தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 47 போராட்டங்கள் நடப்பதாக தமிழக அரசே சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. எப்படியாவது இதை ஒடுக்கவேண்டும் என தீவிரம்காட்டி வருகிறது எடப்பாடி அரசு. காரணம், மோடி அரசு தரும் நெருக்கடி. அதன் விளைவுதான், மீண்டும் மீண்டும் திருமுருகன் காந்தி மீதான நடவடிக்கை. அவரது மே 17 இயக்கத்திற்கு தமிழகத்தில் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது.
குண்டாஸ், தேசிய பாதுகாப்புச் சட்டம் என திருமுருகனை நோக்கி மிரட்டல்கள் தொடர்ந்த நிலையில், பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு "உபா' சட்டம் பாய்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மத்திய அரசையும், பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸையும் யாரும் விமர்சிப்பதை மேல்மட்ட பா.ஜ.க.வினரும், தமிழக வலதுசாரிகளும் துளியும் விரும்பவில்லை. இதனால், 2017-ஆம் ஆண்டு பாலஸ்தீன பிரச்சினை குறித்து பேசியதைக் காரணம்காட்டி "உபா' சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தியின் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை அவரை சிறையிலேயே அடைத்து வைத்திருப்பதையே மத்திய அரசு விரும்புகிறது.
காவிரி விவகாரத்தில் சுங்கச்சாவடிகளைத் தாக்கியபிறகு, அதிக கவனம் பெற்றவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் மூலம் ஒருங்கிணைத்து, ஐ.பி.எல்.லுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். குறிவைத்துக் காத்திருந்தன மத்திய-மாநில அரசுகள். தூத்துக்குடி சம்பவத்தின்போது அங்கு செல்ல முயன்றதாகக் கூறி தேசத்துரோக வழக்கில் கைது செய்தது காவல்துறை. நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த வேல்முருகன், மாநிலம் முழுவதும் குண்டர் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தன் கட்சி நிர்வாகிகளை வெளிக்கொண்டுவரும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் மக்கள் நலன் சார்ந்த அவரது எந்த போராட்டத்துக்கும் அனுமதி தரப்படுவதில்லை.
அரசுகளின் அடுத்த குறி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அண்மைக்காலமாக பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் சினிமா விழாக்களில் அரசியல் கருத்துகளை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியிருக்கிறார். தூத்துக்குடி போராட்டத்திற்குப் பிறகு நாம் தமிழர் கட்சிக்கு பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. எட்டுவழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கும் மக்களை நேரில் சந்திக்கச் சென்றபோது சீமானைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது காவல்துறை. ஐ.பி.எல். போட்டியின் போதான போராட்டத்தில் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட வழக்குகளில் நாம் தமிழர் கட்சியினரில் 8 பேர்மீது குண்டர் சட்டம், 2 பேர்மீது தேசத்துரோக வழக்கு, 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு நிர்வாகிகளின் மீது பதியப்பட்டுள்ளன. மீண்டும் போராட்டத்தில் இறங்கினால் கைதுசெய்ய பழைய வழக்குகளைத் தயார்செய்து வருகிறது காவல்துறை. இது குறித்து எழுதி வாங்கியிருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் சிலர் சொல்கின்றனர்.
போராடுபவர்களை ஒழிப்பதன் மூலம் போராட்டங்கள் ஓய்ந்ததில்லை என்பதே வரலாறு. போராட்டமும் செய்யாமல், நிர்வாகமும் தெரியாமல் ஆட்சியில் இருந்தபடி மேலே இருப்பவர்களுக்கு தலையாட்டுபவர்களின் தர்பார் எத்தனை காலமோ?
