porkalam

உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்...!

Advertisment

சேகரன் மனைவி செல்வி தொடர்ந்து பேசும்போது...

""எங்கள மேட்டூர் முகாமுக்கு அழைச்சுட்டு வந்த இன்ஸ்பெக்டர் அசோக்குமார்ட்ட, என் குழந்தைக்கு நடந்த எல்லாத்தையும் சொல்லி "இரக்கம் காட்டுங்க ஐயா'ன்னு அவர் கால்ல விழுந்து கெஞ்சுனேன்... அவரு கண்டுக்கவேயில்லை. என்னை பூட்ஸ் காலால உதைச்சு கேவலமான வார்த்தையால திட்டுனாரு.

Advertisment

அங்க என்னப்போல கொண்டுவரப்பட்ட ஏழெட்டு பொண்ணுங்க இருந்தாங்க. எல்லாரையும் அங்க உள்ள ஒர்க்ஷாப்புக்கு அழைச்சுட்டுப் போய்... மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செஞ்சாங்க. என்ன மிகக்கேவலமா நடத்துனாங்க. மிளகா தூளையும், அரப்பையும் என் கண்ணுலயும் மூக்குலயும், பாலுறுப்புலயும் தடவுனாங்க. மத்த பொண்ணுகளுக்கும் அதே மாதிரி செஞ்சாங்க. அவங்க எங்க இருந்து கொண்டு வரப்பட்டாங்கன்னு எனக்குத் தெரியாது. அந்த ஒர்க்ஷாப்ல ரெண்டு அறை இருந்துச்சு. அதுல ஒரு அறையில சித்ரவதை செய்வாங்க. இன்னொரு அறை சித்ரவதை செய்யப்பட்டவங்க ஓய்வெடுக்கிறதுக்குன்னு பயன்படுத்துனாங்க. நான் அங்க போகும்போது ஒரு ரூம்ல ஐம்பதுல இருந்து அறுபது பேர் வரைக்கும் இருந்தாங்க. அவங்க முன்னால எங்கள நிர்வாணப்படுத்துனாங்க. அசோக்குமார், குமாரசுவாமி, ஜெயமாருதி, முசலின்னு இன்ஸ்பெக்டர்கள் இருந்தாங்க. அவங்க சொல்லித்தான் நபஎகாரங்க எங்களை நிர்வாணப்படுத்துனாங்க.

நான் எம்.எம்.ஹில்ஸýக்கு வந்து நாலஞ்சு நாள்ல என் கணவர் தானாவே போலீஸ்கிட்ட வந்தாரு. என் கணவர் கண் முன்னாலயே போலீஸ்காரங்க என்ன சித்ரவதை செஞ்சு நிர்வாணப்படுத்துனத அவரால தாங்கிக்க முடியல.

போலீஸ், என் கண்ணைக் கட்டி ராத்திரியில காட்டுக்குக் கூட்டிட்டுப் போவாங்க.. நாலைந்து பேரு என்னை கற்பழிச்ச பிறகு காலையில் ஒர்க்ஷாப்பிற்கு திரும்ப கூட்டிட்டு வருவாங்க. இப்படியே ஒண்ணர வருசமா தொடர்ந்து நடந்துச்சு.

"அவள கொடுமப்படுத்தாதீங்க... பலாத்காரம் செய்யாதீங்க'ன்னு என் கணவர் போலீஸ்ட்ட கெஞ்சிக்கிட்டே இருப்பாரு. அதனால எரிச்சலான போலீஸ்காரங்க அவரை கொல்ல முடிவு செஞ்சாங்க. அவர் சரணடைஞ்சு மூணு மாசங்களுக்குப் பிறகு ஒருநாள்... போலீஸ் என்கிட்ட வந்து, "உன் கணவனை கடைசியாக ஒருமுறை பார்த்துக்க. இதுக்கப்புறம் உன்னால் பார்க்க முடியாது'ன்னு சொல்லி ஜீப்புல அழைச்சுட்டுப் போனாங்க. ரெண்டுநாள் கழிச்சு என் கணவரோட சடலத்ததான் போட்டோவா காட்டுனாங்க. என் கணவரை கூட்டிட்டுப் போறப்ப, இன்ஸ்பெக்டர் முசலி, ஜெயமாருதி, மூடளய்யா, அசோக்குமார் இவங்க எல்லாரும்தான் ஜீப்புல இருந்தாங்க.

