் கட்சிக்குள் நடக்கும் பிரச்சனையை தீர்க்க விஜய் முயற்சிக்கவேண்டும்'' என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.  

-கிங்