முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே, தமிழர்களின் தொன்மையான பண்பாட்டையும், வாழ்வியலை யும் உலகுக்குப் பறைசாற்றும் அகழாய்வுப்பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 11 இடங்களில் அகழாய்வுப்பணிகள் நடை பெற்று வருகின்றன. இப்பணிகளில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் அனைத்தும் கார்பன் டேட்டிங் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட காலம் கண்டறியப்படுகிறது. அகழாய்வுப்பணிகளில் தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்படும் பொருட்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, வரலாற்றுத் தரவுகளோடு விரிவாக விளக்கி வருகிறார்.
இந்த அகழாய்வுகளின் மூலம், தமிழர்களின் நாகரிகம் எவ்வளவு தொன்மையானது என்பது தெரியவருவதோடு, நம்முடைய தமிழ் மொழியும், நமது பண்பாடும், கலாச்சாரமும் இந்தியாவுக்கு மட்டுமல்லாது தெற்காசியாவுக்கே முன்னோடி என்பதும், பொருநை நதிப்படுகை, நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் விதமாகப் முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் வெளியிட்டார். அதன்படி, "இந்த ஆய்வுப் பணிகளைத் தமிழ்நாட்டு எல்லைக்குள் சுருக்காமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிஷா மட்டு மல்லாது, மன்னன் ராஜேந்திரசோழன் வெற்றித்தடம் பதித்த, வணிகத் தொடர்பு வைத்திருந்த தெற்காசிய நாடுகளிலும், ரோமப் பேரரசின் ஒரு பகுதியான எகிப்து மற்றும் ஓமனிலும் உரிய அனு மதி பெற்று ஆய்வுகள் நடத்தப்படும்' என்றார். "அகழாய்வுகள் நிலத்தில் மட்டுமல்லாமல் கடலுக்கு உள்ளேயும் ஆய்வு நடத்தப்படும்' என்றார்.
பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததென்றும், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அகழாய்வில் கிடைத்தவற்றின் மூலம் நெல்லையில் 15 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு நெல்லை மாவட்ட மக்களுக்கு பெருமை தரக்கூடிய ஒன்று.
கொற்கை துறைமுகம், கி.மு. 8-ம் நூற்றாண்டுக்கு முன்பே செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பண்டைய முசிறி நகரம், இப்போது கேரளாவில் பட்டணம் என்ற பெயரில் உள்ளது.
ஆதிச்சநல்லூருக்கு அருகே சிவகளை, பறம்பு பகுதியில் முதுமக்கள் தாழி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகள் அமெரிக்க நாட்டின் மியாமி நகரில் அமைத்திருக்கும் புகழ்பெற்ற Beta Analytical Laboratory-க்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப் பட்டதில், இந்த உமி நீக்கிய நெல்மணிகளின் காலம் கி.மு.1155 என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி நாகரிகம், கி.மு. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அகழாய்வுப் பணிகளில் கிடைக்கும் வரலாற்றுச் செய்திகள் குறித்து நாமெல்லோரும் சிலிர்க்கின்ற இத்தருணத்தில், ஓர் அகழாய்வுப் பணிக்குப் பின்னால் எவ்வளவு பெரிய கூட்டு உழைப்பு, ஒத்துழைப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் இந்த அகழாய்வுப் பணிகளின் முக்கியத்துவம் குறித்து நம்மால் உணர முடியும்.
புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சி, பொற்பனைக்கோட்டை கிராமத்தில், மண்ணுக்குள் புதைந்த ஓர் கோட்டையே கண்டறியப்பட்டுள்ளது. சங்க கால கோட்டை என்று கருதப்படும் 1.62 கி.மீ சுற்றளவுள்ள இந்தக் கோட்டை, சுமார் 30 அடி உயரம், 30 அடி அகலத்தில் அமைந்திருக்கிறது. கோட்டைக்கு வெளியேயும் உள்ளேயும் பெரிய அகழி வெட்டி, அதற்காக வெட்டப்பட்ட மண்ணைக் கொண்டே கோட்டைச் சுவர் எழுப்பியுள்ளனர். மேலும், எழுப்பிய சுவர் கரைந்துவிடாமல் செங்கல் கட்டுமானத்தால் தடுப்புகள் அமைத்து, ஆங்காங்கே கொத்தளங்கள் அமைத்து வீரர்கள் காவல் காத்துள்ளனர்.