சேகர் மனைவி செல்வியோட கதறல்... படிச்சாலே நெஞ்சம்லாம் கனக்குது. அந்தம்மா குற்றம்சாட்டுன அசோக்குமார்ங்கிற போலீஸ்காரரு சதாசிவா கமிஷன்ல அப்படியே மறுப்பாரு... ஆனா, கடைசியா...

முதல்ல அவரு மறுத்தத படிங்க...

திருமதி.செல்வி (எம்.டபுள்யு-129) அவர் மகப்பேறு முடிந்து 20 நாட்களே ஆன நிலையில் மருத்துவமனையில் இருந்து கைது செய்யப்பட்டு மேட்டூர் காவல் முகாமிற்கு கொண்டுவரப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார் என்றும், 20 நாட்களுக்கு மேல் அங்கு அவர்மேல் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார் என்றும் கூறும் குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். போலீஸ் மருத்துவரிடம் உரையாடிய பின்னர், அவர் குழந்தைக்கு அளிக்கப்பட்ட ஊசியால்தான் அவர் குழந்தை இறந்தது என்றும், அக்குழந்தை ஒரு கிறித்துவ கல்லறையில் புதைக்கப்பட்டது என்றும் அவர் கூறுவதையும் நான் மறுக்கிறேன். மேலும், அவர் மேட்டூர் போலீஸ் முகாமில் என் கால்களில் விழுந்து என்னிடம் அவரது துயரங்களைச் சொல்லிக்கொண்டிருந்தபோது நான் அவரை மிதித்து மோசமான வார்த்தைகளால் திட்டினேன் என்று கூறுவதையும், காவலர்கள் அவரை செருப்புக் காலால் பின்னாலிருந்து எட்டி உதைத்து பின்னர் பலாத்காரம் செய்தனர் என்று கூறுவதையும் நான் மறுக்கிறேன். நான் காவல்துறை ஆய்வாளராக இருந்தபோது, எனது செயல்பாடுகளை நாளேட்டில் குறித்து வைத்துள்ளேன். அதை எனது உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன். அது இப்போது யாரிடம் உள்ளது என்று தெரியவில்லை. அதைப்பற்றி விசாரிக்கவேண்டும்.

திருமதி.தங்கம்மாள் மற்றும் ஏனையவர்கள் கள்ளாட்டி களவாயில் கைது செய்த உடனேயே அவர்களை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டோம். பெண்கள் தங்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் ஆண்களைத் தண்டிக்க, மின்சாரம் பாய்ச்சும் சிறு கருவிகள் உபயோகிப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இங்கு சாட்சிகள் கூறுவதுபோல் எங்கள் குழு, மின்சாரம் பாய்ச்ச எந்தக் கருவியையும் பயன்படுத்துவதை நான் பார்த்ததில்லை.

சதாசிவா கமிஷன்ல நம்ம அண்ணன் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் என்ன சொல்றாருன்னா...

""பொம்பளைங்க தங்களிடம் முறைகேடாக நடந்துக்குற ஆம்பளைங்கள தண்டிக்க கரண்ட் பாய்ச்சுற சின்ன கருவிகள பயன்படுத்துறதப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா நாங்க பாய்ச்சலப்பா''ன்னு முழு பூசணிக்காய அண்டா சோத்துல மறைக்கிறாப்புல எடுத்துவிட்டிருக்காரு.

சரி... சரி... என்னத்தச் சொல்லி என்னத்தப் புலம்புறது. குத்தம் செஞ்சவங்க எல்லாரும் யோக்கியமாயிட்டாங்கள்ல. அதான்... இவங்க குரு வால்டர் சார், "நாங்க... அதாவது எஸ்.டி.எஃப். பொம்பளைங்கள பாத்ததே இல்ல'ன்னு ஒரே போடு போட்டாருல்ல. இன்னைக்கும் சதாசிவா கமிஷன்ல பாவப்பட்ட பொண்ணுங்க அழுது பொலம்புனது வண்டி, வண்டியா ரெக்கார்டு ஆகி பெண்டிங்குலதான் இருக்கு.

புண்ணியவதி ஜெயலலிதா ஆட்சி வந்துச்சு. அந்த எழவு சதாசிவா கமிஷன் ரிப்போர்ட்ட தூக்கி காலுக்கு கீழ போட்டுட்டாக. இருக்கட்டும்... இருக்கட்டும்...! இன்னிக்கி இல்லாட்டாலும் என்னைக்காவது ஒருநாள் "உப்ப தின்னவன் தண்ணிய குடிப்பான்... குடிப்பான்... குடிப்பான்...'