-சி.ஜீவாபாரதி
கேரளாவில் சீமான் கைது!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பொருட்களைச் சேகரித்து, 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இக்குழுவிற்கு தலைமை தாங்க, கோட்டயம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சங்கனாசேரி நிவாரண முகாமில் நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
"வழியில் காவல்துறையினர் சிலர் நாம் தமிழர் கட்சியினர் சென்ற வாகனங்களை மறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனங்களில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்ததால், சந்தேகத்தின் பேரில் அவர்களைக் கைதுசெய்தது காவல்துறை. வாகனங்களும் சிறைபிடிக்கப்பட்டன. இதையடுத்து, சுமார் நான்கு மணிநேரத்திற்கும் மேலாக சீமான் உள்ளிட்டோரை தரையில் அமர்த்தி விசாரணை நடத்திய காவல்துறை, உரிய தகவல் கிடைத்ததையடுத்து அவர்களை விடுவித்தது. தங்கள் கட்சியினர் மீது புகார் கொடுத்தது பா.ஜ.க.வினர்' என காட்டமாகத் தெரிவித்துள்ளார் சீமான்.
____________________________________
மக்களிடம் எங்களைக் கொண்டு சென்ற அரசுக்கு நன்றி!''
-திருமுருகன் காந்தி கோர்ட் பேட்டி!
உபா சட்டத்தின் கீழ் சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம் .
குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், தற்போது உபா (UAPA) சட்டம் உங்கள் மீது பாய்ந்துள்ளது?
எல்லாமே காலனி ஆதிக்க சட்டங்கள். "உபா'வை எதிர்த்து தொடர்ச்சியாக இயக்கமே நடத்தியிருக்கிறோம். அப்படியிருக்கும் போது எங்கள் மீது "உபா'வை போட்டு அச்சுறுத்துவது மூலமாக அனைத்தையும் முடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை.
சிறைக்குள் உங்களை எப்படி நடத்துகிறார்கள்?
தனிமைச் சிறையில்தான் என்னை அடைத்திருக்கிறார்கள். சரியா உணவு இல்லை. உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. சிறைக்குள் யாரையும் பார்க்க அனுமதிப்பது இல்லை.
உங்கள் மீது தொடர்ந்து வழக்குகள் போடப்பட்டு வருகிறதே?
தேர்தல் வரப்போகிறது, பா.ஜ.க.விற்கு எதிராக பேசக்கூடாது என்பதற்காக இப்படி செய்து வருகிறார்கள்.
பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவும், அவர்களின் கருத்துகளை பேசியதற்காகவும் வழக்குகள் போடபட்டு இருக்கிறதே?
தமிழர் உரிமை சார்ந்து பேசக்கூடிய விஷயங்கள் என அனைத்தையும் முடக்கவேண்டும் என்பதே அவர்களின் முழு எண்ணமாக இருக்கிறது. பா.ஜ.க.வின் பொம்மை அரசாகத்தான் அ.தி.மு.க. அரசு இருக்கிறது.
உங்கள் மீது 40 வழக்குகளுக்கு மேல் இருப்பதாகச் சொல்கிறார்கள்?
பொதுவான நபர்கள் இதைப் பார்த்தால் பயந்துவிடுவார்கள்... அதன் மூலம் இந்த இயக்கத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் எங்களுக்கான ஆதரவு வளர்ந்து வருகிறது. சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றம் வரும்வழியில் கிராமத்தில் சிக்னலில் நிற்கும் போது அங்கிருந்த மக்கள் வந்துபேசுகிறார்கள் . இதற்காக அரசுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
தேர்தல் அரசியலில் இல்லாத உங்கள் மீது ஏன் இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது?
தேர்தல் அரசியலில் ஈடுபடும் அவர்களுக்கு வெற்றி தோல்வி என்பது முக்கியம் அல்ல. ஆர்.எஸ்.எஸ்.ஸை எதிர்க்கக்கூடியவர்கள் நாங்கள்; எங்களை நேரடியாக மேடையில் அவர்களால் எதிர்க்க முடியாது. அதனால் சட்டத்தை, காவல்துறையை பயன்படுத்தி முடக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
சிறையில் என்ன புத்தகம் படித்து வருகிறீர்கள்?
சுனில்குமார் ஜோஷி எழுதிய 1917 முதல் 1947-வரை இருந்த சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா குறித்த புத்தகத்தை படித்துவருகிறேன்.