சங்க காலத்தில் அமைக்கப்பட்ட கோட்டைச் சுவரும், கொத்தளம், அகழி ஆகியவையும் சிறு சிதைவும் இல்லாமல் காட்சியளிக்கின்றன. இந்த வலுவான கோட்டை பகுதியில், அரண்மனைத் திடலுக்கு அருகே அகழிக்குப் பக்கத்தில்தான் இப்போது தீவிரமாக அகழாய்வு நடக்கிறது.
தொல்லியல் ஆய்வறிஞர் குடவாயில் பால சுப்பிரமணியன், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து, இங்கு கிடைத்த மண்பானை ஓடுகளையும் செங்கல் அளவுகளையும் வைத்து, இது சங்க கால கோட்டைதான் என்று அழுத்தமாக ஆவணப்படுத்தியிருக்கிறார். அதன்பிறகு 2013-ம் ஆண்டு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் அப்போதைய ஆய்வு மாணவரான புதுகை பாண்டியன் சொன்ன தகவலின் பேரில், நீர்வாவி குளத்தில் கிடந்த கல்லை ஆய்வு மாணவர் தங்கதுரை, முதுகலை மாணவர் மோசஸ் ஆகியோர் ஆய்வு செய்தபோது, அதில் 5 வரிகள் கொண்ட தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மறுநாளே இது வரலாற்று ஆவணத்தில், அந்த மாணவர்களின் பெயருடன் பதிவும் செய்யப்பட்டது. அபூர்வமான தமிழி எழுத்துக்களைப் பதிவுசெய்த மாணவர்களை பாராட்டி, அப்போது பரிசும் வழங்கியிருக்கிறார்கள்.
அந்தக் கல்வெட்டு எழுத்துக்கள், "கால்நடைகளைக் கவர வந்தவர்களை எதிர்த்துப் போரிட்டு மடிந்த, கணம் குமரனுக்காக நடப்பட்ட நடுகல்'' என்று சொல்கின்றன. தொல்லறிஞர் பேராசிரியர் ராஜவேலு, கல்வெட்டைப் படித்து இந்தத் தகவலை உறுதி செய்தார். அது தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
2015-ஆம் ஆண்டு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனரும் ஆசிரியருமான மங்கனூர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர், கோட்டைக்குள் ளும் வெளியிடங்களிலும் மேலாய்வு செய்தபோது, இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்த பட்டறை அங்கே இயங்கியதையும், அங்கே அதற்கான இரும்பு உருக்கு உலையையும், சென்னாக் குழிகளையும், சுடுமண் அச்சுகளையும் கண்டெடுத்தனர்.
தமிழகத்தில் எஞ்சியுள்ள சங்ககாலக் கோட்டையை அகழாய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போதே, முனைவர் இனியன் என்பவர் பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு செய்ய அனுமதி கேட்டு மத்திய தொல்லியல் துறைக்கு விண்ணப்பம் செய்திருந்தார். பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அகழாய்வு செய்ய அனுமதி அளித்துள்ளது. முதன் முதலில் அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்ததால் முனைவர் இனியனை அகழாய்வு செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி வாழ்த்துக் கூறி அனுப்பிவைத்தார்.
முதல்கட்டமாக வேப்பங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் ராஜாங்கம் மற்றும் கிராமத்தினரைச் சந்தித்து அனுமதி கேட்டனர். பின்னர், வேப்பங் குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அகழாய்வுப் பணிகளை கடந்த ஜூலை 30-ம் தேதி அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். அகழாய்வில், பல்வேறு வகையான கருப்பு சிவப்பு ஓடுகள், பெண்கள், குழந்தைகள் விளையாட பயன்படுத்திய வட்டச் சில்கள், இரும்பு ஆணி, மணிகள், குடுவைகளின் உடைந்த பாகங்கள் எனப் பலவும் கிடைத் திருக்கிறது. தொடர்ந்து சுமார் ஒன்றரையடி ஆழத்தில் பெரிய செங்கற்களால் அமைக்கப்பட்ட நீர்வழிப் பாதையும் காணப்பட்டது. அகழாய்வுப் பணிகள் நடப்பதை அறிந்து, வரலாற்று ஆய்வாளர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் தினமும் வந்துவந்து பார்க்கிறார்கள்.