அடுத்த அப்பாவிப் பெண் சொல்றத கேளுங்க...

மது மனைவி பூங்கொடியம்மாள்

""தாடி வச்ச பெயர் தெரியாத இன்னொரு போலீஸ் எஸ்.ஐ.யோட ஒரு அறையில போயி அவரோட தனியா சேர்ந்து இருக்கணும்னாரு. நான் மறுத்ததுனால என்ன ராமபுராவுக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்க ராமன்னா, ராமபுரா போலீஸ் எஸ்.ஐ. காவல்ல என்னை விட்டுவிட்டுப் போனாரு. அந்த எஸ்.ஐ., "வீரப்பன் எங்க இருக்கார்?'னு விசாரிச்சாரு. எனக்கு வீரப்பன் பற்றி தெரியாததுனால "எனக்கு வீரப்பனைத் தெரியாது, அவரைப் பார்த்ததுகூட கிடையாது'ன்னேன்.

என் கை முட்டியில லத்தியால ஓங்கி அடிச்சு, "வீரப்பன் எங்க இருக்கான்'னு கேட்டு என்ன லாக்கப்புல வச்சாரு. அன்னிக்கு சாயங்காலம் திரும்பவும் விசாரணை செஞ்சு, வீரப்பன் இருக்குற இடம் தெரியாதுன்னு சொன்னதுனால, திரும்பவும் ரொம்ப கடுமையாக தாக்குனாரு. "இப்படி சித்ரவதை செய்றதுக்குப் பதிலா என்னைக் கொன்னுருங்க'ன்னு சொன்னேன். அவர் கேட்டது மாதிரி தனியா இருக்க மறுப்பு தெரிவிச்சேன். அன்னிக்கு ராத்திரி பெயர் தெரியாத மூணு போலீஸ்காரங்க லாக்கப் ரூம்ல வச்சு என்னை மூர்க்கமா கற்பழிச்சாங்க. மறுநாள் காலையில எஸ்.ஐ. வந்தப்ப, "போலீஸ்காரங்க ராத்திரி என்ன பாலியல் பலாத்காரம் செய்தத'ச் சொன்னேன். அவர் கொஞ்சம்கூட சட்டை செய்யல... அந்த போலீஸ்காரர்கள் மேல நடவடிக்கையும் எடுக்கலை. என் குழந்தையோட என்ன ஒருமாசம் அங்கயே வச்சிருந்தாங்க. .

அப்புறம் போலீஸ் வேன்ல எம்.எம்.ஹில்ஸýக்கு கொண்டுபோகும்போது மலையடிவாரத்துல என் கண்ண கட்டிட்டாங்க. வேன்ல எம்.எம்.ஹில்ஸில் உள்ள சனிமகமா கோயில அடைஞ்சப்ப.. என் குழந்தை... மடியிலிருந்து கீழ விழுந்த குழந்தைய தூக்கணும்னு கட்டியிருந்த கண்ண அவுத்தேன். அதனால போலீஸ்காரங்க ஆத்திரமாகி, வேன்லயே என்னை அடிச்சு நொறுக்குனாங்க. திரும்பவும் கண்ணக் கட்டி எம்.எம்.ஹில்ஸ் கொண்டு போய், அங்க ஒரு மாதம் வச்சிருந்தாங்க. என்னப்போல கொண்டுவரப்பட்ட நிறையபேர போலீஸ் அங்க வச்சிருந்தாங்க.

பிறகு நான் கோபிநத்தம் கிராமத்திற்கு திரும்புன பத்து நாளுக்கு அப்புறமா கிராமத்திற்கு வந்து என் கணவரைப் பிடிச்சுட்டுப் போனாங்க. பத்துநாளுக்குப் பிறகு அவரை திருப்பி அனுப்புனாங்க. வந்து இரண்டுநாள் கழிச்சு அவர் ரத்தவாந்தி எடுத்தாரு. கொளத்தூரில் உள்ள டாக்டர்கிட்ட என் கணவர கூட்டிட்டுப் போனேன். டாக்டர் அவருக்கு மருந்து குடுத்து ஊசியும் போட்டாரு. நாலு நாளுக்குப் பிறகு அவர் இறந்துட்டாரு. அவர் சாகும்போது வயிறு ஊதிப்போய் இருந்துச்சு...''

(புழுதி பறக்கும்)