இதையடுத்துதான் சுமார் 30 அடி உயரத்தில் 30 அடி அகலத்தில் கொத்தளம், அகழியுடன் சங்ககாலக் கோட்டையை நெருங்கினர். சீமைக் கருவேல மரங்கள் மூடியதால் கோட்டை மதில்சுவர் வெளியே தெரியவில்லை. மதில்சுவரில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றினால் கோட்டை முழுமையாக தெரியுமென்று அமைச்சர் மெய்யநாதன் மூலம் கோரிக்கை வைத்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் கவிதாராமு உத்தரவில், திருவரங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதி பெற்று, ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாங்கம், வேப்பங்குடி ஊராட்சியைச் சேர்ந்த 100 நாள் பணியாளர்கள் மூலம், அந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த கருவேல மரங்களை அகற்றும் பணி முடியும்போது, சங்ககால கோட்டையை முழுமையாகக் காண இயலும்.
இங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஊராட்சிமன்றத் தலைவர் ராஜாங்கம் நம்மிடம், "எங்க ஊர்ல ஆய்வு செய்யணும்னு வந்து கேட் டாங்க. ஆனால் முனீஸ்வரன் சாமி கட்டுப்பாட்டுல இருக்கிற இடமென்பதால் முதலில் தயக்கம் இருந்துச்சு. ஆனாலும், நம்ம வரலாற்றைத் தெரிஞ் சுக்கணும் என்பதால் அனுமதி கொடுத்தோம். கோட்டைக்காவல் தெய்வம் முனீஸ்வரன் அனுமதி இல்லாம ஒரு பிடி மண்ணைக் கூட இங்கிருந்து எடுத்துட்டுப் போக முடியாது. அதனாலதான், இந்தக் கோட்டை இன்னும் எந்த சேதமும் இல்லாமல் உறுதியாக நிற்குது. நாங்க குளத்துல குளிக்க துணி துவைக்கப் பயன்படுத்தின கல்லைப் பெரிய பொக்கிசமா எடுத்துட்டுப்போய் வச்சிருக் காங்கன்னு நினைக்கும்போது இவ்வளவு காலமா இதோட மதிப்பறியாம இருந்துட் டோமேன்னு தோணுச்சு. இங்க மண்ணைத் தோண்டத் தோண்ட வெளியே வரும் முன்னோர்கள் பயன்படுத்தின பொருள்களைப் பார்க்கப் பார்க்க நெகிழ்வாவும் பெருமையாவும் இருக்கு''’என்றார் பிடிடாத பெருமையோடு.
அகழாய்வுக்கு நிலம் கொடுத்த விவசாயி கருப்பையாவோ, "கோட்டையைச் சுற்றி முனீஸ்வரன், காளி, கருப்பர், வீரப்பன் என்று கோட்டைக் காவல் தெய்வங்கள் இருக்காங்க. அதனால இங்கே ஆழமா தோண்டமாட்டோம். மானாவாரி விவசாயம்தான் இங்க நடக்குது. இப்ப என் இடத்துல நம்ம வரலாறு புதைஞ்சிருக்குனு சொன்னப்ப மகிழ்ச்சியாக இருந்தது''’என்கிறார் பூரிப்போடு.
அடுத்தடுத்த அகழாய்வுகளில் மேலும் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள் ஆய்வாளர்கள். உரிய நேரத்தில் அடுத்தகட்ட அகழாய்வுக்கு அனுமதியும் நிதியும் வழங்கினால் சிறப்பாக இருக்கும். கால்நடைகளைக் கவர வந்தவர்களை விரட்டியடித்து, உயிர்நீத்த கணம் குமரன் கல்வெட்டு கிடைத்திருக்கும் நிலையில், அங்குள்ள கோட்டைக் காவல் தெய்வம் முனீஸ்வரன் சிலைகூட கணம் குமரன் சிலையாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். பொற்பனைக்கோட்டையில் நாமெல்லாம் வியந்து நெஞ்சு நிமிர்த்தும் வகையில் சங்ககாலத் தமிழர்களின் நினைவுகள் வாழ்ந்துகொண்டி ருகின்றன.